உலகை கவனித்தல்
உலகை கவனித்தல்
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்
பூரிப்படைந்து சிரிப்பதால் கிடைக்கும் பலன் சந்தோஷம் மட்டுமே அல்ல. சில ஜப்பானிய டாக்டர்கள் சொல்கிறபடி, நாளமில்லா சுரப்பிகள், நரம்பு மண்டலம், நோய் எதிர்ப்பு மண்டலம் ஆகியவற்றில் ஏற்படும் சமநிலையற்ற தன்மையை இது சகஜ நிலைக்குத் திருப்புகிறது; இருதய துடிப்பையும், சுவாசத்தையும் சீராக்குகிறது; முடக்கு வாதத்தால் அவதிப்படுபவர்களுக்கு தற்காலிக நிவாரணம் அளிக்கிறது. வாய்விட்டு சிரிப்பது பரிவு நரம்புகளை (sympathetic nerves) தூண்டுவிக்கிறது, அதனால் தசைகளில் இரத்த ஓட்டம் முடுக்கிவிடப்பட்டு, மூளை அதிக சுறுசுறுப்புடன் செயல்படுகிறது. வயிறு குலுங்க சிரிக்கையில் நம் தசைகளுக்கும் அது உடற்பயிற்சியாக அமைகிறது. வாய்விட்டு சிரித்த ஒரு நபரின் வயிற்று தசைகளுக்கு, “‘சிட்-அப்’ உடற்பயிற்சிக்கு வேண்டிய பிரயாசமே தேவைப்பட்டதாக” ஒரு பரிசோதனை காட்டியதென IHT ஆசாஹீ ஷீம்புன் செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டிருந்தது. நகைப்பினால் நற்பயன் விளைவதை ஒசாகா உளநோய் மருத்துவர் மிக்கியோ டானாகா மெச்சிப் பேசினார். டானாகாவை பொறுத்தவரை, “அது பக்க பாதிப்புகளை ஏற்படுத்தாத சிறந்த நிவாரணி.” (g02 12/08)
மிருகங்களுள் “மருத்துவர்கள்”
“காட்டு விலங்குகள் தங்கள் மருத்துவ தேவைகளை தாங்களே கவனித்துக் கொள்ளலாம், கவனித்தும் கொள்கின்றன என விலங்கின நடத்தையியல் நிபுணர்களில் அநேகர் தற்போது நம்புகின்றனர்” என்று லண்டனில் வெளியாகும் தி எக்கானமிஸ்ட் அறிக்கை செய்கிறது. டான்ஜானியாவிலுள்ள சிம்பான்ஸிகள் தங்கள் குடலிலுள்ள கொக்கிப் புழுக்களை அழிக்க ஒரு தாவரத்தின் மென்சோற்றை (pith) சாப்பிடுகின்றன; இதில், அப்புழுக்களை அழிக்கும் சக்தி படைத்த இரசாயனங்கள் உள்ளன. ஆப்பிரிக்கா எங்குமுள்ள சிம்பான்ஸிகள் மிக நுண்ணிய முட்களுள்ள இலைகளை உட்கொள்கின்றன; இவை அவற்றின் குடல்களிலுள்ள புழுக்களை “சிக்க வைத்து” வெளியேற்றுகின்றன. மகாவோ கிளிகள் நச்சுத் தன்மையுள்ள காரகங்கள் (alkaloids) கொண்ட கொட்டைகளை சாப்பிடுகின்றன; அதோடு அந்த ஆபத்தான உணவிலுள்ள நச்சுத் தன்மையை நீக்குவதற்கு அவை களிமண்ணையும் உட்கொள்ளுகின்றன. அலாஸ்காவிலுள்ள பழுப்புநிற கரடிகள், கனடாவை சேர்ந்த வெண்நிற வாத்துகள், ஓநாய்கள் ஆகிய அனைத்தும் குடலிலுள்ள ஒட்டுண்ணிகளை நீக்க தாவரங்களை சாப்பிடுகின்றன. பல்வேறு விலங்குகளை வைத்து இரத்த பரிசோதனைகள் நடத்தப்பட்டன; அதன்படி, இயற்கை சூழலிலுள்ள காட்டு விலங்குகளில் அநேகம், வைரஸ்களாலும் பாக்டீரியாக்களாலும் ஏற்படும் தொற்றுகளால் படுமோசமாக பாதிக்கப்பட்டபோதும் உயிர்பிழைத்துக் கொண்டன; ஆனால் கூண்டிலடைக்கப்பட்ட விலங்குகள் இப்படிப்பட்ட தொற்றுகளால் பெரும்பாலும் உயிரிழக்கின்றன. “தங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள காட்டு விலங்குகள் ஏதேனும் செய்யலாம், ஆனால் கூண்டிலடைக்கப்பட்ட விலங்குகளால் ஒன்றுமே செய்ய முடியாது என அத்தகைய ஆராய்ச்சிகள் காட்டுகின்றன” என்று தி எக்கானமிஸ்ட் குறிப்பிடுகிறது. (g02 12/08)
