மோட்டார் வாகனங்கள் அன்றும் இன்றும்
மோட்டார் வாகனங்கள் அன்றும் இன்றும்
தொன்றுதொட்டே போக்குவரத்தில் மனிதன் ஆர்வம் காட்டி வந்திருக்கிறான். ஆரம்பத்தில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல மிருகங்களையே சார்ந்திருந்தான். ஆனால் பல இடங்களுக்குப் பயணிக்க மேம்பட்ட வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இருந்தது. அதில் முக்கிய அம்சமாக திகழ்ந்தது சக்கரம்; இதனால் குதிரை வண்டிகளையும் மூடுவண்டிகளையும் உருவாக்க முடிந்தது. எனினும், 19-ம் நூற்றாண்டில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டவை கற்பனைக்கு எட்டாத மாற்றத்தை போக்குவரத்தில் ஏற்படுத்தின.
மேம்பட்ட எஞ்சின்கள்
19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிக்கோலஸ் ஆகஸ்ட் ஆட்டோ என்ற ஜெர்மானியர் பெட்ரோலில் ஓடும் நான்கடி சுழற்சி (four-stroke) எஞ்சினை உருவாக்கினார். இது கடைசியில் நீராவியிலும் மின்சாரத்திலும் இயங்கும் எஞ்சின்களுக்கு
விடைகொடுத்தது. ஐரோப்பாவில் மோட்டார் வண்டி தயாரிப்பில் முன்னோடிகளாக திகழ்ந்தவர்கள் ஜெர்மானியர்களான கார்ல் பென்ஸும் காட்லிப் டைம்லரும் ஆவர். 1885-ல், இரண்டடி சுழற்சியுடைய (two-stroke) நிமிடத்துக்கு 250 முறை சுழலும் ஒற்றை சிலிண்டர் எஞ்சின் கொண்ட மூன்று சக்கர காரை பென்ஸ் ஓட்டினார். டைம்லர் 1872 முதற்கொண்டு நிலையாக பொருத்தப்படும் எரிவாயு எஞ்சின்களை வடிவமைத்து வந்தார். பத்துக்கும் அதிக ஆண்டுகளுக்குப் பிறகு வில்ஹெம் மைபாக் என்பவருடன் சேர்ந்து, பெட்ரோலை எரிபொருளாக பயன்படுத்த முடிந்த கார்புரேட்டரின் உதவியுடன் உள்ளெரி எஞ்சினை (internal-combustion engine) அவர் உருவாக்கினார்.சீக்கிரத்திலேயே, நிமிடத்திற்கு 900 முறை சுழலும் எஞ்சினை டைம்லரும் மைபாக்கும் உருவாக்கினார்கள். பின்னர் அவர்கள் இரண்டாவது எஞ்சினை வடிவமைத்து, இதை சைக்கிளில் பொருத்தினார்கள்; 1885, நவம்பர் 10-ம் தேதி அது வெள்ளோட்டத்திற்கு விடப்பட்டது. 1926-ல் டைம்லர் மற்றும் பென்ஸின் தொழில் நிறுவனங்கள் ஒன்றிணைந்து, தங்கள் தயாரிப்புகளை மெர்ஸேடஸ் பென்ஸ் என்ற பெயரில் விற்பனை செய்தன. a இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்த இருவரும் ஒருவரையொருவர் சந்தித்ததே இல்லை.
1890-ல் பிரான்ஸை சேர்ந்த ஏமீல் லவாஸார், ரனே பானர் என்ற இருவர் தங்கள் பட்டறையில் சேஸிஸ்ஸின் நடுவில் மோட்டார் பொருத்தப்பட்ட நான்கு சக்கர வாகனம் ஒன்றைத் தயாரித்தார்கள். மறுவருடத்தில் மோட்டாரை முன்பக்க முனையில் பொருத்தினார்கள்; இது கரடுமுரடான பாதையிலிருந்த தூசியிலிருந்தும் சகதியிலிருந்தும் மோட்டாரை நன்கு பாதுகாத்தது.
