Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நாசி ஐரோப்பாவில் விசுவாசம் சோதிக்கப்பட்டது

நாசி ஐரோப்பாவில் விசுவாசம் சோதிக்கப்பட்டது

நாசி ஐரோப்பாவில் விசுவாசம் சோதிக்கப்பட்டது

ஆன்டோன் லெடோன்யா கூறியது

1938, மார்ச் 12-⁠ம் தேதி ஹிட்லரின் படைகள் ஆஸ்திரியாவின் எல்லைக்குள் நுழைந்தன. அணி வகுப்புக்குப் பொருத்தமான பாடல்களையும் அரசியல் கோஷங்களையும் ரேடியோக்கள் முழங்கின. என் சொந்த நாடான ஆஸ்திரியாவை தேசப்பற்று ஆக்கிரமித்திருந்தது.

ஆட்சியை ஹிட்லர் கைப்பற்றியதுமே, ஆஸ்திரியர்களின் மனதில் நம்பிக்கை ஒளி பிரகாசமாக சுடர்விட ஆரம்பித்தது. அவருடைய “ஆயிர வருட பேரரசு” வறுமைக்கும், வேலையில்லா திண்டாட்டத்திற்கும் ஒரு முடிவு கட்டும் என்ற கற்பனையில் மிதந்தனர் பலர். நாட்டை பீடித்திருந்த தேசப்பற்று கத்தோலிக்க பாதிரிகளையும் தொற்றிக்கொண்டது; அவர்களும் ஹிட்லர் சல்யூட் அடித்தார்கள்.

அப்போது எனக்கு 19 வயது. டீனேஜரான நான் ஹிட்லரின் வாக்குறுதிகளில் துளிகூட நம்பிக்கை வைக்கவில்லை. எந்த மனித அரசாங்கத்தாலும் நம் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்றே நம்பினேன்.

பைபிள் சத்தியங்களைக் கற்றுக்கொள்ளுதல்

1919-⁠ல் ஏப்ரல் 19-⁠ம் தேதி ஆஸ்திரியாவிலுள்ள டோனாவிட்ஸ் நகரத்தில் பிறந்தேன்; எங்கள் குடும்பத்தில் நான் மூன்றாவது பிள்ளை, கடைக்குட்டி. அப்பா நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்த்த கடின உழைப்பாளி. 1923-⁠ல் அவர் குடும்பத்தோடு பிரான்சில் குடியேறினார்; லையேவின் என்ற சுரங்க நகரத்தில் வேலை தேடிக்கொண்டார். அரசியல் கொள்கைகளிலேயே மூழ்கிவிட்டிருந்ததால் அவருக்கு மதத்தில் எந்தப் பிடிப்பும் இருக்கவில்லை, ஆனால் அம்மாவோ பக்திமிக்கவர், அவர் ஒரு கத்தோலிக்கர். கடவுள் நம்பிக்கையை எங்களுக்கு ஊட்டி வளர்த்தார், நாள் தவறாமல் இரவில் எங்களுடன் சேர்ந்து ஜெபித்தார். காலப்போக்கில், அம்மாவை சர்ச்சுக்குக்கூடப் போகவிடாமல் அப்பா தடுத்தார்; அந்தளவுக்கு அவருக்கு மதத்தின் மீதே நம்பிக்கை இல்லை.

1920-களின் பிற்பகுதியில் வின்ட்சென்ட்ஸ் பிளாடைஸ் என்பவரை சந்தித்தோம்; அன்பாக அவரை வின்கோ என்று கூப்பிட்டோம். அவர் யுகோஸ்லாவியாவை சேர்ந்த இளைஞர். பைபிள் மாணாக்கர்கள் என அழைக்கப்பட்ட யெகோவாவின் சாட்சிகளுடன் அவர் தொடர்பு வைத்திருந்தார். கொஞ்ச நாளைக்கு பிறகு, பைபிள் மாணாக்கரில் ஒருவர் எங்கள் குடும்பத்தை சந்திக்க ஆரம்பித்தார். சர்ச்சுக்கு போகவே கூடாதென அம்மாவுக்கு அப்பா தடை போட்டிருந்ததால் வீட்டிலேயே கடவுளை வணங்கலாமா என்ற கேள்வியை அம்மா வின்கோவிடம் கேட்டார். அதற்கு, அவர், “கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் [கடவுள்] வாசம்பண்ணுகிறதில்லை” என அப்போஸ்தலர் 17:24-லிருந்து சுட்டிக்காட்டி, கடவுளை வணங்குவதற்கு வீடுகூட பொருத்தமான இடம்தான் என்பதாக பதிலளித்தார். அவர் அப்படி சொன்னதுமே அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷமாகிவிட்டது; அன்றிலிருந்து அவர் பைபிள் மாணாக்கர்களின் வீடுகளில் நடைபெற்ற கூட்டங்களுக்கு போக ஆரம்பித்தார்.

