Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சகாக்களின் அழுத்தம்—உண்மையிலேயே அவ்வளவு சக்தி வாய்ந்ததா?

சகாக்களின் அழுத்தம்—உண்மையிலேயே அவ்வளவு சக்தி வாய்ந்ததா?

இளைஞர் கேட்கின்றனர் . . .

சகாக்களின் அழுத்தம்உண்மையிலேயே அவ்வளவு சக்தி வாய்ந்ததா?

“எனக்கு சகாக்களின் அழுத்தம் இருப்பதாக தோணல.”​—பமலா, உயர்நிலைப் பள்ளி மாணவி.

“சகாக்களின் தொல்லை என்னை ஆட்டிப்படைப்பதாக நான் நினைக்கல. எனக்கு வர்ற தொல்லையெல்லாம் எங்கிட்ட இருந்துதான்.”​—ராபீ, ஓர் இளைஞன்.

என்றாவது நீங்கள் இப்படி உணர்ந்திருக்கிறீர்களா? “கெட்ட சகவாசம் நல்ல பழக்கவழக்கங்களை கெடுக்கும்” என்று பைபிள் சொல்வதை நீங்கள் அறிந்திருக்கலாம். (1 கொரிந்தியர் 15:33, NW) இருந்தாலும், ‘சகாக்களிடமிருந்து வரும் அழுத்தத்தை பெரிசுபடுத்தி பேசுறாங்களோ? என்னுடைய அப்பா அம்மாவும் பெரியவங்களும் சொல்ற மாதிரி அதுல ஒன்னும் அந்தளவுக்கு ஆபத்து இருக்கிறதா தெரியலையே’ என நீங்கள் நினைக்கலாம்.

அவ்வப்பொழுது இப்படிப்பட்ட சந்தேகங்கள் உங்களை அலைக்கழித்தால், இப்படி அவதிப்படுகிற முதல் ஆள் நீங்கள்தான் என முடிவுகட்டிவிடாதீர்கள். ஒன்றைப் பற்றி நீங்கள் சிந்தித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம். சகாக்களின் அழுத்தம் நீங்கள் நினைப்பதைவிட அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கிறதா? சகாக்களுடைய அழுத்தத்தின் வலிமையைக் கண்டு அநேக இளைஞர்களே மலைத்துப் போயிருக்கிறார்கள். உதாரணமாக, தான் விரும்புவதைவிட சமுதாயத்தோடு ஒத்துப்போகவே அதிகம் முயற்சி செய்வதாக ஏன்ஜி என்ற பெண் ஒத்துக்கொள்கிறாள். “சிலசமயங்களில் சமுதாயத்திலிருந்து வரும் அழுத்தம் அந்தளவுக்கு பலமாக இருப்பதால் அது சகாக்களின் அழுத்தம் என்றுகூட தெரிவதில்லை. அது உங்களுக்குள்ளேயே ஏற்படும் அழுத்தம் என நினைக்க ஆரம்பித்துவிடுகிறீர்கள்” என அவள் கூறுகிறாள்.

மேலே குறிப்பிடப்பட்ட ராபீயும் இப்படித்தான் கூறுகிறான், அதாவது அவனுடைய மிகப் பெரிய அழுத்தமே அவனுக்குள் இருந்துதான் வருகிறது என நினைக்கிறான். என்றாலும், ஒரு பெரிய நகரருகில் வாழ்வது கஷ்டம் என ஒத்துக்கொள்கிறான். ஏன்? பொருளாசை பிடித்த சூழலில் வாழும் சகாக்களிடமிருந்து அழுத்தம் வருவதால். “இங்கே பணம் காசுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது” என அவன் கூறுகிறான். ஆகவே சகாக்களின் அழுத்தம் என்பது கவனிக்க வேண்டிய மாபெரும் சக்தி. அப்படியானால், சகாக்களின் அழுத்தம் தங்களை பாதிப்பதில்லை என அநேக இளைஞர்கள் ஏன் நினைக்கிறார்கள்?

