Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாய்ந்துவந்த பயங்கர லாவாவிலிருந்து தப்பித்தோம்!

பாய்ந்துவந்த பயங்கர லாவாவிலிருந்து தப்பித்தோம்!

பாய்ந்துவந்த பயங்கர லாவாவிலிருந்து தப்பித்தோம்!

காங்கோவிலுள்ள (கின்ஷாசா) விழித்தெழு! எழுத்தாளர்

அன்றைக்கு செவ்வாய்க்கிழமை, ஜனவரி 15, 2002​—மத்திய ஆப்பிரிக்காவிற்கு அது என்றும்போல் சாதாரண நாளாகவே இருக்கிறது. க்ரேட் லேக்ஸ் பகுதியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளை சந்திப்பதற்காக இன்னொரு யெகோவாவின் சாட்சியுடன் காங்கோவிலுள்ள (கின்ஷாசா) கிவூ என்ற பகுதியில் அமைந்திருக்கும் கோமா நகருக்கு வந்து சேர்கிறேன்.

பயப்படும் அளவுக்கு ஒன்றுமே இல்லையா?

நியரகாங்கோ என்பது 3,470 மீட்டர் உயர எரிமலை; இது கோமா நகரிலிருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும், அதன் இயல்பு எங்களை அதன் பக்கமாக ஈர்க்கிறது. அது குமுறுவதை எங்களால் கேட்க முடிகிறது, அதிலிருந்து புகை எழும்பி வருவதையும் காண முடிகிறது. அங்குள்ள உள்ளூர் வாசிகளுக்கோ இது ஒன்றும் பெரிய விஷயமில்லை, அதற்காக அவர்கள் பயப்படுவதுமில்லை.

மதியம் யெகோவாவின் சாட்சிகளுடைய இரு சபைகளுக்கு சென்று கூட்டங்களில் கலந்து கொள்கிறோம். நிலம் அதிர்ந்துகொண்டே இருப்பதை எங்களால் உணர முடிகிறது, குமுறல் சத்தமும் ஓயாமல் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதை யாருமே பெரிதுபடுத்துவதாக தெரியவில்லை. உள்ளூர் அதிகாரிகளும், பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என சொல்லி ஜனங்கள் காதில் ஊதிய சங்கையே ஊதிக்கொண்டிருக்கிறார்கள். காங்கோவைச் சேர்ந்த எரிமலை நிபுணர் ஒருவர் எரிமலை சீற்றங்களைக் குறித்து பல மாதங்களாகவே முன்னறிவித்து வந்திருக்கிறபோதிலும், யாருமே அவர் சொல்வதை நம்புவதில்லை. “எரிமலை கொதித்தெழுறதனால இன்னைக்கு சாயங்காலம் வானம் செக்கச்செவேல்னு இருக்கும்” என நண்பர் ஒருவர் சாதாரணமாக சொல்கிறார்.

“இங்கிருந்து நாம் உடனே வெளியேறணும்!”

நாங்கள் தங்கும் இடத்திற்கு திரும்புகையில், “இங்கிருந்து நாம் உடனே வெளியேறணும்!” என்று எங்களிடத்தில் உறுதியாக சொல்லப்படுகிறது. நிலைமை மிகவும் ஆபத்தாக இருக்கிறது. நகரம் பேராபத்திற்குள் சிக்கியிருக்கிறது. கொஞ்ச நேரத்திற்குள் நிலைமை எப்படி மாறிவிட்டது! சாட்சி கொடுக்கும் வேலைக்கு கோமா நகரைத்தான் மையமாக பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் முதலில் பேசிக்கொண்டிருந்தோம். இப்போதோ இந்த சாயங்கால வேளையிலே, நகரத்தை விட்டே வெளியேறும்படி எங்களிடம் சொல்லப்படுகிறது; அது பூண்டோடு அழிக்கப்படும் அபாயத்தில் இருக்கிறது!