அப்பாவுக்கு இதெல்லாம் முட்டாள்தனமாகப் பட்டது; அதனால் கூட்டங்களுக்கும் போகக்கூடாது என அம்மாவிடம் சொல்லிவிட்டார். பைபிள் மாணாக்கர்களுடன் நாங்கள் சேரக் கூடாது என்பதற்காக எங்களை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாஸுக்குப் போகச் சொல்லி கட்டாயப்படுத்தினார்! ஆனால் அம்மா பிடிவாதமாக மறுத்துவிட்டார். பிறகு, சர்ச்சில் பாதிரிக்கு உதவியாளனாக நான் பணி புரிந்தே ஆக வேண்டுமென்று அப்பா விடாப்பிடியாக இருந்தார். அவருடைய ஆசைக்கு அடிபணிந்தேன். ஆனாலும், அம்மா பைபிள் நியமங்களை என் இதயத்திலும் மனதிலும் தொடர்ந்து வேரூன்றச் செய்தார். பைபிள் மாணாக்கர்களின் கூட்டங்களுக்கு என்னைக் கூட்டிக்கொண்டு போனார்.

1928-⁠ல் வின்கோவும், நாங்கள் பிபீ என்று செல்லமாக அழைக்கும் என் அக்கா யோஸஃபீனாவும் யெகோவாவுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்றார்கள். பின்னர் இருவரும் இல்லற வாழ்க்கையில் இணைந்தார்கள். லையேவின் என்ற இடத்திற்கு போனார்கள்; மறுவருஷமே அவர்களது மகள் ஃபீனீ பிறந்தாள். மூன்று வருடத்திற்குப் பிறகு யுகோஸ்லாவியாவில் முழுநேர ஊழியம் செய்வதற்கு அவர்களுக்கு அழைப்பு கிடைத்தது; அப்போது அங்கே சாட்சிகளுடைய வேலைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆனாலும், எப்பேர்ப்பட்ட துன்பங்களிலும் யெகோவாவின் சேவையில் அவர்கள் கண்ட மகிழ்ச்சியும் காட்டிய வைராக்கியமும் கொஞ்சமும் குறையவில்லை. அவர்களுடைய அருமையான முன்மாதிரியைப் பார்த்து முழுநேர ஊழியனாக ஆக வேண்டுமென்ற ஆசை எனக்கும் வந்தது.

ஆவிக்குரிய வளர்ச்சி

அம்மா அப்பாவுக்கு கருத்து வேறுபாடு வளர்ந்துகொண்டே போனது, கடைசியாக, அது 1932-⁠ல் விவாகரத்தில் போய் முடிந்தது; பிறகு, நான் அம்மாவுடன் ஆஸ்திரியாவுக்கு போனேன்; என் அண்ணன் வில்ஹெம் (வில்லீ) பிரான்சிலேயே இருந்துவிட்டார். அதற்குப் பின், அப்பாவுடன் எனக்கு அவ்வளவாக தொடர்பே இல்லாமல் போனது. அவர் சாகும்வரை எங்களை ஜென்ம விரோதிகளாகவே நினைத்தார்.

நானும் அம்மாவும் ஆஸ்திரியாவிலுள்ள காம்லிட்ஸ் என்ற கிராமத்தில் குடியேறினோம். அருகில் எந்த சபையும் இல்லை; அதனால் அம்மா தவறாமல் என்னுடன் பைபிள் பிரசுரங்களிலுள்ள விஷயங்களை கலந்தாலோசித்தார். இந்த சூழ்நிலையில் எங்களை ஆவிக்குரிய விதத்தில் உற்சாகப்படுத்துவதற்கு மாதம் இருமுறை ஏடூயாட் வோஹின்ட்ஸ் என்பவர் கிராஸ் என்ற நகரத்திலிருந்து சைக்கிளில் வந்தார்; நாங்கள் ரொம்பவும் சந்தோஷப்பட்டோம். ஆனால், அவர் ஒரு முறை வந்து போவதற்கு கிட்டத்தட்ட 200 கிலோமீட்டர் சைக்கிளை மிதிக்க வேண்டியிருந்தது!

