Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சாவின் பாதையிலிருந்து சமாதான பாதைக்கு

சாவின் பாதையிலிருந்து சமாதான பாதைக்கு

சாவின் பாதையிலிருந்து சமாதான பாதைக்கு

டோஷியாகி நிவா சொன்னபடி

இரண்டாம் உலகப் போரின் போது ஓர் அமெரிக்க போர்க் கப்பல் மீது காமிகாஸி என்ற தாக்குதல் நடத்துவதற்கு பயிற்சி பெற்ற ஜப்பானிய முன்னாள் விமானி ஒருவர் அந்தக் கொடிய பணிக்காக காத்திருக்கையில் எப்படி உணர்ந்தார் என்பதை சொல்கிறார்.

ஜூன் 1942-⁠ல் நடந்த மிட்வே போரில் ஜப்பான் படுதோல்வி கண்டது, அதன் பிறகு பசிபிக் பிராந்தியத்தில் ஜப்பான் அதன் எல்லையை விஸ்தரிக்க முடியவில்லை. அது முதற்கொண்டு ஐக்கிய மாகாணங்களுக்கும் அதன் நேச நாடுகளுக்கும் எதிராக நடந்த போரில் ஜப்பானுக்கு தோல்வி மேல் தோல்விதான்; இதனால் ஜப்பான் கைப்பற்றியிருந்த பிராந்தியங்கள் மீண்டும் அவற்றின் கைவசமே சென்றுவிட்டன.

செப்டம்பர் 1943-⁠ல் ஜப்பானிய அரசாங்கம் ஓர் அறிக்கை விட்டது; ராணுவ சேவைக்கு விலக்களிக்கப்பட்டிருந்த கல்லூரி மாணவர்கள் இப்போது கட்டாய ராணுவ சேவையில் சேர வேண்டும் என்பதுதான் அந்த அறிக்கை. டிசம்பர் மாதத்தில் என்னை கல்லூரியிலிருந்து நேரடியாகவே கப்பற்படைக்கு அழைத்து சென்றார்கள், அப்போது எனக்கு 20 வயது. ஒரு மாதம் கழித்து கப்பற்படை விமானப் பிரிவில் பயிற்சி பெறும் மாணவர்களில் என்னையும் சேர்த்தார்கள். டிசம்பர் 1944-⁠ல் ஸீரோ ஃபைட்டர் என்ற போர் விமானத்தை ஓட்டுவதற்கு பயிற்சி பெற்றேன்.

காமிகாஸி சிறப்புத் தாக்குதல் படை

ஜப்பான் தோல்வியின் எல்லையை நோக்கி சென்று கொண்டிருந்தது. பிப்ரவரி 1945-⁠க்குள், B-29 குண்டு வீச்சு விமானங்களின் தாக்குதல் தீவிரமாகி இருந்தது. அதே நேரத்தில் ஐ.மா. சிறப்புக் கப்பற்படை ஜப்பானை நெருங்கியது; விமானம் தாங்கிக் கப்பலிலிருந்து அனுப்பப்பட்ட குண்டு வீச்சு விமானங்கள் தாக்குதலை நடத்தின.

சில மாதங்களுக்கு முன்புதான் ஜப்பானின் ராணுவ தலைவர்கள் தற்கொலை உபாயங்களை பயன்படுத்தி கடைசி போரை தொடுக்க தீர்மானித்திருந்தனர். ஜப்பானுக்கு தோல்வி நிச்சயம் என்பது அப்போது தெளிவாக தெரிந்தாலும், அவர்களுடைய அந்தத் தீர்மானம் போர் நீடிப்பதற்கு வழிவகுத்தது; அதோடு இன்னும் ஆயிரக்கணக்கானோரின் உயிரைக் குடித்தது என்பதில் சந்தேகமில்லை.

