Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சகாக்களின் அழுத்தத்தை நான் எப்படி சமாளிக்க முடியும்?

சகாக்களின் அழுத்தத்தை நான் எப்படி சமாளிக்க முடியும்?

இளைஞர் கேட்கின்றனர் . . .

சகாக்களின் அழுத்தத்தை நான் எப்படி சமாளிக்க முடியும்?

“சகாக்களின் அழுத்தம் எல்லா இடத்திலும் இருக்குது.”​⁠ஜெஸி, 16 வயது.

“எனக்கு வந்த தொல்லைகளிலேயே பெரிய தொல்லை பள்ளிக்கூட பிள்ளைகளிடமிருந்து வந்த தொல்லைதான்.”​—⁠ஜானத்தான், 21 வயது.

நிச்சயமாகவே சகாக்களின் அழுத்தம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய பலமான ஒரு சக்தி. ஆனால் உங்களால் அதை எதிர்த்து நிற்க முடியும் என்ற நம்பிக்கையோடிருங்கள். சொல்லப்போனால், அதை உங்களால் வெல்லவும் முடியும், அதை உங்களுக்கு சாதகமாகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் எப்படி?

இந்தத் தொடரில் வெளிவந்த முந்தைய கட்டுரையில், முக்கியமான முதல் படியை நாம் சிந்தித்தோம்; அதாவது சகாக்களின் அழுத்தம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதையும், அதன் செல்வாக்கு உங்களை எந்தளவு பாதிக்கும் என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டுமென சிந்தித்தோம். a கூடுதலாக நீங்கள் எடுக்க வேண்டிய பயனுள்ள படிகள் யாவை? உங்களுக்குத் தேவைப்படும் பயனுள்ள வழிநடத்துதல் கடவுளுடைய வார்த்தையில் காணப்படுகிறது. நீதிமொழிகள் 24:5 இவ்வாறு கூறுகிறது: “அறிவுள்ளவன் தன் வல்லமையை அதிகரிக்கப் பண்ணுகிறான்.” எத்தகைய அறிவு சகாக்களின் அழுத்தத்தை வெல்ல உங்களுக்கு உதவும்? இதற்குரிய பதிலை அறிந்துகொள்வதற்கு முன்பு, சகாக்களின் அழுத்தம் உங்களை எப்படி வெல்லும் என்பதற்கு ஓர் உதாரணத்தை சிந்திக்கலாம்.

தன்னம்பிக்கையின்மை​—ஓர் ஆபத்து

யெகோவாவின் சாட்சிகளில் இளைஞர்கள் சகாக்களின் அழுத்தத்தை ஒரு விசேஷ சவாலாக காண்கிறார்கள், ஏனென்றால் மற்றவர்களுக்கு தங்களுடைய மதத்தைப் பற்றி எடுத்துச்சொல்வதை சுற்றியே அவர்களுடைய வாழ்க்கை அமைந்திருக்கிறது. (மத்தேயு 28:19, 20) நீங்கள் சந்திக்கும் இளைஞர்களுக்கு உங்களுடைய நம்பிக்கையைப் பற்றி சொல்வது சில சமயங்களில் உங்களுக்கு கடினமாக இருக்கிறதா? இத்தகைய கஷ்டத்தை எதிர்ப்படுவது நீங்கள் மாத்திரமே அல்ல. 18 வயது மெலானி இவ்வாறு கூறுகிறாள்: “நான் ஒரு யெகோவாவின் சாட்சி என மற்றவர்களுக்குச் சொல்வது நான் நினைத்ததைவிட அதிக கஷ்டமாக இருந்தது.” அவள் மேலும் கூறுகிறாள்: “சாட்சி என்பதை சொல்வதற்கு ஒருவழியாக தைரியத்தை திரட்டிய மறுகணமே மறுபடியும் பயந்துவிடுவேன்.” சகாக்களின் பாதகமான அழுத்தம் அவளுக்கு முட்டுக்கட்டையாக இருந்ததென தெரிகிறது.

