Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏமாற்றுவதில் என்ன தப்பு?

ஏமாற்றுவதில் என்ன தப்பு?

இளைஞர் கேட்கின்றனர் . . .

ஏமாற்றுவதில் என்ன தப்பு?

“ஏமாத்துவது தப்புன்னு எல்லாருக்கும் தெரியும், ஆனா ஏமாத்துவது ரொம்ப ஈஸி.”​—17 வயது ஜிம்மி.

பரீட்சை எழுதும்போது பக்கத்திலுள்ள மாணவருடைய பேப்பரை ஓரக்கண்ணால் பார்த்து காப்பியடிக்கும் ஆசை உங்களுக்கு எப்பொழுதாவது வந்திருக்கிறதா? இப்படிப்பட்ட ஆசை உங்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் வந்திருக்கிறது. தன் சக மாணவர்கள் பலர் இதை கொஞ்சம்கூட பயமில்லாமல் செய்கிறார்கள் என 12-வது வகுப்பில் படிக்கும் ஜெனா குறிப்பிடுகிறாள். “காப்பியடித்ததை அவர்கள் ரொம்பத்தான் பீத்திக்கொள்கிறார்கள். நீங்கள் காப்பியடிக்கவில்லையென்றால், உங்களை ஏதோ வினோதமானவர்களாக பார்க்கிறார்கள்!” என அவள் கூறுகிறாள்.

வகுப்பில் முதன்மையாக திகழும் டீனேஜ் மாணவர்களில் 80 சதவீதத்தினர் ஏமாற்றியதை ஒத்துக்கொண்டனர் என்றும், “சிறந்த மதிப்பெண் பெற்ற” இவர்களில் 95 சதவீதத்தினர் ஆசிரியர்களிடம் பிடிபடவே இல்லை என்றும் ஓர் ஐ.மா. சுற்றாய்வு கூறுகிறது. நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களில் 20,000-⁠க்கும் அதிகமானோரை வைத்து சுற்றாய்வு நடத்தியபின், ஜோசப்சன் நன்னெறி நிறுவனம் இந்த முடிவுக்கு வந்தது: “நேர்மை, உண்மைத்தன்மை போன்ற விஷயங்களில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே போகிறது.” ஏமாற்றும் பழக்கம் ஊடுருவிப் பரவியிருப்பதைப் பார்த்து ஆசிரியர்கள் மலைக்கிறார்கள்! “ஏமாற்றாதவர்கள் இன்றைக்கு சிறுபான்மையினராகத்தான் இருக்கிறார்கள்” என்று ஆதங்கப்படுகிறார் கேரி ஜே. நீல்ஸ் என்ற பள்ளி இயக்குநர்.

பள்ளிக்கூட பாடத்தைப் பொறுத்தவரை தங்களுடைய பிள்ளைகள் ஒழுங்காக நடந்துகொள்வதையே பெற்றோர் பெரும்பாலோர் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இளைஞர்கள் அநேகர் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு தங்களுடைய நேர்மையை கெடுத்துக்கொள்வது வருந்தத்தக்கது. அவர்கள் பயன்படுத்தும் புதுப் புது முறைகள் யாவை? ஏன் சிலர் ஏமாற்றுகிறார்கள்? இந்தப் பழக்கத்தை நீங்கள் ஏன் தவிர்க்க வேண்டும்?

