நான் மியூசிக் வீடியோக்களை பார்க்கலாமா?
இளைஞர் கேட்கின்றனர் . . .
நான் மியூசிக் வீடியோக்களை பார்க்கலாமா?
“மியூசிக் வீடியோக்கள் ரொம்ப பிரமாதமாயிருக்கும். அதுல சிலது, குட்டி சினிமா போலவே இருக்கும். அதுல ஒரு கருத்தும் இருக்கும், டான்ஸும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.”—கேசி.
“புதுசு புதுசா வர்ற மியூசிக் பத்தி தெரிஞ்சுக்க அது நல்ல வழி. டாப்-40 மியூசிக்கைவிட அதிகத்தை இதுல தெரிஞ்சுக்க முடியும். கதையடிக்கிறதுக்கும் மியூசிக் வீடியோக்கள் நல்ல சான்ஸ் குடுக்குது.”—ஜாஷ்.
“யார் பாடுறா, என்ன டிரெஸ் போட்டிருக்கா, எப்படி நடிக்கிறா அப்படீங்கிற வீடியோல வர்ற விவரங்கள் எல்லாமே ரொம்ப முக்கியம். இதை எல்லாம் சேர்த்து பார்த்தாதான் பாடல் வரிகளோட அர்த்தம் புரியும்.”—கிம்பர்லீ.
“எனக்கு பிடிச்ச பேண்டுகள் இப்போ என்ன செய்யப்போறாங்கன்னு தெரிஞ்சுக்க ஆசை. அதுல வர்ற ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும். சில வீடியோக்கள் ஒரே வேடிக்கையா இருக்கும். ஆனாலும் ஜாக்கிரதையா இருக்கணும்.”—சாம்.
மியூசிக் வீடியோக்களை பார்த்து ரசிப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். அவை முதன்முறையாக டிவியில் தோன்றியபோது ஓரளவு எளிய, குறைந்த பட்ஜெட் தயாரிப்புகளாக இருந்தன. ஆனால் மியூசிக் வீடியோக்கள், இன்று தோன்றி நாளை மறையும் டிரெண்டுகள் அல்ல என்பதையும் ரெக்கார்டுகளின் விற்பனையை பெரிதும் அதிகரிப்பவை என்பதையும் நிரூபித்த பிறகு கலை நுணுக்கத்திலும் தொழில்நுட்பத்திலும் படுவேகமாக அதிநவீனமாயின. இன்றைய இசை உலகில் அவற்றிற்கு ஒரு தனி இடம் உண்டு. இளைஞர் மத்தியிலும் அவை படுபாப்புலர் ஆகிவிட்டன. சில நாடுகளில், வெறும் மியூசிக் வீடியோக்களை மட்டுமே ஒளிபரப்பும் டிவி நிலையங்கள் உள்ளன!
ஆனால், மேலே சொல்லப்பட்ட சாம் போன்ற சில இளைஞர்கள், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள்? சில மியூசிக் வீடியோக்கள் உங்கள்மீது கெட்ட பாதிப்பை ஏற்படுத்தக்கூடுமா? ஒருவேளை, உங்கள் எண்ணங்களையும் ஒழுக்க நெறிகளையும் கறைப்படுத்துமா அல்லது சிருஷ்டிகரோடு உள்ள உங்கள் உறவையே கெடுத்துவிடுமா? இப்படிப்பட்ட கேள்வியே, ‘ரொம்ப ஓவர்’ என்று ஒருவேளை உங்களுக்கு தோன்றலாம். ஆனால், குளிப்பதற்காக குளத்திற்கோ கடலுக்கோ செல்வதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். ‘இங்கே குளிப்பது ஆபத்தானது’ என்ற எச்சரிப்பு பலகையை அங்கே பார்த்தும் அதை அசட்டை செய்வது ஞானமான காரியமா? நிச்சயமாக இல்லை. ஆகவே, மியூசிக் வீடியோக்கள் சம்பந்தப்பட்ட சில ஆபத்துக்களைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பதும் ஞானமான செயலே.