விசுவாசத்தில் சிறந்து விளங்கிய ஆண்களும் பெண்களும்கூட கடவுளைப் பற்றி பேசுவதற்கு தயங்கியதாக பைபிள் நமக்கு சொல்கிறது. உதாரணமாக, தைரியமாய் பேச வேண்டுமென்ற கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்தால், கேலி கிண்டலையும் துன்புறுத்துதலையும் எதிர்ப்பட நேரிடும் என்பதை இளம் எரேமியா அறிந்திருந்தார். மேலும், எரேமியாவிடம் தன்னம்பிக்கை இல்லை. ஏன் அப்படி சொல்கிறோம்? ஏனெனில் கடவுளிடம் அவர் இவ்வாறு கூறினார்: “ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன்.” எரேமியா இளைஞனாக இருந்ததால் பேச முடியாது என கடவுள் ஒத்துக்கொண்டாரா? இல்லை. “நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே” என கூறி அந்தத் தீர்க்கதரிசிக்கு யெகோவா நம்பிக்கையளித்தார். யெகோவா தமது நோக்கத்தை செயற்படுத்த, தயங்கிக்கொண்டிருந்த அந்த இளைஞனுக்கு ஒரு முக்கியமான நியமிப்பை கொடுத்தார்.​—எரேமியா 1:6, 7.

நமக்கு நம்பிக்கை குறைவுபடும்போது, நம்மைப் பற்றி நிச்சயமின்றி உணரும்போது சகாக்களின் அழுத்தத்தை எதிர்ப்பது பெரும் மலையாக இருக்கலாம். இதை ஆராய்ச்சிகள் சுட்டிக் காட்டுகின்றன. உதாரணமாக, 1937-⁠ல் முஷாஃபர் ஷெரிஃப் என்ற விஞ்ஞானி பிரபலமான ஒரு பரிசோதனையை நடத்தினார். ஆட்களை ஓர் இருட்டறையில் போட்டு, ஒரு சிறிய புள்ளி அளவிலான வெளிச்சத்தைக் காட்டினார், பிறகு இந்த வெளிச்சம் எவ்வளவு தூரம் நகர்ந்துவிட்டது என்பதை அவர்களிடம் கேட்டார்.

சொல்லப்போனால், இந்த வெளிச்சம் துளிகூட நகரவில்லை; இது வெறுமனே மாயத் தோற்றத்தையே உண்டுபண்ணியது. தனித்தனியே சோதித்தபோது, இந்தப் பெயர்ச்சியைக் குறித்து ஆட்கள் தங்களுடைய மதிப்பீடுகளை சொன்னார்கள். ஆனால் ஒரு தொகுதியாக சோதிக்கப்பட்டபோது தங்களுடைய மதிப்பீடுகளை உரத்த குரலில் சொல்லும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். என்ன நடந்தது? தங்களுடைய சொந்த மதிப்பீட்டில் நம்பிக்கையில்லாததால், மற்றவர்கள் மதிப்பீட்டை நம்பினார்கள். மீண்டும் மீண்டும் சோதனைகள் செய்யப்பட்டபோது, அவர்களுடைய பதில்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஒத்துப்போய் கடைசியில் அந்தத் ‘தொகுதிக்கு என்று ஒரு மதிப்பீடு’ உருவானது. மறுபடியும் தனித்தனியாக சோதிக்கப்பட்டபோதிலும்கூட, அந்தத் தொகுதியினருடைய கருத்தே அவர்களை செல்வாக்கு செலுத்தியது.

இந்தப் பரிசோதனை ஒரு முக்கியமான குறிப்பை உணர்த்துகிறது. நிச்சயமின்மை அல்லது நம்பிக்கையின்மை சகாக்களின் அழுத்தத்திற்கு எளிதில் ஆளாகும்படி செய்கிறது. இது சிந்தையைத் தூண்டுகிறது அல்லவா? சொல்லப்போனால், சகாக்களின் அழுத்தம் மிக முக்கியமான விஷயங்களில், அதாவது திருமணத்திற்கு முன்பு பாலுறவு, போதைப்பொருள் துஷ்பிரயோகம், வாழ்க்கையில் நாடும் இலக்குகள் போன்ற விஷயங்களில் ஆட்களை பாதிக்கும். இப்படிப்பட்ட விஷயங்களில் ‘தொகுதியின் மதிப்பீட்டிற்கு’ அடிபணிந்தால், நம் எதிர்காலம் பயங்கரமாக பாதிக்கப்படும். (யாத்திராகமம் 23:2) ஆகவே என்ன செய்யலாம்?

