Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிரிட்டனின் வளைகரடி—கானகத்தின் ஜமீன்தார்

பிரிட்டனின் வளைகரடி—கானகத்தின் ஜமீன்தார்

பிரிட்டனின் வளைகரடி​—கானகத்தின் ஜமீன்தார்

பிரிட்டனிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

கரிக்குருவியின் கானம் கானகத்தின் அமைதியை கலைத்தது. கதிரவன் மெதுவாக கண்ணயரச் செல்லும் வேளை; நானோ வீழ்ந்து கிடக்கும் பூர்ச்சமரத்தில் அமர்ந்திருந்தேன். மழை ‘அருவி’யில் குளித்த பசும் பூண்டுகளின் சுகந்தத்தை மாலை இளங்காற்று பரப்பியதில் மனம் லயித்தவாறு இருந்தேன்.

தென்றல் என்னை மெல்லத் தொடும் ஓர் இடத்தை கவனமாக தேர்ந்தெடுத்திருந்தேன்; ஏனெனில் வளைகரடிகளை கூர்ந்து கவனிக்கவே நான் இங்கு வந்திருந்தேன். வளைகரடியின் காதுகள் மிகச் சிறியவை, வெள்ளைநிற நுனிப்பகுதியுடையவை; அதன் கண்களும் மிகச் சிறியவை; ஆனால், அதன் கேட்கும் திறமையையும் மோப்பம் பிடிக்கும் திறமையையும் ஒருபோதும் துச்சமாக எடை போடக்கூடாது, அவை ரொம்ப கூர்மையானவை என்பதை நான் தெரிந்துகொண்டேன். என்னுடைய சத்தம் கேட்டுவிட்டால் அல்லது என்னை மோப்பம் பிடித்துவிட்டால் போதும் அது தன் வளைக்குள் ஒரேயடியாக போய்விடும், ராத்திரி முழுக்க வெளியே வராது என்பதும் எனக்கு தெரியும்.

ஐரோப்பிய வளைகரடி ஒளிந்துகொள்ளும் சுபாவம் உடையது, அது அளவில் பெரியது. அதன் நீளம் சுமார் ஒரு மீட்டர், உயரம் 30 சென்டிமீட்டர், அதன் சராசரி எடை சுமார் 12 கிலோ. அதன் சொரசொரப்பான உரோமம் சாம்பல் நிறமானது; அதன் முகமும் அடிப்பகுதியும் கறுப்பு நிறமுடையவை; அதன் கறுப்பு நிற கால்கள் குட்டையானவை; அதன் வால் சாம்பல் நிறத்துடன் குட்டியாக இருக்கும். அதன் பாதங்கள் ஒவ்வொன்றிலும் உள்ள ஐந்து விரல்களில் கெட்டியான வளை நகங்கள் உள்ளன.

அதன் மூக்கிலிருந்து காதுகள் வரை அமைந்துள்ள அகன்ற மூன்று வரிகளே அதன் தனிச்சிறப்புமிக்க அம்சம்; அதுமட்டுமல்ல அது சர்ச்சைக்குரிய விஷயமாகவும் இருக்கிறது. வளைகரடிகள் இந்த வரிகளின் உதவியால் கும்மிருட்டிலும் தன் இனத்தை அடையாளம் கண்டுகொள்ள முடியும் என சிலர் சொல்கிறார்கள்​—ஆனால், வளைகரடிகள் மோப்பம் பிடித்தே ஒன்றையொன்று அடையாளம் கண்டுபிடித்துவிடும் என்பது நமக்கு தெரியும். இந்த வரிகளுக்கு காரணம் என்னவாக இருந்தாலும், அவை அந்த வளைகரடிகளின் அழகுக்கு அழகு சேர்க்கின்றன.

பிரிட்டனின் கிராமப் பகுதிகளில் வளைகரடியைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இலர். தோண்டுவதையே தொழிலாகக் கொண்ட இந்த வளைகரடி, பொந்தாகிய தன் வீட்டை அமைக்க சுரங்கப்பாதைகளையும், ஊடுவழிகளையும் அறைகளையும் தொடர்ந்து தோண்டிக்கொண்டே இருக்கிறது. இப்பொந்தின் குறுக்களவு 30 மீட்டர் வரை இருக்கலாம்; சிக்கலான அமைப்புடைய இந்த சுரங்கப்பாதைகளின் நீளம் 300 மீட்டர் இருக்கலாம்! இந்த வளைகரடி இரவில் நடமாடும் ஒரு பிராணி. பகல் நேரத்தில் அதன் பொந்திலுள்ள அறைகளை முக்கியமாக தூங்குவதற்கு பயன்படுத்துகிறது. புதிய மெத்தை விரிப்புகள் போட்ட விசேஷ அறைகளும் இருக்கின்றன; பெண் வளைகரடி குட்டி போடுகையில் அவற்றை பயன்படுத்துகிறது.