1938-⁠ல் ஹிட்லரின் கொடூர ஆட்சி ஆரம்பித்த சமயத்தில், சகோதரர் வோஹின்ட்ஸ் கைது செய்யப்பட்டார். லின்ஜ் என்ற இடத்திலிருந்த, ‘கருணைக் கொலை’ செய்யும் நிறுவனத்தில் அவர் வாயுவேற்றி கொல்லப்பட்டதை அறிந்தபோது எங்களுக்குத் துக்கம் தாளவில்லை. அவருடைய அசைக்க முடியாத விசுவாசம் யெகோவாவை தொடர்ந்து உண்மையுடன் சேவிப்பதற்கு எங்களைப் பலப்படுத்தியது.

1938​—⁠கொடூர வருடம்

1935-⁠ல் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை ஆஸ்திரியாவில் தடை செய்யப்பட்டிருந்தது. 1938-⁠ல் ஹிட்லரின் படைகள் ஆஸ்திரியாவுக்குள் நுழைந்த போது ஊழியம் செய்வது எங்களுக்கு ரொம்ப ஆபத்தாக இருந்தது. நானும் அம்மாவும் யெகோவாவின் சாட்சிகள் என்பது அக்கம்பக்கத்தாருக்குத் தெரிந்திருந்ததால் யாருடைய கண்ணிலும் படாமலிருக்க தீர்மானித்தோம். நாசிக்களின் கைகளில் சிக்கிக்கொள்ளாதிருக்க குதிரில் ஒளிந்துகொண்டு இரவு நேரங்களை கழிக்க வேண்டியிருந்தது.

1938-⁠ன் ஆரம்பத்தில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு ஒரு பேக்கரியில் வேலைக்கு சேர்ந்தேன். ஆனால், “ஹைல் ஹிட்லர்” என்று சொல்ல மறுத்தேன், அதோடு, ஹிட்லரின் இளைஞர் அமைப்பிலும் சேர மறுத்தேன்; விளைவு? வேலையிலிருந்து என்னை நீக்கிவிட்டார்கள். ஆனால் என்ன நடந்தாலும், யெகோவா தேவனுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்றே ஆக வேண்டுமென்று முன்னொருபோதும் இல்லாதளவுக்கு அதிக தீர்மானமாக இருந்தேன்.

1938, ஏப்ரல் 8-⁠ம் தேதி நானும் அம்மாவும் முழுக்காட்டுதல் பெற்றோம். அன்று இரவில் நாங்களும் இன்னும் ஏழு பேரும் காட்டில் இருந்த ஒதுக்குப்புறமான ஓர் அறையில் கூடினோம். முழுக்காட்டுதல் பேச்சுக்குப் பிறகு பத்து நிமிட இடைவெளியில் ஒவ்வொருவராக துணி துவைக்கும் இடத்துக்கு குறுகலான பாதை வழியாக நடந்து போனோம். அங்கிருந்த காங்கிரீட் தொட்டியில் முழுக்காட்டப்பட்டோம்.

1938, ஏப்ரல் 10-⁠ம் தேதி ஆஸ்திரியாவை ஜெர்மனியோடு சேர்ப்பதைக் குறித்து கருத்தறிய கண் துடைப்பு வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டன. “உங்கள் ஓட்டு ஹிட்லருக்கே!” என்ற வாசகம் போஸ்டர்களில் ஊரெங்கும் ஒட்டப்பட்டிருந்தன. நாங்கள் பிரான்சில் நிறைய நாட்கள் தங்கிவிட்டதாலும், எந்த நாட்டிலும் எங்களுக்கு பிரஜா உரிமை கொடுக்கப்படாததாலும் எனக்கும் அம்மாவுக்கும் ஓட்டுப்போடும் அவசியம் ஏற்படவில்லை; இந்த நிலை பிற்காலத்தில் எனக்கு பாதுகாப்பு அளித்தது. தெற்கு ஆஸ்திரியாவிலுள்ள க்ளேகென்ஃபுர்ட்டை சேர்ந்த ஃபிரான்ட்ஸ் கான்ஸ்டா என்பவர் காவற்கோபுரம் பிரதிகளை எங்களுக்குத் தவறாமல் கொண்டு வந்து கொடுத்தார். இவ்வாறு, இரண்டாம் உலகப் போர் தன் கோரமுகம் காட்டும் முன்பு கடவுளுடைய வார்த்தையிலிருந்து ஆவிக்குரிய பலத்தை நாங்கள் பெற்றோம்.

