Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மாறிவரும் உலகம் எலக்ட்ரானிக் கேம்ஸ்

மாறிவரும் உலகம் எலக்ட்ரானிக் கேம்ஸ்

மாறிவரும் உலகம் எலக்ட்ரானிக் கேம்ஸ்

“கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 3​—⁠இதுதான் கடந்த ஆண்டின் பெஸ்ட்-செல்லர் வீடியோ கேம்” என கூறுகிறது “நியூஸ்வீக்.” விபச்சாரம், கொலை என பல ‘சாகசங்கள்’ புரிந்து ஒரு கிரிமினல் அமைப்பில் பெரிய கேடியாவதே இந்த கேமின் நோக்கம். “இந்த கேமில் உங்களுடைய ஒவ்வொரு செயலுக்கும் பின்விளைவு இருக்கும்” என குறிப்பிடுகிறது அந்த “நியூஸ்வீக்.” திருட்டுக் காரில் பாய்ந்து வந்து பாதசாரிகளை நீங்கள் கொலை செய்தால் போலீஸ் உங்களை துரத்திக்கொண்டு வரும். போலீஸை ஷூட் பண்ணினால் FBI உங்களை குறிவைக்கும். FBI ஏஜன்ட்டை கொலை செய்தால் உங்களை தொலைத்துக்கட்ட இராணுவமே திரண்டு வரும். இந்த கேம் 17 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே, ஆனால் கடைகள் அதைவிட சிறியவர்களுக்கும் இதை விற்பதாக தெரிகிறது. 12 வயது பிள்ளைகளும் இதை விளையாட துடிப்பதாக சொல்லப்படுகிறது.

ஸ்பேஸ்வார் என்பது 1962-⁠ல் முதன்முதல் தயாரிக்கப்பட்ட நவீன கம்ப்யூட்டர் கேம். குறுங்கோள்களையும் எதிரிகளின் விண்வெளி கப்பல்களையும் விரட்டியடிப்பதே இந்த கேமின் நோக்கம். நாளடைவில் இதேவிதமான கேம்ஸ் பெருகிவிட்டன. 1970-களிலும் 1980-களிலும் அதிக ஆற்றல்மிக்க பர்சனல் கம்ப்யூட்டர்கள் மூலைமுடுக்கெல்லாம் புக ஆரம்பிக்கவே கம்ப்யூட்டர் கேம்ஸ் ரொம்ப சர்வ சாதாரணமாகிவிட்டன. திகில் விளையாட்டுகள், புதிர் விளையாட்டுகள், திட்டம் தீட்டும் விளையாட்டுகள், ஆக்‍ஷன் விளையாட்டுகள் என பல இருந்தன. உதாரணமாக ஒரு வகையான திட்டம் தீட்டும் கேமில், விளையாடுபவர் நகரங்கள் அல்லது நாகரிகங்களின் வளர்ச்சியை திட்டமிடுவதும் மேற்பார்வையிடுவதும் அவசியம். கேம்ஸ் பலவும் ஐஸ் ஹாக்கி, கோல்ஃப் போன்ற விளையாட்டுகளின் இமிடேஷன்கள்தான்.

படிப்புக்கும் பொழுதுபோக்குக்கும் சிறந்ததென போற்றப்படும் கேம்ஸும் இருக்கின்றன. அந்த கேம்ஸ் சிலவற்றில் நீங்கள் ஜம்போ ஜெட்டை தரையிறக்க முயலலாம், ரேஸ் காரையோ ரயில் வண்டியையோ ஓட்டலாம், பனிப்பலகையில் சறுக்கலாம் அல்லது உலகையே சுற்றிவரலாம். என்றாலும், ‘ஷூட்-தெம்-அப்’ போன்ற ஆக்‍ஷன் கேம்ஸ் சில, அடிக்கடி கண்டனம் செய்யப்படுகின்றன, காரணம் அவை வன்முறைமிக்கவை. ஒரு ஆயுதத்தை எடுக்க வேண்டும், பிறகு தாக்க வரும் வித்தியாச வித்தியாசமான மனிதர்களை அல்லது மிருகங்களை சுட்டுக் கொல்ல வேண்டும், இதுதான் அந்த கேமில் விளையாடுபவரின் பொதுவான நோக்கம்.