நிலத்தின் மேற்பரப்பிலிருந்து பொந்துக்குள் செல்வதற்கு நிறைய வாயில்கள் இருக்கும். அவை பெரும்பாலும் ஆல்டர் மரங்களுக்கு அருகிலும், ஹாதார்ன் அல்லது ப்ராம்பல் முட்செடியின் புதர்க்குள்ளும் அமைந்திருக்கின்றன. இங்கிலாந்தில் காணப்படும் 50-⁠க்கும் மேற்பட்ட வாயில்கள் உடைய சில பொந்துகள், 150-⁠க்கும் மேலான வருடங்கள் இருந்துவருவதாக சொல்லப்படுகிறது; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பல தலைமுறைகள் அவற்றில் குடியிருக்க முடிகிறது. வளைகரடிகளின் சராசரி ஆயுட்காலம் 2 முதல் 3 வருடங்களாக இருந்தாலும், அவை 15 வருடங்களோ அதற்கும் மேற்பட்ட வருடங்களோ உயிர்வாழலாம்.

நுழைவாயில்களின் அருகே மண் குவிந்து கிடப்பதால்​—அவற்றிலிருந்து மண்ணையும் கற்களையும் பாறைகளையும் அப்புறப்படுத்தியிருப்பதால்​—வளைகரடியின் பொந்தை கண்டுபிடிக்க எந்தக் கஷ்டமும் இல்லை. பொந்திலிருந்து அப்புறப்படுத்தியிருப்பவற்றை பார்க்கும்போது இந்த விலங்கு எவ்வளவு பலசாலி என்பது உங்களுக்குப் புரிகிறது.

பொந்திற்குள் ‘ஆள்’ இருக்கிறதா என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம்? முதலாவது வளைகரடியின் கழிப்பிடங்களை​—பொந்தை சூழ அமைந்துள்ள 15 முதல் 23 சென்டிமீட்டர் அகலமும் 23 சென்டிமீட்டர் ஆழமுமுள்ள குழிகளை​—சுற்றிப் பாருங்கள். அவற்றில் மலம் கழிக்கப்பட்டிருப்பதை கண்டால், அதுவும் அப்போதுதான் கழிக்கப்பட்டதாக இருந்தால் வளைகரடிகள் பொந்துக்குள் இருக்கின்றன என்று அர்த்தம். பொந்துக்கு வெளியே நன்கு கால்பதித்து சென்ற தடங்கள் இருக்கிறதா என்பதை பாருங்கள்; கோடைக் காலங்களானால் அங்குள்ள செடிகள் மிதிபட்ட வண்ணம் கிடக்கிறதாவென பாருங்கள். சேறு நிறைந்த பகுதியானால், வளைகரடியின் கால் தடங்கள் தெரிகின்றனவா என்று பாருங்கள், அல்லது பொந்துக்கு அருகே உள்ள மரங்களில் சேற்றின் அடையாளங்களும் நகங்களால் பிராண்டப்பட்ட கீறல்களும் இருக்கின்றனவா என்பதை கவனியுங்கள். அங்குதான் அவை பூனையைப் போன்று பின்னங்கால்களில் நின்றுகொண்டு, அவற்றின் கெட்டியான நகங்களின் உதவியால் உடலை நீட்டி நெளிக்கின்றன. பொந்து பெரிதாக இருந்தால் வளைகரடிகளை கவனிப்பது கடினம்; ஏனெனில் அவை மற்றொரு நுழைவாயிலையோ வெளியேறும் வாயிலையோ பயன்படுத்தலாம். ஆகவே விடியற்காலையிலேயே சென்று ஒவ்வொரு திறப்பின் மீதும் குச்சிகளை வையுங்கள். அடுத்த நாள் காலையில் சென்று பார்த்தால் குச்சிகள் ஒருபுறமாக தள்ளிவிடப்பட்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள்; வெளியே வரும் வளைகரடிகள் எந்தெந்த திறப்புகளை பயன்படுத்தியிருக்கின்றன என்பதை அதிலிருந்து தெரிந்துகொள்வீர்கள்.

வளைகரடி உணவைத் தேடி இரவில் வெகுதூரத்திற்கு பிரயாணம் செய்கிறது; ஓக் அல்லது புங்க மரத்தின் கொட்டைகளை தேடிச் செல்கிறது, அல்லது மோப்பம் பிடித்து, குழிகளிலிருந்து முயல் குட்டிகளை தோண்டியெடுக்கிறது அல்லது லார்வாக்களை தின்பதற்காக குளவி கூட்டிற்கு செல்கிறது. அதன் முக்கியமான உணவு எது? மண்புழுக்கள்! ஆனால், காட்டுப் பழங்கள், ப்ளூபெல்லின் கிழங்குகள், காளான்கள், வண்டுகள் உட்பட கிட்டத்தட்ட எல்லாவற்றையுமே அது உண்ணும். ஜூலை மாதத்தில் மழைக்குப்பின் எங்கும் ஈரக்காடாக கிடந்த ஒருநாள் இரவு வளைகரடிகளை கவனித்துக்கொண்டிருந்தது ஞாபகம் இருக்கிறது; அவை பொந்தை விட்டு ரொம்ப தூரத்திற்கு செல்லவேயில்லை, ஏனெனில் கரடு முரடான மேட்டுப்பகுதியிலுள்ள புல்வெளியில் மழை அடித்து வந்த சுவையான கறும் மெல்லுடலி அட்டைகள் எக்கச்சக்கமாக காணப்பட்டன.