முதலிடம் வகிக்கும் கொலையாளி
“சரித்திரத்தில் இடம்பிடித்த, படுமோசமான கொள்ளை நோயான ப்ளாக் டெத்தையும்கூட எய்ட்ஸ் நோய் நிச்சயம் மிஞ்சிவிடப் போகிறது” என நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை குறிப்பிடுகிறது. “14-ம் நூற்றாண்டில் ஐரோப்பா, ஆசியா முழுவதிலும் ப்ளாக் டெத் சுமார் நாலு கோடி உயிர்களை குடித்தது. இப்போது சுமார் 700 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே நிலைமை ஏற்பட்டிருக்கிறது.” ஆனால், பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் அறிக்கையின்படி 2010-க்குள்ளாக எச்ஐவி சுமார் 6.5 கோடி உயிர்களை காவுகொண்டிருக்கும். தற்போது அநேகர் காச நோயாலும் மலேரியாவாலும் பீடிக்கப்பட்டிருக்கிற போதிலும் இந்நோய்களின் பொருளாதார, சமூக “பிடி” எய்ட்ஸைக் காட்டிலும் “தளர்ந்திருப்பதாகவே” சொல்லப்படுகிறது. (g02 12/08)
“ஆசைக்கு அளவில்லை வார்த்தைக்கோ பஞ்சம்”
கடிதம் எழுதுவதையே தொழிலாக செய்து வருபவர்கள் எழுதித் தரும் காதல் கடிதங்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி இருப்பதாக ஜெர்மானிய வார இதழ் டி வாகா சொல்கிறது. உள்ளத்தில் பொங்கி வரும் உணர்ச்சிகளை எழுத்தில் வடிக்கத் தெரியாத காதலர்களுக்காக கடிதத்தை எழுதிக் கொடுத்து பணத்தை வாங்கிக்கொள்கிறார்கள் அநேகர். வாடிக்கையாளரின் விருப்பப்படி காதல் வார்த்தைகள் கடிதத்தில் கொஞ்சி விளையாடலாம் அல்லது அது எதார்த்த நடையில் எழுதப்படலாம். கவிதை நடையிலும் கடிதம் கிடைக்கும், அதற்கான விலையை பேரம்பேசி தீர்மானிக்க வேண்டும். இப்படி மற்றவர்களுக்காக காதல் கடிதங்களைப் படைப்பவர்கள் பலதரப்பட்டவர்கள். இவர்களில் சிலர், எழுதுவதையே பிழைப்பாக செய்து வருகிறவர்களும் இதழாசிரியர்களும் ஆவர்; சிலர் பொழுதுபோக்கிற்காக இப்படி எழுதிக் கொடுக்கிறார்கள். இன்னும் சிலர், கம்ப்யூட்டரே கடிதத்தை தயாரித்துக் கொடுப்பதற்கு வசதியாக வினாப்பட்டியலை புரோகிராம் செய்து உதவுகிறார்கள். எப்படியிருந்தாலும், அக்கடிதங்களால் காதலுக்கு “கிரீன் சிக்னல்” கிடைக்கும் என உறுதியளிக்க முடியாது. வாடிக்கையாளனின் வேண்டுகோளுக்கு இணங்கி, “வசீகரிக்குமளவுக்கு ஏகப்பட்ட ஆசை காட்டியும் சத்தியங்கள் செய்தும்” ஒருவர் மூன்று ஆண்டுகளாக கடிதங்கள் பல எழுதிக் குவித்தும், காதலுக்கே தன்னை அர்ப்பணித்த அந்த வாடிக்கையாளனின் காதலி அவனைக் கரம்பிடிக்க இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை. (g02 12/08)
முதுகு வலிக்கு ‘குட்பை’ சொல்லுங்கள்!
