Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

“தொலைபேசி அம்மாக்கள்” சாப்பாடு பிரமாதம்

ஸ்பெயினிலுள்ள மாட்ரிட்டில், திருமணமாகாத இளைஞர்கள், சாப்பாட்டு விஷயத்தில் தங்கள் பிரச்சினைக்கு ஒரு விநோதமான தீர்வை கண்டிருக்கிறார்கள். ஏனெனில், இவர்கள் வாய்க்கு ருசியாக சாப்பிட விரும்புகிறார்கள்; ஆனாலும் நேரமில்லாததால் அல்லது சமைப்பதில் விருப்பமில்லாததால் சமைக்க முடியாமல் அவசரகதியான வாழ்க்கை வாழ்பவர்கள். இவர்கள் இன்டர்நெட் வழியாக ஒரு ‘தொலைபேசி அம்மாவை’ கூலிக்கு அமர்த்துகிறார்கள் என்கிறது ஸ்பெயினின் செய்தித்தாள் எல் பாயிஸ். பல நாட்களுக்கு தேவையான, ஆரோக்கியமான, வீட்டுச் சாப்பாட்டை வாரம் இருமுறை இந்த தத்தெடுத்த தாய் இவர்களுக்கு டாக்ஸியில் அனுப்பி வைக்கிறாள். மீன், பாஸ்டா, காய்கறிகள், பயிறு வகைகள், இறைச்சி, பழம், பால் பண்ணை பொருட்கள் போன்றவை இந்த சாப்பாட்டில் இடம்பெறும். ஃபிரிட்ஜிலுள்ள உணவு பொருட்களின் நிலவரத்தையும், பிடித்த உணவுகளையும் தேவைகளையும் தெரிந்துகொள்ள புதிதாக தத்தெடுத்த ஒவ்வொரு பிள்ளையிடமும் இந்த “தொலைபேசி அம்மா” போனில் தொடர்பு வைத்துக் கொள்கிறாள். நான்கோ அதற்கதிகமானோரோ கூட்டுச் சேர்ந்தால் தினமும் அலுவலகத்துக்கும் சாப்பாடு அனுப்பப்படும். வார இறுதிக்கான மெனுவும் உண்டு. (g03 1/22)

தேரைகளுக்கு சுரங்கப் பாதை

கனடாவின் வான்கோவர் தீவு நெடுஞ்சாலையில் வேலை செய்யும் பொறியாளர்களுக்கு ஒரே ஆச்சரியம். காரணம், அந்த நெடுஞ்சாலை வேறொரு முக்கியமான சாலையை குறுக்கிட்டதை அவர்கள் கண்டுபிடித்தனர். அதுதான், “தேரை சாலை.” “மூன்று சென்டிமீட்டர் அளவுள்ள லட்சக்கணக்கான மேற்கத்திய தேரைகள்” இனப்பெருக்கத்திற்காக சென்றிருந்த சதுப்பு நிலத்திலிருந்து இடம்பெயர்ந்து மேட்டுப்பகுதியான தங்கள் வாழிடத்தை நோக்கி இதுவரை முற்றுப்பெறாத நெடுஞ்சாலையை கடந்து வந்ததாக அறிக்கை செய்தது அழகிய பிரிட்டிஷ் கொலம்பியா (ஆங்கிலம்) பத்திரிகை. இந்த நெடுஞ்சாலையால் தேரைகளுக்கு வரப்போகும் ஆபத்தை எண்ணி “அந்த திட்டப் பொறியாளர்கள் மண்டையை உடைத்துக் கொண்டிருந்தனர்.” இந்தப் பிரச்சினையை எப்படி தீர்ப்பார்கள்? “இடம்பெயரும் தேரைகளை நெடுஞ்சாலையின்கீழ் விசேஷமாக அமைக்கப்பட்ட தண்ணீரில்லாத கால்வாய்களுக்கு அனுப்பும் வகையில் ஒரு வேலி அமைப்பை” பொறியாளர்கள் ஏற்படுத்தினதாக அந்தத் திட்டத்தின் சுற்றுச்சூழல் ஒருங்கமைப்பாளர் க்ரேக் பார்லோ சொன்னார். மேற்கத்திய தேரையானது, “தண்ணீர் மாசுபடுவதாலும், வாழிடத்தை இழந்து விடுவதாலும், சீதோஷண மாற்றங்களாலும் அதிக பாதிப்புக்குள்ளாகும் இயல்புடையது” என்பதாக அந்த பத்திரிகை சொல்கிறது. (g03 1/22)