ஏமாற்றுவதில் உயர் தொழில்நுட்பம்

ஏமாற்றுவதில் கில்லாடிகளாக இருப்பவர்கள் அநேக தந்திரமான முறைகளைப் பயன்படுத்துகிறார்கள். சொல்லப்போனால், இன்றைய ‘ஹை-டெக்’ சூழ்ச்சி முறைகளைப் பார்த்தால், வீட்டுப் பாடத்தை காப்பியடிப்பதோ ‘பிட்’ அடிப்பதோ எல்லாம் ஒன்றுமே இல்லை. பேஜர்கள் மூலமாக பதில்கள் அனுப்பப்படுகின்றன; “எக்ஸ்ட்ரா” தகவல்களைக் கொண்ட கேல்குலேட்டர்கள் இருக்கின்றன; டிரெஸ்ஸுக்குள் ‘மினி’ கேமராக்களை பதுக்கி வைத்துக்கொண்டு மற்றவர்களுக்கு கேள்விகளை அனுப்பி பதில்களை வரவழைக்கும் முறைகள்; பக்கத்திலுள்ள மாணவர்களுக்கு அகச்சிவப்பு கதிர்கள் மூலம் விடைகளைப் பரப்பும் முறைகள்; எந்தப் பாடமாக இருந்தாலும்சரி, எல்லாவற்றிற்கும் இன்டர்நெட்டில் விடைத் தாள்கள் என எக்கச்சக்கமான முறைகள் இருக்கின்றன!

அதிர்ச்சியூட்டும் இந்தப் போக்கை அணைபோட்டு நிறுத்துவதற்கு கல்வியாளர்கள் முயற்சி செய்கிறார்கள், ஆனால் இது சாமானியமான காரியம் அல்ல. ஏனென்றால் எல்லா மாணவர்களும்​—⁠அல்லது ஆசிரியர்களும்​—⁠எது ஏமாற்று வேலை என்பதில் மாறுபட்ட கருத்துடையவர்களாக இருக்கிறார்கள். உதாரணமாக, மாணவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து ஒரு ‘புராஜெக்ட்’ செய்கையில், எது நேர்மை எது நேர்மையின்மை என்பதற்கு இடையேயுள்ள கோடு தெளிவாக தெரிவதில்லை. கூட்டாக சேர்ந்து செய்யும் அத்தகைய முயற்சியை தங்களுக்கு சாதகமாய் பயன்படுத்திக்கொண்டு எல்லா வேலையையும் மற்றவர்கள் தலையில் கட்டிவிடுகிறவர்களும் இருக்கிறார்கள். “இந்த மாணவர்களில் சிலர் ரொம்ப சோம்பேறியாக இருக்கிறார்கள்​—⁠அவர்கள் ஒன்றுமே செய்வதில்லை! ஆனாலும், கடைசியில் அவர்களுக்கும் மற்றவர்களைப் போலவே ஒரே மாதிரியான மதிப்பெண் கிடைத்து விடுகிறது. இதுவும்கூட ‘சீட்டிங்’தான்!” என கல்லூரி மாணவன் யூஜி கூறுகிறான்.

ஏன் ஏமாற்றுகிறார்கள்?

ஏன் மாணவர்கள் பலர் ஏமாற்றுகிறார்கள் என்பதற்கு முக்கிய காரணம் அவர்கள் பரீட்சைக்கு சரியாக தயாரிப்பதில்லை என ஒரு சுற்றாய்வு கண்டுபிடித்தது. வேறுசில மாணவர்களோ, பள்ளியில் போட்டி மனப்பான்மை நிலவுவதால் அல்லது பெற்றோர்கள் தங்களிடம் ரொம்ப எதிர்பார்ப்பதால் ஏமாற்றுவதைத் தவிர வேறு வழியே இல்லை என்ற முடிவுக்கு வருகிறார்கள். “என்னுடைய அப்பா அம்மாவுக்கு ‘ரேங்க்’தான் முக்கியம்” என 13 வயது சாம் சொல்கிறான். “‘கணக்குப் பரீட்சையில் எவ்வளவு மார்க் வாங்கினாய்? இங்லீஷ் பரீட்சையில் எவ்வளவு மார்க் வாங்கினாய்?’ என துளைத்தெடுக்கிறார்கள். அது எனக்கு கொஞ்சங்கூட பிடிக்கல!”

