Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுள் நம் பலவீனங்களை கண்டும் காணாமல் விட்டுவிடுவாரா?

கடவுள் நம் பலவீனங்களை கண்டும் காணாமல் விட்டுவிடுவாரா?

பைபிளின் கருத்து

கடவுள் நம் பலவீனங்களை கண்டும் காணாமல் விட்டுவிடுவாரா?

‘நான் ஒன்றும் கெட்டவன் இல்லை! சொல்லப்போனால் மோசமான பழக்கங்களையெல்லாம் விட்டுவிட ரொம்பவே முயற்சி செய்திருக்கிறேன், ஆனால் பலவீனத்தால்தான் என்னால் முடியவில்லை!’

நீங்களோ உங்களுக்குத் தெரிந்தவர்களோ இப்படித்தான் உணருகிறீர்களா? ஆழமாக ஊறிப்போன பலவீனங்களை விட்டொழிப்பது முடியாத ஒன்று என்ற முடிவுக்கே பலர் வருகின்றனர். சிலர் மதுபானத்திற்கு, புகையிலைக்கு அல்லது போதைப் பொருட்களுக்கு அடிமையாகி இருக்கின்றனர். பேராசை அநேகருடைய வாழ்க்கையை ஆட்டிப்படைக்கிறது. ஒழுக்கங்கெட்ட பாலியல் பழக்கங்களில் வீழ்ந்துகிடப்பவர்களும் இருக்கிறார்கள், ‘செக்ஸ்’க்கு முழுக்க முழுக்க அடிமையாகிவிட்டதாக அவர்கள் சொல்கிறார்கள்.

மத்தேயு 26:41-⁠ல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, மனிதருடைய பலவீனங்களைத் தாம் புரிந்திருப்பதாக இயேசு அன்பாய் தெரிவித்தார். a சொல்லப்போனால், யெகோவா தேவனும் இயேசுவும் மனிதரிடம் இரக்கமுள்ளவர்களாய் இருக்கிறார்கள் என்பதை முழு பைபிள் பதிவும் தெளிவாக உறுதிப்படுத்துகிறது. (சங்கீதம் 103:8, 9) ஆனால் கடவுள் நம்முடைய எல்லா குறைபாடுகளையும் கண்டுகொள்ளாதிருக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்க முடியுமா?

மோசேயும் தாவீதும்

மோசேயின் வாழ்க்கைப் பதிவை கவனியுங்கள். அவர் “பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ள”வர் என்று பெயர் பெற்றிருந்தார், அந்த நல்ல குணத்தை காத்துக்கொள்ள பாடுபட்டார். (எண்ணாகமம் 12:3) இஸ்ரவேலர் வனாந்தரத்தின் வழியாக பயணம் செய்கையில், அவர்கள் அடிக்கடி நியாயமற்றவர்களாய் நடந்துகொண்டார்கள், கடவுளுக்கும் அவருடைய ஊழியர்களுக்கும் அவமரியாதை காட்டினார்கள். இவையெல்லாவற்றின் மத்தியிலும், மோசே தாழ்மையுடன் தெய்வீக வழிநடத்துதலுக்காக காத்திருந்தார்.​—எண்ணாகமம் 16:12-14, 28-30.

என்றபோதிலும், களைப்புண்டாக்கும் வெகுதூர பயணம் முடிவடையப் போகும் தறுவாயில், முழு தேசத்தாருக்கும் முன்பு கோபப்பட்டு கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் போனார். கடவுள் அவரை மன்னித்தார், ஆனால் அந்தச் சம்பவத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாரா? இல்லை. அவர் மோசேயிடமும் ஆரோனிடமும் இவ்வாறு கூறினார்: “நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்துக்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை.” வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழையும் வாய்ப்பை மோசே இழந்தார். அந்த மகத்தான சிலாக்கியத்திற்காக 40 வருடமாக போராடிய பிறகு, பெரும் பலவீனம் காரணமாக அவர் அதை இழக்க நேரிட்டது.​—எண்ணாகமம் 20:7-12.