“தவறான போஸ், எடை கூடுதலாக இருப்பது, போதுமான உடற்பயிற்சி செய்யாதிருப்பது ஆகியவை மெல்ல மெல்ல நம் முதுகெலும்பை பாழாக்கிவிடலாம்” என்கிறது ஸ்பெயினில் வெளியாகும் எல் பாயீஸ் சேமேநேல் என்ற செய்தித்தாள். வளர்ந்த நாடுகளில் 80 சதவீதத்தினர் வாழ்க்கையில் ஏதோவொரு சமயத்தில் முதுகு வலியால் அவதிப்படுகிறார்கள் என கணக்கிடப்பட்டிருக்கிறது. முதுகு வலியை தவிர்ப்பதற்கும் குறைப்பதற்கும் நாம் தவறான போஸ்களை சரிசெய்ய கற்றுக்கொள்ள வேண்டுமென தண்டுவடம் சம்பந்தப்பட்ட சிகிச்சைக்காகவே அமைக்கப்பட்ட ஸ்பானிஷ் கோவாக்ஸ் கிளினிக் பரிந்துரை செய்கிறது. செய்ய வேண்டிய சில எளிய காரியங்கள் இவையே: ஒருக்களித்துப் படுங்கள்; முதுகெலும்பு நேராக இருக்கும்படியும் பார்த்துக்கொள்ளுங்கள். உட்கார்ந்திருக்கையில் முதுகுப் பகுதி இருக்கையோடு ஒட்டி சாய்ந்திருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். கம்ப்யூட்டரில் வேலை செய்கையில், உங்கள் தோள்பட்டைகளை சாதாரணமாக வைத்துக்கொள்ளுங்கள். குனியும்போது முதுகை வளைக்காமல் உங்கள் முழங்கால்களை மடக்குங்கள். நீண்ட நேரம் நிற்க வேண்டியிருந்தால் உங்கள் எடை முழுவதையும் ஒரு காலில் தாங்கிக் கொண்டு மறுகாலை ஸ்டூலின் மீதோ படியின் மீதோ ஊன்றிக்கொள்ளுங்கள். (g02 12/08)
குப்பையும் சொக்க தங்கமாகலாம்
மதிப்புமிக்க உலோகங்களைப் பெறுவதற்கு அதிக லாபம் தரும் எளிய வழியை ஜப்பானிலுள்ள சுரங்க கம்பெனி ஒன்று கண்டுபிடித்திருக்கிறது. உலோக கலவைகளைத் தேடிக் கண்டுபிடிப்பதில் நேரத்தையும் பணத்தையும் விரயமாக்குவதற்குப் பதிலாக கோசாகா உலோகம் உருக்கும் மற்றும் புடமிடும் கம்பெனி தற்போது வேண்டாமென தூக்கியெறியப்பட்ட செல் ஃபோன்களையும் கம்ப்யூட்டர்களையும் உருக்கி, அவற்றை மதிப்புமிக்க உலோகங்களாக மாற்றுவதாக டோக்கியோவில் வெளியாகும் IHT ஆசாஹீ ஷீம்புன் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. “பேட்டரிகள் இல்லாத, குப்பையில் தூக்கியெறியப்பட்ட 1 டன் செல் ஃபோன்களிலிருந்து பல நூற்றுக்கணக்கான கிராம் தங்கத்தை உற்பத்தி செய்ய முடியும்” என்கிறார் கோசாகா கம்பெனியின் தலைவர். பொதுவாக ஒரு டன் உலோக கலவையிலிருந்து பெறும் உலோகத்தோடு ஒப்பிட இந்த “மாநகர சுரங்கங்களில்” உள்ள ஒரு டன் குப்பையிலிருந்து சுமார் பத்து மடங்கு அதிக உலோகம் கிடைக்கிறது. மேலும், செல் ஃபோனிலிருந்து தங்கத்தை பெறும் முறைக்கும், உலோக கலவையிலிருந்து தங்கத்தை பெறும் முறைக்கும் பெரும் வித்தியாசம் ஒன்றுமில்லை; எனவே வேறு செய்முறை கருவிகளை வாங்குவதற்கு கூடுதலாக பணத்தை வாரியிறைக்க தேவையில்லை. (g02 12/22)