இப்படித்தான் காமிகாஸி சிறப்பு தாக்குதல் படை உருவானது. 13-⁠ம் நூற்றாண்டில், தெய்வீகக் காற்று எனப்படும் காமிகாஸி புயற்காற்று மங்கோலிய படையினரின் கப்பல்களை அடித்து சென்றுவிட்டது என்பது பாரம்பரிய நம்பிக்கை; ஆகவே, அப்புயற்காற்றின் பெயரே இந்தத் தற்கொலை படைக்கு சூட்டப்பட்டது. முதலாம் காமிகாஸி தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஐந்து ஸீரோ போர் விமானங்கள் ஒவ்வொன்றும், எதிரி கப்பலில் மோதி தாக்குவதற்கு ஏற்ப 250 கிலோகிராம் எடையுள்ள அணுகுண்டை சுமந்துகொண்டு பறக்கும்படி வடிவமைக்கப்பட்டவை.

சிறப்புத் தற்கொலை படை ஒன்றை ஒழுங்கமைக்கும்படி யாடாபி நேவல் ஃப்ளையிங் கார்ப்ஸ் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டது; நானும் அந்தப் பிரிவைச் சேர்ந்தவன். அந்தத் தற்கொலை தாக்குதல் படையில் சேர சம்மதமா இல்லையா என்பதை எழுதிக் கொடுக்க எங்கள் அனைவருக்கும் ஒரு படிவம் கொடுக்கப்பட்டது.

தாய் நாட்டுக்காக என் உயிரை அர்ப்பணிக்க வேண்டும் என உணர்ந்தேன். ஆனால் இந்தத் தற்கொலை பணிக்காக விமானத்தில் சென்று உயிரை இழக்க முன்வந்தாலும், எதிரிகளின் கப்பலை தாக்குவதற்கு முன்பே அவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டால் என் சாவுக்கு அர்த்தமில்லாமல் போய்விடுமே என நினைத்தேன். குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றாமல் என் உயிரை அர்ப்பணிப்பதை அம்மா விரும்புவார்களா என்ற சந்தேகம் வேறு. தற்கொலை படையில் சேர்ந்து உயிரை விடுவதே என் வாழ்க்கையை பயன்படுத்துவதற்கான சிறந்த வழி என்ற முடிவுக்கு வருவதற்குள் பெரும் பாடாகிவிட்டது. ஒருவழியாக படையில் சேர்ந்தேன்.

மார்ச் 1945-⁠ல் யாடாபி சிறப்பு தற்கொலை படையின் முதல் அணி உருவானது. என்னோடு சேர்ந்த 29 பேரை அதற்கு தேர்ந்தெடுத்தார்கள், என்னையோ தேர்ந்தெடுக்கவில்லை. அவர்கள் விசேஷ பயிற்சியைப் பெற்ற பின்பு, உயிர்துறக்கும் பணியை நிறைவேற்ற ஏப்ரல் மாதத்தில் காகஷிமா படையாட்சித் தலைவரின் எல்லைக்குட்பட்ட கனோயா விமான படைத்தளத்திலிருந்து புறப்பட வேண்டியிருந்தது. மரணத்தை சந்திக்கப் போவதைக் குறித்து என் நண்பர்கள் எப்படி உணருகிறார்களென தெரிந்துகொள்ள விரும்பினேன்; ஆகவே அவர்கள் கனோயாவுக்கு செல்வதற்கு முன்பு அவர்களை போய் சந்தித்தேன்.

“நாங்கள் சாகப் போகிறோம், ஆனால் நீ சாக முந்திக்கொள்ளாதே. எங்களில் யாராவது உயிர் தப்பினால், சமாதானம் எவ்வளவு உயர்வானது என்றும் அதற்காக உழைப்பது எவ்வளவு மதிப்புமிக்கது என்றும் மற்றவர்களுக்கு சொல்வோம்” என அவர்களில் ஒருவர் பதட்டமின்றி சொன்னார்.

ஏப்ரல் 14, 1945-⁠ல் என் நண்பர்கள் கிளம்பிவிட்டார்கள். கொஞ்ச நேரத்திற்கு பின்பு, என்ன நடந்தது என்பதை அறிய நாங்கள் அனைவரும் வானொலி செய்தியை கவனித்துக் கேட்டோம். அறிவிப்பாளர் சொன்னதாவது: “காமிகாஸி சிறப்பு தாக்குதல் படையின் முதல் குழுவான ஷோவா, கிகைகாஷிமாவுக்கு கிழக்கிலிருந்த விரோதிகளின் சிறப்பு கப்பற்படை மீது மோதியது. போரில் அனைவரும் மாண்டனர்.”

