Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அந்தரங்கம் ஒரு முரண்பாடு

அந்தரங்கம் ஒரு முரண்பாடு

அந்தரங்கம் ஒரு முரண்பாடு

“அரசனே தன் குடிசைக்கு வந்தாலும் அவனை தடைசெய்ய ஓர் ஏழைக்கும் உரிமையுண்டு.”​—வில்லியம் பிட், பிரிட்டிஷ் அரசியல்வாதி, 1759-1806.

வாழ்க்கையில் ஒரு சமயத்திலாவது மற்றவர்களின் அநாவசியமான குறுக்கீடின்றி ஓரளவு தனிமையை அனுபவிக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும் என்பதே பிட் சொன்ன வார்த்தைகளில் பொதிந்துள்ள கருத்து.

அந்தரங்கம் என்பதன் அர்த்தம் கலாச்சாரத்திற்கு கலாச்சாரம் மாறுபடலாம். உதாரணமாக, சமோவா பசிபிக் தீவுகளில், பெரும்பாலும் வீடுகளுக்கு சுவரே இருக்காது; வீட்டிற்குள் நடப்பதெல்லாம் அப்படியே வெளியில் தெரியும். இருந்தாலும், அங்கும்கூட அழையாத வீட்டிற்குள் ஒருவர் காலடி வைப்பது மரியாதைக் குறைவாக கருதப்படுகிறது.

ஓரளவுக்காவது தனிமை வேண்டும் என்ற தேவையை காலங்காலமாகவே மக்கள் உணர்ந்து வந்திருக்கிறார்கள். வில்லியம் பிட் இந்த பிரபலமான கூற்றை எழுதுவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பிறருடைய அந்தரங்கத்திற்கு மதிப்பு தருவதன் அவசியத்தைப் பற்றி பைபிள் குறிப்பிட்டது. “உன் அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடிக்கு, அடிக்கடி அவன் வீட்டில் கால் வைக்காதே” என சாலொமோன் ராஜா எழுதினார். (நீதிமொழிகள் 25:17) ‘உங்கள் வேலையை மட்டுமே பார்த்துக் கொள்வதில் நோக்கமாயிருங்கள்’ என அப்போஸ்தலனாகிய பவுல் அறிவுரை கூறினார்.​—1 தெசலோனிக்கேயர் 4:11, பொது மொழிபெயர்ப்பு.

தனிமைக்கான உரிமை அவ்வளவு முக்கியமானதாக இருப்பதால்தான் அந்த உரிமையை “குடிமக்களின் எல்லா உரிமைகளுக்கும் பலமான அஸ்திவாரம்” என த யுனெஸ்கோ குரியர் குறிப்பிட்டது. இவ்வாறே செல்வாக்கு பெற்ற ஒரு லத்தீன்-அமெரிக்க அரசியல்வாதியும், “ஒரு அர்த்தத்தில் பார்த்தால், மனிதரின் எல்லா உரிமைகளும் தனிமைக்கான உரிமையின் மற்ற அம்சங்கள்தான்” என்று கூறினார்.

இருந்தாலும், தனிமை எனும் தடுப்புச் சுவர்களை தகர்த்தெறிந்தால்தான், இன்று அதிகரித்துவரும் குற்றச்செயலிலிருந்தும் தீவிரவாதத்திலிருந்தும் தங்கள் குடிமக்களை காப்பாற்ற முடியும் என்று அரசாங்கங்களும் சட்ட அமலாக்க துறைகளும் உணர்கின்றன. ஏன்? ஏனெனில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் தங்களுடைய துர்ச்செயல்களை மறைப்பதற்கு தனிமைக்கான உரிமையை ஒரு திரையாக பயன்படுத்துகிறார்கள். ஆகவே, குடிமக்களை பாதுகாக்க வேண்டிய அரசாங்கத்தின் பொறுப்பையும் தனிமைக்கான தனியொருவரின் உரிமையையும் சமநிலைக்கு கொண்டுவர ஒரு போராட்டமே நடந்து வருகிறது.