இயற்கை குளிரூட்டி
மெந்த்தால் எனப்படும் குளிரூட்டியைக் காட்டிலும் 35 மடங்கு குளிரூட்டும் சக்தி படைத்த இயற்கை இரசாயனத்தை ஜெர்மனியிலுள்ள ஓர் ஆய்வுக் குழு கண்டுபிடித்திருக்கிறது; எனினும் அதில் புதினாவின் சுவை இல்லை. இந்த இரசாயனம் இயற்கையாகவே பீரிலும் விஸ்கியிலும் இருப்பது மியூனிச், கார்கிங்கிலுள்ள ஜெர்மன் ரிசர்ச் சென்டர் ஃபார் ஃபுட் கெமிஸ்ட்ரியில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஆய்வுக் குழுவின் இயக்குநரான டோமாஸ் ஹோஃப்மான் சொன்னதை நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை இவ்வாறு மேற்கோள் காட்டுகிறது: “அது பீர், பாட்டில் தண்ணீர், புளிப்பு பானங்கள், சாக்லெட், இனிப்பு பண்டங்கள் என பலதரப்பட்ட பொருட்களுக்கு கூலான, பெரும் புத்துணர்ச்சியூட்டுகிற கடுக்கும் சுவையை அளிக்கலாம்.” புதினாவைவிட 250 மடங்கு குறைவான அடர்த்தியில் இந்த இரசாயனம், சருமத்திற்கு குளிர்ச்சியூட்டுவதால் அது பொலிவூட்டும் தன்மையை ஒப்பனை பொருட்களுக்கு அல்லது சரும லோஷன்களுக்கு தருகிறது. (g02 12/22)
எருவும் சூப்பர் நுண்ணுயிரிகளும்
“பண்ணை விலங்குகளுக்கு நுண்ணுயிர் கொல்லி மருந்துகளான ஆன்டிபயாடிக்ஸ் கொடுக்கப்படுவதால் ஐரோப்பா எங்குமுள்ள பண்ணைகள் இவற்றால் ஆபத்தான அளவுக்கு மாசுபடுத்தப்பட்டுள்ளன” என நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை அறிக்கை செய்கிறது. ஐரோப்பிய யூனியனிலும் ஐக்கிய மாகாணங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் பண்ணை விலங்குகளுக்கு 10,000 டன்னுக்கும் அதிகமான நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் கொடுக்கப்படுகின்றன; வளர்ச்சியை அதிகரிக்கவும் நோயை தடுக்கவுமே இவை கொடுக்கப்படுகின்றன. “ஆனால், பண்ணை விலங்குகளுக்கு பெருமளவு மருந்துகள் கொடுக்கப்படுவதற்கும், ஆன்டிபயாடிக்ஸின் வீரியத்தை குறைத்து மனிதனுக்கு கேடு விளைவிக்கிற நுண்ணுயிரிகள் தோன்றுவதற்கும் இடையே நேரடித் தொடர்பு இருப்பது சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது” என அப்பத்திரிகை குறிப்பிடுகிறது. “மருந்து நிறைந்த எரு வயல்களில் எங்கும் உரமாக தூவப்படுகையில் அவை நம் உணவிலும் தண்ணீரிலும் கலந்துவிடலாம் . . . , [மேலும் அவை] பயிர்களை மாசுபடுத்துகின்றன, அப்பயிர்களோ உணவாகின்றன” என நியூ சயன்டிஸ்ட் சொல்கிறது. (g02 12/22)