இதனால், நல்ல ‘ரேங்க்’ வாங்க வேண்டுமென்று சதா தொல்லைபடுத்தப்படுவது ஏமாற்றுவதற்கு சிலரை வழிநடத்துகிறது. அமெரிக்க டீனேஜர்களின் அந்தரங்க வாழ்க்கை என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “நல்ல ரேங்க் வாங்க வேண்டுமென ஓயாமல் நச்சரிக்கப்படுவதால், படிப்பதில் கிடைக்கும் திருப்தியும் சுகமும் இல்லாமல் இந்த சமுதாயம் சமநிலை இழந்து தவிக்கிறது. இதனால் சிலசமயங்களில் நேர்மையை விட்டுக்கொடுக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிடுகிறது.” மாணவர்கள் அநேகர் இதை ஒத்துக்கொள்கிறார்கள். ஒரு பரீட்சையில் ஃபெயிலாவதைக்கூட எவரும் விரும்புவதில்லையே. அப்படியிருக்க முழு கோர்ஸில் தோற்றுப்போக எப்படி விரும்புவார்கள். “சிலர் ஃபெயிலாகி விடுவோமோன்னு ரொம்பவே பயந்துக்கிறாங்க. அவங்களுக்கு பதில் தெரிந்தாலும், சரியான பதிலைத்தான் எழுதியிருக்கிறோமா என்பதை சரிபார்த்துக் கொள்வதற்காக ஏமாத்துறாங்க” என ஜிம்மி என்ற உயர்நிலைப் பள்ளி மாணவன் ஒருவன் கூறுகிறான்.

அநேகர் நேர்மையை காற்றில் பறக்கவிட்டு விடுவதால் ஏமாற்றுவது தீங்கற்றதாக தோன்றலாம். அது சிலசமயங்களில் ரொம்ப வசதியாகவும் தெரியலாம். “என்னுடைய வகுப்பில் படிக்கும் ஒரு பையன் நேற்றைக்கு பரீட்சையில் காப்பியடித்ததை நான் பார்த்தேன். டீச்சர் இன்னைக்கு பரீட்சை பேப்பரை எங்களுக்குக் கொடுத்தபோது அவன் என்னைவிட நிறைய மார்க் வாங்கியிருந்தான்” என 17 வயது கிரெக் கூறுகிறான். சகாக்கள் மத்தியில் ஏமாற்றுவது சகஜமாக இருப்பதால் அநேகரை அந்தப் பழக்கம் தொற்றிக் கொள்கிறது. “‘மற்றவர்கள் செய்தால் நானும் அதை செய்ய வேண்டும்’ என சில மாணவர்கள் நினைக்கிறார்கள்” என யூஜி கூறுகிறான். ஆனால் இது சரியா?

வஞ்சகமாக அடிமையாக்கும் ஒரு பழக்கம்

ஏமாற்றுவதையும் திருடுவதையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அநேகர் திருடுவதால் அது சரியென ஆகிவிடுமா? ‘நிச்சயமாகவே இல்லை’ என நீங்கள் சொல்லலாம்​—⁠முக்கியமாக திருட்டுப் போனது உங்களுடைய பணமாக இருந்தால்! ஏமாற்றும்போது, நாம் பெற தகுதியில்லாத ஒன்றிற்கு பாராட்டை பெற்றுக்கொள்கிறோம்​—⁠ஒருவேளை நேர்மையாக நடப்பவர்களை நமக்கு சாதகமாகவும் பயன்படுத்திக் கொள்கிறோம். (எபேசியர் 4:28) “அது நியாயமல்ல” என சமீபத்தில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த டாமி கூறுகிறான். “உங்களுக்கு உண்மையில் தெரியாத ஒரு பாடத்தை தெரியும் என கூறினால் நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்.” இது சம்பந்தமாக பைபிளின் கருத்தை கொலோசெயர் 3:9 தெளிவாக சுட்டிக் காட்டுகிறது: “ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்.”

ஏமாற்றும் பழக்கம் மீளமுடியாத அளவுக்கு நம்மை ஓர் அடிமை ஆக்கிவிடலாம். “பாஸாவதற்கு படிக்கவே தேவையில்லன்னு காப்பியடிப்பவர்களுக்கு நல்லா தெரியும். அதனால் காப்பியடிப்பதையே நம்பியிருக்கிறார்கள். ஆனா சொந்த காலில் நிற்க வேண்டிய சூழ்நிலை வரும்போதோ என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசைகிறார்கள்” என ஜெனா கூறுகிறாள்.

“மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்” என கலாத்தியர் 6:7-⁠ல் பதிவு செய்யப்பட்டுள்ள நியமம் எவ்வளவு உண்மை என்பது புலனாகிறது. குறுகுறுக்கும் மனசாட்சி, நண்பர்களின் நம்பிக்கையை இழந்துவிடுதல், கல்வி கற்கும் முறையை ஒதுக்கித் தள்ளிவிடுவதால் கற்பதில் திறமையிழந்து விடுதல் ஆகியவை ஏமாற்றுவதால் வரும் பின்விளைவுகள். புற்றுநோய் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக தொற்றிப் பரவுகிறதோ அதேபோல ஏமாற்றும் இந்தப் பழக்கமும் வாழ்க்கையில் மற்ற அம்சங்களைப் பாதித்து, மதிப்புமிக்க உங்களுடைய உறவுகளையும் அழித்துவிடலாம். எல்லாவற்றையும்விட, கடவுளுடன் கொண்டுள்ள உங்களுடைய உறவை அது பாதிக்கும், ஏனென்றால் ஏமாற்றுவது அவருக்குப் பிடிக்கவே பிடிக்காது.​—நீதிமொழிகள் 11:⁠1.

ஏமாற்றுவதையே தொழிலாக கொண்டிருப்பவர்கள் உண்மையில் தங்களைத்தான் ஏமாற்றிக் கொள்கிறார்கள். (நீதிமொழிகள் 12:19) “நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோம்” என்று சொன்ன பூர்வ எருசலேம் நகர ஊழல்மிகு ஆட்சியாளர்களுடைய செயல்களைப் போலவே இவர்களுடைய செயல்களும் இருக்கின்றன. (ஏசாயா 28:15) ஆனால் ஏமாற்றுபவர் தன்னுடைய செயல்களை கடவுளிடமிருந்து மறைக்க முடியாது.​—எபிரெயர் 4:13.

ஏமாற்றாதீர்கள்!

பெரும்பாலான சந்தர்ப்பத்தில், ஏமாற்றுவதற்காக இளைஞர்கள் பெரும் முயற்சி எடுக்கிறார்கள், நூதனமான முறைகளைக் கையாளுகிறார்கள்; ஆனால் இந்த திறமைகளையெல்லாம் நேர்மையாக படித்து முன்னேற பயன்படுத்தினால் அது அவர்களுக்கு அதிக பிரயோஜனமாய் இருக்கும். “ஏமாற்றுவதற்கு எடுக்கும் அதே முயற்சியை கற்றுக்கொள்வதற்கு எடுத்தால், அவர்கள் பெரும்பாலும் நல்ல மார்க் வாங்கலாம்” என 18-வயது அபி சொல்கிறாள்.

ஏமாற்ற வேண்டுமென்ற ஆசை உங்களை சுண்டியிழுக்கலாம் என்பது உண்மைதான். ஆனால் ஒழுக்க ரீதியிலான இந்தப் படுகுழியை நீங்கள் தவிர்க்க வேண்டும். (நீதிமொழிகள் 2:10-15) எப்படி தவிர்க்கலாம்? முதலாவதாக, நீங்கள் ஏன் பள்ளிக்குச் செல்கிறீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். படிப்பதற்குத்தான் செல்கிறீர்கள். உங்களுக்கு கொஞ்சங்கூட பயன்தராத அநேக விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் என்ன பிரயோஜனம் என்பது போல உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் ஏமாற்றுவதன் மூலம் குறுக்கு வழியில் சாதிக்க முயன்றால், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் திறமையும் அறிவை நடைமுறையில் பயன்படுத்தும் திறமையும் உங்களுக்கு குறைவுபடும். முயற்சியின்றி ஒருபோதும் எதைப் பற்றியும் சரியான புரிந்துகொள்ளுதலை பெற முடியாது, அதைப் பெறுவதற்கு ஒருவர் ஏதாவது செய்தே ஆக வேண்டும். “சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு” என பைபிள் கூறுகிறது. (நீதிமொழிகள் 23:23) ஆம், படிப்பதையும் தயாரிப்பதையும் அதிக பொறுப்புடன் எடுத்துக்கொள்ள வேண்டும். “பரீட்சைக்கு முன்கூட்டியே படிக்க வேண்டும். அப்போதுதான் கேள்விக்கு பதில் தெரியுமென்ற நம்பிக்கை இருக்கும்” என ஜிம்மி கூறுகிறான்.