ஓக்கா​—⁠மனித வெடிகுண்டு

இரண்டு மாதங்களுக்குப் பின்பு, கோனோயிகே நேவல் ஃப்ளையிங் கார்ப்ஸுக்கு மாற்றப்பட்டேன்; அதன் ஜின்ராயி சிறப்பு தாக்குதல் படையின் அங்கத்தினனானேன். ஜின்ராயி என்பதன் அர்த்தம் “தெய்வீக இடி” என்பதாகும். கப்பலிலிருந்து தரையை தாக்கும் விமானங்கள், காவல் விமானங்கள், குண்டுவீச்சு விமானங்கள் ஆகியவை இந்தப் படையில் இருந்தன.

இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட “தாய்” விமானம் ஒவ்வொன்றின் கீழும் “செரி மலர்” என்ற அர்த்தம் தரும் ஓக்கா தொங்கியது. உயிரை அர்ப்பணிக்க மனமுள்ளவர்களாக இருந்த இளம் விமானிகளை இது அடையாளப்படுத்தியது. ஓக்கா என்பது ஒரே இருக்கையுடைய ஒரு ராக்கெட் கிளைடர் விமானம். இதன் இறக்கைகளின் மொத்த நீளம் 5 மீட்டர்; எடை 440 கிலோ. நீட்டிக்கொண்டிருக்கும் அதன் முன்பகுதியில்தான் சுமார் ஒரு டன் வெடிமருந்து வைக்கப்பட்டிருந்தது.

குறி வைத்த இடத்தை தாய் விமானம் நெருங்கியதும் ஒரு விமானி ஓக்காவிற்குள் ஏறிக்கொள்வார்; அதன் பின்பு தாய் விமானத்திலிருந்து அது விடுவிக்கப்படும். அது மூன்று ராக்கெட்டுகளின்​—⁠தலா 10 வினாடிகள் செயல்படும் ராக்கெட்டுகளின்​—⁠உதவியோடு சற்று தூரம் பறந்து பின்பு குறி வைத்த இடத்தின்மீது மோதும். இதை மனித வெடிகுண்டு என அழைக்கலாம். ஒருமுறை தாக்கியதுடன் அதன் கதை முடிகிறது!

இதற்கான பயிற்சிகளின் போது ஓக்கா விமானி ஒருவர் ஸீரோ ஃபைட்டர் போர் விமானத்திற்குள் ஏறி சுமார் 6,000 மீட்டர் உயரத்திலிருந்து குறி இலக்கை நோக்கி தலைகுப்புற பாய்ந்திறங்க வேண்டும். இப்பயிற்சிகளின் போது அநேக விமானிகள் உயிரிழந்ததை பார்த்திருக்கிறேன்.

இந்தப் படைக்கு என்னை மாற்றுவதற்கு முன்பே அதன் முதல் குழு தாக்குதல் பணிக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டது. அந்தக் குழுவில் ஓக்கா இணைக்கப்பட்ட 18 போர் விமானங்களும் 19 காவல் விமானங்களும் சென்றிருந்தன. அந்தப் போர் விமானங்கள் அதிக பளுவானவையாக இருந்ததால் மெதுவாக பறந்தன. அவற்றில் ஒன்றுகூட இலக்கை அடையவில்லை. எல்லா போர் விமானங்களும் அவற்றின் காவல் விமானங்களும் ஐ.மா. போர் விமானங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டன.

காவல் விமானங்கள் ஒன்றுகூட இல்லாமல் போகவே, பிற்பாடு ஜின்ராயி படையினர் அவற்றின் துணையின்றி பறக்க வேண்டியிருந்தது. அதன் பிறகு சென்றவர்கள் யாருமே திரும்பி வரவில்லை. எல்லாருமே ஓகனாவா போர்க் களத்தில் மடிந்தார்கள்.