சரி, சிறுபுள்ளி அளவிலான வெளிச்சம் நகராததை நீங்கள் அறிந்திருந்தால், அந்தப் பரிசோதனையில் நீங்கள் என்ன சொல்லியிருப்பீர்கள்? ஒருவேளை அந்தக் கூட்டத்தாரால் செல்வாக்கு செலுத்தப்பட்டிருக்க மாட்டீர்கள். ஆம், நமக்கு நம்பிக்கை தேவை. ஆனால் எப்படிப்பட்ட நம்பிக்கை தேவை, அதை நாம் எவ்வாறு பெறலாம்?

யெகோவாவை உங்கள் நம்பிக்கையாக கொள்ளுங்கள்

தன்னம்பிக்கையை வளர்ப்பது பற்றி அதிகம் பேசப்படுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். ஆனால் அதை எப்படி பெறலாம்​—⁠அது உங்களுக்கு எவ்வளவு தேவை​—⁠என்ற விஷயத்திற்கு வருகையில், முரண்பாடான கருத்துக்கள் நிலவுகின்றன. பைபிள் இத்தகைய சமநிலையான அறிவுரையைத் தருகிறது: “உங்களில் எவனானாலும் தன்னைக் குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ண வேண்டும்.” (ரோமர் 12:3) இந்த வசனத்தை மற்றொரு மொழிபெயர்ப்பு இவ்வாறு மொழிபெயர்க்கிறது: “ஒவ்வொருவனும் தன்னுடைய உண்மையான மதிப்பிற்கு மேலாக தன்னை மதிப்பிடக் கூடாது, ஆனால் தன்னைப் பற்றி கவனமாக மதிப்பிட வேண்டும் என்று அனைவருக்கும் சொல்கிறேன்.”​—⁠சார்ல்ஸ் பி. வில்லியம்ஸ்.

உங்களுடைய ‘உண்மையான மதிப்பை’ ‘கவனமாக மதிப்பிடுவது’ தற்பெருமை கொள்வதை அல்லது அசட்டு தைரியத்தோடு செயல்படுவதை தடுக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட சமநிலையான நோக்குநிலையை பெற்றிருக்க, நன்கு சிந்தித்து, நியாயங்காட்டி, புத்திசாலித்தனமான தீர்மானங்கள் எடுக்கும் உங்களுடைய உண்மையான திறமையில் ஓரளவு நம்பிக்கையோடு இருக்க வேண்டும். உங்களுடைய படைப்பாளர் உங்களுக்கு “நியாயங்காட்டும் திறமையை” கொடுத்திருக்கிறார், அது ஓர் அருமையான பரிசு, அற்பமான ஒன்றல்ல. (ரோமர் 12:1, NW) இதை மனதிற்கொள்வது, சுற்றியிருப்பவர்கள் உங்களுக்காக தீர்மானம் எடுக்க அனுமதிப்பதைத் தடுப்பதற்கு உதவும். என்றபோதிலும், இன்னும் உங்களுக்கு அதிக பாதுகாப்பை தரக்கூடிய ஒருவகை நம்பிக்கை இருக்கிறது.

தாவீது ராஜா இவ்வாறு எழுதுவதற்கு கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டார்: “கர்த்தராகிய ஆண்டவரே, நீரே என் நோக்கமும், என் சிறுவயது தொடங்கி என் நம்பிக்கையுமாயிருக்கிறீர்.” (சங்கீதம் 71:5) ஆம், தம்முடைய பரலோக தகப்பன் மீது தாவீது முழு நம்பிக்கை வைத்தார், தன் சிறுவயது முதல் அவ்வாறு செய்தார். தன்னுடன் ஒற்றைக்கு ஒற்றை போரிட இஸ்ரவேலைச் சேர்ந்த எந்த படைவீரனுக்காவது தைரியம் இருக்கிறதா என பெலிஸ்தியனாகிய ராட்சத கோலியாத் சவால்விட்டபோது, தாவீது ஒரு “சிறுபையனாகத்தான்” இருந்தார்​—⁠ஒருவேளை டீனேஜில் இருந்திருக்கலாம். படைவீரர்கள் பயந்து நடுங்கினர். (1 சாமுவேல் 17:11, 33, NW) ஒருவேளை சகாக்களின் அழுத்தம் அவர்களின் தைரியத்தை குலைத்திருக்கலாம். கோலியாத்தின் பருமனையும் பலத்தையும் பார்த்து அவர்கள் நம்பிக்கையிழந்து பேசியிருக்கலாம், இப்பேர்ப்பட்ட சவாலை ஏற்றுக்கொள்பவன் ஒரு பைத்தியக்காரனாகத்தான் இருக்க வேண்டும் என அவர்கள் அடித்துக் கூறியிருக்கலாம் என்பதில் சந்தேகமில்லை. இப்படிப்பட்ட எந்தவொரு அழுத்தத்திற்கும் தாவீது இடங்கொடுக்கவில்லை. ஏன்?