வஞ்சிக்கும் வலிமை

சகாக்களின் அழுத்தம் வஞ்சகமாக வரலாம்​—சொல்லப்போனால், அதை நாம் கொஞ்சம்கூட கவனிக்காமல் இருக்கலாம். உதாரணமாக, நாம் கடல்மட்டத்தில் இருக்கும்பொழுது, நமக்கு மேலிருக்கும் பரந்தளவிலான காற்று ஒரு சதுர சென்டிமீட்டருக்கு சுமார் 1 கிலோகிராம் என்ற வீதத்தில் நம்மை தொடர்ந்து அழுத்துகிறது. a தினமும் நீங்கள் அப்படிப்பட்ட அழுத்தத்தில் வாழலாம், ஆனால் நீங்கள் அதை உணருவதே இல்லை. ஏன்? ஏனென்றால் அது உங்களுக்குப் பழகிப் போய்விட்டது.

உண்மைதான், வளிமண்டல அழுத்தத்தால் கண்டிப்பாக தீங்கு நேரிடாது. ஆனால் ஆட்கள் தந்திரமாக நம்மீது அழுத்தத்தை செலுத்தும்போது, அவர்கள் படிப்படியாக நம்மை மாற்றிவிடலாம். சகாக்களுடைய அழுத்தம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை அப்போஸ்தலன் பவுல் அறிந்திருந்தார். ரோமிலிருந்த கிறிஸ்தவர்களை இவ்வாறு எச்சரித்தார்: “இந்த உலகம் அதன் வார்ப்புக்குள் உங்களை அழுத்துவதற்கு அனுமதிக்காதீர்கள்.” (ரோமர் 12:2, த நியூ டெஸ்டமென்ட் இன் மாடர்ன் இங்லீஷ்) ஆனால், இது எவ்வாறு நேரிடலாம்?

சகாக்களின் அழுத்தம் எப்படி செயல்படுகிறது

மற்றவர்கள் உங்களை அங்கீகரிப்பதையும் ஏற்றுக்கொள்வதையும் கண்டு நீங்கள் அகமகிழ்கிறீர்களா? ஆம் என நம்மில் பெரும்பாலோர் ஒத்துக்கொள்வர். ஆனால், இத்தகைய அங்கீகாரத்திற்கான நம்முடைய இயல்பான ஆசை இருவிதமான விளைவுகளை ஏற்படுத்தலாம். அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற நாம் எந்தளவுக்குப் போவோம்? இந்த விஷயத்தில் நாம் உறுதியாக இருந்தாலும், நம்மை சுற்றி இருப்பவர்களைப் பற்றியென்ன? சகாக்களின் அழுத்தத்தை எதிர்க்க முயற்சியாவது எடுக்கிறார்களா, அல்லது அது அவர்களை வார்ப்பதற்கு அனுமதிக்கிறார்களா?

உதாரணமாக, இன்றைக்கு அநேகர் பைபிளின் ஒழுக்க தராதரங்களை நவீன உலகிற்கு ஒவ்வாத பழம்பாணியாக கருதுகிறார்கள். கடவுள் தம்முடைய வார்த்தையில் சொல்லியிருக்கிறபடி அவரை வணங்குவது அவ்வளவு முக்கியமல்ல என கருதுகிறார்கள். (யோவான் 4:24) ஏன்? இதற்கு ஓரளவு காரணம் சகாக்களின் அழுத்தமாக இருக்கலாம். எபேசியர் 2:2-⁠ல் (NW), இந்த உலகில் ஓர் “ஆவி” அல்லது மேலோங்கிய மனப்பான்மை நிலவுவதாக பவுல் கூறுகிறார். யெகோவாவைப் பற்றி அறியாத ஓர் உலகத்தின் சிந்தைக்கு நம்மை மாற்றியமைத்துக் கொள்ளும்படி அந்த ஆவி நம்மீது அழுத்தத்தைக் கொண்டு வருகிறது. நாம் எவ்வாறு பாதிக்கப்படலாம்?