மோட்டார் வாகனங்களை எளிதில் கிடைக்கச் செய்தல்
ஆரம்பத்தில் மோட்டார் வாகனங்கள் அதிக விலையுயர்ந்தவையாக இருந்தன; எனவே பெரும்பாலோருக்கு அவை b 20-ம் நூற்றாண்டின் அரிய கார்கள் என்ற ஆங்கில புத்தகத்தின்படி மாடல் டி கார், “அமெரிக்கர்களும், சொல்லப்போனால் உலகிலுள்ள அனைவருமே கார் வாங்கி பயன்படுத்த வழிசெய்தது.”
கைக்கு எட்டாதவையாக ஆயின. 1908-ல் ஹென்றி ஃபோர்டு என்பவர் மாடல் டி வகை காரை சங்கிலிமுறை உற்பத்தியில் (assembly-line) தயாரிக்க ஆரம்பித்தார்; இந்த வகை கார் டின் லிஸி என்ற பெயரில் வலம் வந்தது. இது மோட்டார் வாகன உற்பத்தியில் பெரும் புரட்சியையே ஏற்படுத்திவிட்டது. இது விலை குறைந்தது, பல விதங்களில் பயன்பட்டது, இதை எளிதில் பராமரிக்க முடிந்தது. ஓரளவு நடுத்தர வர்க்கத்தாராலும்கூட வாங்க முடிந்தது.இப்போது, ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, அநேகர் காரை ஆடம்பரப் பொருளாக அல்ல, ஆனால் அவசியமான ஒன்றாக கருதுகிறார்கள். உண்மைதான், ஒரு கிலோமீட்டருக்கும் குறைந்த தூரம் பயணிப்பதற்கும் மக்கள் சிலசமயங்களில் அவற்றைப் பயன்படுத்துவதாக லண்டனில் வெளியாகும் இண்டிப்பென்டன்ட் என்ற தினசரியில் பிரசுரிக்கப்பட்ட ஓர் ஆய்வு காட்டுகிறது.
தொழில் நுட்ப முன்னேற்றங்கள் அதிவேக கார்களுக்கு மட்டுமல்ல, பெரும் பாதுகாப்புமிக்க கார்களுக்கும் வழி செய்திருக்கின்றன. அநேக நாடுகளில், மரணத்தை ஏற்படுத்தும் கோர விபத்துக்களின் எண்ணிக்கை சமீப வருடங்களில் குறைந்திருக்கிறது என்பது உண்மையே. வாடிக்கையாளர் சிலர், காரின் தோற்றத்தை அல்ல, ஆனால் அதின் பாதுகாப்பு அம்சத்தையே முக்கியமானதாக கருதுகிறார்கள். உதாரணமாக, எங்காவது மோதும்போது ஏற்படும் அதிர்ச்சியின் பெரும்பாகத்தை சேஸ்ஸிஸின் சில பகுதிகள் தாங்கிக் கொள்வதற்காக ‘கிரம்ப்பிள் சோன்ஸ்’ (crumple zones) உள்ளன. அந்த சமயத்தில் டிரைவரையும் பிரயாணிகளையும் சுற்றியுள்ள அதிக உறுதியான அமைப்பு, பாதுகாப்பு கூண்டாக மாறிவிடுகிறது. வழுக்கி செல்லும் தரையில் கார் முழுக் கட்டுப்பாட்டுடன் செல்ல ஆண்டி-லாக் பிரேக்குகள் உதவுகின்றன. கார் மோதிவிடுகையில், c
மும்முனைகளில் இணைக்கப்பட்டுள்ள சீட் பெல்ட்டுகள் மார்புக்கும், இடுப்புக்கும் பாதுகாப்பு அளிக்கின்றன; காற்றடைக்கப்பட்ட பைகளோ விபத்தின்போது ஸ்டீயரிங் வளையத்தின்மீது அல்லது டேஷ்போர்டின்மீது தலை மோதிவிடாமல் பார்த்துக் கொள்கின்றன.வாகனம் ஓட்டுகையில் பின்பற்ற வேண்டிய சிறந்த பழக்கங்களுக்கு மாற்றீடு ஏதுமில்லை என்பது உண்மையே. “நாம் முறைப்படி கார்களை ஓட்டவில்லை என்றால் அவற்றிற்கு என்னதான் பாதுகாப்பு வசதி செய்தாலும் பிரயோஜனமில்லை; சில இயற்கை சட்டங்களை நாம் மீறுகையில் பாதுகாப்பை உறுதியளிக்கும் உயர்தர தொழில் நுட்பத்தாலும் நம்மை காப்பாற்ற முடியாது” என மெக்சிகோ நகரில் வெளியாகும் எல் எகோனோமீஸ்டா குறிப்பிடுகிறது.