இருள் கவிய ஆரம்பிக்கையில் வானம் நெருப்புபோல் சிவக்கிறது​—அதற்குக் காரணமும் இருக்கிறது! நியரகாங்கோவிலிருந்து நகரத்தை நோக்கி லாவா ஆறாக பாய்ந்து வந்துகொண்டிருக்கிறது. கொதித்துப் பொங்கும் ஒரு பிரமாண்டமான பானையைப்போல் அந்த மலை இருக்கிறது; அதிலிருந்து பொங்கி வழிந்தோடும் அனல் கக்கும் லாவா தன் வழியிலுள்ள அனைத்தையும் தகித்துப் போடுகிறது. எங்களுடைய ஸூட்கேஸுகளை ஒருபோதும் இவ்வளவு விரைவாக நாங்கள் பேக் செய்ததேயில்லை! இப்போது இரவு மணி 7 ஆகப்போகிறது.

ஆயிரமாயிரமானோர் சாலை வழியாக தப்பியோடுகிறார்கள்

நாங்கள் அரக்கப்பரக்க வெளியேறுகையில், கோமா நகரிலிருந்து செல்லும் சாலையெங்கும் ஒரே மக்கள் கூட்டம்; ஜனங்கள் தங்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடுகிறார்கள். பெரும்பாலானோர் தங்கள் கைகளில் கிடைத்த பொருட்களை எல்லாம் வாரிக்கொண்டு நடந்தே செல்கிறார்கள். அநேகர் சுமைகளை தலையில் சுமந்து செல்கிறார்கள். சிலரோ வாகனங்களில் திணித்து வைத்தாற்போல் செல்கிறார்கள். எல்லாருமே அருகிலுள்ள ருவாண்டாவின் எல்லைப் பகுதியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள். என்றாலும், மனிதன் அமைத்த எந்த எல்லைகளையும் சட்டைபண்ணாமல் லாவா பாய்ந்துகொண்டிருக்கிறது. அது முன்னேறிச் செல்வதை எந்த ராணுவத்தாலும் தடுக்க முடியாது! படைவீரர்களும்கூட லாவாவுக்கு பயந்து உயிரை பிடித்துக்கொண்டு ஓடுவதை நாங்கள் பார்க்கிறோம். கார்கள் சாலையில் செல்வது கடினமாக இருக்கிறது. அதனால் நாங்கள் தொடர்ந்து நடந்தே ஆக வேண்டும். எரிமலையின் சீற்றத்திலிருந்து விடுபட ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், குழந்தைகள் என முண்டியடித்துக்கொண்டு செல்லும் 3,00,000 பேருக்கு மத்தியில் நாங்களும் செல்கிறோம். எங்கள் கால்களுக்கு கீழே பூமி தொடர்ந்து குமுறிக்கொண்டும், அதிர்ந்துகொண்டும்தான் இருக்கிறது.

எல்லாருமே உயிருக்கு பயந்து அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறார்கள். பெருநகரைச் சேர்ந்த புதியவர்களான நானும் என் நண்பரும் எங்களை கவனித்துக் கொண்ட யெகோவாவின் சாட்சிகள் சிலருடன் அவர்கள் மத்தியில் இருக்கிறோம். அவர்கள் எங்களோடு இருப்பதும் எங்களை கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொள்வதும் எங்கள் மனதை நெகிழ வைக்கிறது, நெருக்கடியும் வேதனையுமிக்க இந்த சூழ்நிலையில் பாதுகாப்பு உணர்வையும் தருகிறது. ஜனங்கள் தங்களால் சுமக்க முடிந்தவற்றை​—துணிமணிகளையும் சட்டி சாமான்களையும் சில உணவுப் பொருட்களையும்​—எடுத்துக்கொண்டு வெளியேறுகிறார்கள். இவ்வளவு பெரிய ஜனக்கூட்டத்தில் மக்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக்கொண்டு செல்கிறார்கள். மக்கள் வெள்ளத்தை ஊடுருவிச் செல்ல முயலும் கார்கள் சிலரை இடித்து தள்ளுவதால் சிலருடைய கையிலுள்ள பொருட்கள் கீழே விழுந்து மிதிபடுகின்றன. யாராவது தடுக்கி விழுந்தால் அவர்களும் மிதிபட வேண்டியதுதான். ஜனங்கள் தத்தளிக்கிறார்கள். எல்லாருமே கலக்கமடைந்துபோய் இருக்கிறார்கள். ருவாண்டாவில் சில மைல்களுக்கு அப்பால் உள்ள கிஸன்யி என்ற இடத்திற்கு செல்ல நாங்கள் முயலுகிறோம். எவ்வளவு விரைவாக நடக்க முடியுமோ அவ்வளவு விரைவாக செல்கிறோம்.

