Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்மஸ் பற்றி நீங்கள் அறிய வேண்டியவை

கிறிஸ்மஸ் பற்றி நீங்கள் அறிய வேண்டியவை

பைபிளின் கருத்து

கிறிஸ்மஸ் பற்றி நீங்கள் அறிய வேண்டியவை

இந்த வருட கிறிஸ்மஸ் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுவதற்கு உலகெங்கிலும் கோடானு கோடி பேர் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை நீங்களும் அவர்களில் ஒருவராக இருக்கலாம். மறுபட்சத்தில், இந்தப் பிரபல பண்டிகையுடன் சம்பந்தப்பட்ட மத அம்சங்களில் நீங்கள் ஈடுபடாமல் இருக்கலாம். எப்படியிருந்தாலும், கிறிஸ்மஸின் செல்வாக்கிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியாதிருக்கலாம். இது வியாபார மற்றும் பொழுதுபோக்கு வட்டாரங்களில் ஊடுருவி பரவியிருக்கிறது, கிறிஸ்தவமல்லாத நாடுகளிலும்கூட இதே கதைதான்.

கிறிஸ்மஸ் பற்றி நீங்கள் என்ன அறிந்திருக்கிறீர்கள்? கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடுவதை பைபிள் ஆதரிக்கிறதா? ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25-⁠ம் தேதி கொண்டாடப்படும் இந்தப் பிரபல பண்டிகையின் பின்னணி என்ன?

கிறிஸ்மஸ் தடை செய்யப்பட்டது

இந்த விஷயத்தைப் பற்றி ஆராய சில நிமிடங்களை எடுத்துக் கொண்டால், கிறிஸ்மஸ் மெய் கிறிஸ்தவத்திலிருந்து தோன்றியதல்ல என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். பல்வேறு மதப் பிரிவுகளைச் சேர்ந்த பைபிள் அறிஞர்கள் பலரும் இதை ஒத்துக்கொள்கிறார்கள். இதை மனதிற்கொண்டு, 1647-⁠ல் பாவங்களுக்கு வருத்தத்தை தெரிவிக்கும் ஒரு நாளாக இதை ஏற்படுத்தி பிற்பாடு 1652-⁠ல் இங்கிலாந்தில் கிராம்வெல்லின் பார்லிமென்ட் கிறிஸ்மஸை முற்றிலும் தடை செய்துவிட்டது என்பதைக் கேட்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்க வேண்டியதில்லை. 1644 முதல் 1656 வரை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 அன்று வேண்டுமென்றே பார்லிமென்ட் கூட்டப்பட்டது. சரித்திராசிரியர் பெனி எல். ரீஸ்டடு கூறுகிறபடி, “கிறிஸ்துவின் பிறப்பைப் பற்றி பிரசங்கித்தவர்களுக்கு சிறையில் தள்ளப்படும் ஆபத்து இருந்தது. கோயில் காப்பாளர்கள் சர்ச்சுகளை அதற்காக அலங்கரிக்கையில் தண்டம் கட்ட வேண்டியிருந்தது. சட்டப்படி, வழக்கமாக எல்லா நாட்களையும் போலவே கிறிஸ்மஸ் தினத்தன்றும் கடைகள் திறக்கப்பட்டன.” ஏன் இத்தகைய கெடுபிடி நடவடிக்கைகள்? வேதாகமத்தில் இல்லாத பாரம்பரியங்களை சர்ச் உருவாக்கக் கூடாது என பியூரிடன் சீர்திருத்தவாதிகள் நம்பினார்கள். அவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களைக் கண்டித்து பிரசங்கித்தார்கள், பிரசுரங்களையும் விநியோகித்தார்கள்.