பள்ளிக்கூடம், படிப்பு, குடும்ப பொறுப்புகள், வேலை போன்ற அன்றாட காரியங்களில், பொதுவாக நம்முடைய கிறிஸ்தவ நெறிமுறைகளை மதிக்காத மக்களுடன்தான் நாம் பழக வேண்டியதாயிருக்கிறது. உதாரணமாக, பிரபலமடைய எதையும் செய்யத் துணிகிறவர்கள் ஒழுக்கக்கேடான பாலியல் பழக்கங்களில் ஈடுபடுகிறவர்கள் அல்லது போதைப்பொருள் மற்றும் மதுபானத்தை துஷ்பிரயோகம் செய்கிறவர்கள் என பலபேர் பள்ளிக்கூடத்தில் இருக்கலாம். இப்படிப்பட்ட நடத்தையில் ஈடுபடுகிறவர்களை அல்லது இவற்றை சர்வசாதாரணமாக எடுத்துக்கொள்கிறவர்களை, இவற்றை மெச்சிப் பேசுகிறவர்களை நாம் நெருங்கிய நண்பர்களாக தேர்ந்தெடுத்தால் என்ன ஆகும்? இத்தகைய மனப்பான்மைகளை நாம் ஏற்றுக்கொள்ள​—ஒருவேளை தொடக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொள்ள​—ஆரம்பித்துவிடலாம். இந்த உலகத்தின் “ஆவி” அல்லது “காற்று” நம்மீது அழுத்தத்தைக் கொண்டுவரும், வேறு வார்த்தையில் சொன்னால், இந்த உலகத்தின் வார்ப்புக்குள் அது நம்மை அழுத்தக்கூடும்.

இந்த பைபிள் நியமங்களை ஆதரிக்கிற பரிசோதனைகளை நவீன சமூக அறிவியலாளர்கள் செய்திருப்பது அக்கறைக்குரிய விஷயம். ஆஷ் என்பவருடைய குறிப்பிடத்தக்க பரிசோதனையை கவனியுங்கள். ஒன்றாக அமர்ந்திருக்கிற ஒரு கூட்டத்தாருடன் சேர்ந்துகொள்வதற்கு ஒருவர் அழைக்கப்படுகிறார். செங்குத்தான கோடு வரையப்பட்ட ஒரு பெரிய அட்டையை டாக்டர் ஆஷ் காட்டுகிறார். நன்கு வித்தியாசமாக தெரிகிற வெவ்வேறு அளவுள்ள மூன்று செங்குத்து கோடுகளைக் கொண்ட மற்றொரு அட்டையை காட்டுகிறார். பிறகு இந்த மூன்று கோடுகளில் எது முதலில் காண்பிக்கப்பட்ட அட்டையிலுள்ள கோட்டுக்கு ஒத்திருக்கிறது என அந்தக் கூட்டத்திலுள்ள நபர்களிடம் கேட்கிறார். பதில் ரொம்ப சுலபம். முதல் சில தடவை எல்லாரும் ஒரே பதிலை கொடுக்கிறார்கள். ஆனால் மூன்றாவது தடவை மாற்றம் நிகழ்கிறது.

முன்பு போலவே, எந்தக் கோடுகள் அளவில் ஒத்திருக்கின்றன என்பதை சொல்வது சுலபம். ஆனால் பரிட்சிக்கப்படுகிற நபருக்குத் தெரியாமல், அந்தக் கூட்டத்தாரை சேர்ந்த மற்ற அங்கத்தினர்கள் எல்லாரும் தவறான பதிலையே சொல்லும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். என்ன நடக்கிறது? பரிசோதிக்கப்பட்டவர்களில் 25 சதவீதத்தினர் மட்டுமே தாங்கள் சரியென அறிந்ததை உறுதியாக சொன்னார்கள். மற்றெல்லாரும் ஒரு தடவையாவது அந்தக் கூட்டத்தாருடன் ஒத்துப்போகிறார்கள்​—அப்பட்டமாக தங்கள் கண்ணுக்குத் தெரிகிறபோதிலும் சரியானதைச் சொல்ல மறுக்கிறார்கள்!