ஆபத்தான பகுதிகள்
பார்க்கும் காரியங்களும், கேட்கும் விஷயங்களும் உங்களை நிச்சயம் பாதிக்கும் என்ற உண்மையை நீங்கள் 1 சாமுவேல் 16:14-23) ஆனால், இசையானது ஒருவர்மீது கெட்ட பாதிப்பையும் ஏற்படுத்துமா? ராக் அண்டு ரோல்—அதன் சரித்திரமும் பாணியின் வளர்ச்சியும் என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “இசையானது சில சமயங்களில் மட்டுமே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மற்ற சமயங்களில் எந்த பாதிப்பையுமே ஏற்படுத்தாது என்றும் யாருமே சொல்ல முடியாது. ராக் இசைக்கு நல்ல பாதிப்புகள் உண்டு (ஏற்படுத்தியும் இருக்கிறது) என்று நாம் ஒப்புக்கொண்டால், அதற்கு கெட்ட பாதிப்புகளும் உண்டு (ஏற்படுத்தியும் இருக்கிறது) என்பதையும் ஒப்புக்கொள்ள தயாராயிருக்க வேண்டும். ‘நான் வெறுமனே இசையைத்தான் ரசிக்கிறேன், அது என்னை கொஞ்சமும் பாதிக்காது’ என்று பெருமையடிப்பவர், அடி முட்டாளாகத்தான் இருக்க வேண்டும் அல்லது முழு விவரத்தையும் அறியாதவராக இருக்க வேண்டும்.”
ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்! இஸ்ரவேலின் முதல் அரசனாகிய சவுல் தனக்கு நன்மையுண்டாக, அதாவது தன் உணர்ச்சிகளை அமைதிப்படுத்த இசையை உபயோகித்தார் என்று பைபிள் கூறுகிறது. (நமது கண்கள் நம் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதை பைபிள் திரும்பத்திரும்ப கூறுகிறது. (நீதிமொழிகள் 27:20; 1 யோவான் 2:16) அதனால்தான் வீடியோ தயாரிப்பாளர்கள், காந்தமாய் கவர்ந்திழுக்கும் காட்சிகளையும் இசையோடு சேர்க்கின்றனர்; இப்படி செய்வதன் மூலம், அந்த இசை ரசிகர்கள்மீது ஏற்படுத்தும் பாதிப்பை பல மடங்கு அதிகமாக்குகின்றனர். எப்படிப்பட்ட காட்சிகள் அதிகமாய் புகுத்தப்படுகின்றன?
சுமார் 57 சதவிகித ராக் வீடியோக்களில் வன்முறை காட்சிகள் இடம்பெறுவதாக ஓர் ஆராய்ச்சி காட்டுகிறது. ஏறக்குறைய 76 சதவிகித வீடியோக்களில் பாலுறவு விஷயங்கள் தெரிவிக்கப்படுகின்றன. மற்றொரு சமீபத்திய ஆராய்ச்சி, 75 சதவிகித கான்செப்ட் வீடியோக்களில் (ஒரு கருத்தைச் சொல்லும் வீடியோக்களில்) பாலுறவு காட்சிகளும் இடம்பெற்றிருந்தன என்றும், பாதிக்கும் அதிகமானவற்றில் முக்கியமாய் பெண்களுக்கு எதிரான வன்முறை இடம்பெற்றிருந்தது என்றும் காட்டுகிறது. இப்படிப்பட்ட வீடியோக்களைப் பார்ப்பது உங்களை உண்மையில் பாதிக்குமா? “மியூசிக் வீடியோக்களைப் பார்ப்பது, இளம் வயதில் அல்லது ஆபத்தான பாலுறவில் ஈடுபடுவது சம்பந்தமாக இளவட்டங்களின் மனப்பான்மையை பாதிக்கலாம் என்று பரிசோதனை ஆய்வுகள் காண்பித்துள்ளன” என ஒரு பத்திரிகை சுட்டிக் காட்டுகிறது. அதிர்ச்சியூட்டுவதில் தங்கள் முன்னோடிகளையும் தங்கள் சகாக்களையும் தூக்கி சாப்பிட முயலும் இன்றைய இசைக் கலைஞர்கள், அதிக விலாவாரியான மியூசிக் வீடியோக்களை தயாரிப்பதை யாருமே மறுக்க முடியாது.
கல்வித்துறையில் வல்லுனரான ஒருவர் இவ்வாறு கூறினார்: “தாங்கள் கேட்பதும், மியூசிக் வீடியோ காரணமாக தாங்கள் பார்ப்பதும் முந்தைய சந்ததிமீது இசை ஏற்படுத்திய பாதிப்பைவிட ஒன்றும் அதிகமில்லை என அநேகர் வாதிடுகிறார்கள் . . . ஆனால் இன்றைய கலைஞர்களில் அநேகர், ரெக்கார்டுகளின் விற்பனையை அதிகரிப்பதற்காக கெட்ட வார்த்தைகளையும் ஒழுக்கக்கேடான விஷயங்களையும் ஆணவத்தோடு சேர்த்துவிடுவதாக தெரிகிறது.” குறிப்பிட்ட மியூசிக் வீடியோ சேனலைப் பார்ப்பவர்களைப் பற்றி சிகாகோ பத்திரிகை இவ்வாறு கூறுகிறது: “அவர்கள் இடைவிடாமல் பார்ப்பதெல்லாம், கீழ்த்தரமான எண்ணங்களை தூண்டுகிற ஆபாச காட்சிகளையே.”