உண்மைதான், சிலசமயங்களில் எல்லா பதில்களும் உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், அதனால் உங்களுக்கு மார்க் குறைவாக கிடைக்கலாம். இருந்தாலும், உங்களுடைய கொள்கையை விட்டுக்கொடுக்காமல் இருந்தால், நீங்கள் முன்னேறுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.​—நீதிமொழிகள் 21:5.

முன்பு குறிப்பிடப்பட்ட யூஜி ஒரு யெகோவாவின் சாட்சி. பேப்பரை காட்டும்படி வகுப்பு தோழர்கள் வற்புறுத்தும்போது என்ன செய்கிறான் என்பதை யூஜி கூறுகிறான்: “முதல் காரியமாக, நான் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதை மற்றவர்களுக்கு சொல்லிவிடுவேன். அது எனக்கு ரொம்ப உதவியாக இருந்தது, ஏனென்றால் யெகோவாவின் சாட்சிகள் நேர்மையான ஜனங்கள் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். பரீட்சையில் ஏதாவது கேள்விக்கு பதிலை காட்டும்படி யாராவது கேட்டால், நான் உடனே மறுத்துவிடுவேன். நான் ஏன் காட்டவில்லை என்பதை பிற்பாடு விளக்குவேன்.”

‘நாங்கள் எல்லாவற்றிலும் யோக்கியமாய் நடக்க விரும்புகிறோம்’ என்று எபிரெயர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதியதையே யூஜியும் ஆமோதிக்கிறான். (எபிரெயர் 13:18) ஏமாற்றும் பழக்கத்திற்கு நீங்கள் அடிபணிந்துவிடாமல் நேர்மையாக நடந்து உயர்ந்த தராதரங்களைப் பின்பற்றும்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்ணுக்கு உண்மையான மதிப்பு கிடைக்கிறது. பள்ளியிலிருந்து உங்களுடைய பெற்றோருக்கு மிகச் சிறந்த பரிசைக் கொண்டு வருகிறீர்கள், அதாவது கிறிஸ்தவ உத்தமத்திற்கு சிறந்த அத்தாட்சியை காட்டுகிறீர்கள். (3 யோவான் 4) அதோடு, சுத்தமான மனசாட்சியை காத்துக்கொள்கிறீர்கள், யெகோவா தேவனுடைய இருதயத்தை சந்தோஷப்படுத்துவதால் வரும் ஆனந்தத்தையும் பெறுகிறீர்கள்.​—நீதிமொழிகள் 27:11.

ஆகவே ஏமாற்றுவது இன்றைக்கு எவ்வளவு சகஜமாக இருந்தாலும் அதை விட்டொழியுங்கள்! அப்படி செய்யும்போது, நீங்கள் மற்றவர்களுடன், மிக முக்கியமாக, சத்தியத்தின் தேவனாகிய யெகோவாவுடன் நல்ல உறவை காத்துக்கொள்கிறீர்கள்.​—சங்கீதம் 11:7; 31:15. (g03 1/22)

[பக்கம் 14-ன் சிறு குறிப்பு]

ஏமாற்றுகிறவர் உண்மையில் திருடுகிறார் என்பதை உணரத் தவறுகிறார்

[பக்கம் 14-ன் சிறு குறிப்பு]

ஏமாற்றுவது நேர்மையற்ற பெரும் பாவங்களுக்கு வழிநடத்துகிறது

[பக்கம் 15-ன் சிறு குறிப்பு]

ஏமாற்றுகிறவர் தன்னுடைய செயல்களை கடவுளிடமிருந்து மறைக்க முடியாது

[பக்கம் 15-ன் படம்]

பரீட்சைக்கு முன்பு நன்றாகப் படிப்பது நம்பிக்கையை கொடுக்கும்