வளைகரடிகள் பொதுவாக ஜூலை மாதத்தில் இணைசேர்ந்து பிப்ரவரி மாதத்தில் குட்டிபோடுகின்றன; சாதாரணமாக நான்கு அல்லது ஐந்து குட்டிகளை ஈனுகின்றன. குட்டிகளுக்கு சுமார் மூன்று மாதங்கள் ஆனதும் அவை பொந்தை விட்டு வெளியே வந்து நிலத்தின் மேற்பரப்பில் வாயிலின் அருகே விளையாடுகின்றன. குட்டிகள் பொந்திற்கு வெளியே இருக்கையில், அப்பா கரடியும் அம்மா கரடியும் சேர்ந்து படுக்கை விரிப்புகளை புதுப்பிக்கின்றன. வளைகரடிகள் சுத்தமான விலங்குகள், தங்கள் வளைகளை சுத்தமாக வைத்துக்கொள்வதில் கவனமாக இருக்கின்றன. மெத்தை விரிப்புகளை பொதுவாக வசந்த காலத்திலும் இலையுதிர்காலத்திலும் உலர வைக்கின்றன; ஆனால் வருடத்தின் எந்த மாதத்தில் வேண்டுமானாலும் உலர வைக்கலாம். அப்பா கரடியும் அம்மா கரடியும் காய்ந்துபோன பழைய புல் புதர்களை வெளியே இழுத்துப் போட்டு அதற்கு பதிலாக புதிய புல் புதர்களை விரிக்கின்றன​—இரவோடு இரவாக 30-⁠க்கும் மேற்பட்ட புல் மூட்டைகளை சேகரிக்கின்றன. இவற்றை முகவாய்க்கட்டைக்கும் முன்னங்கால்களுக்கும் இடையே வைத்து இழுத்து இழுத்து பொந்தின் ஒரு வாயில் வழியாக கொண்டுவந்து போடுகின்றன.

தங்களுடைய பிராந்தியத்தை குறித்துக்கொள்வதற்காக, அவற்றின் வாலுக்கு கீழேயுள்ள சுரப்பியிலிருந்து சுரக்கும் துர்நாற்றமிக்க திரவத்தை, கற்றையாக வைத்திருக்கும் புல், கற்கள் அல்லது வேலிக்கம்பங்கள் மீது பரப்புகின்றன. தங்கள் மத்தியில் ஒன்றையொன்று அடையாளம் கண்டுகொள்வதற்காக அவற்றை ஒன்றுக்கொன்றும் பூசிக்கொள்கின்றன. திரும்பி வருகையில் இந்த துர்நாற்றத்தை வைத்தே பொந்தின் நுழைவாயிலை வளைகரடி எளிதாக கண்டுபிடித்துவிடும்.

கரிக்குருவியின் கானம் அடங்கிவிட்டது, கானகத்தில் படர்ந்த இருளில் எல்லாமே நிசப்தமாகி விட்டது. ஒரு புறமிருந்து வளைகரடியின் கறுப்பு-வெள்ளை நிற தலை தென்பட்டபோது, நான் மூச்சுவிடக்கூட ‘தில்’ இன்றி ஆடாமல் அசையாமல் அப்படியே உட்கார்ந்தேன். கொஞ்ச நேரத்திற்கு அந்த வளைகரடி பொந்தின் நுழைவாயிலில் நின்று, மாலைக் காற்றை முகர்ந்து தனக்கு ஆபத்து ஏதேனும் இருக்கிறதா என மோப்பம் பிடித்துவிட்டு இருளுக்குள் நடமாட புறப்பட்டது; நிலத்தின் ஜமீன்தார் தன் மூதாதையரின் எஸ்டேட்டை சுற்றிப் பார்க்க கிளம்புவதுபோல் அது இருந்தது. (g02 11/8)

[பக்கம் 1213-ன் படம்]

குட்டி போடுவதற்கான அறை

தூங்குவதற்கான அறை

விரிப்புகள்

[பக்கம் 13-ன் படம்]

வளைகரடி குட்டிகள்

[பக்கம் 13-ன் படங்கள்]

ஓக் மரக் கொட்டைகள், காளான்கள், மண்புழுக்கள் ஆகியவற்றையும் வளைகரடி உணவாக உட்கொள்கிறது

[பக்கம் 13-ன் படத்திற்கான நன்றி]

வளைகரடி போட்டோகள்: © Steve Jackson, www.badgers.org.uk