Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

போலீஸ் “போலீஸ் ஏன் தேவை?” (ஆகஸ்ட் 8, 2002) என்ற தொடர் கட்டுரைகளுக்கு நன்றி. மூன்று வருடங்களுக்கு முன்பு என் அப்பா மோட்டார் வாகன விபத்தில் கொல்லப்பட்டார். அந்த பகுதியை சேர்ந்த இரண்டு போலீஸ் அதிகாரிகள் வந்து எங்கள் குடும்பத்தினருக்கு தகவல் அளித்தார்கள்; அவர்கள் வருத்தம் தெரிவித்ததோடுகூட உதவி செய்யவும் முன்வந்தார்கள். என் அம்மா குமுறி அழுதபோது ஒருவர் கைத்தாங்கலாக அவரை பிடித்துக்கொண்டார். இப்படி ஒரு வேலையை செய்வது இந்த அதிகாரிகளுக்கு சுலபமில்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும், ஆனாலும் அவர்கள் இல்லாமல் நம்மால் என்ன செய்ய முடியும்?

டி. இ., ஐக்கிய மாகாணங்கள் (g03 2/22)

போலீஸை பற்றிய இந்த தொடர் கட்டுரைகள் என்னை ஒரு கேள்வி கேட்கும்படி தூண்டின. இந்த வேலையை யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் தேர்ந்தெடுப்பது சரியா? ஒருவேளை கலவரம் ஏற்பட்டால் துப்பாக்கியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் வரலாம்; அதனால் யாரையாவது கொலை செய்யவும் வாய்ப்புள்ளது என்று நினைக்கிறேன்.

ஜே. எஸ்., ஆஸ்திரேலியா (g03 2/22)

“விழித்தெழு!” பதில்: எமது தொடர் கட்டுரைகள், போலீஸார் செய்யும் ஒழுங்கை காப்பாற்றுதல் உள்ளிட்ட சில பயனுள்ள வேலைகளையும் சில அத்தியாவசியமான சேவைகளையும் பற்றியே விளக்கியது. ஒரு உயிரை கொல்வதால் ஏற்படும் இரத்தப்பழிக்கு ஆளாவதை விரும்பாததால் அநேக யெகோவாவின் சாட்சிகள் ஆயுதங்களை ஏந்தும் வேலையை தவிர்க்கிறார்கள். (யாத்திராகமம் 20:13; மத்தேயு 26:51, 52) இருந்தபோதிலும், சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகள் அநேகரை வேலைக்கு அமர்த்துகின்றன, அதில் அவர்கள் ஆயுதங்களை ஏந்த வேண்டிய அவசியமில்லை. இன்னும் சில நாடுகளில் போலீஸார் துப்பாக்கிகளை வைத்திருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் நமக்கு தேவை என்ற கட்டுரையை இப்போதுதான் படித்து முடித்தேன். இந்த ஒழுங்கற்ற உலகத்தில் ஓரளவு ஒழுங்கை நிலைநாட்ட போலீஸாரின் கடினமான வேலையை நன்றாக புரிந்துகொள்ளும் வகையில் நல்ல விதத்தில் இது எழுதப்பட்டிருந்தது. நானும் என் மனைவியும் 1970-களில் பயணக் கண்காணிகளாக இருந்தோம், நகரத்தின் மத்திபத்தில் அமைந்திருந்த சபைக்கு விஜயம் செய்தபோது அங்கிருந்த பழைய ராஜ்ய மன்ற கட்டிடத்தின் கீழ்ப்பகுதியில் தங்கியிருந்தோம். உள்ளே மிகவும் சூடாக இருந்ததால் காற்று வருவதற்காக ஜன்னலை கொஞ்சம் திறந்து வைத்திருந்தோம். விடியற்காலை இரண்டு மணிக்கு, ஜன்னலுக்கு வெளியே யாரோ இரண்டு பேர் நிற்பதாக சொல்லி என் மனைவி என்னை எழுப்பினாள். அவர்கள் இருவரும் பேசிக்கொள்வதை நான் கேட்டேன். ஜன்னல் பொதுவாக மூடித்தானே இருக்கும் என்று ஒருவர் சொன்னார். வெளியே கார் நிற்கிறது, எனவே கட்டாயம் உள்ளே யாராவது இருக்க வேண்டும் என்பதாக இன்னொருவர் கூறினார். அவர்கள் இருவரும் போலீஸ்காரர்கள், அவர்கள் எப்போதுமே ராஜ்ய மன்றத்தை காவல்காத்து வந்தார்கள் என்று தெரியவந்தது. அதன் பிறகு நாங்கள் நிம்மதியாக தூங்கினோம்!

பி. எஸ்., ஐக்கிய மாகாணங்கள் (g03 2/22)

ஐக்கிய மாகாணத்தில் இருந்த உலக வர்த்தக மையமும் பென்டகனும் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பின் போலீஸைப் பற்றிய இந்த கட்டுரை வந்தது காலத்திற்கேற்ற உதவியாக இருந்தது. நாட்டு மக்களையும் அவர்களின் பொருட்களையும் தீவிரவாதிகளிடமிருந்து மட்டுமல்ல பொதுவாக குற்றச்செயல்களிலிருந்தும் பாதுகாக்கும் போலீஸ், தீயணைக்கும் படைவீரர், மற்ற பொதுநல ஊழியர்கள் ஆகியோருக்கும் அதிக மதிப்புக்காட்ட வேண்டும் என்று கற்றுக்கொண்டோம்.

ஹெச். பி., ஐக்கிய மாகாணங்கள் (g03 2/22)

ரூம் மேட்ஸ் வெகு நாட்களாக ரூம் மேட்டை பற்றிய ஒரு கட்டுரைக்காக காத்திருந்தேன். “இளைஞர் கேட்கின்றனர் . . . பொருத்தமான ரூம் மேட்டை கண்டுபிடிப்பது எப்படி?” (ஜூன் 8, 2002) என்ற கட்டுரையில் ரூம் மேட்டுடன் ரொம்ப நெருக்கமாக இருப்பதையும் அவளுடனோ அல்லது அவனுடனோ எல்லா இடங்களுக்கும் போவதையும் அநேக ரூம்மேட்டுகள் விரும்புவதில்லை என்று தெரிந்து கொண்டேன். இது சாதாரண விஷயம்தான் என்று படித்தபோது ஆச்சரியமடைந்தேன். அதேசமயம், பணவிஷயத்திலும் வீட்டு வேலைகளிலும் ரூம் மேட்டால் உதவமுடியும் என்றும் கற்றுக்கொண்டேன். இப்படி ஒரு சமநிலையான கருத்தை கொடுத்ததற்கு மிக்க நன்றி.

எஸ். எம்., ஜப்பான் (g03 2/22)

இன்னும் இரண்டு வாரத்தில் ட்ரெஸ்டெனில் உள்ள ஒரு அப்பார்ட்மென்ட்டில் கிறிஸ்தவ சகோதரி ஒருவருடன் சேர்ந்து தங்கப்போகிறேன். மே 8, ஜூன் 8, ஜூலை 8 இதழ்களில் ரூம் மேட்டை பற்றி வந்த நல்ல ஆலோசனைகள் அருமையிலும் அருமை; சரியான சமயத்திலும் கிடைத்தன. இது போன்ற நல்ல கட்டுரைகளை தொடர்ந்து பிரசுரியுங்கள்!

ஆர். பி., ஜெர்மனி (g03 2/22)