இன்றைய கார்களில் சில, நடமாடும் வீடுகளைப் போல் உள்ளன. பல கார்களில் காம்பேக்ட் டிஸ்க் பிளேயர், டெலிவிஷன், டெலிஃபோன், வாகனத்தில் முன்னும் பின்னும் சத்தத்தையும் தட்பவெப்பத்தையும் தனித்தனியே கட்டுப்படுத்தும் சாதனங்கள் ஆகியவை உள்ளன. செயற்கை கோளுடன் இணைக்கப்பட்ட குளோபல் பொஸிஷனிங் சிஸ்டம் பொருத்தப்பட்ட கார்களும் உள்ளன; இவை, தாங்கள் போய் சேர வேண்டிய இடத்திற்கு வசதியான பாதையை டிரைவர்கள் கண்டுபிடிக்க உதவுகின்றன. சில சிஸ்டம்கள் சாலையில் எதிர்ப்படும் பிரச்சினைகளைப் பற்றிய தகவலை உடனுக்குடன் அறிவிக்கின்றன. நவீன கருவிகளையும் புத்தம் புதிய மாடல் காரையும் வைத்திருப்பதை அந்தஸ்தின் அடையாளமாக அநேகர் கருதுகிறார்கள்; இந்த மனப்பான்மையை இனம் கண்டுகொள்ளும் தயாரிப்பாளர்களும் விளம்பரதாரர்களும் சக்கென்று அதைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இதுவரை பார்த்தபடி, ஒரு நூற்றாண்டுக்கும் முன்பு மோட்டார் வாகனம் பிறந்ததிலிருந்து இன்று வரை அது பல்வேறு பரிமாணம் எடுத்திருக்கிறது. பொறுப்போடும் கவனத்தோடும் காரை ஓட்டுகையில் அது வியாபார காரியங்களுக்கும் சரி உல்லாசப் பயணத்திற்கும் சரி உற்ற நண்பனாக உறுதுணை புரியும். (g03 1/8)
[அடிக்குறிப்புகள்]
a டைம்லர் நிறுவனத்தில் பெரும் பணத்தை முதலீடு செய்திருந்த ஏமீல் யெலீனிக் என்பவர் புதிய காருக்கு மெர்ஸேடஸ் என்ற தன்னுடைய மகளின் பெயரை வைக்கும்படி யோசனை அளித்தார். டைம்லர் என்ற ஜெர்மானிய பெயரைப் பார்த்துவிட்டு பிரான்ஸில் கார் விற்பனை குறைந்துவிடுமோ என அவருக்கு பயம்.
b ஆரம்பத்தில் மாடல் டி காரின் விலை 850 டாலராக இருந்தது; ஆனால் 1924-ல் 260 டாலரை வைத்து புத்தம் புதிய ஃபோர்டு காரை வாங்கிவிட முடிந்தது. மாடல் டி காரின் உற்பத்தி 19 வருடங்களுக்குத் தொடர்ந்தது; அந்த சமயத்தில் 1.5 கோடிக்கு அதிகமான கார்கள் தயாரிக்கப்பட்டன.
c காற்றடைக்கப்பட்ட பைகளை மட்டுமே பாதுகாப்பு சாதனமாக பயன்படுத்துவது முக்கியமாக குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் ஆபத்தை உண்டாக்கலாம்.