“தத்தெடுக்க” தாத்தா பாட்டிமார்
உறவினர்கள் இல்லாத 66 முதியவர்களை ஸ்பெயினிலுள்ள சில குடும்பங்கள் “தத்தெடுக்க” தீர்மானித்திருப்பதாக ஸ்பெயினில் வெளியாகும் எல் பாயீஸ் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. “இனிமேலும் தனியாக வாழ இயலாதவர்கள் முதியோர் காப்பகத்திற்குப் போவதற்கு பதிலாக தத்தெடுக்கப்படுவதைத் தேர்ந்தெடுப்பதே . . . இந்த ஏற்பாட்டின் நோக்கமாகும்” என அந்த செய்தித்தாள் குறிப்பிடுகிறது. முதியவர்களை தங்களுடன் வைத்துக்கொள்ள ஆசைப்படும் விண்ணப்பதாரர்களில் சிலர், தங்கள் வாழ்க்கையை வயதானவருடன் செலவிட விரும்பும் 50 வயதுக்கு மேற்பட்ட தம்பதியினர். இன்னும் சிலர், வீட்டில் தாத்தா பாட்டி வேண்டும் என ஆசைப்படும் சின்னஞ்சிறுசுகள் உள்ள குடும்பத்தார். இப்படி தத்தெடுத்துக்கொள்ளும் குடும்பங்கள் உதவித் தொகையைப் பெற்றுக்கொண்டாலும் “உண்மையில் பணத்துக்கு ஆசைப்பட்டு அவர்கள் அதை செய்ய முன்வரவில்லை. அப்படி ஆசைப்பட்டிருந்தால் சீக்கிரத்தில் அவர்களுக்கு சலிப்பு தட்டிவிடும், காரணம் முதியவர்களைப் பராமரிப்பதென்பது லேசுப்பட்ட காரியமல்ல” என விளக்குகிறார் இந்த ஏற்பாட்டின் இயக்குநராக இருக்கும் மாரீசா மூன்யோஸ் காபால்யேரோ. (g02 12/22)
கோபமே உங்களை கொல்லலாம்
“கோபத்தில் எரிந்துவிழுபவர்களுக்கு ஸ்ட்ரோக் ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாக” ஸ்பெயினில் வெளியாகும் டீயார்யோ மிடீக்கோ என்ற செய்தித்தாள் குறிப்பிடுகிறது. மூர்க்கமாக நடந்துகொள்வதால் மகுட உருதமனி (coronary) நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறதென நெடுங்காலமாகவே டாக்டர்கள் நம்பி வருகிறார்கள். அப்படி நடந்துகொள்வது ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வு காட்டுகிறது. மூக்குக்கு மேல் கோபம் வரும் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயம் மூன்று மடங்கு அதிகமிருப்பதாக வயதுவந்த 14,000 பேரை வைத்து செய்யப்பட்ட சுற்றாய்வு காட்டுகிறது. ஏன்? கோபப்படுவதால் இரத்த அழுத்தத்தில், நாளவட்ட சுருக்கத்தில் (vascular constriction), இரத்த உறைவு பொருட்களில் “பெருமளவு அதிகரிப்பு” ஏற்பட்டு, “காலப்போக்கில் மூளையில் இரத்த ஓட்டம் பாதிக்கப்படலாம்” என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. (g02 12/22)