கோலியாத்திடம் தாவீது கூறிய வார்த்தைகளை கவனியுங்கள்: “நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்.” (1 சாமுவேல் 17:45) கோலியாத்தின் பருமனையோ பலத்தையோ அல்லது ஆயுதத்தையோ பற்றி தாவீது அறியாதவராக இல்லை. ஆனால், ஆகாயம் அவருக்கு மேலே இருப்பதை நிச்சயமாய் அறிந்திருந்ததைப் போல ஒன்றை அவர் அறிந்திருந்தார். யெகோவா தேவனுடன் ஒப்பிடுகையில் கோலியாத் ஒன்றுமே இல்லை என்பதை அறிந்திருந்தார். யெகோவா தாவீதின் பக்கத்தில் இருந்ததால், அவர் எதற்காக கோலியாத்திற்கு பயப்பட வேண்டும்? கடவுள் மீது வைத்திருந்த இத்தகைய நம்பிக்கை தாவீதை பாதுகாத்தது. சகாக்களின் அழுத்தம் அவரை துளிகூட அசைக்க முடியவில்லை.

யெகோவா மீது உங்களுக்கு இப்படிப்பட்ட நம்பிக்கை இருக்கிறதா? தாவீதின் சமயத்திலிருந்து அவர் துளிகூட மாறவில்லை. (மல்கியா 3:6; யாக்கோபு 1:17) அவரைப் பற்றி நீங்கள் எந்தளவுக்கு கற்றுக்கொள்கிறீர்களோ அந்தளவுக்கு அவருடைய வார்த்தையில் சொல்லியிருக்கிற எல்லாவற்றையும் குறித்து அதிக நிச்சயமாயிருப்பீர்கள். (யோவான் 17:17) வாழ்க்கையில் உங்களை வழிநடத்துவதற்கும் சகாக்களின் அழுத்தத்தை தடுத்து நிறுத்துவதற்கும் உதவுகிற மாறாத, நம்பகமான தராதரங்களை நீங்கள் அதில் காண்பீர்கள். யெகோவாவின் மீது நம்பிக்கை வைப்பதோடு, மற்றொறு காரியத்தையும் நீங்கள் செய்ய வேண்டும்.

சிறந்த ஆலோசகர்களை தேர்ந்தெடுங்கள்

சிறந்த வழிநடத்துதலை நாடுவதன் அவசியத்தைப் பற்றி கடவுளுடைய வார்த்தை வலியுறுத்திக் கூறுகிறது. “விவேகி நல்லாலோசனைகளை அடை”வான் என நீதிமொழிகள் 1:5 கூறுகிறது. உங்களுடைய மிகச் சிறந்த நன்மைகளையே கருத்தில் கொள்கிற உங்கள் பெற்றோர்கள் வழிநடத்துதலின் ஊற்றாக விளங்கலாம். இந்திரா இதை நன்கு அறிந்திருக்கிறாள். அவள் இவ்வாறு கூறுகிறாள்: “என்னுடைய பெற்றோர் எனக்கு எப்பொழுதும் வேதவசனங்களிலிருந்து நியாயத்தை எடுத்துக் காட்டினார்கள், என்னுடைய வாழ்க்கையில் யெகோவாவை நிஜமான ஒருவராக்கினார்கள்; அதனால்தான் இப்பொழுது சத்தியத்தின் பாதையில் நடக்கிறேன்.” இது போலவே அநேக இளைஞர்கள் உணருகிறார்கள்.

