Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சிறார் துஷ்பிரயோகத்திற்கு முடிவு அருகில்!

சிறார் துஷ்பிரயோகத்திற்கு முடிவு அருகில்!

சிறார் துஷ்பிரயோகத்திற்கு முடிவு அருகில்!

“பிள்ளைப் பருவம் விசேஷ கவனிப்பையும் உதவியையும் பெற வேண்டிய பருவம் என மனித உரிமைகள் பற்றிய சர்வதேச உறுதிமொழியில் ஐக்கிய நாட்டு சங்கம் அறிவித்துள்ளது” என பிள்ளையின் உரிமைகள் பற்றிய ஒப்பந்தத்தின் முகவுரையில் குறிப்பிடப்பட்டது. குடும்பத்தின் முக்கியத்துவம் சம்பந்தமாக அது இவ்வாறு கூறியது: “பிள்ளையின் ஆளுமை முழுமையாகவும் இணக்கமாகவும் வளர்ச்சி அடைவதற்கு மகிழ்ச்சியும் அன்பும் புரிந்துகொள்ளுதலும் நிறைந்த ஒரு குடும்ப சூழல் தேவை.” ஆனால் இந்த இலட்சியம் கைகூடாமலே இருக்கிறது.

பிள்ளைகளுக்காக மேம்பட்ட உலகத்தை உருவாக்குவதைப் பற்றி வாயளவில் பேசுவது மட்டுமே போதாது. ஒழுக்கச் சீர்குலைவு தறிகெட்டுப் போகிறது என்றாலும் அநேகர் இந்தச் சூழ்நிலையை சகஜம் என்றே கருதுகிறார்கள். பரவலாக காணப்படும் ஒழுக்கயீனத்தையும் பேராசையையும் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் கட்டுப்படுத்த முடியாது. தங்கள் பிள்ளைகளுக்கு அன்பை பொழிந்து அவர்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, பெரும்பாலும் பெற்றோரே எதையும் கண்டுகொள்ளாமல் விடும் சூழல் உருவாக காரணமாகிறார்கள். அப்படியானால், சிறார் விபச்சாரத்திற்கு முடிவுகட்ட என்ன நம்பிக்கை நமக்கு இருக்கிறது?

சீர்குலைந்த இந்தச் சமுதாயம் எல்லா பிள்ளைகளுக்கும் அன்பான குடும்பத்தையும் பாதுகாப்பான எதிர்காலத்தையும் அமைத்துத் தர தவறியிருக்கிறது. என்றாலும், சிறார் விபச்சாரம் உள்ளிட்ட எல்லா வகையான கெட்ட செயல்களையும் முறைகெட்ட பாலியல் பழக்கங்களையும் நமது படைப்பாளர் விரைவில் அடியோடு ஒழிப்பார். சீக்கிரத்தில், உலகம் ஆச்சரியப்படும் விதத்தில், யெகோவா தேவன் தமது ராஜ்யத்தின் மூலம் மனித விவகாரங்களில் தலையிடுவார். ஒழுக்கத்தைச் சீர்குலைப்பவர்களும் மற்றவர்களை துஷ்பிரயோகம் செய்பவர்களும் கடவுளுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பிக்கவே முடியாது. சக மனிதரை நேசிப்பவர்கள் மட்டுமே கடவுளுடைய புதிய உலகில் வாழ்வதற்குத் தப்பிப்பிழைக்க முடியும். “செவ்வையானவர்கள் பூமியிலே வாசம் பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டு போவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.”​—நீதிமொழிகள் 2:21, 22.

ஒழுக்கச் சீர்குலைவோ பாலியல் துஷ்பிரயோகமோ இல்லாமல் பிள்ளைகளும் பெரியவர்களும் நிம்மதியாக வாழும் காலத்தை சற்று கற்பனை செய்து பாருங்கள்! துஷ்பிரயோகத்தாலும் வன்முறையாலும் உணர்ச்சி ரீதியிலும் சரீர ரீதியிலும் ஏற்பட்ட பாதிப்புகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். முன்பு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு பலியானவர்கள், அலைக்கழிக்கும் கொடுங்கனவுகளாலோ அதன் பாதிப்புகளாலோ எந்தவொரு தொல்லையுமின்றி சுகமாக வாழ்வார்கள். ‘முந்தினவைகள் இனி நினைக்கப்படாது, மனதிலேயும் தோன்றாது’ என சொல்லப்பட்டிருக்கிறது.​—ஏசாயா 65:17.

அந்த சமயத்தில், எந்தப் பிள்ளையும் தவறாக நடத்தப்படவோ பாலியல் துஷ்பிரயோகத்திற்கு பலியாகவோ வேண்டியிருக்காது. மகிழ்ச்சியும் அன்பும் புரிந்துகொள்ளுதலும் வெறும் கனவல்ல. கடவுளுடைய புதிய உலகில் வாழும் குடிமக்களுக்கு ‘தீங்கு செய்வாரும் இருக்க மாட்டார்கள், கேடு செய்வாரும் இருக்க மாட்டார்கள்’ என்று ஏசாயா 11:9 அறிவிக்கிறது.

