Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வானிலையை பாதிக்கும் வேலி

வானிலையை பாதிக்கும் வேலி

வானிலையை பாதிக்கும் வேலி

ஆஸ்திரேலியாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

முன்பு ஒரு காலத்தில், அந்த வேலி மேற்கு ஆஸ்திரேலியாவை பிரிக்கும் விதமாக வடக்கிலிருந்து தெற்குவரை நீண்டு கிடந்தது. அது, 1907-⁠ல் கட்டி முடிக்கப்பட்டபோது உலகிலேயே மிகவும் நீண்ட வேலியாக இருந்தது. மரத்தாலும் கம்பியாலுமான இது 1,830 கிலோமீட்டர் நீளம் இருந்தது. நம்பர் 1 முயல் தடுப்பு வேலி என்பதே அதன் அதிகாரப்பூர்வ பெயராகும்.

அதன் பெயரே சுட்டிக்காட்டுகிறபடி, 19-வது நூற்றாண்டின் கடைசியில் ஆஸ்திரேலியாவின் மேற்கு நோக்கி படையெடுத்து வந்த முயல்களின் பெரும் கூட்டங்களை தடுப்பதற்காகவே இந்த வேலி முதன்முதலில் கட்டப்பட்டது. நூறு வருடம் பழமையான இந்த வேலியின் பெரும்பகுதி இன்றும் நிலைத்திருக்கிறது. சமீப காலங்களிலோ, ஓர் ஆச்சரியமூட்டும் காரணத்திற்காக விஞ்ஞானிகளின் பார்வை இதன் பக்கம் திரும்பியிருக்கிறது. மனிதன் ஏற்படுத்திய இந்த வேலி, அந்த இடத்தின் வானிலையை மறைமுகமாய் பாதிப்பதாக தோன்றுகிறது.

ஒரு மீட்டருக்கும் சற்று அதிக உயரமுள்ள வேலி எவ்வாறு வானிலையை பாதிக்க முடியும்? இதற்கான பதிலை தெரிந்துகொள்வதற்கு முன்பு, இந்த விசேஷித்த வேலியின் சரித்திரத்தை கொஞ்சம் புரட்டிப் பார்க்கலாம்.

போரிட்டும் தோல்வி

படையெடுத்து வந்த முயல்களை தடுக்கும் முயற்சியாக 1901 முதல் 1907 வரை சுமார் 400 வேலையாட்கள் வியர்வை சிந்தி, நம்பர் 1 முயல் தடுப்பு வேலியை கட்டினார்கள். மேற்கு ஆஸ்திரேலிய வேளாண் துறை அறிக்கையின்படி, “சுமார் 8,000 டன் பொருட்கள் கப்பலில் வந்து, பிறகு ரயில் மூலமாக கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கிருந்து குதிரைகள், ஒட்டகங்கள், கழுதைகள் ஆகியவற்றின் உதவியுடன் தொலைதூரத்தில் அமைந்திருந்த வேலி கட்டுமான பணி நடக்கும் இடங்களுக்கு தரை மார்க்கமாக எடுத்துச் செல்லப்பட்டன.”

வேலியின் இரண்டு பக்கங்களிலும் மூன்று மீட்டர் அகலத்திற்கு செடிகொடிகளை நீக்கி, நீண்ட பாதையை வேலையாட்கள் உண்டாக்கினர். வெட்டப்பட்ட மரங்களில் சில வேலிக்கு கம்பங்களாக உபயோகிக்கப்பட்டன; மரங்கள் இல்லாத இடங்களிலோ இறக்குமதி செய்யப்பட்ட உலோக கம்பங்கள் நாட்டப்பட்டன. வேலி கட்டி முடிக்கப்பட்டபோது முயல்களை தடுத்ததோடு, கண்டத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு செல்லும் கரடுமுரடான சாலையும் உருவானது.

கும்பலாய் வந்த முயல்களை அடைக்கப்பட்ட இடங்களிடம் திருப்பிவிட்டதன் மூலம் அந்த வேலி பெரிய வலைபோல சேவித்தது. அந்த இடங்களில் சிக்கி முயல்கள் இறந்தன. இருந்தாலும், வேலியின் சில பகுதிகளை முயல்கள் தாண்டிவிட்டன. எப்படி? எதற்கும் சளைக்காமல் மேற்கு நோக்கி பயணித்த அவை, வேலியின் கம்பிகளில் சிக்கி செத்துப்போயிருந்த ஏராளமான முயல்களின் சடலங்கள் மேலேறி, கூட்டங்கூட்டமாக வேலியை கடந்து சென்றன. ஆகவே, முதல் வேலியிலிருந்து பிரிந்துசெல்லும் கூடுதலான இரண்டு வேலிகள் கட்டப்பட்டன. இந்த மூன்று வேலிகளின் ஒட்டுமொத்த நீளம், 3,256 கிலோமீட்டர் ஆகும்.