என் அண்ணன் வில்லீ

வில்லீக்கு என்னைவிட நான்கு வயது அதிகம்; கிட்டத்தட்ட ஒன்பது வருடத்துக்கு முன்பு பிரான்சைவிட்டு வெளியேறியதிலிருந்து அவருக்கு என்னுடனும் அம்மாவுடனும் எந்தத் தொடர்பும் இல்லாதிருந்தது. இளம் பிராயத்தில் அம்மா அவருக்கு பைபிளைக் கற்றுக்கொடுத்திருந்த போதிலும் ஒளிமயமான எதிர்காலத்திற்கு ஒரே வழி ஹிட்லரின் அரசியல் ஆட்சியே என நம்பும்படி அவர் ஏமாற்றப்பட்டிருந்தார். நாசிக்களுடன் சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபட்டதால் 1940, மே மாதத்தில் பிரான்சு நீதிமன்றம் வில்லீக்கு இரண்டு வருட சிறை தண்டனை விதித்தது. ஆனால் பிரான்சின் மீது ஜெர்மனி படையெடுத்து சென்றதால் அவர் சீக்கிரத்திலேயே விடுதலை செய்யப்பட்டார். அந்த சந்தர்ப்பத்தில் பாரிஸிலிருந்து எங்களுக்கு ஒரு கார்டு அனுப்பினார். அவர் உயிரோடிருப்பதை அறிந்து நாங்கள் ஒருபுறம் குதூகலித்தாலும் மறுபுறம் அவர் இப்படி மாறிவிட்டாரே என்று அறிந்து விக்கித்துப் போனோம்!

SS (ஷுட்ஸ்டாஃபல், ஹிட்லரின் சிறப்பு படை காவலர்) காவலர்களிடம் நல்ல பெயர் இருந்ததால் போர்க் காலத்தில் வில்லீ அடிக்கடி வந்து எங்களை சந்திக்க முடிந்தது. ஹிட்லரின் ராணுவ வெற்றிகளை பார்க்கப் பார்க்க அவருக்கு தலைகால் புரியவில்லை. பைபிள் அடிப்படையிலான நம்பிக்கையைப் பற்றி அவரிடம் பேச்சை எடுத்த ஒவ்வொரு முறையும் “இதெல்லாம் சுத்த வீண்! நீ முதல்ல ஹிட்லரின் அதிரடித் தாக்குதலைப் பாரு. ரொம்ப சீக்கிரத்தில் இந்த உலகத்தையே ஜெர்மானியர்தான் ஆளப்போறாங்க!” என்று சொல்லி சொல்லியே என் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவார்.

பிப்ரவரி 1942-⁠ல் வில்லீ இப்படி ஒருமுறை வீட்டுக்கு வந்துவிட்டு திரும்பிப் போகையில் யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட சத்துருக்கள் என்ற ஆங்கில புத்தகத்தை அன்பளிப்பாக கொடுத்தேன். கையிலெடுத்த புத்தகத்தை கீழே வைக்காமல் ஒரே மூச்சில் படித்து முடித்தார், எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. ஹிட்லரின் ஆட்சி தோல்வியைத் தழுவப் போவது நிச்சயம் என்பது அவர் மனதில் உறைத்தது. மனிதாபிமானமே இல்லாத ஓர் அமைப்பை அவர் ஆதரித்து வந்ததை நினைத்து வருத்தப்பட்டார், தன் தவறை உடனடியாக திருத்திக்கொள்ள வேண்டும் என்றும்கூட தீர்மானமெடுத்தார்.

பைபிள் சத்தியத்தின் சார்பாக வில்லீயின் நிலைநிற்கை

அதற்கடுத்த மாதம் வில்லீ எங்களை சந்திக்க வந்தபோது அவர் அடியோடு மாறியிருந்தார். “ஆன்டோன், இத்தனை நாள் நான் தப்பான பாதையில போய்க்கிட்டிருந்திருக்கேன்!” என்று சொன்னார்.

“வில்லீ, இதை ரொம்ப லேட்டா உணர்ந்திருக்கீங்க” என்றேன்.

“இல்லை, இப்ப ஒன்னும் லேட்டாகிவிடல! ‘உயிரோடிருக்கும் போதே நீ என்ன செய்ய வேண்டுமோ அதை செய்’ன்னு பைபிள்ல ஒரு வசனம் சொல்லியிருக்கு; இங்க பாரு, நான் இன்னும் உயிரோடதானே இருக்கேன்! அதுக்காக நான் கடவுளுக்கு நன்றி சொல்லனும்” என்று பதிலளித்தார்.​—⁠பிரசங்கி 9:10.

“அப்ப என்ன செய்யப் போறதா உத்தேசம்?” என கேட்டேன்.

“இனிமேலும் மிலிட்ரியில் வேலை செய்ய எனக்கு இஷ்டமில்லை. நாசிக்களுடன் வச்சிருக்கிற எல்லா தொடர்பையும் துண்டிச்சுக்கப் போறேன். அப்புறம் என்ன நடக்கப் போகுதுன்னு நீயே பாரேன்” என பதிலளித்தார்.