பாதுகாப்பான இரவு

நாங்கள் ஒரு சத்திரத்தை அடைகிறோம், ஆனால் தங்குவதற்கோ அங்கு இடமில்லை. தோட்டத்திலுள்ள ஒரு மேசையை சுற்றி எங்களுக்கு உட்கார இடம் கிடைத்ததே பெரிய விஷயம். அதுவும் கால் கடுக்க மூன்றரை மணிநேரம் நடந்த பின்பு. ஆபத்திலிருந்து உயிர்பிழைத்ததாலும் பயணத்தின்போது எங்களோடு வந்த கிறிஸ்தவ சகோதரர்கள் கூடவே இருப்பதாலும் எங்களுக்கு சந்தோஷம். யெகோவாவின் சாட்சிகளில் யாருமே உயிரிழக்கவில்லை என்பதுதான் மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

ராத்திரி முழுக்க வெளியில் நேரத்தை போக்குவதைத் தவிர வேறு வழியேயில்லை என தெரிகிறது. இவ்வளவு தூரத்தில் இருந்தும்கூட கோமா நகருக்கு மேல் வானம் நெருப்புப்பிழம்பாய் சிவந்திருப்பதை காணமுடிகிறது. உண்மையில் அது ரொம்ப கவர்ச்சியாகவும் அழகாகவும்தான் இருக்கிறது! கொஞ்சம் கொஞ்சமாக விடிய ஆரம்பிக்கிறது. ராத்திரி முழுக்க குமுறலும் அதிர்ச்சியும் இருந்தது. முந்தின நாள் நடந்த இக்கட்டான சம்பவங்களை நினைக்கையில் குழந்தை குட்டிகளோடு வெளியேறிய ஆயிரக்கணக்கான குடும்பத்தாரைப் பார்த்து பரிதாபப்படுவதை தவிர வேறு என்னதான் செய்வது!

உதவிக்கரங்கள் வெகுவிரைவில்

ருவாண்டாவின் தலைநகரான கிகலியைச் சேர்ந்த யெகோவாவின் சாட்சிகள் ஜனவரி 18, வெள்ளிக்கிழமை மதியம் எங்களிடத்திற்கு வருகிறார்கள். கோமா மற்றும் கிஸன்யி நகரங்களைச் சேர்ந்த சகோதரர்கள் அடங்கிய ஒரு நிவாரண குழு அதன் பணிகளை ஆரம்பிக்கிறது. அருகிலுள்ள ஆறு ராஜ்ய மன்றங்களில் யெகோவாவின் சாட்சிகளான அகதிகளுக்கு தங்குவதற்கு இட வசதி செய்துகொடுப்பதே அதன் முதல் இலட்சியம். அன்றைய தினமே இடவசதி செய்துகொடுக்கப்படுகிறது. ராஜ்ய மன்றத்திற்கு செல்லும் வழியை குறிக்கும் அடையாளங்கள் பிரெஞ்சு மொழியிலும் ஸ்வாஹிலி மொழியிலும் எழுதப்பட்டு சாலை ஓரத்தில் வைக்கப்படுகின்றன. அங்கே அகதிகளுக்கு வேண்டிய உதவியும் ஆறுதலும் அளிக்கப்படும். அன்றைய தினம் யெகோவாவின் சாட்சிகள் தங்கியிருக்கும் ராஜ்ய மன்றங்களுக்கு மூன்று டன் அத்தியாவசிய பொருட்களும் வந்து சேர்கின்றன. அடுத்த நாள் சனிக்கிழமை, உணவையும், போர்வைகளையும், பிளாஸ்டிக் ஷீட்டுகளையும், சோப்பையும் மருந்துகளையும் ஏற்றிக்கொண்டு கிகலியிலிருந்து ஒரு டிரக் வந்து சேர்கிறது.