போக மறுக்கும் காசநோய்

காசநோய் (டிபி) இன்னும் ஒழிக்கப்படவில்லை என அறிக்கை செய்கிறது ப்யூனஸ் அயர்ஸின் செய்தித்தாள் க்ளாரின். முக்கியமாக கணிசமானளவு வறுமையில் வாடும் நாடுகளில் இந்நிலை உள்ளது. அர்ஜென்டினாவில் “வருடாவருடம் 14,000 பேருக்கு இந்த நோய் தொற்றுகிறது” என்று அந்த கட்டுரை குறிப்பிடுகிறது. “உலக சுகாதார அமைப்பின் அறிக்கை ஒன்றின்படி . . . , இந்த நோய் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் சுமார் 20 லட்சம் மக்களை காவுகொள்கிறது.” டிபி, ஊட்டச்சத்துக் குறைவோடும் வறுமையோடும் தொடர்புடையதாக பெரும்பாலும் கருதப்பட்டாலும், இது மிக எளிதில் தொற்றும் இயல்புடையதாய் இருப்பதால் எல்லாருக்குமே தொற்றும் ஆபத்து இருக்கிறது. “காசநோய் மிக எளிதில் தொற்றுகிறது; எல்லா சமூக எல்லைகளையும் தாண்டுகிறது,” என்கிறார் டாக்டர் ஹூலியோ கான்ஸாலிஸ் மான்டானேர். டிபி ஒழிப்புக்கு மருந்துகளைப் பயன்படுத்துவதில் இவர் ஒரு முன்னோடி. விமானத்தில், தன் சொந்த சுற்றுவட்டாரத்தில், அல்லது வேலை செய்யுமிடத்தில் ஒருவரை இந்த நோய் தொற்றக்கூடும் என அவர் விவரித்தார். (g03 1/22)

முதல் ஒளி-மாசு சட்டம்

ஒளி மாசை தடை செய்யும் சட்டத்தை இயற்றிய முதல் நாடு செக் குடியரசு என்பதாக குறிப்பிடுகிறது பெர்லினர் மார்கன்போஸ்ட். வளிமண்டல பாதுகாப்பு சட்டம் என அறியப்படும் இந்தச் சட்டம் ஜூன் 1, 2002-லிருந்து அமலுக்கு வந்தது. வானியல் ஆய்வாளர்கள் மத்தியிலும் பொது மக்களிடமும் இதற்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. “பிரகாசிக்க வேண்டிய பகுதிகளின் எல்லையைத் தாண்டி, குறிப்பாக அடிவான எல்லைக்கு மேலாக சிதறி பரவுகிற, செயற்கை ஒளியால் ஏற்படும் எந்த வகையான வெளிச்சமும்” ஒளி மாசு என்பதாக அந்த சட்டம் விளக்குகிறது. இரவுநேர வானத்தை பார்ப்பதை கெடுக்கும் வகையில் தேவையின்றி சிதறி பிரகாசிக்கும் ஒளியை குடிமக்களும் அமைப்புகளும் கட்டுப்படுத்துவது அவசியம். இதற்காக ஒளியை சிதறவிடாமல் தடுக்கும் சாதனங்களை விளக்குகளில் பொருத்த வேண்டும். ஜூன் 1-⁠ம் தேதிக்கு முன்னரே இவ்வாறு பொருத்தியதால், ப்ரனோவின் உள்நகரில் சிதறும் ஒளி குறிப்பிடத்தக்க அளவில் குறைந்திருந்தது. “இதனால் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பிரமிக்கத்தக்கது” என்றார் செக் நாட்டின் வானியலாளர் யான் ஹோலான். (g03 1/22)