ஒரு மியூசிக் வீடியோவில் வந்த காட்சியைப் பற்றி சிகாகோ பத்திரிகை இவ்வாறு விவரிக்கிறது: “ஹோட்டலில் அமர்ந்திருக்கும் ஓர் இளைஞன் தன் தலையை கொஞ்சம் ஓவராக பின்னால் சாய்க்கிறான். பெரிய, சிவந்த வெட்டு ஒன்று அவன் கழுத்தில் தோன்றி, அந்தத் தலை கீழே விழுகிறது.” மற்றொரு வீடியோவில், ஒருவன் தனது உடைகளை ஒவ்வொன்றாக கழற்றி போட்டு கடைசியில் இரத்தம் சொட்டச்சொட்ட தனது சதையையும் தசைகளையும்கூட கிழித்துப்போடும் காட்சி இடம்பெற்றதாக அறிக்கை செய்யப்பட்டது. சொல்ல முடியாதளவிற்கு அதிர்ச்சியூட்டும் மற்ற காட்சிகளும் காட்டப்பட்டன.
‘இங்கு விவரிக்கப்பட்ட வீடியோக்கள் ரொம்ப ஓவர், பெரும்பாலானவை இவ்வளவு மோசமாக இருப்பதில்லை’ என்று சொல்லி சிலர் இந்த உண்மைகளை ஒதுக்கித் தள்ளலாம். அவர்களைப் பொறுத்தவரை மியூசிக் வீடியோக்கள் அவ்வளவு அதிர்ச்சியூட்டுவதாகவோ மோசமானதாகவோ இல்லை என்றும்கூட சிலர் வாதாடலாம். ஆனால், அப்படிப்பட்ட வீடியோக்களை திரும்பத்திரும்ப பார்த்தது அவர்களை மரத்துப்போக செய்திருப்பதையே இது காட்டுகிறது அல்லவா? “எதை பார்க்குறீங்கங்கிறதை பத்தி ஜாக்கிரதையா இல்லைனா முதல்ல மோசமா தெரிஞ்சது காலப்போக்குல சர்வசாதாரணமாயிடும். உங்களை அறியாமலேயே இன்னும் மோசமானதை பார்க்க விரும்புவீங்க, ஆரம்பத்துல அதிர்ச்சியா இருந்ததை இப்ப அமைதியா ஏத்துக்குவீங்க” என்று இக்கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட கேசி என்ற இளைஞன் ஒப்புக்கொள்கிறான்.
அதன் விளைவாக என்ன நடக்கலாம்? ஒழுக்க ரீதியில் சரியான தீர்மானங்களை செய்யும் திறமையை நீங்கள் இழந்துவிடலாம். நம் மனங்கள் மோசமான விதத்தில் பாதிக்கப்படுவது மிக எளிது; அதனால்தான், “நடைமுறையான ஞானத்தையும் சிந்திக்கும் திறமையையும் பாதுகாத்துக்கொள்” என்று பைபிள் நமக்கு அறிவுரை கூறுகிறது. (நீதிமொழிகள் 3:21, NW; 5:2, NW) மற்றொரு மோசமான விளைவாக, யெகோவா தேவனோடு உங்களுக்கு இருக்கும் நட்புறவு பாதிக்கப்படலாம். அதுவே உங்களுக்கு மிகவும் அருமையான பொக்கிஷம் அல்லவா? ஆகவே, அந்த நட்புறவை காத்துக்கொள்ள எவ்வித மோசமான பொழுதுபோக்கையும் தவிர்க்க நீங்கள் முயல வேண்டும். அதை எப்படி செய்யலாம்?
உங்களையே பாதுகாத்தல்
முதலில், பைபிள் நேரடியாக கண்டனம் செய்வதை வெளிப்படையாக காண்பிக்கும் காட்சிகளைப் பார்ப்பதே தவறு என்பதை தயவுசெய்து ஒப்புக்கொள்ளுங்கள். (சங்கீதம் 11:5; கலாத்தியர் 5:19-21; வெளிப்படுத்துதல் 21:8) ‘பரிசுத்தவான்களுக்கு ஏற்றதாக’ இல்லாதவற்றை ஒரு வீடியோ பகிரங்கமாக காண்பித்தால் அதைப் பார்க்கவே கூடாது என்பதில் தீர்மானமாயிருங்கள். (எபேசியர் 5:3, 4) ஆர்வத்தைத் தூண்டும் ஒரு வீடியோவைப் பார்த்துக் கொண்டிருக்கையில் சேனலை மாற்றுவது அல்லது டிவியை அணைப்பது கஷ்டம்தான். எனவே, ‘வீணானவற்றைப் பாராதபடி என் கண்களை திருப்பிவிடும்’ என்று எழுதிய சங்கீதக்காரனைப் போலவே நீங்களும் ஜெபிக்க வேண்டியிருக்கலாம்.—சங்கீதம் 119:37, NW.
