Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“மனித சரித்திரத்திலேயே மிகக் கொடிய கொள்ளை நோய்”

“மனித சரித்திரத்திலேயே மிகக் கொடிய கொள்ளை நோய்”

“மனித சரித்திரத்திலேயே மிகக் கொடிய கொள்ளை நோய்”

தென் ஆப்பிரிக்காவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

“இவ்வுலகில் எந்தவொரு போரும் எய்ட்ஸ் கொள்ளை நோயைப் போன்று அவ்வளவு சீரழிவை ஏற்படுத்தினதில்லை.”​—ஐ.மா. செயலர் காலின் பாவெல்.

எய்ட்ஸ் (நோய் எதிர்ப்பு மண்டலத்தை செயலற்றதாய் ஆக்கும் நோய்) பற்றிய முதல் அதிகாரப்பூர்வ அறிக்கை ஜூன் 1981-⁠ல் வெளியிடப்பட்டது. “எய்ட்ஸ் நோயின் ஆரம்ப காலங்களில் அப்பிரச்சினையைக் குறித்து ஆலோசித்தவர்கள் அது இந்தளவுக்கு பரவும் என கற்பனைகூட செய்திருக்க மாட்டார்கள்” என இணை ஐக்கிய நாட்டு எச்ஐவி/எய்ட்ஸ் திட்டத்தின் (UNAIDS) செயற்குழு இயக்குநர் பீட்டர் பியா கூறுகிறார். இது, 20 ஆண்டுகளுக்குள் என்றுமில்லாத அளவுக்கு மிகக் கொடிய கொள்ளை நோயாக உருவெடுத்திருக்கிறது. இனியும் விசுவரூபம் எடுக்கத்தான் போகிறது என அறிகுறிகள் காட்டுகின்றன.

3,60,00,000 பேருக்கும் அதிகமானோரை எச்ஐவி (மனித நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் வைரஸ்) தொற்றியிருப்பதாகவும் 2,20,00,000 பேர் எய்ட்ஸ் பாதிப்புகளால் இறந்திருப்பதாகவும் கணக்கிடப்படுகிறது. a 2000-⁠ம் ஆண்டில் உலகம் முழுவதிலும் 30,00,000 உயிர்களை எய்ட்ஸ் காவுகொண்டது; இந்தக் கொள்ளை நோய் கோரமுகம் காட்டிய சமயம் முதற்கொண்டு மொத்தம் பலியானவர்களின் உச்சக்கட்ட வருடாந்தர எண்ணிக்கை இதுவே. முக்கியமாக செல்வ செழிப்பான நாடுகளில் ரெட்ரோவைரஸ்களுக்கு எதிரான சிகிச்சையை (antiretroviral drug therapy) கையாண்டும் இந்தக் கதி!

ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் ஆக்கிரமிப்பு

சஹாராவின் தென்னக நாடுகளில் 2,53,00,000 பேருக்கு இந்நோய் தொற்றியிருப்பதாக உத்தேசமாக கணக்கிடப்படுகிறது, ஆகவே இப்பகுதியில்தான் எய்ட்ஸ் எனும் புயல் மையம் கொண்டிருக்கிறது என சொல்லலாம். 2000-⁠ம் ஆண்டில் இப்பகுதியில் மட்டுமே 24,00,000 பேர் எய்ட்ஸ் நோயிற்கு பலியாகியுள்ளனர்; இது உலக எண்ணிக்கையில் 80 சதவீதம். இப்பகுதியில் சாவுக்கு முக்கிய காரணமாக விளங்குவது எய்ட்ஸ் நோயே. b

