Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்களா?

நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்களா?

நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்களா?

ஒவ்வொரு நாளும் எலிசபெத் வேலைக்கு வரும் போது அவளுடைய ஒவ்வொரு அசைவுகளையும் கேமரா அப்படியே படம் பிடிக்கிறது. அவள் அந்தக் கட்டடத்திற்குள் காலடி வைக்கையில் ஒரு கேமரா அவளுடைய முகத்தை ‘ஸூம்’ செய்கிறது. நாள் முழுக்க இன்னும் பல கேமராக்களும் அவளை சதா கண்காணித்த வண்ணமே இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான பணம் புழங்கும் ஒரு கம்பெனியில் அவள் வேலை பார்ப்பதால்தான் இந்தளவுக்கு கண்காணிக்கப்படுகிறாள்.

வேலை செய்யும்போது தன்னை உன்னிப்பாக கவனிக்க கேமராக்கள் இருப்பது எலிசபெத்துக்கு தெரியும்; அந்த வேலைக்கு சம்மதித்தபோதே அதைப் பற்றி அவளுக்கு விளக்கமாக சொல்லப்பட்டிருந்தது. ஆனால், லட்சக்கணக்கான மற்றவர்களுக்கோ ஒவ்வொரு நாளும் அவர்கள் எந்தளவுக்கு கண்காணிக்கப்படுவார்கள் என்பதைப் பற்றி விளக்கமாக சொல்லப்படுவதில்லை.

கண்காணிக்கும் உலகில் வாழ்க்கை

வேலை செய்யும் இடத்தில் நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்களா? உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கான பணியாளர்கள் வேலை செய்கையில் அவர்கள் பயன்படுத்தும் இன்டர்நெட்டும் ஈ-மெயிலும் கண்காணிக்கப்படுகிறது. அமெரிக்க மேலாண்மை கழகத்தின் 2001-⁠ம் ஆண்டுக்கான வருடாந்தர ஆய்வு கண்டறிந்திருக்கிறபடி, “ஐ.மா.-வின் பெரிய பெரிய நிறுவனங்களில் கிட்டத்தட்ட முக்கால்வாசி (73.5%) நிறுவனங்கள் . . . போன் கால், ஈ-மெயில், இன்டர்நெட் தொடர்புகள், கம்ப்யூட்டர் ஃபைல்கள் என தங்கள் பணியாளர்களின் பேச்சுத்தொடர்புகளையும் நடவடிக்கைகளையும் பதிவு செய்து அவற்றை ஆய்வு செய்கின்றன.”

கண்காணிப்பு கருவிகளுக்காக அரசாங்கங்கள் ஏகப்பட்ட பணத்தை செலவழிக்கின்றன. ஜூலை 11, 2001-⁠ல் ஐரோப்பிய பார்லிமென்டுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் முடிவில், “அஐமா, கிரேட் பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியுஜிலாந்து ஆகிய நாடுகளில் . . . பேச்சுத்தொடர்புகளை குறுக்கிட்டு அறிந்து கொள்ளும் ஓர் உலகளாவிய திட்டம் ஒத்துழைப்புடன் செயல்படுவதாக” குறிப்பிடப்பட்டிருந்தது. செயற்கைக்கோளிலிருந்து ரேடியோ சமிக்ஞைகளை பெற்றுக்கொள்ளும் நிலையங்களின் உலகளாவிய நெட்வொர்க், அதாவது ECHELON எனப்படும் திட்டம் மூலமாக செயற்கைக்கோள் ரிலே செய்யும் தொலைபேசி, பேக்ஸ், இன்டர்நெட் மற்றும் ஈ-மெயில் செய்திகளை அந்த அரசாங்கங்களால் உளவறிந்து ஆய்வு செய்ய முடிகிறதாம். இத்திட்டத்தை அரசாங்கங்கள் பயன்படுத்தும்போது, “குறிப்பிட்ட சில பேக்ஸ்களையும், ஈ-மெயில்களையும் தனியாக பிரித்தெடுக்க முடியும்; மேலும், ஒரு குறிப்பிட்ட குரலை அடையாளம் கண்டுகொள்ளும் வண்ணம் அத்திட்டத்தில் புரோக்ராம் செய்யப்பட்டிருந்தால், அவர்கள் பேசும் போன் கால்களையும் பிரித்தெடுத்து கேட்க முடியும்” என ஆஸ்ட்ரேலியன் செய்தித்தாள் கூறுகிறது.