போர் முடியும் தறுவாயில்

ஆகஸ்ட் 1945-⁠ல் ஓட்ஸூ நேவல் ஃப்ளையிங் கார்ப்ஸுக்கு மாற்றப்பட்டேன். அந்த ராணுவ தளம் கியோடோ நகருக்கு அருகிலுள்ள ஹியேஸான் மலையடிவாரத்தில் இருந்தது. ஐ.மா.-வின் படைகள் ஜப்பானை ஆக்கிரமிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆகவே, மலையிலிருந்து ஓக்காக்களை அனுப்பி ஐ.மா. போர் கப்பல்களை தாக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மலை உச்சியிலிருந்து விமானங்களை அனுப்புவதற்கு இருப்புப் பாதைகள் அமைக்கப்பட்டன.

புறப்படுவதற்கான ஆர்டர் வர நாங்கள் காத்திருந்தோம். ஆனால் ஆர்டர் வரவேயில்லை. ஆகஸ்ட் 6, 9 தேதிகளில் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்கள் அணுகுண்டுகளால் தரைமட்டமாக்கப்பட்டதால், ஆகஸ்ட் 15 அன்று ஐக்கிய மாகாணங்களிடமும் அதன் நேச நாடுகளிடமும் ஜப்பான் முழுமையாக சரணடைந்தது. கடைசியாக போரும் முடிவடைந்தது. எப்படியோ மரண வாசலிலிருந்து நான் தப்பினேன்.

ஆகஸ்ட் மாத கடைசியில், யோகஹாமா என்ற என் சொந்த ஊருக்கு திரும்பினேன். ஆனால், B-29 குண்டு வீச்சு விமானங்களின் தாக்குதலால் என்னுடைய வீடு சாம்பலாகிவிட்டிருந்தது. என்னுடைய குடும்பத்தார் இடிந்து போய் இருந்தனர். என்னுடைய அக்காவும் அவளுடைய மகனும் அந்தக் குண்டுவீச்சுக்கு பலியாகியிருந்தனர். என்றாலும், என்னுடைய தம்பி போரில் உயிரிழக்காமல் பத்திரமாக வீடு திரும்பியது எங்களுக்கு ஆறுதலாக இருந்தது.

பயங்கரமான சேதங்களும், உணவு பற்றாக்குறையும் ஒருபக்கம் இருந்தாலும், நான் கல்லூரிக்கு மீண்டும் சென்று என் படிப்பைத் தொடர்ந்தேன். ஒரு வருடம் படித்து பட்டம் பெற்ற பின்பு எனக்கு வேலை கிடைத்தது. 1953-⁠ல் மிச்சிகோவை கரம் பிடித்தேன், பிறகு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்.

சமாதானத்தைத் தேடி

1974-⁠ல் மிச்சிகோ யெகோவாவின் சாட்சி ஒருவருடன் பைபிள் படிக்க ஆரம்பித்தாள். சீக்கிரத்தில் அவர்களுடைய கூட்டங்களுக்கு செல்லவும் அவர்களுடன் பிரசங்க வேலையில் கலந்துகொள்ளவும் ஆரம்பித்தாள். இப்படி அடிக்கடி வெளியே செல்வதை நான் ஆட்சேபித்தேன். கிறிஸ்தவ ஊழியம் உண்மையான சமாதானத்துக்கும் சந்தோஷத்துக்கும் பங்களிப்பதாக அவள் விளக்கினாள். அப்படியானால் அவளை தடுப்பதற்கு மாறாக அவளுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என நினைத்தேன்.