மனித சகிப்புத்தன்மைக்கு ஓர் அத்தாட்சி

எஃப். ஹெச். புரூம்ஹால் போன்ற எல்லைக் காவலர்கள் சிலரே இந்த மிகப்பெரிய வேலியை பாதுகாக்கும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். உலகிலேயே மிக நீண்ட வேலி என்ற தனது ஆங்கில புத்தகத்தில் திரு. புரூம்ஹால் இவ்வாறு கூறுகிறார்: “பின்வருபவையே ரோந்து பணியாளர்களின் . . . வேலைகளாகும்; வேலியும் அதற்கு அருகிலிருக்கும் பாதையும் நல்ல நிலையில் இருக்கும்படி பார்த்துக்கொள்வது; . . . வேலியின் இரு பக்கங்களிலும் தேவையான தூரத்திற்கு புதர்களையும் மரங்களையும் வெட்டிவிடுவது; வேலியில் ஏறக்குறைய ஒவ்வொரு 32 கிலோமீட்டர் [20 மைல்] தூரத்திலும் வைக்கப்பட்ட கதவுகள் நன்றாக இயங்கும்படி பார்த்துக்கொள்வது; அடைக்கப்பட்ட இடங்களில் சிக்கிய [முயல்களை] அப்புறப்படுத்துவது.”

எல்லைக் காவலர்களின் பணிதான் உலகிலேயே மிகவும் தனிமையான வேலை எனலாம். ஒவ்வொரு ரோந்து பணியாளரிடமும் இருந்த ஒட்டகங்களைத் தவிர அவருக்கு வேறு துணையே கிடையாது; அவற்றின் உதவியோடு, தொடுவானம் வரை நீண்டு கிடப்பதாக தோன்றிய வேலியில் பல கிலோமீட்டர் தூரத்தை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு அவர்களுக்கு இருந்தது. ரோந்து பணியாளர்கள் சிலருக்கோ ஒட்டகங்களின் துணை கூட இல்லை; வேலியில் தங்களுக்கு நியமிக்கப்பட்ட பகுதியை கவனிப்பதற்காக, அதன் அருகிலிருக்கும் குண்டும் குழியுமான சாலையில் சைக்கிளில் அவர்கள் செல்ல வேண்டியிருந்தது. இன்றோ, வேலியில் மீதமிருக்கும் பகுதியை ஃபோர்-வீல்-⁠ட்ரைவ் வாகனத்தில் சொகுசாக அமர்ந்துகொண்டு ரோந்து போகிறார்கள்.

படுதோல்வி அடையவில்லை

இந்த வேலியால் முயல்களின் தொல்லையை தடுக்க முடியவில்லை என்பதென்னவோ உண்மைதான். என்றாலும் மகா தொல்லையாக இருந்த மற்றொரு பிராணியிடமிருந்து, அதாவது ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான பறவையாகிய ஈமுவிடமிருந்து இது பாதுகாப்பை அளித்தது. பெரிய உருவம் கொண்ட பறக்க முடியாத இந்தப் பறவைகளில் 1,00,000-⁠த்திற்கும் அதிகமானவை, வேலிக்கு மேற்கிலிருந்த செழிப்பான விளைநிலங்களுக்கு செல்ல 1976-⁠ல் முடிவு செய்தன. அந்த வேலியோ அவற்றின் படையெடுப்பை தடுத்து நிறுத்தியது. இதனால், 90,000 பறவைகளை கொல்ல நேரிட்டபோதிலும் அந்த வருடத்தின் பெருமளவு மகசூல் நாசமடைவதிலிருந்து பாதுகாக்கப்பட்டது.

இந்த நெருக்கடிக்கு பிறகு, மேற்கு ஆஸ்திரேலியாவின் சேதமடையும் நிலையிலுள்ள விளைநிலங்களை இடம்பெயர்ந்து வரும் ஈமுக்களிடமிருந்தும் சுற்றித்திரியும் காட்டு நாய் கும்பல்களிடமிருந்தும் பாதுகாப்பதற்காக 1,170 கிலோமீட்டர் தூரத்திற்கு அந்த வேலி மீண்டும் வலுப்படுத்தப்பட்டது அல்லது இடம் மாற்றி வைக்கப்பட்டது. a இதன் விளைவாக அந்த வேலி ஓர் எல்லைக் கோடானது. வேலிக்கு கிழக்கில், ஆஸ்திரேலியாவின் மையப் பகுதியான, கரடுமுரடான காட்டுப்பகுதி உள்ளது. அதன் மேற்கிலோ, மனிதன் சாகுபடி செய்யும் அழகிய விளைநிலங்கள் பரவிக் கிடக்கின்றன.