சட்டத்தை அமல்படுத்தும் துறைகளும்கூட கண்காணிக்கும் வேலையை செய்வதற்கு நவீன தொழில்நுட்பங்களையே சார்ந்திருக்கின்றன. ஐக்கிய மாகாணங்களில், கார்னிவோர் என்ற ஒரு தொழில்நுட்பத்தை துப்பறியும் நிபுணர்கள் பயன்படுத்துவதாகவும், “ஈ-மெயில்களையும், கம்ப்யூட்டர்களில் உடனுக்குடன் அனுப்பப்படும் தகவல்களையும், டிஜிட்டல் போன் கால்களையும் இரகசியமாக அறிந்துகொள்வதற்கு அவர்கள் அதைப் பயன்படுத்துவதாகவும்” பிஸினஸ்வீக் அறிவிக்கிறது. அதே நேரத்தில், சட்ட அமலாக்க துறைகள், “போன்களையும், பேக்ஸ் மெஷின்களையும், இன்டர்நெட்டையும் பயன்படுத்துகிற ஆயிரக்கணக்கானோரை இரகசியமாக கண்காணிப்பதற்கு” பிரிட்டனின் புதிய சட்டம் அனுமதியளிக்கும் என பிபிசி செய்தி அறிக்கை செய்கிறது.

மறைந்திருக்கும் கேமராக்களும் விலாவாரியான தகவல் தொகுப்புகளும்

ஒரு நபர் போன், பேக்ஸ் அல்லது ஈ-மெயில் மூலம் தொடர்புகொள்ளாவிட்டாலும் கண்காணிப்பிலிருந்து அவர் தப்ப முடியாது. ஆஸ்திரேலியாவில் நியூ செளத் வேல்ஸ் மாகாணத்தில் ரயில் போக்குவரத்தை பயன்படுத்துவோரை 5,500 கேமராக்கள் கண்காணிக்கின்றன. அதே மாகாணத்திலுள்ள சுமார் 1,900 அரசு பேருந்துகளிலும் பிரயாணிகளை கண்காணிக்கும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஓர் ஆய்வு குறிப்பிடுகிறபடி, உலகிலேயே பிரிட்டன்தான் 55 பேருக்கு ஒரு கேமரா என்ற கணக்கில் பெருமளவு கண்காணிப்பு கேமராக்களை வைத்திருப்பதாக தெரிகிறது. 1996-⁠ல் பிரிட்டனில் பொது இடங்களை கண்காணிக்கும் கேமராக்கள், 74 நகரங்களில் அல்லது பட்டணங்களில் மட்டுமே இருந்தன. 1999-⁠க்குள் 500 நகரங்களிலும் பட்டணங்களிலும் அத்தகைய கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஒரு குறிப்பிட்ட நபர், விமான நிலையத்திலோ பொது இடத்திலோ இருந்தாலும் அவர் முகத்தை எளிதில் அடையாளம் கண்டுபிடிக்கும் வகையில் புதிய கம்ப்யூட்டர் புரோகிராம்களும் அந்தக் கண்காணிப்பு கேமராக்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இப்போது முன்பைவிட உங்களுக்கு தெரியாமலேயே மிக சுலபமாக உங்களுடைய அந்தரங்க வாழ்க்கையை மற்றவர்கள் உன்னிப்பாக கவனிக்க முடியும். “சரித்திரத்தில் இதுவரை பொது மக்களைப் பற்றிய தகவல்கள் இந்தளவுக்கு சேகரிக்கப்பட்டிருப்பதாக தெரியவில்லை. வளர்ந்த நாடுகளில், ஒரு சாதாரண உழைப்பாளியைப் பற்றிய தகவல்கள் சுமார் 400 தகவல் தொகுப்புகளில் இடம் பெறுகின்றன; அதில் ஒவ்வொரு நபரைப் பற்றியும் பயங்கரமான ஒரு பெரிய புத்தகத்தையே தயாரிப்பதற்கு போதுமான தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன” என மனித உரிமைகள் குழுவான ப்ரைவஸி இன்டர்நேஷனலின் இயக்குநர் சைமன் டேவீஸ் கூறுகிறார்.

உங்களுடைய அந்தரங்கத்தை பாதுகாக்க நீங்கள் என்ன செய்யலாம்? (g03 1/22)