எமது வாசகரிடமிருந்து
எமது வாசகரிடமிருந்து
உலக சமாதானம் “உலக சமாதானம் வெறும் கனவா?” (ஜூன் 8, 2002) என்ற அட்டைப்பட கட்டுரைகள் ஏ ஒன்! எல்லா அரசியல்வாதிகளும் இதைப் படிக்க வேண்டும். ஒருவர் தெரிந்திருக்க வேண்டிய விஷயங்களையும் வாழ வேண்டிய விதத்தையும் உங்கள் பிரசுரங்கள் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றன.
ஜே. எஸ்., செக் குடியரசு (g02 12/22)
இளம் பெண்ணின் முயற்சி உங்கள் பத்திரிகைகளை நான் எந்தளவு ரசித்துப் படிக்கிறேன் என்பதை ரொம்ப நாளாகவே சொல்ல ஆசை. ஆனால் “அவளுடைய முயற்சி பலன் தந்தது” (ஜூன் 8, 2002) என்ற கட்டுரையை வாசித்தவுடன் அதை சொல்லியே தீருவது என்று முடிவெடுத்தேன். ஸ்டெல்லாவைப் போலவே எனக்கும் சமீபத்தில் ஒரு அனுபவம் ஏற்பட்டது. என்னைப் போலவே உலகெங்கும் நிறைய இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் யெகோவாவிற்கு முதலிடம் கொடுப்பது மனதிற்கு மிகுந்த சந்தோஷத்தைத் தருகிறது. இது போன்ற அனுபவங்கள் சிறியவர்களுக்கும் சரி பெரியவர்களுக்கும் சரி அதிக உற்சாகம் தருகின்றன.
எல். பி., ஐக்கிய மாகாணங்கள் (g02 12/22)
மிருகங்கள் “பனிச் சிறுத்தை—இந்த வினோத விலங்கை சந்தித்தல்” (ஜூன் 8, 2002) என்ற கட்டுரையை இப்போதுதான் வாசித்து முடித்தேன். யெகோவா படைத்திருக்கும் எல்லா உயிரினங்களையுமே எனக்கு பிடிக்கும், முக்கியமாக புசுபுசுவென்று இருக்கிறவற்றைக் கண்டால் எனக்கு கொள்ளை ஆசை! வெகு சில பனிச் சிறுத்தைகளே இப்போது உயிர்வாழ்கின்றன என்பதை படிக்க படிக்க ஆத்திரமாக வருகிறது. யெகோவாவிற்கு எப்படியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்!
டி. ஆர்., ஐக்கிய மாகாணங்கள் (g02 12/22)
சிலந்திகள் “எறும்பின் வேடத்தில் சிலந்தி” (மே 8, 2002) என்ற கட்டுரையை படித்து அசந்துபோனேன். யெகோவா எப்பேர்ப்பட்ட அற்புத படைப்பாளர்! புதிய உலகில் வாழப்போகும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன், அப்போது அவரது படைப்புகளைப் பற்றி என்னால் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
பி. பி., இலங்கை (g02 12/22)
இளைஞர் கேட்கின்றனர் “இளைஞர் கேட்கின்றனர் . . . ஸ்கூல் பிள்ளைகள் யாராவது பார்த்துவிட்டால்?” (மார்ச் 8, 2002) என்ற கட்டுரையை வெளியிட்டதற்கு நன்றி. பல வருடங்களுக்கு முன்பு, டீனேஜில் நான் ரொம்பவே கூச்ச சுபாவமுள்ளவனாக இருந்தேன், போதாக்குறைக்கு திக்குவாய் வேறு. ஊழியம் செய்வது எனக்கு பெரும் பாடாக இருந்தது, அதுவும் ஸ்கூல் பிள்ளைகளை சந்தித்தபோது கேட்கவே வேண்டாம். மற்ற இளைஞர்களுக்கு இந்தக் கட்டுரை மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
டபிள்யூ. டி., ஐக்கிய மாகாணங்கள் (g02 12/22)
சிறந்த புத்திமதி பொன்னான கருத்துக்கள் நிறைந்த ஏராளமான கட்டுரைகளை வெளியிடுவதற்கு உங்களுக்கு நன்றி. உங்கள் கட்டுரைகள் பலதரப்பட்ட விஷயங்களை அலசி ஆராய்கின்றன, மற்றவர்களுடைய நம்பிக்கைகளை மதிக்கின்றன, பாரபட்சத்திற்கு இடமளிப்பதில்லை. விழித்தெழு! என் ஆருயிர் நண்பன், வாழ்க்கைப் பிரச்சினைகளை நம்பிக்கையோடு எதிர்கொள்ள உதவுகிற நல்லறிவுரைகளை வழங்கும் இணைபிரியாத் தோழன்.
என். பி., பிரேஸில் (g02 12/22)
வாழ்க்கை சரிதை “சோதனைகள் மத்தியிலும் சுடர்விட்ட என் நம்பிக்கை” (மே 8, 2002) என்ற வாழ்க்கை சரிதையை படித்து ஆனந்தத்திலும் வேதனையிலும் கண்ணீர் விட்டேன். 20 வயதில் சகோதரர் ஹனாக் காட்டிய தைரியம், தமது நீதியுள்ள தராதரங்களைக் கடைப்பிடிக்க இளைஞருக்கும் யெகோவா நெஞ்சுரத்தைத் தருவார் என நாம் நம்பிக்கையோடிருக்கலாம் என்பதை நினைவூட்டியது. இப்படிப்பட்ட அருமையான கட்டுரைகளை தொடர்ந்து வெளியிடுவதற்கு நன்றி. இந்தக் கடினமான காலங்களில் நமக்கு தேவையான உற்சாகத்தை அவை அளிக்கின்றன.
கே. ஜி., ஐக்கிய மாகாணங்கள் (g02 12/08)