பலவீனத்தைப் பெற்றிருந்த மற்றொருவர் தேவபக்தியுள்ள தாவீது ராஜா. ஒரு சந்தர்ப்பத்தில் அவர் காமத்திற்கு அடிபணிந்து மற்றொருவனுடைய மனைவியோடு உடலுறவு கொண்டார். பிறகு, அவளுடைய கணவன் கொலை செய்யப்படுவதற்கு வழிசெய்வதன் மூலம் அந்தத் தவறை மூடிமறைக்க முயன்றார். (2 சாமுவேல் 11:2-27) அதற்குப்பின், தான் செய்த குற்றங்களுக்காக மிகவும் வருத்தப்பட்டார், ஆகவே கடவுள் அவரை மன்னித்தார். ஆனால் தாவீது ஒரு குடும்பத்தை நாசமாக்கிவிட்டார், அதனால் அதற்குப் பிறகு வந்த பெரும் துன்பங்களிலிருந்து யெகோவா அவரை பாதுகாக்கவில்லை. தாவீதிற்குப் பிறந்த ஆண் குழந்தை மிகவும் வியாதிப்பட்டுவிட்டது, அந்தக் குழந்தைக்காக தாவீது ஜெபங்கள் செய்தபோதிலும் யெகோவா அதை கேட்கவில்லை. அந்தக் குழந்தை இறந்துவிட்டது, அதற்குப் பிறகு தாவீதின் குடும்பத்தில் அடுத்தடுத்து அநேக சோக சம்பவங்கள் நிகழ்ந்தன. (2 சாமுவேல் 12:13-18; 18:33) பலவீனத்திற்கு இடங்கொடுத்து ஒழுக்கம் தவறியதால் தாவீது பெரும் விலையை செலுத்தினார்.

மனிதர்கள் தங்கள் நடத்தைக்கு பொறுப்புள்ளவர்களாய் இருப்பதாக கடவுள் கருதுகிறார் என்பதை இந்த உதாரணங்கள் காட்டுகின்றன. அவருக்கு சேவை செய்ய விரும்புகிறவர்கள் தங்களுடைய ஆவிக்குரிய தன்மையில் உள்ள பலவீனமான அம்சங்களுக்கு கவனம் செலுத்தி அதைப் பலப்படுத்தி சிறந்த கிறிஸ்தவர்களாக மாற வேண்டும். முதல் நூற்றாண்டில், பலர் அப்படி செய்தார்கள்.

பாவத்தை களைந்தெறிய போராட்டம்

அப்போஸ்தலன் பவுல், கிறிஸ்தவ வாழ்க்கைக்கு சிறந்த முன்மாதிரியாக கருதப்படுகிறார். ஆனால் அவரும் பலவீனங்களை எதிர்த்து சதா போராட வேண்டியிருந்தது உங்களுக்குத் தெரியுமா? ரோமர் 7:18-25 இந்தப் போராட்டத்தைப் பற்றி​—⁠அல்லது 23-⁠ம் (NW) வசனத்தின்படி, ‘போரை’ பற்றி​—⁠தத்ரூபமாக வர்ணிக்கிறது. பவுல் விடாமல் போராடினார், ஏனென்றால் பாவத்தின் பிடி உறுதியானது என்பதை அவர் அறிந்திருந்தார்.​—1 கொரிந்தியர் 9:26, 27.

பூர்வ கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவ சபை அங்கத்தினர்கள் சிலர், முன்பு பழக்கமாக தவறுகள் செய்துவந்தார்கள். அவர்கள் ‘வேசி மார்க்கத்தாராகவும் விபசாரக்காரராகவும், ஆண்புணர்ச்சிக்காரராகவும், திருடராகவும், பொருளாசைக்காரராகவும் வெறியராகவும்’ இருந்தார்கள் என பைபிள் சொல்கிறது. ஆனால் அவர்கள் ‘கழுவப்பட்டார்கள்’ என்றும் அது சொல்கிறது. (1 கொரிந்தியர் 6:9-11) எப்படி? திருத்தமான அறிவு, கிறிஸ்தவ கூட்டுறவு, கடவுளுடைய ஆவி ஆகியவற்றின் உதவியால் தங்களுடைய மோசமான பழக்கவழக்கங்களை விட்டொழிப்பதற்கு பலப்படுத்தப்பட்டார்கள். கடைசியில், கிறிஸ்துவின் நாமத்தில் கடவுளால் நீதிமான்களாக அறிவிக்கப்பட்டார்கள். ஆம், கடவுள் அவர்களுக்கு மன்னிப்பை அருளி சுத்தமான மனசாட்சியை கொடுத்தார்.​—அப்போஸ்தலர் 2:38; 3:20.

