Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மொபைல் போனுக்கு “அடிமை”

மொபைல் போனுக்கு “அடிமை”

மொபைல் போனுக்கு “அடிமை”

ஜப்பானிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

“மொபைல் போன் பிரியர்கள் அதற்கு அடிமையாகிறார்கள்” என ஜப்பானில் வெளியாகும் த டெய்லி யோமியுரி என்ற செய்தித்தாளின் தலைப்புச்செய்தி குறிப்பிட்டது. அடிமையாகிறார்கள் என உண்மையில் சொல்ல முடியுமா? “இளைஞர்கள் மொபைல் போனை தங்கள் உடலின் ஒரு பாகமாகவே கருதுவது போல் தெரிகிறது, போன் கையில் இல்லையென்றால் பதற ஆரம்பிக்கிறார்கள்” என அந்த செய்தித்தாள் விளக்கியது. அநேகர் நேரம் காலம் இல்லாமல் எப்போதும் எல்லா இடங்களிலும் தங்கள் மொபைல் போனை ‘ஆன்’ செய்து வைத்திருக்கிறார்கள்; மற்றவர்களோடு தொடர்புகொள்ள முடியாமல் போய்விடுமோ என்ற பயம்தான் அதற்கு காரணம். “மொபைல் போனில் எந்த செய்திகளும் வரவில்லை என்றால், குடிமுழுகிப்போனது போல் கவலையாக இருப்பார்கள், எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவார்கள், யாருக்குமே தங்களைப் பற்றி கவலை இல்லை என்றும் நினைக்க ஆரம்பிப்பார்கள்.” இப்படிப்பட்ட மனக்குடைச்சலை தவிர்க்கத்தான் மொபைல் போனில் வரும் எல்லா செய்திகளுக்கும் உடனடியாக பதில் அனுப்பி விடுகிறார்கள்; அதுவும் அவ்வளவு அவசரமாக பதில் அனுப்ப பெரும்பாலும் தேவையே இருக்காது.

மொபைல் போன்கள் உபயோகமாக இருப்பதை மறுக்க முடியாது. சொல்லப்போனால் அவசர நேரங்களில் அவை மிகவும் கைகொடுத்திருக்கின்றன. அவற்றை சாதாரணமாக பயன்படுத்துவதிலும் தவறில்லை, ஆனால் மிதமாக பயன்படுத்த வேண்டும். மொபைல் போனுக்கு “அடிமை”யாகிவிட்டால் பேச்சுத்தொடர்பு கொள்ளும் இயல்பான திறமைகள் குன்றிவிடும் என அதிகாரிகள் சிலர் சொல்கின்றனர். மொபைல் போன்களின் காரணமாக, “மற்றவர்களின் முகபாவங்களையும் செயல்களையும் குரல் தொனிகளையும் புரிந்துகொள்ளும் திறமையை பிள்ளைகள் இழந்து வருகிறார்கள். இதனால் பிள்ளைகளின் முரட்டுத்தனம் அதிகரிக்கிறது, மற்றவர்களின் உணர்ச்சிகளை அவர்கள் மதிப்பதும் இல்லை” என ஒசாகாவிலுள்ள ஒரு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கவலை தெரிவிப்பதாக அந்த செய்தித்தாள் குறிப்பிட்டது.

“காலம் போகப் போக பிள்ளைகள் இன்னும் அதிகமாகத்தான் செல் போன்களுக்கு அடிமையாவார்கள் என்று தோன்றுகிறது. இதன் தீமையான விளைவுகளைக் குறைக்க ஒரே வழி, செல் போன்களை உபயோகிப்பதில் பிள்ளைகளுக்கு பெரியவர்கள் நல்ல உதாரணமாக இருப்பதே” என அந்தக் கட்டுரை சொல்லி முடித்தது. (g03 1/8)