Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மன்னிக்க முடியாத பாவம் உண்டா?

மன்னிக்க முடியாத பாவம் உண்டா?

பைபிளின் கருத்து

மன்னிக்க முடியாத பாவம் உண்டா?

மரண தண்டனையைவிட பயங்கரமான தண்டனை ஏதாவது இருக்கிறதா? ஆம், இருக்கிறது, அதுதான் உயிர்த்தெழுதல் நம்பிக்கையே இல்லாத மரணம்; அது மன்னிக்க முடியாத பாவத்தை செய்த ஒருவருக்கு தரப்படும் தண்டனையாகும். ‘மன்னிக்கப்படாத’ ஒரு வகை பாவமுண்டு என இயேசு கூறினார்.​—மத்தேயு 12:31.

என்றபோதிலும், கடவுள் மன்னிக்கும் குணம் படைத்தவர் என பைபிள் அவரை வர்ணிக்கிறது. மனக்கசப்பை வளர்த்துக்கொண்டு மன்னிக்காமல் இருக்கும் குணம் மனிதரிடம் இருக்கலாம், ஆனால் கடவுள் அப்படிப்பட்டவர் அல்ல, அவர் ‘தாராளமாக மன்னிக்கிறவர்.’ (ஏசாயா 55:7-9, NW) சொல்லப்போனால், நம்முடைய பாவங்களை அடியோடு அழித்துவிடும் அளவுக்கு மிகவும் விலையேறப்பெற்ற கிருபாதார பலியாக​—⁠பாவங்களை ஈடுசெய்யும் பலியாக​—⁠தமது அருமை குமாரனையே இந்தப் பூமிக்கு கடவுள் அனுப்பினாரே. இது அவருக்குப் பெரும் இழப்பாக இருந்தபோதிலும் கடவுள் அதை செய்தார்.​—யோவான் 3:16, 17; அப்போஸ்தலர் 3:19, 20; 1 யோவான் 2:1, 2.

பெரும் பாவங்களைச் செய்த அநேகரை ஏற்ற சமயத்தில் கடவுள் உயிர்த்தெழுப்புவார், ஆனால் அவர்களுடைய கடந்தகால செயல்களுக்காக அவர்களிடம் அவர் கணக்கு கேட்க மாட்டார். (அப்போஸ்தலர் 24:15; ரோமர் 6:23) சொல்லப்போனால், மன்னிக்க முடியாத பாவத்தைத் தவிர, “எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்” என இயேசு கூறினார். (மத்தேயு 12:31) ஆகவே, ‘அது என்ன பாவம், கடவுளே மன்னிக்க முடியாத அப்பேர்ப்பட்ட கொடிய பாவம்?’ என நீங்கள் கேட்கலாம்.

மனந்திரும்புதலுக்குரிய கட்டத்தைக் கடந்துவிடுதல்

இயேசு கொடுக்கும் எச்சரிக்கை ‘பரிசுத்த ஆவிக்கு விரோதமாக’ வேண்டுமென்றே ‘தூஷிப்பதையே’ குறிக்கிறது. இத்தகைய பாவத்திற்கு விடுதலை இல்லை. “அது இம்மையிலும் மறுமையிலும் . . . மன்னிக்கப்படுவதில்லை” என்றும் கூறினார். (மத்தேயு 12:31, 32) இத்தகைய பாவத்தை செய்தவர்களுக்கு உயிர்த்தெழுதலே கிடையாது.

பரிசுத்த ஆவிக்கு விரோதமான தூஷணம் என்றால் என்ன? அது இருதயத்திலிருந்து பிறக்கும் தீய மனப்பான்மையையும் நோக்கத்தையும் வெளிப்படுத்துவதாகும். கடவுளுடைய பரிசுத்த ஆவிக்கு விரோதமாக செயல்பட வேண்டுமென்பதையே நோக்கமாக கொண்டிருப்பதால் இந்தப் பாவம் அதிக வினைமையான பாவமாகும். உதாரணமாக, உலகில் சில இடங்களில், கொலைக்கான உள்நோக்கத்தையும் அது செய்யப்பட்ட விதத்தையும் பொறுத்து முதல் தரக் கொலை, இரண்டாம் தரக் கொலை என சட்டம் வேறுபடுத்திக் காட்டுகிறது. வேண்டுமென்றே அல்லது திட்டமிட்டு கொலை செய்பவருக்கு மட்டுமே ஆயுள் (மரண) தண்டனை விதிக்கப்படுகிறது.

அப்போஸ்தலன் பவுல் முன்பு தூஷிக்கிறவராக இருந்தார், ஆனால் “நான் அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச் செய்தபடியினால் இரக்கம் பெற்றேன்” என்று கூறினார். (1 தீமோத்தேயு 1:13) பரிசுத்த ஆவியை வேண்டுமென்றே எதிர்ப்பதுதான் பரிசுத்த ஆவிக்கு விரோதமான பாவமாகும். அது பொல்லாத இருதயத்தை சுட்டிக்காட்டுகிறது, அந்த இருதயம் குணப்படுத்த முடியாத ஒரு நிலைக்குச் சென்றுவிடுகிறது.