இதுபோன்ற மனப்பான்மைகள் வட அமெரிக்காவிலும் காணப்பட்டன. 1659-⁠க்கும் 1681-⁠க்கும் இடைப்பட்ட வருடங்களில், மாஸசூசெட்ஸ் பே காலனியில் கிறிஸ்மஸ் தடை செய்யப்பட்டது. a அப்போது அமல்படுத்தப்பட்ட சட்டத்தின்படி, எந்த விதத்திலும் அல்லது எந்த பாணியிலும் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடக் கூடாது. மீறியவர்கள் தண்டம் விதிக்கப்பட்டார்கள். கிறிஸ்மஸ் கொண்டாட மனமில்லாமல் இருந்தது நியூ இங்கிலாந்திலிருந்த பியூரிடன்கள் மட்டுமல்ல, மத்திப காலனிகளில் இருந்த சில தொகுதிகளும்தான். பியூரிடன்களைப் போலவே கிறிஸ்மஸ் கொண்டாடக் கூடாது என்பதில் பென்ஸில்வேனியாவைச் சேர்ந்த க்வேக்கர்களும் பிடிவாதமாக இருந்தார்கள். “அமெரிக்கர்கள் சுதந்திரம் பெற்ற சில காலத்திற்குள், எலிசபெத் டிரிங்கர் என்ற க்வேக்கர், பிலடெல்ஃபியா வாசிகளை மூன்று வகைகளாகப் பிரித்தார்” என ஓர் ஆதாரம் கூறுகிறது. “‘எல்லா நாட்களையும் போலவே [கிறிஸ்மஸ் தினத்தை] சாதாரண தினமாக கருதிய’ க்வேக்கர்களும் இருந்தார்கள்; மத காரணங்களுக்காக கொண்டாடியவர்களும் இருந்தார்கள்; ‘அதை களியாட்டு, குடிவெறி தினமாக கழித்த’ க்வேக்கர்களும் இருந்தார்கள்.”

பாரம்பரிய கால்வினிஸ்ட் குடும்பத்தில் வளர்க்கப்பட்ட புகழ்வாய்ந்த அமெரிக்க பிரசங்கி ஹென்ரி வார்டு பீச்சருக்கு 30 வயது வரைக்கும் கிறிஸ்மஸ் பற்றி ஒன்றுமே தெரியாது. “கிறிஸ்மஸ் என்பது என் வாழ்க்கையின் பாகமாக இல்லை” என 1874-⁠ல் பீச்சர் எழுதினார்.

ஆரம்பகால பாப்டிஸ்ட் மற்றும் காங்ரிகேஷனலிஸ்ட் சர்ச்சுகளும் கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடுவதற்கு எந்த வேதப்பூர்வ அடிப்படையையும் காணவில்லை. 1772 டிசம்பர் 25-⁠ல்தான், நியூபோர்ட் [ரோட் தீவு] பாப்டிஸ்ட் சர்ச் முதன்முதல் கிறிஸ்மஸ் கொண்டாடியதாக ஓர் ஆதாரம் குறிப்பிடுகிறது. இது, நியூ இங்கிலாந்தில் முதல் பாப்டிஸ்ட் சர்ச் ஸ்தாபிக்கப்பட்டு சுமார் 130 வருடங்களுக்குப் பிறகே ஆகும்.

கிறிஸ்மஸ் தோற்றம்

நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு ஒத்துக்கொள்கிறது: “கிறிஸ்து பிறந்த நாள் அறியப்படவில்லை. அந்த நாளையோ மாதத்தையோ பற்றி சுவிசேஷங்கள் ஒன்றும் குறிப்பிடுவதில்லை . . . ஹெச். யூசன என்ற ஓர் அறிஞரால் விளக்கப்பட்டு . . . இன்றைய அறிஞர்கள் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தின்படி, குளிர்கால அயன சந்தி (winter solstice) (ஜூலியன் காலண்டர்படி டிசம்பர் 25, எகிப்திய காலண்டர்படி ஜனவரி 6) கிறிஸ்து பிறந்த நாளாக கொண்டாடுவதற்கு அன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. ஏனென்றால் இந்த நாளில், சூரியன் வடகோளத்தில் திரும்பி வருகையில், மித்ரா என்ற கடவுளை வழிபடும் புறமத பக்தர்கள் டீஸ் நாட்டாலீஸ் சோலீஸ் இன்விக்டீ (வெல்ல முடியாத சூரியனின் பிறந்த நாளை) கொண்டாடினார்கள். 274-ஆம் ஆண்டு டிச. 25 அன்று, சூரிய கடவுள் ரோம பேரரசின் முக்கிய பாதுகாவலன் என ரோம பேரரசன் ஆரிலியன் பிரகடனம் செய்து, கேம்பஸ் மார்டியஸில் அந்த கடவுளுக்காக ஒரு ஆலயத்தை அர்ப்பணம் செய்தான். சூரியனை வழிபடும் மரபு ரோமில் தீவிரமாக இருந்த சமயத்தில் கிறிஸ்மஸ் தோன்றியது.”