ஆகவே ஆட்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் ஒத்துப்போகவே விரும்புகிறார்கள் என்பது தெளிவாகிறது​—பெரும்பாலோர் தாங்கள் சரி என அறிந்ததையே மறுக்கும் அளவுக்கு சென்றுவிடுகிறார்கள். இளைஞர்கள் அநேகர் இத்தகைய அழுத்தம் தங்களுக்கு ஏற்பட்டிருப்பதை அனுபவரீதியாக கண்டிருக்கிறார்கள். 16 வயது தானியேல் இவ்வாறு ஒத்துக்கொள்கிறான்: “சகாக்களின் அழுத்தம் உங்களை மாற்ற முடியும். அநேகர் உங்களைச் சுற்றி இருக்கும்போது இந்த அழுத்தம் அதிகமாகிறது. அவர்கள் செய்வது சரியென்றும்கூட நீங்கள் நினைக்க ஆரம்பித்துவிடலாம்.”

பள்ளியில் இதுபோன்ற அழுத்தம் வருகிறது என்பதற்கு முன்பு குறிப்பிடப்பட்ட ஏன்ஜி ஓர் உதாரணத்தைத் தருகிறாள்: “நீங்கள் ஜூனியர் ஹை-ஸ்கூலில் இருந்தபோது எதை உடுத்தினீர்கள் என்பது மிக முக்கியமாக இருந்தது. நல்ல ‘பிரான்ட்’ உடையை நீங்கள் கட்டாயம் உடுத்த வேண்டியிருந்தது. உண்மையில் பார்த்தால், நீங்கள் ஒரு ஷர்ட்டுக்கு 50 டாலர் செலவழிக்க விரும்பவில்லை​—யாருக்குத்தான் இப்படி செய்ய மனசுவரும்?” ஏன்ஜி கூறுகிறபடி, சகாக்களின் அழுத்தம் உங்களை பாதிக்கையில் அதை நீங்கள் உணருவது கடினமாக இருக்கலாம். ஆனால் மிக முக்கியமான விஷயங்களில் சகாக்களின் அழுத்தம் நம்மை பாதிக்கக்கூடுமா?

சகாக்களின் அழுத்தம் ஏன் ஆபத்தாக இருக்கலாம்

நீங்கள் கடலில் நீந்திக் கொண்டிருப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். மேலெழும்பி வரும் அலைகளைக் கடந்து நீங்கள் நன்றாக நீந்திக் கொண்டிருக்கையில், உங்களுக்குத் தெரியாமலேயே வலிமைமிக்க வேறு சக்திகள் செயல்பட்டுக் கொண்டிருக்கலாம். அந்த அலைகள் உங்களை கடற்கரையை நோக்கி தள்ளலாம், ஆனால் அடியில் நீரோட்டமும் இருக்கலாம். மெதுமெதுவாக அது உங்களை வெகு தொலைவில் கொண்டு போய்விட்டிருக்கும். கடைசியில் நீங்கள் கடற்கரையை நோக்கிப் பார்க்கும்போது, உங்களுடைய குடும்பத்தாரையோ நண்பர்களையோ உங்களால் காண முடிவதில்லை. நீங்கள் கவனிப்பதற்கு முன்பே நீரோட்டம் உங்களை ரொம்ப தூரம் அடித்துச் சென்றுவிட்டிருக்கும். அது போலவே, நம்முடைய அன்றாட காரியங்களை செய்துவரும்போது, நம்முடைய சிந்தைகளும் உணர்ச்சிகளும் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகின்றன. இதை நாம் உணருவதற்கு முன்பே, நாம் கடைப்பிடிக்க வேண்டிய தராதரங்களிலிருந்து இந்த செல்வாக்குகள் நம்மை வெகுதூரம் அடித்துச் சென்றுவிடலாம்.

உதாரணமாக, அப்போஸ்தலன் பேதுரு தைரியமிக்கவராக விளங்கினார். இயேசு கைது செய்யப்படும் இரவில் விரோதிகளின் கும்பலில் தைரியமாக பட்டயத்தை உருவி ஒரு விளாசு விளாசினார். (மாற்கு 14:43-47; யோவான் 18:10) என்றாலும், சில வருஷங்களுக்குப் பிறகு, சகாக்களின் அழுத்தம் அவரை பாரபட்சமாக நடக்க வைத்தது. அவர் புறஜாதி கிறிஸ்தவர்களை ஓரங்கட்டினார்​—புறஜாதியாரை அசுத்தமானவர்களாக கருதக்கூடாது என ஒரு தரிசனத்தின் வாயிலாக கிறிஸ்துவிடமிருந்து இதற்கு முன்பு வழிநடத்துதலை பெற்றிருந்தபோதிலும் அப்படி செய்தார். (அப்போஸ்தலர் 10:10-15, 28, 29) கத்திமுனையை எதிர்ப்படுவதைவிட மற்றவர்களுடைய இகழ்ச்சிக்கு ஆளாவதை பேதுரு அதிக கடினமாக கண்டிருக்கலாம்! (கலாத்தியர் 2:11, 12) ஆம், சகாக்களின் அழுத்தம் உண்மையிலேயே ஆபத்துதான்.