உலகெங்கும் கல்வியறிவு பிரச்சினைகள்

இன்று எந்தளவுக்கு மாணவர்கள் கல்வியறிவைப் பெற்றிருக்கிறார்கள்? 32 நாடுகளைச் சேர்ந்த 15 வயதுடைய உயர்நிலை பள்ளி மாணவர்கள் 2,65,000 பேரை வைத்து நடத்திய சோதனைகளின் அடிப்படையில் உலகப் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக் குழு (OECD) ஒரு ஆராய்ச்சி செய்தது. “கட்டாயக் கல்வியின் முடிவு கட்டத்தில் இருக்கும் மாணவர்கள், சமுதாயத்தில் முழு பங்கேற்க தேவையான அறிவையும் திறமையையும் எந்தளவுக்கு பெற்றிருக்கிறார்கள்” என்பதைக் கண்டுபிடிக்க அது ஆய்வு நடத்தியது. மாணவர்களில் 6 சதவீதத்தினர் “வாசிப்புத் திறனில் மிகக் குறைந்தளவுக்கும்” கீழான நிலையில் இருப்பதாகவே அவர்களுடைய கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. “சிறு தகவல் குறிப்பை கண்டுபிடிப்பது அல்லது ஒரு பகுதியின் முக்கிய பொருளை கண்டறிவது போன்ற மிக அடிப்படையான வாசிப்பு திறன்களை” மட்டுமே 12 சதவீதமான மற்றொரு சாராரால் சமாளிக்க முடிகிறது. கல்வியறிவை பொருத்தவரை, எல்லா நாடுகளிலுமே சராசரியாக பையன்களைவிட பெண்களே சிறந்து விளங்கினார்கள். வாசிப்பில் பின்லாந்தைச் சேர்ந்த மாணவர்களும், அறிவியலிலும் கணிதத்திலும் ஜப்பானிய மற்றும் கொரிய மாணவர்களும் மிகவும் கெட்டிக்காரர்களாக தேறினார்கள். “28 நாடுகளில் 20-ஐ சேர்ந்த மாணவர்களில் நான்கில் ஒன்றுக்கும் அதிகம் பேர் பள்ளியை தாங்கள் போக விரும்பாத ஓர் இடமாகவே கருதுகிறார்கள்” என்று அந்த ஆய்வு குறிப்பிட்டது. (g03 1/22)

புகைத்தல் வழங்கிய 40-வருட ஆஸ்தி

1962-⁠ல், இங்கிலாந்திலுள்ள மருத்துவர்களின் ராயல் காலேஜ் புகைத்தலும் ஆரோக்கியமும் (ஆங்கிலம்) என்ற அறிக்கையை பிரசுரித்தது. “புகையிலையின் ஆபத்துக்களைப் பற்றி அதிகாரப்பூர்வமாக பிரிட்டனில் வெளிவந்த தெளிவான முதல் எச்சரிக்கை அதுவே” என்கிறது லண்டனின் தி இண்டிப்பென்டன்ட். அப்போது, 70 சதவீதம் ஆண்களும் 43 சதவீதம் பெண்களும் புகைத்தனர். தொடர்ந்துவந்த 40 வருடங்களில், “பிரிட்டனில் 50 லட்சம் பேர் புகைத்தல் காரணமாக உயிரிழந்தனர்; இது இரண்டாம் உலகப் போரில் கொல்லப்பட்டவர்களைவிட 12 மடங்கு அதிகம்.” தற்போது ஆண்களில் 29 சதவீதத்தினரும் பெண்களில் 25 சதவீதத்தினரும் மட்டுமே புகைத்தாலும், சிகரெட்டுகள் “இன்னும் பிரபலமானதாகவும் கவர்ச்சிகரமானதாகவும் விளம்பரப்படுத்தப்பட்டு இளைஞருக்கு விற்கப்படுகின்றன” என்கிறது தி இண்டிப்பென்டன்ட். மீண்டும் புகையிலைப் புழக்கம் அதிகரித்துள்ளது என்றும் மக்கள் உடல்நலத்துக்கு முக்கிய அச்சுறுத்தலாகவே அது இன்னுமிருக்கிறது என்றும் ராயல் காலேஜின் சமீப அறிக்கை ஒன்று சொல்கிறது. புகைத்தலுக்கும் நுரையீரல் புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பை குறித்து 1950-⁠ல் ஒரு புத்தம் புதிய ஆய்வை நடத்திய ஸர் ரிச்சர்ட் டால், இந்த பழக்கத்தை எந்த வயதில் நிறுத்தினாலும் அது நன்மையானதே என்கிறார். அவர் மேலுமாக சொல்கிறார்: “நான் சொல்வது இதுவே: புகைப்பதை நிறுத்துங்கள், வாழ்வில் அதிக இன்பம் காணுங்கள், நீடூழி வாழுங்கள்.” (g03 1/22)