தனிமை Vs பாதுகாப்பு

ஒருவருடைய அந்தரங்க காரியங்களின் சில அம்சங்களை அரசாங்கம் பறித்துக்கொள்வதாக கருதும் மக்களின் மனப்பான்மையை செப்டம்பர் 11, 2001-⁠ல் உலகையே அதிர வைத்த தீவிரவாத தாக்குதல் மாற்றியது. “செப்டம்பர் 11, காரியங்களை மாற்றிவிட்டது” என பிஸினஸ்வீக் பத்திரிகையில் ஐ.மா. முன்னாள் ஃபெடரல் டிரேட் கமிஷனர் குறிப்பிட்டார். “தீவிரவாதிகள் தங்களுடைய அந்தரங்க நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு கிட்டும் ஒரு சமுதாயத்தில் வலம் வருகிறார்கள். அவர்களை கண்டுபிடிப்பதற்காக அந்தரங்கம் எனும் எல்லையை அத்துமீறி செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதற்கு பெரும்பாலோர் ‘ஓ.கே.’ சொல்லிவிடுகிறார்கள்” என அவர் குறிப்பிட்டார். “செப்டம்பர் 11 முதற்கொண்டு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், முக அடையாளத்தைக் கண்டுகொள்ளும் திட்டங்களை அதிகளவில் பயன்படுத்துவதை 86% அமெரிக்கர்கள் ஆதரிப்பதாகவும், வங்கி மற்றும் கிரெடிட் கார்ட் சம்பந்தப்பட்ட காரியங்களில் மிக உன்னிப்பாக கண்காணிக்கப்படுவதை 81% விரும்புவதாகவும், தேசிய அடையாள அட்டை வைத்திருப்பதை 68% ஆதரிப்பதாகவும் காட்டுகிறது” என அந்தப் பத்திரிகை அறிவிக்கிறது.

ஒருவரின் கைநாட்டுக்குறி, கண்களின் திரைப்படிவம், குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தால் அத்தகவல்கள், மற்றும் வருவாய் பற்றிய விஷயங்கள் அடங்கிய அட்டையை அடையாள அட்டையாக பயன்படுத்துவதைக் குறித்து சில மேற்கத்திய அரசுகள் ஆலோசித்து வருகின்றன. இத்தகைய அடையாள அட்டையிலுள்ள தகவலை நவீன தொழில்நுட்ப ரீதியில் கிரெடிட் கார்டோடு இணைக்கவும் முடியும், முக அடையாளத்தைக் கண்டுபிடிக்கும் கண்காணிப்பு கேமராக்களுடன் ஒன்றிணைக்கவும் முடியும். இவ்வாறு செய்வதால், குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை அவர்கள் பொருட்களை வாங்கிய உடனேயே கைது செய்துவிட முடியும்.

குற்றவாளிகள் தாங்கள் வைத்திருக்கும் குண்டுகளையோ, துப்பாக்கிகளையோ அல்லது கத்திகளையோ தங்கள் உடைக்குள்ளோ வீட்டிற்குள்ளோ மறைத்து வைத்தாலும் அவர்கள் தப்பிக்க முடியாது. சில பாதுகாப்பு ஏஜன்சிகள் வைத்திருக்கும் கருவிகள், உடைக்குள்ளே எதை வைத்திருந்தாலும் அதை வெளிப்படுத்தி விடும். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ரேடார் கருவிகள், அடுத்த அறையில் இருப்பவரின் அசைவுகளையும் அவர் மூச்சுவிடுவதையும்கூட கண்டுபிடிக்க போலீசாருக்கு உதவுகிறது. ஆனால் கண்காணிப்பு வசதிகள் அதிகரித்திருப்பது குற்றச்செயலின் விகிதத்தை குறைக்குமா?

குற்றவாளிகள் கேமராக்களுக்கு பயப்படுகிறார்களா?