வறுமையோ போதைப்பொருள் துஷ்பிரயோகமோ மகிழ்ச்சியற்ற குடும்பங்களோ ஒழுக்கச் சீர்குலைவோ இல்லாமல் இருக்கும்போது எவ்வளவு ஆனந்தமாக இருக்கும்! சமாதானமும் நீதியும் பாதுகாப்புமே கோலோச்சும். “என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும்” என்று கடவுள் சொல்கிறார்.​—ஏசாயா 32:18. (g03 2/08)

[பக்கம் 9-ன் பெட்டி/படங்கள்]

பெற்றோரின் கவனிப்பு குடும்ப முறிவை தடுக்கலாம்

● “பள்ளி படிப்பை பிரயோஜனப்படுத்திக்கணும், ஒரு தொழில் கத்துக்கணும்னு சொல்லி என் அப்பா அம்மா என்னை உற்சாகப்படுத்தினாங்க. அவுங்க விருப்பத்தை என் மீது திணிக்கல, ஆனா எனக்கு பொருத்தமான ஒரு கோர்ஸை தேர்ந்தெடுக்க உதவி செஞ்சாங்க.”​—⁠டைஸ்.

● “நானும் என் தங்கச்சியும் கடைக்குப் போனப்போ, எங்க அம்மாவும் கூட வந்தாங்க. சிக்கனமா செலவு செய்ய உதவினாங்க. அது மட்டுமில்ல, ஜிகு ஜிகுன்னு கண்ணைப் பறிக்கிற மாதிரியான ஆடைகளையும் உடம்பெல்லாம் தெரியற மாதிரியான டிரெஸ்களையும் நாங்க வாங்காதபடிக்கு பாத்துக்கிட்டாங்க.”​—⁠பியாங்கா.

● “நாங்க பார்ட்டிகளுக்குப் போனபோது, அங்க யார் யார் வருவாங்க, எப்படிப்பட்ட மியூசிக் இருக்கும், எப்போ பார்ட்டி ஆரம்பிக்கும், எப்போ முடியும் என்பதையெல்லாம் எப்பவும் எங்க அப்பாவும் அம்மாவும் கேட்பாங்க. பெரும்பாலும் நாங்க குடும்பமாகத்தான் பார்ட்டிகளில் கலந்துக்குவோம்.”​—⁠பிரிஸில்லா.

● “நான் சின்ன பிள்ளையா இருந்தப்பவும் சரி வளர்ந்து வாலிப பருவத்தில இருந்தப்பவும் சரி, என் அப்பா அம்மா எப்பவும் என்கூட நல்லா பேசுவாங்க, அதனால் நாங்க ஃப்ரீயா கருத்துக்களை பரிமாறிக்க முடிஞ்சுது. என் வகுப்புத் தோழி ஒருத்தி இதை கவனிச்சு, ‘உன்னோட அப்பா அம்மாகூட இவ்வளவு சகஜமா பழகுறத பார்த்தா எனக்குப் பொறாமையா இருக்கு. என்னோட அம்மாகிட்டகூட நான் ஃப்ரீயா பேச முடியல, அதனால மத்தவங்ககிட்ட இருந்துதான் எல்லாத்தையும் கத்துக்க வேண்டியிருக்கு’ என சொன்னாள்.”​—⁠சாமாரா.

● “வாலிப பருவத்தில நான் சந்தோஷமா இருந்தேன். நான் எல்லாரையும் நம்பினேன். எப்பவும் சிரிச்சிட்டே இருந்தேன். பிரெண்ட்ஸுங்களோட ஜாலியா பேசிக்கிட்டு இருக்கிறது எனக்கு கொள்ளை ஆசை. என் சுபாவமே இதுதான்னு அப்பா அம்மா புரிஞ்சுக்கிட்டாங்க, என்னுடைய சுபாவத்தை மாத்த முயற்சி பண்ணல. ஆனா ரொம்ப கவனமா இருக்கனும், ஆண்களுடன் பழகும்போது ரொம்ப கண்ணியமா நடந்துக்கணும்னு அன்பா எனக்கு புரிய வைச்சாங்க.”​—⁠டைஸ்.

● “எல்லா பிள்ளைங்களையும் போல எனக்கும் ஆண்களோடு பழகுறதுல பிரியம் இருந்துச்சு. ஆனா காதல் சமாச்சாரமெல்லாம் எப்போ வச்சிக்கலாங்கறதுக்கு என்னோட அப்பா ஒரு வயது வரம்பு போட்டாங்க. இதனால் நான் அதிருப்தி அடையல. அதுக்குப் பதிலா, என் அப்பா அம்மா என் மீது அக்கறை காட்டறாங்க, பிற்காலத்துல ஏதாவது கஷ்டத்துல மாட்டிக்கக் கூடாதுன்னு என்னை பாதுகாக்க விரும்புறாங்க என்பதை புரிஞ்சுகிட்டேன்.”​—⁠பியாங்கா.

● “என்னோட அப்பா அம்மா வச்ச நல்ல முன்மாதிரியால, திருமணங்கறது ரொம்ப அருமையான ஒன்னுன்னு எனக்குத் தெரிஞ்சுது. எங்க அப்பா அம்மா மத்தியில எப்பவும் நல்ல உறவு இருந்துச்சு, அவங்க ஒருத்தருக்கொருத்தர் மனம்விட்டு பேசினாங்க. நான் ‘டேட்டிங்’ போன போதெல்லாம், சில சூழ்நிலையில எப்படி நடந்துக்கணும்னு ‘அட்வைஸ்’ கொடுத்தாங்க, அது எப்படி என்னுடைய திருமணத்தைப் பாதிக்கும்னு அம்மா எனக்கு விளக்கினதும் ஞாபகம் இருக்கு.”​—⁠பிரிஸில்லா.

[பக்கம் 10-ன் படம்]

கடவுளுடைய புதிய உலகில் எந்தப் பிள்ளையும் தவறாக நடத்தப்பட மாட்டாது