Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“காட்டுமிராண்டித்தனமான குற்றச்செயல்”

“காட்டுமிராண்டித்தனமான குற்றச்செயல்”

“காட்டுமிராண்டித்தனமான குற்றச்செயல்”

ஈரேழு வயதிலேயே விலைமாது ஆகிவிட்டாள் மரியா. a இவளுடைய அழகில் ஆம்பிளைகள் சொக்கிப்போவார்கள் என்று சொல்லி, பத்து மாதம் வயிற்றில் சுமந்த தாயே இவளை தாரை வார்த்துவிட்டாள் விபச்சார வாழ்க்கைக்கு. அதனால்தான் விலைமாது என்ற கொடூர வாழ்க்கை கோலம் பூண்டாள் மரியா. கைநிறைய காசு சம்பாதிக்கலாம் என்றும் அந்தத் தாய் சொல்லிக் கொடுத்தாள். அந்தி சாயும் நேரத்தில் மரியாவை ஒரு லாட்ஜுக்கு அவள் அழைத்துக்கொண்டு போய் அங்கே ஆட்களிடம் விட்டுவிடுவாள். பின்பு பணத்தை வாங்கிக்கொள்வதற்காக அங்கேயே பக்கத்தில் காத்திருப்பாள். ஒவ்வொரு இரவும் மூன்று நான்கு பேரிடம் உறவு கொண்டாள் மரியா.

மரியாவின் வீட்டுக்குப் பக்கத்தில் குடியிருக்கும் 13 வயது காரீனாவும் விபச்சார தொழிலுக்குள் தள்ளப்பட்டாள். கரும்புத் தொழிலாளிகளின் சமூகத்தைச் சேர்ந்த மற்ற குடும்பங்களைப் போலவே காரீனாவின் பெற்றோரும் ‘எக்ஸ்ட்ரா’ வரும்படிக்காக அவளுடைய உடலை விற்றுப் பிழைப்பு நடத்தினார்கள். மற்றொரு இடத்தில் வாழும் எஸ்டெலா, பள்ளிக்குப் போவதை இளம் வயதிலேயே நிறுத்திவிட்டு தெரு விபச்சாரத் தொழிலில் இறங்கிவிட்டாள். அவளுக்கு வாசிக்கவோ எழுதவோகூட வராது. டெய்ஸியின் அண்ணன் ஒருவன் முதல் முறையாக அவளுக்கு பாலியல் கொடுமை இழைத்த போது அவளுக்கு சுமார் ஆறு வயதுதான். அது முதல், முறைதகா செயல்கள் தொடர் கதையாயின. அவள் 14 வயதில் விபச்சாரியானாள்.

உலகில் அநேக இடங்களில், சிறார் விபச்சாரம் என்ற பிரச்சினை உள்ளத்தை உறைய வைக்கும் ஒரு நிஜமாக உருவெடுத்திருக்கிறது. அதன் விளைவுகளோ நெஞ்சை பிளக்க வைக்கின்றன. அவ்வப்போது என்றாலும் சரி முழுநேரமானாலும் சரி, இத்தொழிலில் இறங்கியுள்ள சின்னஞ்சிறுசுகள் அடிக்கடி குற்றச் செயலிலும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்திலும் ஈடுபடுகிறார்கள். தங்களுடைய பரிதாபகரமான வாழ்க்கையிலிருந்து தப்ப எந்தவொரு நம்பிக்கையுமின்றி, வாழ்க்கையில் விரக்தியடைந்து, எதற்குமே லாயக்கற்றவர்களாய் உணருகிறார்கள்.

சிறார் விபச்சார தொழிலால் ஏற்படும் பயங்கர விளைவுகளை பிரபலமானவர்கள் அறிந்திருக்கிறார்கள். “சிறார் விபச்சாரம் ஒரு காட்டுமிராண்டித்தனமான குற்றச்செயல்” என பொருத்தமாகவே தெரிவித்தார் பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி பெர்னான்டூ ஏன்ரிக்க கார்டோசூ. சிறார் விபச்சாரத்தைப் பற்றி பிரேசில் செய்தித்தாள் சிந்தையைத் தட்டியெழுப்பும் இந்தக் கருத்தை வெளியிட்டது: “இந்தப் பழக்கம் சகஜமாக காணப்படும் நாடுகளில், அது [பணம்] கொழிக்கச் செய்வதன் காரணமாக சகித்துக்கொள்ளப்படுகிறது, ஏற்றுக்கொள்ளப்படுகிறது, விரும்பப்படுகிறது; இதனால் இந்நாடுகள் தினம் தினம் சீரழிவைத்தான் அனுபவிக்கின்றன. இந்தப் பழக்கத்தால் தனிநபருக்கு, குடும்பத்திற்கு, மற்றும் சமூகத்திற்கு உண்டாகும் சீர்குலைவுகளை ஒப்பிடும்போது அதனால் வரும் பண லாபம் ஒன்றுமே இல்லை.”

சிறார் விபச்சாரத்தை சிறைப்படுத்த விரும்புகிறவர்களின் உயர்ந்த இலட்சியங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கத்தில் இந்தப் பிரச்சினை தறிகெட்டுப் போகிறது. இந்தப் பயங்கர நிலைமைக்கு கொண்டுபோய் விடுவது எது? ஏன் அநேகர் இந்தக் குற்றச்செயலை சகித்துக்கொள்கிறார்கள்? ஏன் ஊக்குவிக்கிறார்கள்? (g03 2/08)

[அடிக்குறிப்பு]

a இந்தத் தொடர் கட்டுரைகளில் வரும் பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன.

[பக்கம் 3-ன் சிறு குறிப்பு]

“சிறார் விபச்சாரம் ஒரு காட்டுமிராண்டித்தனமான குற்றச்செயல்.”​பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி பெர்னான்டூ ஏன்ரிக்க கார்டோசூ

[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]

“எவ்வித பாலியல் துஷ்பிரயோகமும் மனித கண்ணியத்துடன் ஒத்துப்போகாது, ஆகவே எந்த வயதினராக, பாலினராக, இனத்தவராக, வகுப்பினராக இருந்தாலும்சரி, இது அடிப்படை மனித உரிமைகளை மீறுகிறது.”​—யுனெஸ்கோ சோர்ஸஸ்