ஆஸ்திரேலியாவிலுள்ள ஓர் ஒதுக்குப்புற நகரமாகிய பர்க்கில் குற்றச்செயல்கள் தலைவிரித்தாட ஆரம்பித்தபோது, நான்கு குளோஸ்டு சர்க்யூட் டிவி கேமராக்கள் நிறுவப்பட்டன. அதன் விளைவாக, குற்றச்செயலின் விகிதம் பெருமளவில் குறைந்தது. ஆனால், எல்லா இடங்களிலும் இதுபோன்ற வெற்றி கிடைப்பதில்லை. ஸ்காட்லாந்திலுள்ள கிளாஸ்கோவில் குற்றச்செயலின் விகிதத்தைக் குறைப்பதற்காக, 1994-⁠ல் இவ்வகையான டிவி கேமராக்கள் நிறுவப்பட்டன. அவற்றை நிறுவிய பின், அடுத்த வருடத்தில் சில வகையான குற்றச்செயல்களின் எண்ணிக்கை குறைந்திருந்ததை ஸ்காட்டிஷ் ஆஃபீஸ் சென்ட்ரல் ரிசர்ச் யூனிட் நடத்திய ஆய்வு கண்டறிந்தது. இருந்தாலும், “விபச்சாரம் போன்ற கீழ்த்தரமான குற்றச்செயல்களின் எண்ணிக்கை 120, மோசடிகள் 2,185, (போதைப்பொருட்கள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் உட்பட) இதர குற்றச்செயல்கள் 464 என அதிகரித்திருப்பதை” அந்த ஆய்வின் அறிக்கை குறிப்பிட்டது.

இவ்வாறு கண்காணிக்கப்படுவது ஏதாவது ஒரு பகுதியில் குற்றச்செயல்கள் நடப்பதை குறைத்தாலும், ஒட்டுமொத்தத்தில் குற்றச்செயலின் விகிதத்தை குறைப்பதில்லை. “இடமாற்றம்” என போலீசும் குற்றவியல் நிபுணர்களும் அழைக்கும் ஒரு பதத்தை த சிட்னி மார்னிங் ஸ்டார் செய்தி பத்திரிகை கோடிட்டுக் காட்டியது. “ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிறுவப்பட்டிருக்கும் கேமரா தங்களை காட்டிக்கொடுத்து விடும் அல்லது ரோந்து வரும் போலீசிடம் மாட்டிக்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை அறிந்த குற்றவாளிகள் அப்பகுதியை விட்டு மற்றொரு பகுதிக்கு இடம் மாறிச்சென்று குற்றச்செயலில் ஈடுபடுகிறார்கள்” என அந்தப் பத்திரிகை குறிப்பிட்டது. இது ஒருவேளை வெகு காலத்திற்கு முன்பு பைபிள் சொன்ன ஒரு குறிப்பை உங்களுக்கு நினைவுபடுத்தலாம்: “பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.”​—யோவான் 3:20.

சட்ட அமலாக்கத் துறையினர் எதிர்ப்படும் சவால் என்னவென்றால் அதிநவீன ரேடாராக இருந்தாலும் சரி எக்ஸ்-ரே கண்காணிப்பு திட்டமாக இருந்தாலும் சரி, அவற்றை உபயோகித்து ஒருவரின் மனதிலும் இருதயத்திலும் இருப்பவற்றை கண்டுபிடிக்க முடியாமல் போவதே. என்றாலும், குற்றச்செயலையும் பகைமையையும் வன்முறையையும் அடக்கியாளும் நிஜப் போராட்டம் இருதயத்தில்தான் நடைபெற வேண்டும்.

இருந்தாலும், மனிதன் இதுவரை கண்டுபிடித்திருக்கிற எதையும்விட எங்கும் ஊடுருவிச் செல்லும் ஒரு வித கண்காணிப்பு ஏற்கெனவே இருந்துவருகிறது. இவ்வகையான கண்காணிப்பைப் பற்றியும் மனித இயல்பில் அது பயனுள்ள தாக்கத்தை ஏற்படுத்துவதைப் பற்றியும் அடுத்த கட்டுரை கலந்தாராயும். (g03 1/22)

[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]

“தீவிரவாதிகள் தங்களுடைய அந்தரங்க நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு கிட்டும் ஒரு சமுதாயத்தில் வலம் வருகிறார்கள்”

[பக்கம் 7-ன் பெட்டி/படம்]

உங்கள் மருத்துவ அறிக்கைகள் எந்தளவுக்கு இரகசியமாக உள்ளன?