மெக்ளின்டாக் மற்றும் ஸ்ட்ராங் ஸைக்ளோப்பீடியா இவ்வாறு கூறுகிறது: “கிறிஸ்மஸ் கொண்டாட்டம் கடவுளால் தோற்றுவிக்கப்படவில்லை, புதிய ஏற்பாட்டிலிருந்தும் தோன்றவில்லை. புதிய ஏற்பாட்டிலிருந்து கிறிஸ்துவின் பிறந்த நாளை நிர்ணயிக்க முடியாது; சொல்லப்போனால், வேறெந்த ஆதாரத்தைக் கொண்டும் நிர்ணயிக்க முடியாது.”

‘மாயமான தந்திரம்’

மேலே குறிப்பிடப்பட்ட விஷயங்களை சிந்திக்கையில், உண்மை கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் பாரம்பரியங்களில் பங்குகொள்ளலாமா? கடவுள் வழிபாட்டில் அவரை வணங்காதவர்களுடைய மத நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் சேர்த்து கலப்படம் செய்வது அவருக்குப் பிரியமாக இருக்குமா? கொலோசெயர் 2:8-⁠ல் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எச்சரித்தார்: “லெளகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலக வழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல.”

அந்த அப்போஸ்தலன் இவ்வாறுகூட எழுதினார்: “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் [சாத்தானுக்கும்] இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?”​—2 கொரிந்தியர் 6:14, 15.

எவ்வித மறுப்புக்கும் இடமில்லாத அத்தாட்சிகளை கருத்திற்கொண்டு, யெகோவாவின் சாட்சிகள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் பங்குகொள்வதில்லை. வேதவசனங்களுக்கு இசைவாக, அவர்கள் “உலகத்தால் கறைபடா[மல்] . . . பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தி”யை கடைப்பிடிக்க முயலுகிறார்கள்.​—யாக்கோபு 1:27. (g02 12/08)

[அடிக்குறிப்பு]

a 1628-⁠ல் ஆங்கிலேய பியூரிடன்களால் தோற்றுவிக்கப்பட்டது, நியூ இங்கிலாந்திலேயே மாஸசூசெட்ஸ் பே காலனிதான் மிகப் பெரிய, மிகவும் வெற்றிகரமான பூர்வீக குடியேற்றம்.

[பக்கம் 26-ன் சிறு குறிப்பு]

1652-⁠ல் இங்கிலாந்து பார்லிமென்ட் கிறிஸ்மஸை தடை செய்தது

[பக்கம் 27-ன் சிறு குறிப்பு]

“கிறிஸ்மஸ் என்பது என் வாழ்க்கையின் பாகமாக இல்லை”​—ஹென்ரி வார்டு பீச்சர், ஓர் அமெரிக்க மதகுரு

[பக்கம் 27-ன் படம்]

மித்ராஸ் மற்றும் சூரிய கடவுளை (சிற்பத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது) வழிபடும் புறமத பக்தர்கள் டிசம்பர் 25-ஐ கொண்டாடினார்கள்

[படத்திற்கான நன்றி]

Musée du Louvre, Paris