சகாக்களின் அழுத்தத்தின் வலிமையை ஒப்புக்கொள்வது இன்றியமையாதது

பேதுருவின் உதாரணம் ஒரு முக்கிய பாடத்தை நமக்கு கற்பிக்கிறது. சில விஷயங்களில் பலமாக இருப்பது எல்லா விஷயங்களிலும் பலமாக இருப்பதை அர்த்தப்படுத்தாது. நம்மை போலவே பேதுருவுக்கு பலவீனங்கள் இருந்தன. நாம் யாராக இருந்தாலும்சரி, நம்முடைய பலவீனங்களைக் குறித்து உணர்வுள்ளவர்களாக இருக்க வேண்டும். நம்மை நாமே நேர்மையுடன் இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘நான் எதில் பலவீனமாயிருக்கிறேன்? செல்வச் செழிப்பான வாழ்க்கை பாணியை அனுபவிக்க ஏங்குகிறேனா? என் தோற்றத்தையோ சாதனைகளையோ பற்றிய வீண்பெருமை என் இதயத்தை ஆட்டிப்படைக்கிறதா? பாராட்டையும் புகழையும் அந்தஸ்தையும் பெற நான் எதையும் செய்ய துணிகிறேனா?’

நெறிமுறைகளுக்கு விரோதமாக போதைப் பொருட்களைப் பயன்படுத்துகிறவர்களுடனோ அல்லது பாலியல் பழக்கங்களில் ஈடுபடுகிறவர்களுடனோ பழகுவதன் மூலம் நாம் வேண்டுமென்றே ஆபத்திற்குள் சிக்க மாட்டோம். ஆனால் தந்திரமாக செல்வாக்கு செலுத்தும் பலவீனங்களைப் பற்றியென்ன? நமக்கு எதில் பலவீனம் இருக்கிறதோ அதில் செல்வாக்கு செலுத்துகிறவர்களுடன் கூட்டுறவுகொள்ள விரும்பினால், சகாக்களின் அழுத்தத்திற்கு இடங்கொடுத்து விடுவோம்​—ஒருவேளை படுகுழிக்குள் விழுகிறவர்களாக இருப்போம்.

ஆனால் சகாக்களின் எல்லா அழுத்தமும் மோசமானது அல்ல என்பது சந்தோஷமான விஷயம். சகாக்களின் அழுத்தத்தை நாம் சமாளிக்க முடியுமா​—அதை நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடியுமா? சகாக்களின் பாதகமான அழுத்தத்தை எவ்வாறு வெல்லலாம்? இந்தக் கேள்விகள் “இளைஞர் கேட்கும் கேள்விகள் . . . ” பகுதியில் மற்றொரு சமயம் ஆராயப்படும். (g02 11/22)

[அடிக்குறிப்பு]

a நிஜமாகவே காற்றழுத்தம் இருப்பதை ஓர் எளிய பரிசோதனை காட்டுகிறது. காலி பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றை மலை உச்சிக்கு கொண்டுசென்று அதை காற்றால் நிரப்பி நன்றாக மூடிவிட்டால், நீங்கள் மலையிலிருந்து கீழே இறங்கி வருகையில் அந்த பாட்டிலுக்கு என்ன நேரிடும்? அது ஒடுங்கிவிடும். வெளியில் இருக்கும் காற்றழுத்தம் பாட்டிலுக்குள் உள்ள அடர்த்தி குறைந்த காற்றழுத்தத்தைவிட மிக அதிகம்.

[பக்கம் 2021-ன் படம்]

பொருளாசைமிக்க சூழல் சகாக்களிடமிருந்து பயங்கர அழுத்தத்தைக் கொண்டுவரலாம்