பிபீ அக்காவை சந்திக்க வில்லீ யுகோஸ்லாவியாவிலுள்ள ஜாக்ரெப்புக்கு உடனடியாக பயணப்பட்டார். தடைசெய்யப்பட்டிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களில் கொஞ்ச நாட்கள் கலந்துகொண்ட பிறகு அவர் இரகசியமாக முழுக்காட்டுதல் பெற்றார். இப்போது அவர் மனந்திருந்திய மைந்தன்!​—⁠லூக்கா 15:11-24.

பிரான்சிலிருந்த நாசிக்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள வில்லீ எல்லையைக் கடந்து சுவிட்சர்லாந்துக்குள் நுழைய முயன்றார். ஆனால் அவர் ஜெர்மானிய ராணுவ போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பெர்லினில் ராணுவ விசாரணை செய்யப்பட்டு, 1942, ஜூலை 27-⁠ம் தேதி, தப்பியோட முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டார். பெர்லின் டேகல் ராணுவ சிறையில் அவரை சந்திக்க எனக்கு அனுமதி கிடைத்தது. ஒரு சிறிய அறைக்கு என்னை அழைத்துச் சென்றார்கள், கொஞ்ச நேரத்தில் காவலாளியுடன் சங்கிலியில் பிணைக்கப்பட்டவராக வில்லீ அங்கு அழைத்து வரப்பட்டார். அந்தப் பரிதாபமான நிலைமையில் அவரைப் பார்க்கும்போது என் கண்கள் குளமாயின. நாங்கள் ஒருவரையொருவர் கட்டியணைத்துக் கொள்வதற்குக்கூட அனுமதிக்கப்படவில்லை, கொடுக்கப்பட்ட இருபதே நிமிடத்தில் ஒருவருக்கொருவர் பிரியாவிடை பெற வேண்டியிருந்தது.

என் கண்கள் கலங்குவதைக் கவனித்த வில்லீ, “ஆன்டோன் ஏன் அழுகிற? நீ உண்மையிலே சந்தோஷப்படனும்! மீண்டும் சத்தியத்தைக் கண்டுபிடிக்க யெகோவா எனக்கு உதவியதற்கு நான் ரொம்பவே அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன்! ஒருவேளை ஹிட்லருக்காக நான் சாக வேண்டியிருந்திருந்தால் எனக்கு எதிர்காலமே சூனியமா போயிருக்கும். ஆனா இப்ப யெகோவாவுக்காக சாகப்போறேன், ஆனா நிச்சயம் உயிர்த்தெழுப்பப்படுவேன்; இதுல எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு, கண்டிப்பா நாம மறுபடியும் சந்திப்போம்!” என்று சொன்னார்.

கடைசியாக எங்களுக்கு எழுதிய கடிதத்தில் வில்லீ இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: “நான் சேவிக்கும் அன்பான கடவுள் எனக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுக்கிறார்; சகித்திருந்து, நான் வெற்றி சிறப்பதற்கு கடைசி வரை நிச்சயம் என்னை பலப்படுத்துவார். எனக்கு கொஞ்சம்கூட வருத்தமில்லை என மீண்டும் சொல்ல விரும்புகிறேன், கர்த்தருக்குள் நான் திடமாய் நிலைத்திருக்கிறேன்!”

பெர்லினுக்கு அருகிலிருந்த பிரான்டன்பர்க் சிறைச்சாலையில் வில்லீ மறுநாள் அதாவது 1942, செப்டம்பர் 2-⁠ம் தேதி தூக்கிலிடப்பட்டார். அப்போது அவருக்கு 27 வயது. “எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு” என பிலிப்பியர் 4:13-⁠ல் (பொது மொழிபெயர்ப்பு) சொல்லப்பட்ட வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை என்பதற்கு அவருடைய உதாரணம் அத்தாட்சி அளிக்கிறது.

மரணம் வரை வின்கோ காட்டிய விசுவாசம்

1941-⁠ல் ஜெர்மானியப் படை யுகோஸ்லாவியாவுக்குள் நுழைந்தது; இதனால் பிபீ அக்காவும், அவர்களது கணவர் வின்கோவும், அவர்களது 12 வயது மகள் ஃபீனீயும் ஆஸ்திரியாவுக்கு வரும் கட்டாயம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் ஆஸ்திரியாவிலிருந்த பெரும்பாலான சாட்சிகள் சிறைச்சாலைகளிலோ சித்திரவதை முகாம்களிலோ அடைக்கப்பட்டிருந்தார்கள். பிரஜா உரிமை இல்லாததால், அதாவது ஜெர்மானிய பிரஜையாக இல்லாததால் அவர்கள் மூவரும் தெற்கு ஆஸ்திரியாவில் எங்கள் வீட்டுக்கு அருகே இருந்த பண்ணையில் கட்டாய உழைப்பு அடிப்படையில் வேலை செய்யும்படி நியமிக்கப்பட்டார்கள்.