பருமனாதல்​—⁠பாரெங்கும் பெருகிவரும் கவலை

“உலகம் முழுவதும் கவலைக்குரிய அளவில்” பெரியவர்களும் பிள்ளைகளும் குண்டாகி வருகிறார்கள்; மிக ஏழை நாடுகள் சிலவற்றிலும் இப்போது இந்த பிரச்சினை உள்ளது என அறிவிக்கிறது த லான்செட். தொழில்நுட்ப முன்னேற்றங்களால் சோளம், சோயாபீன், பருத்தி போன்ற விதைகளிலிருந்து உண்ணத்தகுந்த எண்ணெய்களை பிரித்தெடுக்க முடிந்திருப்பதும் இதற்கொரு காரணமென வட கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருளியல் மற்றும் ஊட்டச்சத்து நோயியல் நிபுணர் பாரி பாப்கன் கூறுகிறார். “ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில், தினசரி உணவில் கூடுதலான கலோரிகளுக்கு இந்த எண்ணெய்களே பெரும்பாலும் காரணம்” என்கிறது த லான்செட். அதோடு, சர்க்கரையை குறைந்த விலையில் ஏற்றுமதி செய்ய அரசின் விவசாய மற்றும் வாணிக முறைமைகள் அனுமதிக்கின்றன. இதனால், உணவு பொருட்களை அதிக ருசியாக்குவதற்கு மலிவான ஒரு பொருளும் உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கிறது. இது ஒருபுறமிருக்க, தொழில்நுட்பத்தின் வரவால் அநேக துறைகளில் உடலை வளைத்து வேலை செய்வது குறைவதாலும் சக்தியை குறைவாக பயன்படுத்துவதாலும் கிலோ கணக்கில் எடை மெல்லமெல்ல ஏறுகிறது. அவ்வாறு குண்டாவதன் காரணமாக சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம், இதய இரத்தக்குழாய்கள் சம்பந்தப்பட்ட தீராத நோய்கள் தாக்க வாய்ப்பிருக்கிறது; இதுவே, உணவு மற்றும் உடல்நல நிபுணர்களின் கவலை. (g03 1/8)

உலகிலுள்ள பார்வையற்றோரில் 25 சதம் இந்தியாவில்

“பார்வையற்ற 1.2 கோடி பேரை குடிவைத்திருக்கும் அவல நிலை இந்தியாவுக்கே. உலகம் முழுவதிலும் உள்ள பார்வையற்றவர்களின் எண்ணிக்கையில் இவர்கள் 25 சதவீதத்தினர்” என்பதாக இந்தியாவின் டெக்கன் ஹெரல்ட் அறிக்கை செய்கிறது. “பார்வை சம்பந்தப்பட்ட கோளாறுகளை சரிப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கும் இளைஞரில் பாதிக்கும் அதிகமானோருக்கு அப்படியொரு பிரச்சினை இருப்பதே தெரிவதில்லை” என இந்தியாவெங்கும் 40-⁠க்கும் மேற்பட்ட நகரங்களிலுள்ள கல்லூரிகளிலும் பள்ளிகளிலுமிருந்து சேகரித்த தகவல் அடிப்படையில் யூத் விஷன் இன்டியா, 2002-⁠ன் அறிக்கை ஒன்று மேலுமாக தெரிவித்தது. இந்த கண்டுபிடிப்புகளின்படி, ஒளிவிலகல் குறைகளும் கண் புரை நோயுமே இந்த நாட்டில் பெரும்பாலான கண் பிரச்சினைகளுக்கு காரணம். இவை சரிசெய்ய முடிந்த குறைகளே. “பிரச்சினையை அறியாமல் இருப்பதும் போதுமான கண் மருத்துவர்கள் இல்லாதிருப்பதுமே” இந்தியாவின் பிரச்சினைக்கு முக்கிய காரணங்கள் என்பதாக அந்த செய்தித்தாள் கட்டுரை குறிப்பிட்டது. அது மேலுமாக சொன்னது: “உலக சுகாதார நிறுவனம் 40,000 கண் மருத்துவர்கள் அவசியம் என பரிந்துரை செய்திருக்குமிடத்து, இந்தியாவில் 5,000 பேர் மட்டுமே உள்ளனர்.” (g03 1/8)