Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயற்கையில் வடிவமைப்பைக் காணுங்கள்

இயற்கையில் வடிவமைப்பைக் காணுங்கள்

இயற்கையில் வடிவமைப்பைக் காணுங்கள்

கிராமப்புறத்தில் உலாவுகையில் இயற்கையின் அழகைக் கண்டு சொக்கிப் போகாதவர்கள் யாரேனும் உண்டோ? பூத்துக் குலுங்கும் மலர்க் கொத்து, சிறகடித்துப் பறக்கும் வண்ணப் பறவை, கம்பீரமாக உயர்ந்தோங்கி நிற்கும் மரம், எழில் கொஞ்சும் காட்சி என எவ்வித அழகிலும் மனதை பறிகொடுக்கிறோம். இந்த அழகையெல்லாம் கொட்டி வைத்தவர் படைப்பாளர் அல்லது தலைசிறந்த வடிவமைப்பாளர் என்பது அநேகரின் கருத்து.

இயற்கையில் உள்ள நுணுக்கமான வடிவமைப்புகளை விஞ்ஞானிகள் மட்டும்தான் கண்டுபிடிக்க முடியுமென நீங்கள் நினைக்கலாம். இருந்தாலும் இயற்கையின் வடிவமைப்புகளைக் காண நுட்பமான அறிவியல் சாதனம் எதுவும் தேவையில்லை. உங்களுக்கு வேண்டியதெல்லாம், கூர்மையான கண்களும் கொஞ்சம் கற்பனை திறனும்தான்; அதோடு அழகையும் வடிவத்தையும் ரசிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் தினமும் பார்த்த, ஆனால் சட்டை செய்யாமல் விட்டுவிட்ட பொருட்களை சற்று நிதானமாக உற்று கவனிக்க ஆரம்பிப்பதுகூட அவசியம்.

வடிவமைப்பில் மிக எளிய ஒன்றுதான் சுருள் வடிவம். சுருட்டிய கயிறு, கார்க் ஓப்பனர் போன்ற சாதாரண மனித படைப்புகளில் இந்த வடிவத்தைக் காணலாம். இருந்தாலும் இதைக் காட்டிலும் நளினமான சுருள் வடிவங்களை கடற்சிப்பிகளில் அல்லது ஊசியிலை மரக் கூம்புகளில் காணலாம். சூரியகாந்திப் பூவின் மையத்தை உற்றுப் பார்த்தால், அட, அங்கும் சுருள் வடிவம்! ரோஜா மலரின் நடுப்பகுதிக்கும் சிலந்தி வலைக்கும் அழகு சேர்ப்பதும்கூட சூட்சுமமான சுருள் வடிவங்கள்தான்.

சிலந்தி வலையை கொஞ்சம் க்ளோஸப்பில் பாருங்கள். சிலந்தி முதலில் வலையின் முக்கிய நூல்களை சக்கரத்துடைய கம்பிகள் வடிவில் பின்னுகிறது. பின்பு நடுவிலிருந்து ஆரம்பித்து பிசுபிசுப்பான பட்டுநூலால் அந்த முக்கிய நூல்களை இணைக்க ஆரம்பிக்கிறது. இவ்வாறே வட்டமாக சுற்றி சுற்றி வந்து நூல்களை இணைத்து வலையை பின்னி முடிக்கிறது. இழுக்க இழுக்க வந்துகொண்டேயிருக்கும் அதன் வட்ட வட்டமான நூல்கள்தான் சுருள் வடிவத்தின் இரகசியம்.

இயற்கையிலுள்ள மற்றொரு அசத்தலான வடிவமே கண் வடிவம், அதாவது கரு நிறப் புள்ளி. விசித்திரமான இடங்களிலெல்லாம் இதைக் காணலாம்; பறவையின் சிறகுகளில், வண்ணத்துப்பூச்சியின் இறக்கைகளில், மீனின் செதிள்களில்கூட இதைப் பார்க்கலாம். இணை சேர்வதற்கு, எதிரியை ஏமாற்றுவதற்கு, அல்லது வேண்டாத பார்வையிலிருந்து தப்புவதற்கு என பல பயன்கள் இதற்குண்டு என்கிறார்கள் விஞ்ஞானிகள். ‘கண்’களைப் பெற்றிருப்பதில் மன்னனாக திகழ்வது மயில் எனலாம். இணை சேருகையில் அது தோகை விரித்தாடும் காட்சி இயற்கையின் பேரதிசயங்களில் ஒன்று. வண்ண மயிலின் வனப்பில் சொக்கிப்போன மகா அலெக்ஸாந்தர், தன் சாம்ராஜ்யமெங்கும் இப்பறவையை பேணிப் பாதுகாக்க ஆணையிட்டார்.

வட்ட வடிவமும் உருண்டை வடிவமும்கூட சகஜமாக தென்படுபவை. அஸ்தமிக்கும் தங்கநிற சூரியனும், வெள்ளிநிற பௌர்ணமியும் நம் மனதை எப்போதும் கொள்ளை கொள்ளுகின்றன. பெரும்பாலான டெய்ஸி மலர்களுக்கு சூரியனின் சாயல் உண்டு; இம்மலர்களின் நடுப்பகுதி மஞ்சள் நிறம், இதழ்களோ பல்வேறு நிறங்களில் சூரியக்கதிர்கள் போல் விரிந்திருக்கின்றன. எங்கும் காணப்படும் இந்த மலரின் பொன்னிற “கண்,” தேன் விருந்து அளிக்கிறது; பொன்னிற கடற்கரைக்கு திரண்டு செல்லும் மக்கள் கூட்டத்தைப் போல்தான் இந்த தேன் விருந்துக்கு படையெடுக்கிறது வண்ணத்துப் பூச்சிகளின் கூட்டம்.

உருண்டை வடிவம், அடுக்குவதற்கும் ‘பாக்’ பண்ணுவதற்கும் மிக வசதியானது; அதனால்தான் பல்வேறு அளவுகளிலும் வண்ணங்களிலும் கிடைக்கும் பெரும்பாலான கனிகளும் பெர்ரிகளும் உருண்டை வடிவில் இருக்கின்றன போலும்! அவற்றின் கண்கவர் நிறங்கள் பறவைகளை சுண்டி இழுக்கின்றன, சுவையான விருந்துக்கு நன்றிக்கடனாக இப்பறவைகள் அவற்றின் விதைகளை எங்கும் தூவிவிடுகின்றன.

சுருள், கண், வட்டம், உருண்டை ஆகிய வடிவங்கள் இயற்கையில் கொட்டிக் கிடக்கும் எண்ணிலடங்கா வடிவங்களில் சில மட்டுமே. வடிவங்கள் சிலவற்றிற்கு குறிப்பிட்ட பயன் உண்டு, மற்றவையோ அலங்காரத்திற்குரியவை அல்லது மறைந்துகொள்ள ஏதுவானவை. எப்படியானாலும் சரி, வடிவங்களை காணத் தவறாதீர்! கண்டு ரசிக்கவும் தவறாதீர்! (g02 12/08)

[பக்கம் 22-ன் முழுபக்க படம்]