கிட்டத்தட்ட அந்த சமயத்தில்தான், இளம் யெகோவாவின் சாட்சிகள் சிலரை இரவுநேர காவல் பணியில் அமர்த்தினேன். அந்த இளைஞர்கள் வேலைக்கு வந்தபோது அவர்களுடைய அமைப்பைப் பற்றியும் ஊழியத்தைப் பற்றியும் விசாரித்தறிந்தேன். அவர்கள் மற்ற இளைஞரைப்போல் இல்லாமல், ஒரே சிந்தையுடையவர்களாயும் தியாக மனப்பான்மை மிக்கவர்களாயும் இருந்ததைக் கண்டு அசந்து போனேன். அவர்கள் இந்த பண்புகளை பைபிளிலிருந்து கற்றிருந்தார்கள். உலகெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகளிடத்தில் இனம், குலம் என்ற எந்தப் பாகுபாடும் இல்லை என்றும், கடவுளிடமும் மற்றவர்களிடமும் அன்பு காட்டும்படியான பைபிளின் கட்டளைக்கு அவர்கள் முற்றிலும் கீழ்ப்படிகிறார்கள் என்றும் அவர்கள் விளக்கினார்கள். (மத்தேயு 22:36-40) தங்களுடைய சபை கூட்டங்களுக்கு வருபவர்கள் எந்தத் தேசத்தாராக இருந்தாலும் அவர்களை சகோதர சகோதரிகளாக பாவிப்பதாகவும் சொன்னார்கள்.​—யோவான் 13:35; 1 பேதுரு 2:17.

‘இதெல்லாம் இலட்சியவாதமே தவிர வேறொன்றுமில்லை’ என நினைத்தேன். கிறிஸ்தவ பிரிவினர் அநேகர் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டிருக்க யெகோவாவின் சாட்சிகள் மட்டும் அதற்கு விதிவிலக்கென என்னால் நம்பவே முடியவில்லை.

என் மனதைக் குடைந்த சந்தேகங்களை அவர்களிடம் கேட்டேன். ஹிட்லருடைய ஆட்சியில் ஜெர்மனியிலிருந்த யெகோவாவின் சாட்சிகள் நடுநிலை வகித்ததால் சிறையிலிட்டு சித்திரவதை செய்யப்பட்டதையும், கொலை செய்யப்பட்டதையும் பற்றி யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தர புத்தகத்திலிருந்து (ஆங்கிலம்) இந்த இளைஞர்கள் எடுத்துக் காட்டினார்கள். யெகோவாவின் சாட்சிகளே உண்மையான கிறிஸ்தவர்கள் என்பதில் அதன் பிறகு எனக்கு சந்தேகம் வரவில்லை.

இதற்கிடையே, டிசம்பர் 1975-⁠ல் என் மனைவி கடவுளுக்கு தன்னை ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்றாள். அந்த சமயத்தில் எனக்கு பைபிள் படிப்பு நடத்த சாட்சிகள் முன்வந்தார்கள். என்றாலும், இரண்டு பிள்ளைகளுடைய படிப்புக்கு ஆகும் செலவு, வீட்டுக்கு கட்ட வேண்டிய பணம் போன்ற கடமைகளை நினைத்தபோது பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொள்ள மனம் வரவில்லை. குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுவதற்காக சபையிலிருந்த தகப்பன்மார்கள் தங்களுடைய உலகப்பிரகாரமான வேலைகளை அதற்கேற்ப சரிசெய்து வந்தார்கள். நானும் அப்படி செய்யும்படி எதிர்பார்ப்பார்களோ என நினைத்தேன். ஆனால், கிறிஸ்தவ வாழ்க்கை முறையையும் உலகப்பிரகாரமான வேலையையும் எப்படி சமநிலைப்படுத்துவது என்பதை எனக்கு காண்பித்த பிறகு, ஒருவழியாக யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிக்க ஒத்துக்கொண்டேன்.

சமாதானத்தின் கடவுளை சேவிக்க தீர்மானம்

இரண்டு வருஷம் பைபிளை படித்த பின்பு, கடவுளுக்கு ஒப்புக்கொடுப்பதை பற்றி யோசித்து பார்த்தேனா என எனக்கு பைபிள் படிப்பு நடத்தியவர் கேட்டார். நானோ அந்தத் தீர்மானத்தை எடுக்கவில்லை, அது என்னை உறுத்தியது.

ஒருநாள், வேலை பார்க்கும் இடத்தில் மாடிப்படிகளிலிருந்து வேகமாக கீழிறங்குகையில், கால் இடறி விழுந்து விட்டேன். தலையின் பின்பக்கத்தில் பலத்த அடி, நினைவிழந்தேன். மீண்டும் நினைவு வந்தபோதோ தலைவலி மண்டையைப் பிளந்தது. ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். என் தலை பின்புறத்தில் வீங்கி புடைத்திருந்தபோதிலும் உள்ளே எந்த எலும்பு முறிவோ இரத்தக்கசிவோ ஏற்படவில்லை.

என் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாததை நினைத்து எந்தளவுக்கு யெகோவாவுக்கு நன்றியுள்ளவனாய் இருந்தேன் என்பதை விவரிக்க வார்த்தைகளே இல்லை! அப்போது முதற்கொண்டு யெகோவாவின் சித்தத்தை செய்ய என் உயிரை பயன்படுத்த தீர்மானித்தேன். அவருக்கு என்னை ஒப்புக்கொடுத்தேன். ஜூலை 1977-⁠ல், 53-⁠ம் வயதில் முழுக்காட்டுதல் பெற்றேன். என் மூத்த மகன் யாசுயுகியும் பைபிளை படித்து சுமார் 2 வருடங்களுக்குப் பின்பு முழுக்காட்டுதல் பெற்றான்.

முழுக்காட்டுதலுக்குப் பின்பு சுமார் பத்து வருடம் கழித்து என்னுடைய வேலையிலிருந்து ஓய்வு பெற்றேன். அந்தப் பத்து வருடங்களில் கிறிஸ்தவ வாழ்க்கை முறையும் என்னுடைய உலகப்பிரகாரமான வேலையும் சமநிலையில் இருக்கும்படி பார்த்துக்கொண்டேன். இப்போது, யோகஹாமா சபையில் மூப்பராக பணியாற்றும் பாக்கியம் பெற்றிருக்கிறேன், கிறிஸ்தவ ஊழியத்திலும் அதிக மணிநேரம் செலவிடுகிறேன். என்னுடைய மூத்த மகன், பக்கத்திலுள்ள மற்றொரு சபையில் மூப்பராக சேவை செய்கிறான். அவன் முழுநேர ஊழியனும்கூட.

சிறப்பு தாக்குதல் படையிலிருந்தும் அதன் கொடிய பணியிலிருந்தும் தப்பி, உயிரோடு இருப்பதற்கு நன்றியோடு இருக்கிறேன்; ‘ராஜ்யத்தினுடைய நற்செய்தியை’ பிரசங்கிப்பதில் பங்குகொள்வதை பாக்கியமாக கருதுகிறேன். (மத்தேயு 24:14, NW) கடவுளுடைய மக்களில் ஒருவராக வாழ்வதைவிட சிறந்தது வேறெதுவும் இல்லை என்பதை முழுமையாக நம்புகிறேன். (சங்கீதம் 144:15) விரைவில் வரப்போகும் புதிய உலகில் இனி மனிதர் போரை சந்திக்கப் போவதில்லை, ஏனெனில் “ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.”​—ஏசாயா 2:4.

கடவுளுக்கு சித்தமானால், போரில் இறந்த என் நண்பர்கள் உயிர்த்தெழுந்து வருகையில் அவர்களை சந்திப்பேன். கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் நீதியான ஆட்சியில் பூங்காவனமாக மாறியிருக்கும் பூமியில் அவர்கள் சமாதானத்துடன் வாழலாம் என்பதைப் பற்றி அவர்களிடம் சொல்வது மெய்சிலிர்க்க வைக்கும்!​—மத்தேயு 6:9, 10; அப்போஸ்தலர் 24:15; 1 தீமோத்தேயு 6:19. (g02 12/08)

[பக்கம் 17-ன் படம்]

கப்பற்படையின் விமான பிரிவில் இருந்தபோது

[பக்கம் 1617-ன் படம்]

“ஓக்கா”​—⁠மனித வெடிகுண்டு

[படத்திற்கான நன்றி]

© CORBIS

[பக்கம் 18-ன் படம்]

கொடிய பணிக்கு புறப்படும் முன்பு என் நண்பர்களுடன். இடது புறத்தில் இரண்டாவதாக நிற்கும் நான் மட்டுமே உயிர்தப்பியவன்

[பக்கம் 19-ன் படம்]

என் மனைவி மிச்சிகோவுடனும் என் மூத்த மகன் யாசுயுகியுடனும்

[பக்கம் 16-ன் படத்திற்கான நன்றி]

U.S. National Archives photo