Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்கள் ஏழைகளாக இருக்க வேண்டுமா?

கிறிஸ்தவர்கள் ஏழைகளாக இருக்க வேண்டுமா?

பைபிளின் கருத்து

கிறிஸ்தவர்கள் ஏழைகளாக இருக்க வேண்டுமா?

பணக்கார அதிபதி ஒருவரிடம் இயேசு என்ன சொன்னார் தெரியுமா? உடைமைகளையெல்லாம் விற்று ஏழைகளுக்கு கொடுத்து விடும்படி சொன்னார். அந்த இளம் அதிபதியோ “மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால்” இயேசு சொன்னதைக் கேட்டு மனமொடிந்து, துக்கத்தோடு போய்விட்டான் என பைபிள் சொல்கிறது. அதன் பிறகு இயேசு தமது சீஷரை நோக்கி “ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது” என்று சொன்னார். அதுமட்டுமல்ல, “ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும்” என்றும் சொன்னார்.​—மாற்கு 10:21-23; மத்தேயு 19:⁠24.

இயேசு எதை அர்த்தப்படுத்தினார்? செல்வமும் உண்மை வணக்கமும் ஒத்துப்போகாதா? கிறிஸ்தவர்கள் காசு வைத்திருந்தால் குற்றமுள்ளவர்கள்போல் உணர வேண்டுமா? அவர்கள் சொத்து சுகங்களையெல்லாம் துறந்து வாழ வேண்டுமென கடவுள் எதிர்பார்க்கிறாரா?

‘எல்லா மனுஷரையும்’ கடவுள் ஏற்றுக்கொள்கிறார்

வறுமையில் வாட வேண்டுமென கடவுள் பூர்வ இஸ்ரவேலர்களுக்குக் கட்டளையிடவில்லை. இதை சிந்தித்துப் பாருங்கள்: மக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் குடியேறிய பின்பு, தாங்களும் தங்கள் குடும்பமும் பிழைப்பதற்காக விவசாயமும் வியாபாரமும் செய்தனர். பொருளாதாரம், வானிலை, உடல்நலம், வியாபார உத்தி போன்றவற்றை பொறுத்து அவர்களது முயற்சிகளுக்கு பலன் கிடைத்தது. பணக்கஷ்டத்தால் ஏழைகளாகிவிடும் எவருக்கும் பரிவு காட்ட வேண்டுமென நியாயப்பிரமாணம் இஸ்ரவேலர்களுக்கு கட்டளையிட்டது. (லேவியராகமம் 25:35-40) அதேசமயத்தில் சிலர் செல்வந்தர்களானதும் உண்மை. உதாரணத்திற்கு விசுவாசத்துடனிருந்த உத்தமரான போவாஸ் ‘மிகுந்த ஆஸ்திக்காரன்’ என விவரிக்கப்படுகிறார்; இவர் பிற்பாடு இயேசு கிறிஸ்துவின் மூதாதை ஆனார்.​—ரூத் 2:⁠1.

இயேசு வாழ்ந்த சமயத்திலும் நிலைமை அவ்வாறுதான் இருந்தது. இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட அந்தப் பணக்கார அதிபதியிடம் இயேசு பேசியபோது, அவர் துறவறத்தை ஊக்குவிக்க நினைக்கவில்லை. மாறாக ஒரு முக்கியமான பாடத்தைப் புகட்டினார். மனித கண்ணோட்டத்தில், பணக்காரர்கள் மனத்தாழ்மையைக் காட்டுவதும் இரட்சிப்பிற்கான கடவுளுடைய ஏற்பாட்டை ஏற்றுக்கொள்வதும் முடியாத காரியமாக தோன்றலாம். இருந்தாலும், “மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம்கூடும்” என இயேசு குறிப்பிட்டார்.​—மத்தேயு 19:⁠26.

முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையில் இருந்தவர்கள் ‘எல்லா மனுஷரையும்’ வரவேற்றனர். (1 தீமோத்தேயு 2:4) அவர்களில் சிலர் செல்வந்தர்கள், இன்னும் சிலர் போதிய வசதியோடு வாழ்ந்தவர்கள், மற்ற அநேகரோ ஏழைகள். சிலர் கிறிஸ்தவர்களாவதற்கு முன்பே சொத்துக்களை சேர்த்து வைத்திருந்திருக்கலாம். மற்றவர்கள், சூழ்நிலை வாய்த்ததாலும் புத்திசாலித்தனமான வியாபார உத்திகளாலும் பிற்பாடு பணக்காரர்களாக ஆகியிருக்கலாம்.