எதேச்சையாக வானிலையை பாதிக்கும் வேலி

வேலியின் இரு பக்கங்களிலும் உள்ள தாவர வகைகளில் நிலவும் இந்தப் பெரும் வேறுபாடே, வேலி வானிலையை பாதிப்பதற்கு காரணமாக இருக்கலாம். “இதை நம்புவதற்கு கடினமாக இருந்தாலும், வேலிக்கு கிழக்கில் மழையின் அளவு அதிகரித்துள்ளது, அதன் மேற்கிலோ குறைந்துள்ளது” என த ஹெலிக்ஸ் என்ற விஞ்ஞான பத்திரிகை கூறுகிறது. இவ்வாறு, கிழக்கிலுள்ள இயற்கை தாவரங்களுக்கு இயற்கையான தண்ணீர் ஏராளமாக கிடைக்கிறது; மேற்கிலுள்ள விவசாயிகளோ நீர்ப்பாசனத்தையே அதிகமாக நம்பியிருக்கிறார்கள். இந்த மாற்றங்களுக்கு சாத்தியமான ஒரு காரணத்தை அந்தப் பத்திரிகை இவ்வாறு விவரிக்கிறது: “விளைநிலங்களில் உள்ள பயிர் வகைகளின் வேர்கள் ஆழமாக இல்லாததால் அவற்றால் அதிக நீரை ஆவியாக வெளிவிட முடிவதில்லை; ஆழமான வேர்களைக் கொண்ட இயற்கை தாவரங்களோ அதிக நீரை வெளிவிடுகின்றன.”

மற்றொரு காரணத்தைப் பற்றி வளிமண்டல விஞ்ஞானியான பேராசிரியர் டாம் லீயோன் பின்வருமாறு கூறுகிறார்: “விளைநிலத்தைவிட இயற்கை தாவரங்கள் அதிக அடர்த்தியாக இருப்பதால் அதிக வெப்பத்தை வளிமண்டலத்தில் வெளிவிடுகின்றன; இது . . . காற்றுக் கொந்தளிப்பை ஏற்படுத்தி மேகங்கள் உண்டாவதற்கு உதவுகிறது என்பதே எங்கள் கருத்து.”

முயல் தடுப்பு வேலி, முயல்களின் தாக்குதல்களிலிருந்து மேற்கு ஆஸ்திரேலிய விவசாயிகளுக்கு அதிக பாதுகாப்பு அளிக்கவில்லை. என்றாலும், அது வானிலையை பாதிப்பதாக தோன்றுவதும், அதனால் நில மேலாண்மையில் தொலைநோக்கு உள்ளவர்களாய் இருக்க வேண்டிய அவசியத்தைப் பற்றி அது நமக்கு புகட்டும் பாடங்கள் இன்றுகூட உதவியாய் இருக்கலாம். (g03 2/08)

[அடிக்குறிப்பு]

a அந்த வேலி இப்போது மாகாண எல்லை வேலி என்று அழைக்கப்படுகிறது.

[பக்கம் 1415-ன் தேசப்படம்]

நம்பர் 1 முயல் தடுப்பு வேலி

[பக்கம் 15-ன் படம்]

முயல்கள்

[பக்கம் 15-ன் படம்]

20-⁠ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், வேலியில் ரோந்து பணி

[பக்கம் 15-ன் படம்]

ஈமுக்கள்

[பக்கம் 15-ன் படம்]

1,833 கிலோமீட்டர் நீளமுள்ள நம்பர் 1 முயல் தடுப்பு வேலி, ஒரு காலத்தில் உலகிலேயே மிக நீண்ட, தொடர்ச்சியான வேலியாக இருந்தது. இந்த வேலி, காட்டுப்பகுதியை விளைநிலத்திலிருந்து பிரிப்பதால் வானிலையை பாதிக்கிறது

[பக்கம் 15-ன் படங்களுக்கான நன்றி]

வண்ணப் படங்கள் அனைத்தும்: Department of Agriculture, Western Australia; மேலே நடுவில்: Courtesy of Battye Library Image number 003582D