நீங்கள் கிறிஸ்தவ சபையில் ஓர் அங்கத்தினராக இருந்தால், உங்களுக்கு அங்கே சிறந்த ஆதரவு இருக்கிறது, அதாவது நியமிக்கப்பட்ட கண்காணிகளாகிய மூப்பர்களும் முதிர்ச்சிவாய்ந்த பிற கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள். இளம் நதியா இவ்வாறு கூறுகிறாள்: “நான் உண்மையிலேயே என்னுடைய சபை மூப்பர்களை மதித்து அவர்களை மெச்சினேன். இளைஞர்களுக்காகவே விசேஷமாக தயாரிக்கப்பட்ட ஒரு பேச்சை கண்காணி கொடுத்தது என்னுடைய நினைவுக்கு வருகிறது. அந்தக் கூட்டத்திற்குப் பிறகு நானும் என்னுடைய தோழியும் மெய்சிலிர்த்துப் போனோம், ஏனென்றால் நாங்கள் வாழ்க்கையில் அனுபவித்துக் கொண்டிருந்ததைத்தான் அவர் குறிப்பிட்டார்.”

சகாக்களின் பாதகமான அழுத்தத்தை எதிர்த்து போரிட உதவும் மற்றொரு ஆயுதம் சகாக்களின் சாதகமான அழுத்தம். நீங்கள் நண்பர்களை ஞானமாக தேர்ந்தெடுத்தால், உயர்ந்த லட்சியங்களையும் சரியான தராதரங்களையும் பற்றிக்கொள்ள அவர்கள் உங்களுக்கு உதவி செய்யலாம். நல்ல நண்பர்களை எப்படி தேர்ந்தெடுப்பது? இந்த அறிவுரையை மனதில் பதியவையுங்கள்: “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.” (நீதிமொழிகள் 13:20) பள்ளியில் நல்ல நண்பர்களை​—⁠தன்னைப் போலவே சிறந்த ஒழுக்கத் தராதரங்களைப் பின்பற்றுகிற சகவிசுவாசிகளை​—⁠தேர்ந்தெடுப்பதில் நதியா கவனமாக இருந்தாள். “மற்ற பையன்கள் எங்களிடம் ‘பேச’ வந்தபோது, சாட்சி நண்பர்களாகிய நாங்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் ஆதரவு காட்டினோம்.” நல்ல நண்பர்கள் நம்முடைய சிறந்த குணங்களை வெளிப்படுத்த உதவி செய்யலாம். அவர்களைக் கண்டுபிடிப்பதற்கு எடுக்கும் எந்த முயற்சியும் தகுந்ததே.

யெகோவாவின் மீது நம்பிக்கையை வளர்த்துவந்தால், முதிர்ச்சிவாய்ந்த கிறிஸ்தவர்களுடைய வழிநடத்துதலை நாடினால், நண்பர்களை ஞானமாக தேர்ந்தெடுத்தால், சகாக்களின் அழுத்தத்தை நீங்கள் வெற்றிகரமாக சமாளிக்க முடியும். சொல்லப்போனால், உங்களுடைய நண்பர்கள் மீது நீங்கள் சாதகமான செல்வாக்கு செலுத்தி, உங்களோடுகூட ஜீவனுக்குரிய பாதையில் நிலைத்திருப்பதற்கு அவர்களுக்கு உதவி செய்ய முடியும். (g02 12/22)

[அடிக்குறிப்பு]

aசகாக்களின் அழுத்தம்​—உண்மையிலேயே அவ்வளவு சக்தி வாய்ந்ததா?” என்ற கட்டுரையை டிசம்பர் 8, 2002 விழித்தெழு! இதழில் காண்க.

[பக்கம் 26-ன் சிறு குறிப்பு]

உங்களைப் போலவே கடவுளையும் அவருடைய தராதரங்களையும் நேசிக்கிற நல்ல நண்பர்களை நாடுங்கள்

[பக்கம் 26-ன் படங்கள்]

“கெட்ட சகவாசம் நல்ல பழக்கவழக்கங்களை கெடுக்கும்.”​—⁠1 கொரிந்தியர் 15:33, NW

“ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்.” ​—⁠நீதிமொழிகள் 13:⁠20