கவலை அதிகரிக்கிறது

இது ஆழ்ந்து சிந்திப்பதற்குரிய சமயமாக இருக்கிறது. இந்த ஜனங்கள் எல்லாருடைய தேவைகளையும் திருப்தி செய்வது எப்படி? எரிமலையை பற்றிய தகவல் ஏதாவது உண்டா? எரிமலையின் ஆக்ரோஷம் எப்போது அடங்கும்? கோமா நகரம் எந்தளவுக்கு பாதிப்புக்குள்ளாகி இருக்கும்? சுற்றிமுற்றி பரவிவரும் செய்திகளும் நில்லாமல் தொடரும் நில அதிர்வுகளும் சாதகமான அறிகுறிகளை காட்டுவதாக இல்லை. சல்ஃபர் டையாக்ஸைடு ஆபத்தான அளவுக்கு படர்ந்திருப்பதால் அது வளிமண்டலத்தை மாசுபடுத்தலாம் என வல்லுநர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். இரசாயன மாற்றங்களால் கிவு ஏரியிலுள்ள தண்ணீர் மாசுபடுத்தப்படலாம் எனவும் பயப்படுகிறார்கள்.

எரிமலை வெடிப்பு நடந்த 48 மணிநேரத்திற்குள் கலக்கத்தை ஏற்படுத்தும் செய்திகள் எங்கும் பரவியிருந்தன. அதற்குப்பின் சில பகுதிகளில் இந்த லாவா இரண்டு மீட்டர் ஆழத்தில் பாய்ந்திருப்பதால், யெகோவாவின் சாட்சிகள் எட்டு பேரும் ஒரு குழந்தையும் உட்பட சுமார் 10,000 பேர், தங்களை சூழ்ந்துகொண்ட லாவாவுக்குள் மாட்டியிருக்கிறார்கள் என்பது சனிக்கிழமை மதியம் எங்களுக்கு தெரியவருகிறது. காற்றில் விஷ வாயுக்கள் பரவியிருக்கின்றன. அவர்களுடைய உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என நாங்கள் பயப்படுகிறோம். சூழ்நிலை நம்பிக்கைக்கு இடமளிக்க மறுக்கிறது. அணை போடமுடியாதபடி பாய்ந்துவரும் எரிமலைக் குழம்பின் தாக்குதலில் கோமா நகரிலுள்ள கத்தீட்ரலும் கிட்டத்தட்ட அழிந்துவிட்டது. இந்த அழிவிலிருந்து கோமா நகரம் தப்பிப்பிழைக்கும் என யாராலும் நம்ப முடியவில்லை.

ஆறுதலளிக்கும் சில செய்திகள்

ஞாயிறு காலை ஒன்பது மணிக்கு, லாவா சூழ்ந்துள்ள பகுதியிலுள்ள சகோதரர் ஒருவர் எங்களுக்கு ஃபோன் செய்கிறார். நிலைமை இப்போது தேறிவருகிறது என அவர் சொல்கிறார். மழை பெய்வதால் லாவா குளிர்ந்துவிட்டது, வானிலையும் தெளிவடைந்து வருகிறது. லாவா இன்னும் சூடாகவும் ஆபத்தாகவும் இருந்தாலும் ஜனங்கள் அதைக் கடந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த நகரம் முற்றிலும் அழிந்துவிடவில்லை.

பயங்கரமான இந்த சம்பவங்கள் நடந்த பிற்பாடு, கிடைத்த முதல் நற்செய்தி இதுதான். எரிமலையின் தீவிரம் கொஞ்சம் தணிந்துவிட்டதுபோல் தெரிகிறது. அப்பகுதியிலுள்ள வல்லுநர்களோ முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். கிவு ஏரியின் மறு கரையில் அமைந்துள்ள பக்கத்து நகரமாகிய புகாவுவில் உள்ளவர்களை தொடர்புகொள்ள முடிகிறது. யெகோவாவின் சாட்சிகளுடைய ஐந்து குடும்பங்களும், பெற்றோர் இல்லாமல் மூன்று பிள்ளைகளும் படகு மூலம் புகாவுவுக்கு வந்து சேர்ந்திருப்பது எங்களுக்கு தெரியவருகிறது. அங்குள்ள யெகோவாவின் சாட்சிகள் அவர்களை கவனித்துக்கொள்வார்கள்.

திரும்பி செல்லலாம்!