பவுல் பின்வருமாறு எழுதிய போது இத்தகைய பாவத்தைத்தான் குறிப்பிட்டிருப்பார் என்பதை அத்தாட்சி காட்டுகிறது: “ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப் போனவர்கள், . . . மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்.” (எபிரெயர் 6:4-6) ‘உண்மையை அறிந்த பின்னரும், வேண்டுமென்றே நாம் பாவத்தில் நிலைத்திருந்தால், இனி நமக்கு வேறு எந்தப் பாவம் போக்கும் பலியும் இராது’ என்றும் பவுல் அப்போஸ்தலன் கூறினார்.​—எபிரெயர் 10:26, பொது மொழிபெயர்ப்பு.

மன்னிக்க முடியாத பாவத்தைக் குறித்து எச்சரிப்பதற்கு இயேசுவைத் தூண்டியது எதுவென்றால் தம்முடைய நாளிலிருந்த மதத் தலைவர்கள் சிலருடைய நடத்தையே. ஆனால் அவர்களோ அவருடைய எச்சரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. சொல்லப்போனால், அவரை கொலையே செய்தார்கள். பரிசுத்த ஆவி அற்புதமான ஒன்றை செய்ததற்கு மறுக்க முடியாத அத்தாட்சியை பிற்பாடு அவர்கள் கேள்விப்பட்டார்கள். இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டார் என அவர்களுக்கு சொல்லப்பட்டது! இயேசுவே கிறிஸ்து என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தது! இருந்தாலும், இயேசுவின் உயிர்த்தெழுதலைப் பற்றி பொய் சொல்லும்படி ரோம சேவகர்களுக்கு லஞ்சம் கொடுத்ததன் மூலம் பரிசுத்த ஆவிக்கு விரோதமாய் தீய வழியில் செயல்பட்டார்கள்.​—மத்தேயு 28:11-15.

உண்மை கிறிஸ்தவர்களுக்கு எச்சரிக்கை

மன்னிக்க முடியாத பாவத்தின் சம்பந்தமாக கொடுக்கப்படும் எச்சரிக்கைக்கு ஏன் உண்மை கிறிஸ்தவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்? கடவுளையும் அவருடைய ஆவி செயல்படுவதையும் பற்றி நமக்கு திருத்தமான அறிவு இருந்தாலும், பொல்லாத இருதயம் நமக்குள் உருவாகக்கூடும். (எபிரெயர் 3:12) இது நமக்கு ஒருபோதும் நேரிடாது என நினைக்காதபடி, நாம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். யூதாஸ்காரியோத்தைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். அவர் ஒருகாலத்தில் இயேசுவை உண்மையுடன் பின்பற்றிய ஒருவர். 12 அப்போஸ்தலர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆகவே அவரிடம் நல்ல பண்புகள் இருந்திருக்க வேண்டும். ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் பொல்லாத சிந்தைகளும் ஆசைகளும் இருதயத்தில் வளர இடமளித்தார், கடைசியில் அவை அவரை ஆட்கொண்டன. இயேசு நடப்பித்த நம்பமுடியா அற்புதங்களைக் கண்கூடாக கண்டபோதிலும், பணத்தைத் திருடிக் கொண்டிருந்தார். பிற்பாடு, பணத்திற்காக கடவுளுடைய குமாரனை தெரிந்தே காட்டிக்கொடுத்தார்.

ஒரு காலத்தில் உண்மையுள்ள கிறிஸ்தவர்களாய் இருந்தவர்கள் கடவுளிடமிருந்து வேண்டுமென்றே விலகிச் சென்றுவிட்டனர், ஒருவேளை மனக்கசப்பு, பெருமை, அல்லது பேராசையின் காரணமாக விலகிச் சென்றிருக்கலாம், இப்பொழுது அவர்கள் கடவுளுடைய ஆவிக்கு விரோதமாக கலகம் செய்யும் விசுவாச துரோகிகளாக மாறிவிட்டார்கள். பரிசுத்த ஆவி தெளிவாக நடப்பிக்கும் காரியங்களை வேண்டுமென்றே எதிர்க்கிறார்கள். இவர்கள் மன்னிக்க முடியாத பாவத்தை செய்துவிட்டார்களா? யெகோவாவே எல்லாருக்கும் மேலான நியாயாதிபதி.​—ரோமர் 14:12.

மற்றவர்களை நியாயந்தீர்ப்பதற்குப் பதிலாக, இரகசியமான பாவங்களிலிருந்து நம்மை தனிப்பட்ட விதமாக காத்துக்கொள்ள வேண்டும், அத்தகைய பாவங்கள் படிப்படியாக நம்முடைய இருதயத்தைக் கடினப்படுத்திவிடலாம். (எபேசியர் 4:30) வினைமையான பாவங்களைச் செய்திருந்தாலும், நாம் மனந்திரும்பினால், யெகோவா தாராளமாக மன்னிப்பார் என்பது அதிக ஆறுதல் அளிக்கிறது.​—ஏசாயா 1:18, 19. (g03 2/08)

[பக்கம் 1213-ன் படம்]

பரிசேயர்கள் சிலர் மன்னிக்க முடியாத பாவத்தை செய்தனர்