பின்னர் 1943, ஆகஸ்ட் 26-⁠ம் தேதி கெஸ்டப்போக்கள் (நாசி உளவு போலீஸார்) வின்கோவை கைது செய்தார்கள். ஃபீனீ அவளுடைய அப்பாவிடம் பிரியாவிடை சொல்ல வந்தபோது போலீஸ் அதிகாரி ஓங்கி ஓர் அறைவிட்டதில் அவள் பறந்து போய் தடாலென்று விழுந்தாள். வின்கோவை அடிக்கடி விசாரணை செய்தார்கள்; கெஸ்டப்போக்கள் அவரை கண் மண் தெரியாமல் அடித்தார்கள்; மியூனிச்சிலுள்ள ஷ்டாடால்ஹைம் சிறைச்சாலைக்கு அவரைக் கொண்டு போனார்கள்.

1943, அக்டோபர் 6-⁠ம் தேதி வேலை செய்யுமிடத்தில் போலீஸார் என்னைக் கைது செய்தார்கள்; என்னையும் வின்கோ இருந்த அதே ஷ்டாடால்ஹைம் சிறைச்சாலைக்கு அனுப்பினார்கள். பிரெஞ்சு மொழியை சரளமாக பேசியதால் பிரான்சு நாட்டு போர்க் கைதிகளிடம் பேசுவதற்கு என்னை மொழிபெயர்ப்பாளராக பயன்படுத்திக் கொண்டார்கள். சிறை வளாகத்துக்குள் நடந்து போகையில் வின்கோவுடன் செய்திகளைப் பரிமாறிக்கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

வின்கோ, மற்ற சாட்சிகளுக்கு பைபிள் பிரசுரங்களை விநியோகித்தார் என்றும், சாட்சிகளாக உள்ள கணவர்கள் சித்திரவதை முகாம்களில் இருந்ததால் அவர்களுடைய மனைவிகளுக்குப் பண உதவி அளித்தார் என்றும் அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது; இறுதியில் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது. பெர்லினுக்கு அருகில், வில்லீ தூக்கிலிடப்பட்ட அதே சிறைச்சாலைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு 1944, அக்டோபர் 9-⁠ம் தேதி சிரச்சேதம் செய்யப்பட்டார்.

வின்கோ தன் குடும்பத்தாரை கடைசியாக சந்தித்த காட்சி நெஞ்சைப் பிழிவதாக இருந்தது. அவரை சங்கிலிகளில் கட்டியிருந்தார்கள், பயங்கரமாக அடித்திருந்தார்கள்; சங்கிலிகள் இருந்ததால் குடும்பத்தாரை அவர் ஆரத்தழுவக்கூட முடியவில்லை. கடைசியாக ஃபீனீ அவளுடைய அப்பாவை பார்த்தபோது அவளுக்கு 14 வயது. அவர் கடைசியாக சொன்ன வார்த்தைகளை அவள் மறக்கவேயில்லை: “ஃபீனீ, அம்மாவை நல்லா கவனிச்சுக்கோ!”

அவளுடைய அப்பாவின் மரணத்துக்குப் பிறகு ஃபீனீ வலுக்கட்டாயமாக அவளுடைய அம்மாவிடமிருந்து பிரிக்கப்பட்டாள்; அவளை “திருத்த” முயன்ற ஒரு நாசி குடும்பத்தாரிடம் கொண்டுவிடப்பட்டாள். அவர்கள் அடிக்கடி அவளை கண்டபடி போட்டு அடித்தார்கள். ஆனால், அவளை மோசமாக கொடுமைப்படுத்தின அந்த ஜெர்மானிய குடும்பத்தாரை ரஷ்ய ராணுவத்தார் ஆஸ்திரியாவுக்குள் புகுந்தபோது சுட்டுக் கொன்றார்கள். காரணம்? அவர்களைப் பொறுத்தவரை அந்தக் குடும்பத்தார் மோசமான நாசிக்கள்.

போருக்குப் பிறகு என் அக்கா முழுநேர ஊழியத்தைத் தொடர்ந்து செய்தார். 1998-⁠ல் அக்கா மரிக்கும்வரை தன்னுடைய இரண்டாவது கணவரான ஹான்ஸ் ஃபார்ஸ்டருடன் யெகோவாவின் சாட்சிகளுடைய சுவிட்சர்லாந்து கிளை அலுவலகத்தில் சேவை செய்தார். ஃபீனீயும் அவளுடைய பெற்றோரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி, இப்போது சுவிட்சர்லாந்தில் மெய்க் கடவுளாகிய யெகோவாவுக்கு சேவை செய்து வருகிறாள்.