ஜனவரி 21, திங்கட்கிழமை கிஸன்யியில் பாதிப்புக்குள்ளானவர்களை ஊக்குவித்து ஆறுதல் அளிக்கவும், அதோடு அவர்களுக்கு என்னென்ன தேவை என்பதை கண்டுகொள்ளவும் முடிகிறது. ஆறு ராஜ்ய மன்றங்களிலும் தற்காலிகமாய் தங்கியிருக்கும் சகோதரர்கள் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டு வருவதை நாங்கள் பார்க்கிறோம். இதனால், தப்பிவந்த யெகோவாவின் சாட்சிகள் எத்தனை பேர் என்பதை எங்களால் சரியாக கணக்கிட முடிகிறது; பிள்ளைகள் உட்பட அவர்கள் 1,800 பேர்.

சரி, பிற்பாடு ஏதாவது வசதி செய்து கொடுக்கப்படுமா? அகதிகளுக்கு உடனடியாக முகாம்களை கட்டிக்கொடுப்பதற்கு உள்ளூர் அதிகாரிகள் திட்டமிடுகிறார்கள். என்றாலும், 1994-⁠ல் நடந்த இன படுகொலைக்குப் பின் அகதிகளுக்கு கட்டிக்கொடுத்திருந்த முகாம்களைப் பற்றிய வெறுப்பூட்டும் நினைவுகளே சிலரின் மனதில் இன்னும் குடிகொண்டிருக்கிறது. நாங்கள் கோமா நகருக்கு திரும்பிச் செல்ல தீர்மானித்து, மத்தியான வேளையிலே நகரத்திற்கு வந்து சேர்கிறோம். அந்நகர் கிட்டத்தட்ட கால்வாசி பாகம் சூறையாடப்பட்டிருக்கிறது. தெருக்கள் வழியாக பாய்ந்தோடிய லாவா இப்போது கெட்டியாகி விட்டதால் அதன்மீது எங்களால் நடந்து செல்ல முடிகிறது. அது இன்னும் வெதுவெதுப்பாகவே இருக்கிறது, அதிலிருந்து வெளியேறும் வாயுக்கள் வளிமண்டலத்தில் பரவுகின்றன. மக்கள் பலரும் நகரத்திற்கு எப்படியும் திரும்பிவிட வேண்டும் என ஒற்றைக்காலில் நிற்கிறார்கள்.

பிற்பகல் ஒரு மணிக்கு நாங்கள் கோமா நகரிலுள்ள மத்திய சபையின் ராஜ்ய மன்றத்தில் 33 மூப்பர்களை சந்திக்கிறோம். கோமா நகருக்கே திரும்பி வர வேண்டும் என்பதே அவர்களின் ஏகோபித்த கருத்து. “இதுதான் எங்க ஊர்” என அவர்கள் சொல்கிறார்கள். ‘எரிமலை வெடிப்பு மீண்டும் ஏற்பட்டால் என்ன செய்வது?’ என்று கேட்டால் “அதுதான் எங்களுக்கு பழக்கப்பட்டதாச்சே” என்று கூறுகிறார்கள். அவர்கள் சீக்கிரத்தில் திரும்பவில்லை என்றால் தங்களுக்கு சொந்தமானவை எல்லாம் பறிபோய்விடும் என பயப்படுகிறார்கள். அடுத்த நாள், தப்பியோடிய யெகோவாவின் சாட்சிகளின் எல்லா குடும்பங்களும் கோமா நகருக்கு திரும்பி வந்தன. எல்லையைக் கடந்து ஏராளமாய் சென்றிருந்த 3,00,000 ஜனங்களும் பாதிப்புக்குள்ளான நகருக்கு திரும்பி விட்டனர்.

ஒரு வாரத்திற்குப் பின்

நகரம் மீண்டும் உயிர்பெற்று வருகிறது. அது இனி சாகாது. இரண்டாகிப் போயிருந்த நகரை முடிந்தளவு ஒன்று சேர்ப்பதற்காக, லாவாவை மட்டப்படுத்தும் பணிகள் மும்முரமாகின்றன. லாவா பாய்ந்துசென்ற பாதையில் உள்ள அனைத்துமே நாசமாகியிருந்தது. அந்த நகரின் வர்த்தக மையமும் நிர்வாகப் பகுதியும் அழிந்தே விட்டன. விமான நிலைய ரன்வேயின் மூன்றில் ஒரு பங்கு சேதமடைந்துவிட்டதாக மதிப்பிடப்படுகிறது.