அதேபோல் இன்றும், பலதரப்பட்ட பொருளாதார சூழ்நிலைகளில் இருப்போர் கிறிஸ்தவ சபையில் உண்டு. அவர்கள் அனைவரும் பண விஷயத்தில் பைபிள் தரும் அறிவுரைகளை பின்பற்ற முயற்சி செய்கிறார்கள். ஏனென்றால் பண ஆசை எவருக்கும் வரலாம். பணக்கார அதிபதியின் விஷயத்தில் இயேசு புகட்டிய பாடம், பணமும் பொருளும் எந்தளவு ஒருவரை ஆட்டிவைக்கலாம் என்பதைக் குறித்து ஒவ்வொரு கிறிஸ்தவரையும் எச்சரிக்கிறது.​—மாற்கு 4:⁠18.

செல்வந்தர்களுக்கு ஓர் எச்சரிப்பு

செல்வம் சேர்க்கக்கூடாதென பைபிள் சொல்வதில்லை, ஆனால் பணப் பித்தாக இருப்பதைத்தான் கண்டனம் செய்கிறது. “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது” என பைபிள் எழுத்தாளராகிய பவுல் குறிப்பிட்டார். பணக்காரராகும் ஒரே குறியில், ஆவிக்குரிய காரியங்களில் நாட்டம் இழந்திருக்கும் சிலர் “விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்” என அவர் எழுதினார்.​—1 தீமோத்தேயு 6:⁠10.

பணக்காரர்களுக்கென்றே குறிப்பாக சில அறிவுரைகளை பவுல் கொடுத்தார். “இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும், . . . அவர்களுக்குக் கட்டளையிடு” என அவர் சொன்னார். (1 தீமோத்தேயு 6:17, 19) பணக்காரர்கள் செருக்கடைந்து மற்றவர்களைவிட உசத்தியானவர்கள்போல் நடந்துகொள்ளும் ஆபத்து இருக்கிறது என பவுலின் வார்த்தைகள் காட்டுகின்றன. அதுமட்டுமல்ல, பணம் உண்மையான பாதுகாப்பைத் தரும் என்ற நினைப்பும் அவர்களுக்கு எளிதில் வரலாம்; ஆனால் கடவுளால் மட்டுமே அப்படிப்பட்ட பாதுகாப்பைத் தர முடியும்.

வசதி படைத்த கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட ஆபத்துக்களில் சிக்கிக்கொள்ளாதிருக்க ‘நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகலாம்.’ ‘தாராளமாக கொடுப்பதும், உதார குணமுள்ளவர்களாக இருப்பதும்’ இந்த நற்கிரியைகளில் அடங்கும்; அதாவது தேவையில் இருப்பவர்களுக்கு தாராளமாக உதவ வேண்டும். (1 தீமோத்தேயு 6:18) கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை அறிவிப்பதே இன்று உண்மை கிறிஸ்தவர்களுக்கு முக்கியமான வேலை. ஆகவே கிறிஸ்தவர்கள் பணக்காரர்களாக இருந்தாலும் சரி ஏழைகளாக இருந்தாலும் சரி, இந்த வேலைக்காகவும் தங்கள் வளங்களில் கொஞ்சத்தை பயன்படுத்தலாம். இப்படிப்பட்ட தாராள குணம், பொருள் உடைமைகளை சரியான கண்கொண்டு பார்க்கிறோம் என்பதற்கு அடையாளம். அதோடு இக்குணம், யெகோவா தேவன் மற்றும் இயேசு கிறிஸ்துவின் பிரியத்தை சம்பாதித்துக் கொடுக்கும். உற்சாகத்தோடு கொடுப்பவர்களை அவர்கள் நேசிக்கிறார்கள்.​—மத்தேயு 24:14; லூக்கா 16:9; 2 கொரிந்தியர் 9:⁠7.

அதிமுக்கியமான காரியங்கள்

கிறிஸ்தவர்கள் ஏழைகளாக இருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. அதேசமயத்தில் அவர்கள் ‘செல்வந்தர்களாகும் ஒரே குறியோடு’ இருப்பதும் சரியல்ல. (1 தீமோத்தேயு 6:9, NW) ஓரளவு வசதியுடன் வாழ்வதற்காக மட்டுமே அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள். அவர்கள் வாழும் இடத்தின் பொருளாதார நிலைமையைப் பொறுத்தும் இன்னும் பல விஷயங்களைப் பொறுத்தும் அவர்களது உழைப்புக்குக் கிடைக்கும் பலன் வேறுபடலாம்.​—பிரசங்கி 11:⁠6.

பொருளாதார சூழ்நிலை எப்படிப்பட்டதாய் இருந்தாலும், “அதிமுக்கியமான காரியங்களை நிச்சயப்படுத்திக்கொள்ள” கிறிஸ்தவர்கள் முயல வேண்டும். (பிலிப்பியர் 1:10, NW) ஆவிக்குரிய மதிப்பீடுகளுக்கு முதலிடம் தருவதன் மூலம் அவர்கள் ‘நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக [சேர்த்து] வைக்கிறார்கள்.’​—1 தீமோத்தேயு 6:⁠19. (g03 1/8)