தங்களுடைய மருத்துவ அறிக்கைகள், அதாவது தங்களுடைய உடல்நிலையை குறித்து டாக்டர்களும் மருத்துவமனையும் கொடுக்கும் மருத்துவ குறிப்புகள் இரகசியமாயிருக்க உத்தரவாதம் இருப்பதாக பலரும் நினைக்கிறார்கள். என்றாலும், “பாதுகாப்பு இருப்பது போன்ற நினைப்பு உங்களுக்கு இருக்கலாம்” என இரகசியத்தை பாதுகாக்கும் ஓர் அமைப்பான ப்ரைவஸி ரைட்ஸ் க்ளியரிங்ஹவுஸ் எச்சரிக்கிறது. “மருத்துவ அறிக்கைகள் இன்று பல நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. . . . யாருக்கு வேலை கொடுக்கலாம் என்பதை தீர்மானிப்பதற்காக முதலாளிகளும், யாருக்கு இன்ஷூரன்ஸ் வழங்கலாம் என்பதை தீர்மானிப்பதற்காக இன்ஷூரன்ஸ் கம்பெனிகளும் அவற்றை பயன்படுத்துகின்றன. மருத்துவமனைகளும் மதங்களும் அவற்றை காட்டி நன்கொடை வசூலிக்கின்றன. பொருட்களை வாங்குவோர் பற்றிய தகவலை அறிந்துகொள்வதற்காக விற்பனையாளர்களும்கூட மருத்துவ அறிக்கைகளைப் பயன்படுத்துகிறார்கள்” என டேட்டாபேஸ் நேஷன்​—⁠த டெத் ஆஃப் ப்ரைவஸி இன் த 21ஸ்ட் செஞ்ச்சுரி என்ற புத்தகத்தில் ஸிம்சன் கார்ஃபின்கல் குறிப்பிடுகிறார்.

“நோயாளியின் மருத்துவ அறிக்கையை அவர் மருத்துவமனைக்கு சாதாரணமாக விஜயம் செய்யும் சமயத்தில் 50 முதல் 75 பேர் பார்க்க வேண்டிய தேவை ஏற்படுவதுதான் அவற்றை இரகசியமாக வைக்க முடியாதபடி சிக்கலை ஏற்படுத்துகிறது” என்றும் கார்ஃபின்கல் குறிப்பிடுகிறார். சில இடங்களில், நோயாளிகளை மருத்துவமனையில் சேர்க்கையில் அவர்களுடைய உரிமையை விட்டுக்கொடுக்கும் அல்லது ஒப்புதலளிக்கும் பாரத்தில் கையெழுத்து வாங்கப்படுகிறது; இவ்வாறு அவர்களை அறியாமலேயே இரகசியத்தை பாதுகாக்கும் அவர்களுடைய உரிமை பறிபோய் விடுகிறது. இந்தப் பாரங்களில் கையெழுத்திடுவதன் மூலம், “மருத்துவ உதவி அளிப்பவர், உங்களுடைய மருத்துவ தகவல்களை இன்ஷூரன்ஸ் கம்பெனிகளுக்கும் அரசு ஏஜன்சிகளுக்கும் பிறருக்கும் தெரிவிப்பதற்கு நீங்கள் அனுமதி அளித்துவிடுகிறீர்கள்” என ப்ரைவஸி ரைட்ஸ் க்ளியரிங்ஹவுஸ் குறிப்பிடுகிறது.