வீட்டையும் பொருளையும் இழந்து தவிப்பவர்களில் 180 யெகோவாவின் சாட்சிகளது குடும்பங்களும் இருப்பதாக துல்லியமான எண்ணிக்கை காட்டுகிறது. ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் என சுமார் 5,000 பேருக்கு அன்றாடம் உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளை நிவாரண குழு செய்கிறது. வீடு இழந்தவர்கள் தற்காலிகமாக கூடாரம் போட்டு தங்குவதற்கு, சுவிட்சர்லாந்து, பிரான்சு, பெல்ஜியம் ஆகிய நாடுகளிலிருந்து யெகோவாவின் சாட்சிகள் நன்கொடையாக அனுப்பிய பிளாஸ்டிக் தார்பாலின்கள் பயன்படுத்தப்படும்; சில சபைகளின் ராஜ்ய மன்றங்கள் பெருமளவில் சேதமடைந்திருந்தாலோ முற்றிலும் தரைமட்டமாகியிருந்தாலோ அந்த சபைகள் கூட்டங்கள் நடத்துவதற்கும் இவை பயன்படுத்தப்படும். வீடுகளை இழந்த யெகோவாவின் சாட்சிகளில் சிலர், சேதம் எதுவும் ஏற்படாமல் நல்ல நிலையில் இருக்கும் பிற யெகோவாவின் சாட்சிகளின் வீடுகளில் தங்குவார்கள்; மற்றவர்களோ தற்காலிக கூடாரங்களில் தங்குவார்கள்.

அந்தப் படுமோசமான இரவுக்குப்பின் சுமார் 10 நாட்கள் கழித்து ஜனவரி 25, வெள்ளிக்கிழமை பைபிளிலிருந்து உற்சாகமூட்டும் வார்த்தைகளை கேட்பதற்காக கோமா நகரிலுள்ள ஒரு பள்ளிக்கூடத்தின் வெளியே நடத்தப்பட்ட கூட்டத்திற்கு 1,846 பேர் ஆஜராகிறோம். யெகோவா தம்முடைய அமைப்பு வாயிலாக ஆறுதலையும் நடைமுறையான உதவியையும் அளித்ததற்காக சகோதரர்கள் தங்கள் நன்றியை பல்வேறு வார்த்தைகளில் தெரிவிக்கிறார்கள். இந்த மோசமான சூழ்நிலையிலும் சகோதரர்கள் காண்பித்த தைரியமும் உறுதியான விசுவாசமும் விருந்தினராகிய எங்கள் மனதை நெகிழ வைக்கிறது. இந்த இக்கட்டின் மத்தியிலும் நித்திய ஆறுதலின் ஊற்றுமூலராகிய மெய்க் கடவுள் யெகோவாவை ஒன்றுபட்டு வணங்கும் சகோதரத்துவத்தின் பாகமாயிருப்பது எத்தனை இன்பமானது!​—சங்கீதம் 133:1; 2 கொரிந்தியர் 1:3-7. (g02 11/8)

[பக்கம் 2223-ன் தேசப்படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

அம்புக்குறிகள் லாவா பாய்ந்து வந்த பாதையை காட்டுகின்றன

காங்கோ (கின்ஷாசா)

நியரகாங்கோ மலை

↓ ↓ ↓

கோமா விமான நிலையம் ↓ ↓

↓ கோமா

↓ ↓

கிவு ஏரி

ருவாண்டா

[பக்கம் 23-ன் படங்கள்]

அனல் கக்கும் லாவா பல்லாயிரக்கணக்கான ஜனங்களை கோமா நகரை விட்டு வெளியேறும்படி செய்தது

[படத்திற்கான நன்றி]

◀ AP Photo/Sayyid Azim

[பக்கம் 2425-ன் படங்கள்]

ஒரு வாரத்திற்குள் யெகோவாவின் சாட்சிகள் தங்கள் கிறிஸ்தவ கூட்டங்களை ஒழுங்குபடுத்தினர்