பவுலும் கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களும் தங்களுடைய பாவ மனச்சாய்வுகளை குறைவாக எடைபோட்டுவிடவில்லை. மாறாக, அவற்றை எதிர்த்து போரிட்டார்கள், அதோடு கடவுளுடைய உதவியால் வெற்றிசிறந்தார்கள். அந்த முதல் நூற்றாண்டு வணக்கத்தார் தங்களுடைய சூழ்நிலைகள் மற்றும் அபூரண சிந்தைகளின் மத்தியிலும் ஒழுக்க ரீதியில் மெச்சத்தக்கவர்களாய் விளங்கினார்கள். நம்மைப் பற்றியென்ன?

நமது பலவீனங்களை எதிர்த்துப் போராடும்படி கடவுள் எதிர்பார்க்கிறார்

ஒரு பலவீனத்தை எதிர்த்துப் போராடுகையில் அதை முழுமையாக விட்டொழிக்க முடியாமல் இருக்கலாம். நம்முடைய அபூரணத்திற்கு அடிபணிந்து போகாதபோதிலும், அதை நாம் அடியோடு ஒழிக்க முடியாது. அபூரணம் நம்மை உடும்புப் பிடியாய் பிடிக்கும் பலவீனங்களை பிறப்பிக்கிறது. இருந்தாலும், நம்முடைய பலவீனங்களுக்கு நாம் இடங்கொடுத்து விடக்கூடாது. (சங்கீதம் 119:11) இது ஏன் மிகவும் முக்கியம்?

ஏனென்றால் கெட்ட நடத்தைக்கு எப்பொழுதும் அபூரணத்தன்மையை சாக்காக பயன்படுத்துவதை கடவுள் அனுமதிப்பதில்லை. (யூதா 4) மனிதர் தங்களை சுத்திகரித்துக்கொள்ளவும் சிறந்த நன்னெறி வாழ்க்கை வாழவும் யெகோவா விரும்புகிறார். “தீமையை வெறுத்”திடுங்கள் என பைபிள் சொல்கிறது. (ரோமர் 12:9) கடவுள் ஏன் இவ்வளவு கண்டிப்பாக சொல்கிறார்?

ஒரு காரணம் என்னவென்றால், பலவீனத்திற்கு அடிபணிவது தீங்கு விளைவிக்கும். “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்” என கலாத்தியர் 6:7-⁠ல் பைபிள் கூறுகிறது. தீய பழக்கங்களுக்கு அடிமையாகிறவர்கள், பேராசைக்காரர்கள், நெறிமுறையற்ற பாலியல் பழக்கங்களில் ஈடுபடுகிறவர்கள் ஆகியோர் தங்களுடைய வாழ்க்கையில் பயங்கரமான விளைவுகளை அறுவடை செய்கிறார்கள். ஆனால் இதைவிட முக்கியமான ஒரு காரணமும் இருக்கிறது.

பாவம் கடவுளை புண்படுத்துகிறது. அது நமக்கும் யெகோவாவுக்கும் இடையே “பிரிவினை” உண்டாக்குகிறது. (ஏசாயா 59:2) பாவத்தைப் பழக்கமாக செய்கிறவர்கள் அவருடைய தயவைப் பெற முடியாது என்பதால் இப்படிப்பட்டவர்களுக்கு இவ்வாறு புத்திமதி கூறுகிறார்: “உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை . . . அகற்றிவிட்டு, தீமை செய்தலை விட்டு ஓயுங்கள்.”​—ஏசாயா 1:16.

நமது படைப்பாளர் அன்பானவர், இரக்கமானவர். “ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்”புகிறார். (2 பேதுரு 3:9) எப்பொழுதும் பலவீனத்திற்கு பணிந்து செல்வது கடவுளுடைய தயவைப் பெறவிடாமல் நம்மை தடுக்கிறது. கடவுள் நம்முடைய பலவீனங்களை கண்டும் காணாமல் விட்டுவிடுவதில்லை என்பதால் நாமும் அப்படி இருந்துவிடக் கூடாது. (g02 11/08)

[அடிக்குறிப்பு]

a “ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது” என இயேசு கூறினார்.