இறுதியில் விடுதலை!

1945-⁠ன் ஆரம்பத்தில் குண்டுவீச்சுக்கு இரையான கட்டடங்களில் மியூனிச்சிலிருந்த எங்கள் சிறைச்சாலையும் ஒன்று. அந்த நகரமே இடிந்து சின்னாபின்னமானது. இதற்குள் நான் சிறைச்சாலையில் 18 மாதங்களை கழித்திருந்தேன்; இறுதியில் என்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நாள் வந்தது. அது 1945, மே 8-⁠ம் தேதி, வெளிப்படையாக போர் நிறுத்தப்பட்டதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த விசாரணையின்போது “ராணுவத்தில் சேர உனக்கு ஆசையா?” என்று என்னிடம் கேட்டார்கள்.

“மிலிட்ரி டிரஸ் போட்டுக்கறதுக்கும் ‘ஹைல் ஹிட்லர்’ன்னு சொல்றதுக்கும் கைதிகளுக்கெல்லாம் அனுமதியில்லை” என்று பதிலளித்தேன். ஜெர்மானிய படையில் சேவை செய்ய எனக்கு விருப்பமிருக்கிறதா என கேட்டபோது, “ராணுவத்தில் கட்டாய ஆள் சேர்ப்புக்கான பேப்பர்களை தயவுசெய்து என்கிட்ட கொடுங்கள், அதுக்குப் பிறகு என் முடிவை சொல்றேன்!” என்று பதிலளித்தேன்.

சில தினங்களுக்குப் பிறகு ஒருவழியாக போர் முடிவுக்கு வந்தது, நான் விடுதலை செய்யப்பட்டதாக என்னிடம் வந்து சொன்னார்கள். அதன் பின்பு சீக்கிரத்திலேயே நான் கிராஸ் என்ற இடத்திற்குக் குடிமாறினேன். அங்கு 35 சாட்சிகள் இருந்த சிறிய சபை ஒழுங்கமைக்கப்பட்டது. இப்போது கிராஸ் பகுதியில் எட்டு சபைகள் செழித்தோங்குகின்றன.

அன்பு துணைவி

போர் முடிந்த கொஞ்ச நாட்களில் நான் ஹேலேனா டுன்ஸ்ட் என்ற இளம் பள்ளி ஆசிரியையை சந்தித்தேன்; அவள் நாசி கட்சியில் உறுப்பினராக இருந்தவள். நாசி கொள்கைகள் பொய்த்துப் போனதால் அவள் அதிக ஏமாற்றம் அடைந்திருந்தாள். ஆரம்பத்தில் நான் அவளுடன் பேசும்போது, “கடவுளுடைய பெயர் யெகோவான்னு உங்களுக்கு மட்டும் எப்படி தெரிந்தது? மற்றவர்களுக்கு ஏன் தெரியல?” என கேட்டாள்.

“ஏன்னா நிறைய பேர் பைபிளை ஆராய்வதே இல்லை” என்று பதிலளித்தேன். பைபிளிலிருந்து கடவுளுடைய பெயரை அவளுக்குக் காட்டினேன்.

“கடவுளுடைய பெயர் யெகோவா என பைபிளே சொல்லுதுன்னா கட்டாயம் இந்த உண்மையை எல்லாருக்கும் நாம சொல்லியாகனும்!” என்று ஆச்சரியம் பொங்க சொன்னாள். ஹேலேனா பைபிள் சத்தியங்களைப் பிரசங்கிக்க ஆரம்பித்தாள், ஒரு வருடத்திற்குப் பிறகு யெகோவாவுக்கு தன்னை ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்றாள். 1948, ஜூன் 5-⁠ம் தேதி என் கரம்பற்றினாள்.

1953, ஏப்ரல் 1-⁠ம் தேதி நாங்கள் யெகோவாவின் சாட்சிகளது முழுநேர ஊழியர்கள் ஆனோம். பின்னர் நியூ யார்க், செளத் லான்சிங்கிலுள்ள உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளியின் 31-⁠ம் வகுப்பில் கலந்துகொள்ள அழைப்பைப் பெற்றோம். 64 நாடுகளிலிருந்து வந்திருந்த மற்ற மாணாக்கர்களுடன் இதயத்துக்கு இதமளிக்கும் கூட்டுறவை ரொம்பவே அனுபவித்து மகிழ்ந்தோம்.