இந்நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கையில் உலகிலேயே முதலிடத்தை பிடித்திருப்பது தென் ஆப்பிரிக்காதான்; 47,00,000 பேருக்கு இந்தத் தொற்று இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. இங்கு ஒவ்வொரு மாதமும் 5,000 சிசுக்கள் எச்ஐவி பாஸிட்டிவ்வுடன் பிறக்கின்றன. “தென் ஆப்பிரிக்காவில் மட்டுமே இளவட்டங்களில் இரண்டில் ஒருவர், அதாவது பாதிக்குப் பாதி எய்ட்ஸ் கையில்தான் சாவார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். புள்ளிவிவரங்கள் நமக்கு தெரியப்படுத்துகிற இந்தத் தொற்றுகளையும் அதனால் மனிதர் படும் அவஸ்தையையும் . . . தடுத்திருக்கலாம், தடுக்கவும் முடியும் என்பதே அதிக கலக்கத்தை ஏற்படுத்தும் விஷயம்” என ஜூலை 2000-⁠ல் டர்பனில் நடந்த 13-வது சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டில் தென் ஆப்பிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா குறிப்பிட்டார்.

பிற நாடுகளில் எய்ட்ஸ் தாக்குதல்

கிழக்கு ஐரோப்பா, ஆசியா, கரீபியன் ஆகிய இடங்களிலும் இந்நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை படுவிரைவாக ஏறி வருகிறது. 1999-⁠ன் முடிவில் கிழக்கு ஐரோப்பாவில் 4,20,000 பேரை இந்நோய் தொற்றியிருந்தது. 2000-⁠ம் ஆண்டின் முடிவுக்குள் அந்த எண்ணிக்கை 7,00,000-மாக அதிகரிக்கும் என உத்தேசமாக மதிப்பிடப்பட்டது.

ஓரினப்புணர்ச்சியில் ஈடுபடும் இளம் காளையினரில் 12.3 சதவீதத்தினருக்கு எச்ஐவி தொற்று இருப்பதை அமெரிக்காவில் ஆறு பெரிய நகரங்களில் நடத்தப்பட்ட சுற்றாய்வு காட்டியது. மேலும், எச்ஐவி பாஸிட்டிவ் இருந்தவர்களில் 29 சதவீதத்தினர் மட்டுமே தங்களுக்கு தொற்று இருப்பதை அறிந்திருந்தனர். “தங்களுக்கு எச்ஐவி தொற்றியிருப்பதே நிறைய பேருக்கு தெரிவதில்லை என்பதுதான் மனதிற்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. அப்படியானால் புதிதாய் எச்ஐவி தொற்றியவர்கள் அறியாமலேயே அந்த வைரஸை மற்றவர்களுக்கு கடத்துகிறார்கள்” என இந்த ஆய்வுக்கு தலைமைதாங்கிய கொள்ளைநோயியல் நிபுணர் கூறினார்.

இந்த நோய், “மனித சரித்திரத்திலேயே மிகக் கொடிய கொள்ளை நோய்” என மே 2001-⁠ல் சுவிட்சர்லாந்தில் எய்ட்ஸ் வல்லுநர்கள் நடத்திய கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே குறிப்பிட்டபடி, ஆப்பிரிக்காவிலுள்ள சஹாராவின் தென்னக நாடுகளையே முக்கியமாக எய்ட்ஸ் ஆட்டிப்படைத்திருக்கிறது. ஏன் என்பதை அடுத்த கட்டுரையில் காணலாம். (g02 11/8)

[அடிக்குறிப்புகள்]

a இவை UNAIDS வெளியிட்ட மதிப்பீடுகள்.

[பக்கம் 3-ன் சிறு குறிப்பு]

“இந்தத் தொற்றுகள் அனைத்தையும் . . . மனிதர் படும் அவஸ்தையையும் . . . தடுத்திருக்கலாம், தடுக்கவும் முடியும் என்பதே அதிக கலக்கத்தை ஏற்படுத்தும் விஷயம்.”​—நெல்சன் மண்டேலா

[பக்கம் 23-ன் படம்]

தங்களுக்கு எச்ஐவி தொற்றியிருப்பதே நிறைய பேருக்கு தெரிவதில்லை

[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]

UN/DPI Photo 198594C/Greg Kinch