ஆன்-லைன் கேம்ஸ்​—⁠ஒரு புதுப் பாணி

பிரிட்டானியா என்ற கற்பனை தேசத்தில் கிட்டத்தட்ட 2,30,000 பேர் வாழ்கிறார்கள். அவர்களில் படைவீரர்கள், தையல்காரர்கள், கொல்லர்கள், இசைக் கலைஞர்கள் என பல வகையான ஆட்கள் இருக்கிறார்கள். அந்த ஜனங்கள் போர் செய்கிறார்கள், நகரங்களைக் கட்டுகிறார்கள், கடைகளை திறக்கிறார்கள், மணம் செய்துகொள்கிறார்கள், மரிக்கிறார்கள். ஆனாலும், இந்த பிரிட்டானியா தேசம் உண்மையில் இல்லை. இது இடைக்கால உலகின் ஒரு இமிடேஷன்; இங்கு ஒரே சமயத்தில் இன்டர்நெட் விளையாட்டு வீரர்கள் போட்டியிடுகிறார்கள், சேர்ந்து செயல்படுகிறார்கள்​—⁠இது ஆன்-லைன் கேம் என அழைக்கப்படும் ஒரு வகை கம்ப்யூட்டர் கேம். இது அதிக பிரபலமாகி வருகிறது, கம்ப்யூட்டர் கேம்ஸில் “அடுத்த மெகா ஹிட்” இதுதான் என எதிர்பார்க்கப்படுகிறது. 1997-⁠ல் அறிமுகமான அல்டிமா ஆன்-லைன் கேம்தான் இன்டர்நெட் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட முதல் கேம்; இதில் பிரிட்டானியா என்ற கற்பனை தேசமும் அடங்கும். அது முதற்கொண்டு வேறுபல இன்டர்நெட் கேம்ஸும் புற்றீசல் போல் படையெடுக்க ஆரம்பித்தன, இன்னும் பல படையெடுத்து வரப்போகின்றன.

இவ்வகையான விளையாட்டில் அப்படியென்ன விசேஷம்? விளையாட்டில் வரும் வித்தியாசப்பட்ட கதாபாத்திரங்கள் கம்ப்யூட்டரால் அல்ல, இன்டர்நெட்டில் ஒரேசமயத்தில் விளையாடும் மற்றவர்களால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். ஒரே கேமில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கலாம். உதாரணமாக, அல்டிமா ஆன்-லைன் கேமில் ஒரே சமயத்தில் 114 நாடுகளைச் சேர்ந்தோர் பங்கேற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. விளையாடுபவர்கள் எந்தளவுக்கு அளவளாவுகிறார்களோ அதைப் பொறுத்தே இந்த கேம்ஸின் புகழும் பரவும். விளையாடுபவர்கள் ஒருவருக்கொருவர் அளவளாவ முடிகிறது; அதன் மூலம் தாங்கள் உலகளாவிய சமுதாயத்தின் ஒரு பாகம் என உணரவும் முடிகிறது.

பெரும் வியாபார நிறுவனங்கள்

எலக்ட்ரானிக் கேம் துறை அதன் எதிர்காலத்தைக் குறித்து அதிக தன்னம்பிக்கையுடன் இருக்கிறது. 1997-⁠ல் அமெரிக்க கம்ப்யூட்டர் கேம் மற்றும் வீடியோ கேம் துறைக்கு கிடைத்த ஆண்டு வருமானம் 530 கோடி டாலர், உலகம் முழுவதிலும் குறைந்தபட்சம் 1,000 கோடி டாலருக்கு விற்பனை செய்திருக்கிறது. இது வீழ்ச்சியடைவதற்கான சாத்தியம் இருப்பதாகவே தெரியவில்லை. வரவிருக்கும் ஐந்து வருடங்களில் எலக்ட்ரானிக் கேம்ஸின் வியாபாரம் 50 முதல் 75 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபாரஸ்டர் ரிசர்ச் என்ற அமைப்பு குறிப்பிடுகிறபடி, தினம் தினம் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் வித்தியாசப்பட்ட இன்டர்நெட் கேம்ஸில் சேருகிறார்கள்; அதோடு அகலப்பாதை (broadband) என்ற ஒருவகை அதிவேக இன்டர்நெட் இணைப்பு அதிகமாக பரவுவதற்கேற்ப ஆன்-லைன் கேம்ஸின் பேரிலான ஆர்வமும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. கம்ப்யூட்டர் கேம்ஸை விளையாடும் பிள்ளைகள் பெரியவர்களான பின்பு அதை நிறுத்திவிடுவார்கள் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை. ரொம்ப காலமாகவே கம்ப்யூட்டர் கேம்ஸில் ஈடுபட்டுவரும் ஒருவர் இவ்வாறு கூறுகிறார்: “கம்ப்யூட்டர் கேம்ஸை விளையாடுவதே உலகம் பூராவும் உள்ள நண்பர்களோடு பழகுவதற்கு ஒரு வழியாக ஆகியிருக்கிறது.”

இப்படிப்பட்ட கேம்ஸ் எல்லாமே தீங்கற்ற பொழுதுபோக்கா அல்லது அவற்றில் ஆபத்துக்கள் இருக்கின்றனவா? நாம் பார்க்கலாம். (g02 12/22)