பட்டமளிப்புக்குப் பின்பு நாங்கள் மீண்டும் ஆஸ்திரியாவுக்கே நியமிக்கப்பட்டோம். சில வருடங்களுக்கு ஆவிக்குரிய விதத்தில் பலப்படுத்துவதற்காக சபைகளை சந்திப்பது எங்கள் வேலையாக இருந்தது. பிறகு லக்ஸம்பர்க்கிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் வேலை செய்வதற்கான அழைப்பைப் பெற்றோம். பிறகு ஆஸ்திரியா, வியன்னாவிலுள்ள கிளை அலுவலகத்திற்கு போகும்படி சொல்லப்பட்டோம். 1972-⁠ல் அங்கு சேவை செய்கையில் வியன்னாவில் குடியேறிய யுகோஸ்லாவிய தொழிலாளிகளுக்கு பிரசங்கிப்பதற்காக செர்பிய-குரோஷிய மொழியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தோம். இப்போது எட்டு செர்பிய-குரோஷிய மொழி சபைகள் வியன்னாவில் உள்ளன; ஐரோப்பாவின் நாலாபுறத்திலிருந்தும் வந்தவர்கள் இந்த சபைகளில் இருக்கிறார்கள்!

2001, ஆகஸ்ட் 27-⁠ம் தேதி ஹேலேனா மரணத்தில் என்னைவிட்டுப் பிரிந்தாள். சந்தோஷமிக்க எங்கள் 53 வருட தாம்பத்திய வாழ்க்கையில் அவள் நம்பகமான, அருமையான உதவியாளாக, தோழியாக நிரூபித்திருந்தாள். இப்போது உயிர்த்தெழுதல் நம்பிக்கை எனக்கு இன்னும் அருமையானதாக ஆகிவிட்டது.

கடவுளுடைய அன்பில் திருப்தி காணுதல்

என் வாழ்க்கையில் நிறைய சோகங்களை அனுபவித்திருந்தாலும் இப்போது ஆஸ்திரியா கிளை அலுவலகத்தில் திருப்தியாக வேலை செய்கிறேன். “நாசி ஆட்சியில் மறக்கப்பட்ட பலியாட்கள்” என்ற கண்காட்சியில் தனிப்பட்டவர்களின் அனுபவங்களைத் தொகுத்துரைக்கும் விசேஷ சிலாக்கியம் சமீபத்தில் எனக்கு கிடைத்திருக்கிறது. 1997 முதற்கொண்டு இந்தக் கண்காட்சி 70 ஆஸ்திரிய நகரங்களையும் பட்டணங்களையும் வலம் வந்திருக்கிறது; இதில், நாசி துன்புறுத்துதலில் உண்மை கிறிஸ்தவர்கள் எப்படி விசுவாசத்தையும் தைரியத்தையும் காண்பித்தார்கள் என்று நாசி சிறைச்சாலைகளிலிருந்தும் சித்திரவதை முகாம்களிலிருந்தும் தப்பிப்பிழைத்த கண்கண்ட சாட்சிகள் பேசினார்கள்.

விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருந்த இத்தகையவர்களை நான் தனிப்பட்ட விதத்தில் அறிந்திருப்பதை பாக்கியமாக கருதுகிறேன். “மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டா[து]” என ரோமர் 8:38, 39-⁠ல் சொல்லப்பட்ட உண்மைக்கு இவர்கள் ஒப்பற்ற விதத்தில் சான்றளிக்கிறார்கள். (g03 2/08)

[பக்கம் 17-ன் படம்]

1930-⁠ல் எங்கள் குடும்பம் (இடமிருந்து வலம்): நான், பிபீ, அப்பா, வில்லீ, அம்மா, வின்கோ

[பக்கம் 18-ன் படம்]

தூக்கிலிடுவதற்கு சற்று முன்பு அண்ணன் வில்லீ

[பக்கம் 19-ன் படம்]

மியூனிச், ஷ்டாடால்ஹைம் சிறைச்சாலையில் நானும் வின்கோவும் இருந்தோம்

[பக்கம் 19-ன் படங்கள்]

வின்கோவின் மகள் ஃபீனீ கொடூரமிக்க நாசி குடும்பத்தாரிடம் விடப்பட்டாள்; இன்று வரை அவள் உண்மையுள்ளவளாக இருக்கிறாள்

[பக்கம் 20-ன் படம்]

எங்கள் 53 வருட தாம்பத்தியத்தில் ஹேலேனா அருமையான துணைவியாக இருந்தாள்

[பக்கம் 20-ன் படம்]

“நாசி ஆட்சியில் மறக்கப்பட்ட பலியாட்கள்” என்ற கண்காட்சியில் பேசுகையில்