[பக்கம் 24-27-ன் அட்டவணை/படங்கள்]
தயாரிப்பு காலம் வருடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது
1885 பென்ஸ் மோட்டார் கார்
உலகில் பயன்மிக்கதாக திகழ்ந்த முதல் கார்
1907-25 ரோல்ஸ்-ராய்ஸ் சில்வர் கோஸ்ட்
வேகம், வலிமை, நிசப்தம், ஆடம்பரம், நம்பகத் தன்மை ஆகியவற்றின் வடிவம்
1908-27 ஃபோர்ட் மாடல் டி
பெருமளவு தயாரிப்புக்கு வழிசெய்தது; 1,50,00,000-க்கும் அதிக கார்கள் விற்பனையாயின
பின்னணி: ஃபோர்ட் சங்கிலிமுறை உற்பத்தி
1930-7 காடிலேக் V16 7.4-L
உலகிலேயே முதன்முதலாக 16 சிலிண்டர் எஞ்சின்களுடன் தயாரிக்கப்பட்ட, பெரும் வெற்றி தேடித் தந்த கார்
1939–இன்றைய ஃபாக்ஸ்வாகன் பீட்டல்
2,00,00,000-க்கும் அதிகமானவை தயாரிக்கப்பட்டன. (கீழே இடப்புறமுள்ள) புத்தம் புதிய பீட்டல் 1998-ல் வெளிவந்தது
1941–இன்றைய ஜீப்
உலகில் பலரும் அறிந்த வாகனம் எனலாம்
1948-65 பார்ஷா 356
ஃபாக்ஸ்வாகன் பீட்டலை போலவே தயாரிக்கப்பட்டது; பார்ஷா பிரபலமாகத் தொடங்கியது
1952-7 மெர்ஸேடஸ் பென்ஸ் 300SL
கல்விங் என செல்லமாக அழைக்கப்படும் இந்தக் கார் ஸ்பேஸ்-ஃப்ரேமுடனும் எரிபொருள் உட்செலுத்தும் எஞ்சினுடனும் தயாரிக்கப்பட்ட முதல் கார்
1955-68 சீட்ராயன் DS 19
நீரழுத்த விசையில் இயங்கும் ஸ்டீயரிங், பிரேக்குகள், 4-வேக பல்லிணை மாற்றும் திறன், சுய-சமதள சஸ்பென்ஷன் (self-leveling suspension) ஆகிய வசதிகளுடன்
1959–இன்றைய மினி
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பிரபலமான கார் பந்தயங்களிலும் போட்டிகளிலும் சக்கை போடு போட்டது
1962-64 ஃபேர்ராரீ 250 GTO
300 குதிரை திறன்மிக்க V-12, திறம்பட்ட பந்தயக் கார்
1970-3 டட்ஸுன் 240Z
நம்பகமான, வாங்க முடிந்த பந்தயக் கார்
1970–இன்றைய ரேன்ஞ் ரோவர்
அன்றாட காரியங்களுக்குப் பயன்படுத்தப்படும் உலகின் சிறந்த 4 சக்கர வாகனமாக கருதப்படுகிறது
1984–இன்றைய கிரைஸ்லர் மினிவேன்
மினிவேன் பாணியை துவங்க உதவியது
திரஸ்ட் SSC
1997, அக்டோபர் 15 அன்று அ.ஐ.மா., நிவாடா, பிளாக் ராக் பாலைவனத்தை கடப்பதன் மூலம் இந்தக் கார் மணிக்கு 1228 கிலோமீட்டர் என்ற வேகப் பதிவை ஏற்படுத்தியுள்ளது
[படங்களுக்கான நன்றி]
பென்ஸ் மோட்டார் கார்: DaimlerChrysler Classic; பின்னணி: Brown Brothers; மாடல் டி: Courtesy of VIP Classics; ரோல்ஸ்-ராய்ஸ்: Photo courtesy of Rolls-Royce & Bentley Motor Cars
ஜீப்: Courtesy of DaimlerChrysler Corporation; கரும் பீட்டல்: Courtesy Vintage Motors of Sarasota; மஞ்சள் பீட்டல்: VW Volkswagen AG
சீட்ராயன்: © CITROËN COMMUNICATION; மெர்ஸேடஸ் பென்ஸ்: PRNewsFoto
கிரைஸ்லர் மினிவேன்: Courtesy of DaimlerChrysler Corporation; டட்ஸுன்: Nissan North America; திரஸ்ட் SSC: AP Photo/Dusan Vranic