[பக்கம் 8-ன் பெட்டி/படங்கள்]

அந்தரங்கம் Vs வியாபாரம்

இன்டர்நெட்டை பயன்படுத்துகிறவர்கள்தான் முக்கியமாக உன்னிப்பாக ஆராயப்படுகிறார்கள். “இரகசியத்தைக் காத்துக்கொள்வதற்கான முழு உரிமைக்கும் உத்தரவாதமளிக்கிற நடவடிக்கைகளோ சேவைகளோ ஆன்லைனில் கிடையாது. . . . இன்டர்நெட்டை பயன்படுத்துகிறவர்கள் வேறு எவ்வித தொடர்பும் கொள்ளாமல் சில வெப் சைட்டுகளிலிருந்து தகவல்களையோ ஆவணங்களையோ ‘இறக்குமதி’ செய்யலாம் . . . , அல்லது அவற்றை வெறுமென ‘ப்ரௌஸ்’ செய்யலாம். இன்டர்நெட்டை பயன்படுத்துவோர் பலரும் தாங்கள் செய்யும் காரியங்கள் இரகசியமானவை என நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. இன்டர்நெட்டை பயன்படுத்துபவர் எந்தெந்த நியூஸ் ஏஜன்சிகளிடமிருந்து அல்லது ஃபைல்களிலிருந்து தகவல்களை பெற்றிருக்கிறார், எந்தெந்த வெப் சைட்டுகளுக்கு ‘விசிட்’ செய்திருக்கிறார் போன்ற அநேக ஆன்லைன் நடவடிக்கைகளைப் பதிவு செய்வது சாத்தியமே. . . . இன்டர்நெட்டை பயன்படுத்துபவரின் ‘தகவல்களைத் தேடும் பாங்குகளைப்’ பற்றிய பதிவுகள் . . . நல்ல வருமானத்திற்கும் வழிவகுக்கின்றன. . . . முக்கியமாக ஒரேமாதிரியான விருப்பங்களையும் இயல்புகளையும் உடைய ஆன்லைன் யூஸர்களின் பெயர் பட்டியலை விற்பனையாளர்களுக்கு அளிக்க இத்தகவல் ஒரு அடிப்படையாக பயன்படுகிறது.”

நேரடி அஞ்சல்வழி வியாபாரப் பட்டியல்களில் வேறெந்த வழிகளிலெல்லாம் உங்கள் பெயர் சிக்கி விடுகிறது? பின்வரும் ஏதாவது ஒன்றை நீங்கள் செய்தாலும் உங்கள் பெயர் அதில் மாட்டிக்கொள்ளும்:

◼ ஒரு பொருளின் உத்தரவாதச் சீட்டையோ பதிவு சீட்டையோ நிரப்புகையில்.

◼ கிளப்புகளில், சங்கங்களில் அல்லது தர்ம ஸ்தாபனங்களில் சேருகையில் அல்லது அதற்கு பணத்தை நன்கொடை அளிக்கையில்.

◼ பத்திரிகைகளுக்கு, புத்தக கிளப்புகளுக்கு அல்லது இசை கிளப்புகளுக்கு சந்தா கட்டுகையில்.

◼ போன் புத்தகத்தில் உங்களுடைய பெயரையும் விலாசத்தையும் பதிவு செய்கையில்.

◼ லாட்டரி விளையாட்டுகளிலோ, பிற போட்டிகளிலோ கலந்துகொள்கையில்.

அதோடு, மளிகை சாமான்களுக்கு பணம் கொடுப்பதற்கு டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளையோ, தள்ளுபடி அட்டைகளையோ பயன்படுத்தினால், நீங்கள் வாங்கிய பொருட்களின் விவரங்களையும் விலையையும் ஸ்கேனரில் பதிவு செய்கையில் உங்கள் பெயரையும் விலாசத்தையும்கூட அந்த வியாபார நிறுவனம் அதில் சேர்க்கலாம். இதன் மூலம் நீங்கள் எந்தெந்த பொருட்களை அதிகமாக வாங்கும் பழக்கம் உடையவர்கள் என்ற தெளிவான தகவல் தொகுப்பை சேகரித்து வியாபார நோக்கத்திற்காக அவற்றை பயன்படுத்தவும் முடியும். a

[அடிக்குறிப்பு]

a ப்ரைவஸி ரைட்ஸ் க்ளியரிங்ஹவுஸ் வெப் சைட் தகவலை தழுவி எழுதப்பட்டது.

[பக்கம் 67-ன் படங்கள்]

கண்காணிப்பு குற்றச்செயலை குறைத்திருக்கிறதா?