மேலே விவரித்ததைப் போன்ற அதிர்ச்சியூட்டும் வீடியோக்களைக் கண்டால் இயல்பாகவே நீங்கள் அவற்றை ஒதுக்கிவிடலாம். என்றாலும், சில வீடியோக்களின் அளிப்பு மிகவும் தந்திரமாய் இருப்பதாக தோன்றுகிறது. பாலுறவு பற்றிய காட்சிகள் கணநேரமே வந்து போகலாம். பாடலின் வரிகளும் காட்சிகளும் அவ்வளவு திறமையாக இணைக்கப்பட்டு எதையும் வெளிப்படையாக சொல்லாமலே அல்லது காட்டாமலே தேவபக்தியற்ற ஒரு கருத்தை அவை கூறலாம். ஆனால், ஒரு வீடியோவை பார்த்த பிறகு உங்களுக்கு கொஞ்சம் சங்கோஜமாக இருந்தாலும், அது ஏதோவொரு விதத்தில் மோசமானதாக அல்லது கிறிஸ்தவர்களுக்கு தகாததாக இருந்திருக்கும். ஆனால், ஒரு வீடியோவின் ஒழுக்க தரத்தைப் பற்றி அவ்வளவு தெளிவாக தெரியாதபோது எதைப் பார்ப்பது, எதைத் தவிர்ப்பது என தீர்மானிப்பது எப்படி?
நீங்கள் மியூசிக் வீடியோக்களை பார்க்கிறீர்களா, இல்லையா என்பது உங்கள் தனிப்பட்ட தீர்மானம்; அதோடு, நீங்கள் எதைப் பார்க்கலாம், எதைப் பார்க்கக்கூடாது என்பதை தீர்மானிக்கும் பொறுப்புடைய உங்கள் பெற்றோரின் தீர்மானமும்கூட. (எபேசியர் 6:1, 2) ஆனால், மியூசிக் வீடியோக்களைப் பார்க்க உங்கள் பெற்றோர் அனுமதித்தாலும், சரியானது என நீங்கள் நினைப்பதை மட்டுமே வைத்து தீர்மானிக்க கூடாது. ‘நன்மை தீமையை வித்தியாசம் காண’ நமது ‘பகுத்தறியும் ஆற்றல்களைப் பயிற்றுவிக்கும்படி’ எபிரெயர் 5:14 (NW) நம்மை உற்சாகப்படுத்துகிறது. யெகோவாவின் நோக்குநிலையில் எது சரியானது, எது தவறானது என்பதை தீர்மானிக்க உதவும் பைபிள் நியமங்களை ஆராய்வதன் மூலமாக நமது பகுத்தறியும் ஆற்றல்களை பயிற்றுவிக்கலாம். அப்படிப்பட்ட பைபிள் நியமங்களைப் பற்றி தியானித்தால், உங்களுக்கு வழிகாட்டும் நேரடியான பைபிள் சட்டம் ஒன்று இல்லையென்றாலும் உங்கள் ஆவிக்குரிய ஆரோக்கியத்திற்கு எது கேடு விளைவிக்கும் என்பதை நீங்களே கண்டுணரலாம்.
அப்படியென்றால், மியூசிக் வீடியோக்களை பார்ப்பது சம்பந்தமாக பைபிளின் எந்தக் குறிப்பிட்ட நியமங்கள் உங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்? எதிர்காலத்தில் வரும் ஓர் கட்டுரை இதை கலந்தாலோசிக்கும். (g03 2/22)
[பக்கம் 22-ன் சிறு குறிப்பு]
“‘நான் வெறுமனே இசையைத்தான் ரசிக்கிறேன், அது என்னை கொஞ்சமும் பாதிக்காது’ என்று பெருமையடிப்பவர், அடி முட்டாளாகத்தான் இருக்க வேண்டும் அல்லது முழு விவரத்தையும் அறியாதவராக இருக்க வேண்டும்”
[பக்கம் 23-ன் படங்கள்]
மோசமான ஒன்றைப் பார்த்தும் அது உங்களை பாதிக்காது என்று நினைக்க முடியுமா?