Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கழுகின் கண்கள்

கழுகின் கண்கள்

கழுகின் கண்கள்

ஸ்பெயினிலுள்ள விழித்தெழு! எழுத்தாளர்

கூர்மையான பார்வைத் திறன் படைத்தவரை “அவருக்கு கழுகுக் கண்” (விஸ்டே டி ஆகிலா) என ஸ்பெயின் நாட்டவர் வர்ணிப்பார்கள். தமிழிலும் ஒருவருடைய கூரிய பார்வையை கழுகுப் பார்வை என சொல்வதுண்டு. கழுகின் கூர்மையான பார்வை நூற்றாண்டுக்கணக்கில் உருவகமாக பேசப்படுவது காரணமில்லாமலா! மூவாயிரத்திற்கும் அதிக ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட யோபு புத்தகம் கழுகைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘அதின் கண்கள் தூரத்திலிருந்து பார்க்கும்.’​—⁠யோபு 39:27, 29.

உண்மையில் எந்தளவு தூரத்திலிருந்து கழுகினால் பார்க்க முடியும்? “ஏற்ற சூழ்நிலைகளில் கோல்டன் ஈகிள் என அழைக்கப்படும் பொன் கழுகு (ஆகிலா க்ரிஸெடோஸ்) ஒரு முயலின் சிறிய அசைவையும்கூட 2 கிலோமீட்டருக்கும் அதிக உயரத்திலிருந்து கண்டுகொண்டுவிடும்” என த கின்னஸ் புக் ஆஃப் அனிமல் ரெக்கார்ட்ஸ் விளக்குகிறது. இன்னும் அதிக தொலைவிலிருந்தும் கழுகினால் தெளிவாக பார்க்க முடியும் என்பது சிலரது கணிப்பு!

கழுகால் அந்தளவுக்கு கூர்மையாக பார்க்க முடிவது எப்படி? முதலாவதாக, கோல்டன் ஈகிளின் இரண்டு பெரிய கொட்டைக் கண்கள் அதன் தலையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துவிடுகின்றன. பொன் கழுகின் கண்கள் “எந்தளவுக்கு பெரியதாக இருக்க முடியுமோ அந்தளவுக்கு பெரியதாக இருக்கின்றன; அதேசயமத்தில் இடைஞ்சலுண்டாக்கும் அளவுக்கு அவை பெரிதாக இல்லை” என புக் ஆஃப் பிரிட்டிஷ் பர்ட்ஸ் என்ற புத்தகம் குறிப்பிடுகிறது.

மேலும், நமக்குள்ளதைவிட சுமார் ஐந்து மடங்கு அதிகமான ஒளி உணர்வு செல்கள் கழுகின் கண்களில் உள்ளன; நமக்கு ஒரு சதுர மில்லிமீட்டரில் 2,00,000 கூம்பு செல்களே இருக்கின்றன, அவற்றிற்கோ சுமார் 10,00,000 கூம்பு செல்கள் உள்ளன. ஒவ்வொரு உள்வாங்கியும் ஒரு நியூரானுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் கண்களிலிருந்து மூளைக்கு செய்திகளை சுமந்து செல்லும் கழுகினுடைய பார்வை நரம்பில் மனிதனுக்கு உள்ளதைவிட இரண்டு மடங்கு அதிகமான நார்கள் (fibers) காணப்படுகின்றன. இந்தப் பறவைகள் நிறங்களை அடையாளம் கண்டுகொள்வதில் பலே கில்லாடிகளாக இருப்பதில் ஆச்சரியமேதுமில்லை! இறுதியாக, மற்ற பறவைகளைப் போலவே இரையைக் கொன்று தின்னும் இப்பறவைகளின் கண்களிலும் சக்தி வாய்ந்த லென்ஸ் உண்டு; இதனால், ஒரு அங்குலம் தூரமுள்ள பொருட்களிலிருந்து வெகு தொலைவுள்ள பொருட்கள் வரை எதையும் சட்டென “ஸூம்” செய்து பார்க்க முடியலாம். இந்த விஷயத்திலும் அவற்றின் கண்கள் நம்முடையதைவிட ரொம்பவே மேலானவை.

கழுகின் பார்வை பகல் நேரம் நிகரற்று விளங்குகிறது, ஆந்தைக்கோ இரவு நேரம் வாகாக அமைகிறது. இரையைக் கொன்று தின்னும் இந்த இரவு நேர பறவைகளுக்கு கண்களில் ஒளி உணர்வு குச்சி செல்கள் (rods) பெருமளவு இருப்பதோடு லென்ஸும் பெரியதாக உள்ளது. இதனால், நம்மைக் காட்டிலும் இரவில் நூறு மடங்கு நன்கு காண முடியும். எனினும், துளியும் வெளிச்சமில்லாத கும்மிருட்டு நேரங்களில் ஆந்தைகள் இரையைக் கண்டுபிடிக்க தங்கள் கூர்மையான செவியுணர்வையே முழுக்க முழுக்க நம்பியிருக்க வேண்டும்.

இத்தகைய தன்மைகளை இப்பறவைகளுக்குக் கொடுத்தது யார்? “உனது கட்டளையாலா கழுகு பறந்து ஏறுகின்றது?” என யோபுவிடம் கடவுள் கேட்டார். உண்மையிலேயே படைப்பில் காணப்படும் இந்த விந்தைக்கு பாராட்டைப் பெற தான் தகுதியானவன் என எந்த மனிதனும் மார்தட்ட முடியாது. “தேவரீர் [யெகோவா] சகலத்தையும் செய்ய வல்லவர் . . . என்பதை அறிந்திருக்கிறேன்” என யோபுவே மனத்தாழ்மையுடன் ஒப்புக்கொண்டார். (யோபு 39:27, பொது மொழிபெயர்ப்பு; 42:1, 2) நம் படைப்பாளரின் ஞானத்தை பறைசாற்றும் பல படைப்புகளில் ஒன்றே கழுகின் கண்கள். (g02 12/22)

[பக்கம் 24-ன் படம்]

கோல்டன் ஈகிள்

[பக்கம் 24-ன் படம்]

வெள்ளை ஆந்தை