Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் ‘ஷூ’ செளகரியமாக இருக்கிறதா?

உங்கள் ‘ஷூ’ செளகரியமாக இருக்கிறதா?

உங்கள் ‘ஷூ’ செளகரியமாக இருக்கிறதா?

“ஷூ எங்கே கடிக்கிறது என்பது அணிந்திருப்பவருக்குத்தான் தெரியும்.”

​—⁠ரோம தத்துவஞானி சொன்னதாக கருதப்படுகிறது.

கடைசியாக எப்போது ஷூ வாங்கினீர்கள்? காலுக்குப் பொருத்தமானதாக அமைந்ததா? சௌகரியமாக இருந்ததா? அதை பார்த்துப் பார்த்து வாங்குவதற்கு எவ்வளவு நேரம் பிடித்தது? ஷூ கடையில் இருந்தவர் பொருத்தமான ஒன்றை கண்டுபிடித்து கொடுக்க பெரிதும் உதவினாரா? அதை அழகுக்காக வாங்கினீர்களா, வசதிக்காக வாங்கினீர்களா? கொஞ்ச நாள் அதை உபயோகித்த பின் இப்போது எப்படி இருக்கிறது? அது உங்கள் காலைக் கடிக்கிறதா?

ஷூ வாங்குகிற விஷயத்தில் ஏதோ போனோம், வாங்கினோம், வந்தோம் என இருக்க முடியாது. சரியான சைஸ் ஷூ வாங்குவது என்பது திக்குமுக்காட வைக்கும் சிக்கலான பாதைக்குள் நுழைவதைப் போன்றது. ஏன் அப்படி சொல்கிறோம்?

கச்சிதமான ஷூ அமைய

முதலில் உங்கள் பாதங்களில் எது பெரியதென்று சொல்லுங்கள். வலது பாதமா, இடது பாதமா? இரண்டும் ஒரேயளவுதான் என்று நினைக்கிறீர்களா? நன்றாக பாருங்கள்! அடுத்து கவனிக்க வேண்டிய ஒரு அம்சமும் உள்ளது. ஒவ்வொரு பாதமும் ஷூவுடன் நான்கு விதமான நிலைகளில் பொருந்துகின்றன. அவை: உட்கார்ந்த நிலை, நின்ற நிலை, இயங்கும் நிலை, உஷ்ண நிலை. அவற்றில் என்ன வித்தியாசம் இருக்கிறது?

உட்கார்ந்த நிலை பற்றி புரொஃபஷனல் ஷூ ஃபிட்டிங் என்ற புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “இது, (வாடிக்கையாளர் உட்கார்ந்திருக்கையில்) சாதாரணமாக பாதத்தில் ஷூ பொருந்தும் நிலை.” “நின்ற நிலை” என்பது அந்தப் பெயரே சொல்வது போல ஒருவர் நிற்கையில் காணப்படும் பாதத்தின் அளவு. இந்த நிலை பாதத்தின் சைஸையும் வடிவத்தையுமே மாற்றிவிடுகிறது. மேற்குறிப்பிடப்பட்ட புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “சாதாரணமாக உட்கார்ந்த நிலையில் தளர்ந்திருக்கும் பாதத்திலுள்ள எலும்புகளும் குருத்தெலும்பும் நின்ற நிலையில் திடீரென ‘இறுகிக்’ கொள்கின்றன; எனவே இப்போது காலுக்கு பொருத்தமாக வேறொரு சைஸ் ஷூ தேவைப்படுகிறது.” ஆனால் சிந்திக்க இன்னும் இரண்டு நிலைகள் உள்ளன.

இயங்கும் நிலை என்பது நடப்பது, ஓடுவது, குதிப்பது, அல்லது வேறெந்தப் பயிற்சியின்போதுமுள்ள செயல்படும் நிலை. இந்நிலை, “பாதத்தின் சைஸ், வடிவம், நீள, அகல, உயரம் ஆகியவற்றில் செயலுக்கேற்ப வெவ்வேறு ரீதியில் வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது.” நான்காவது நிலை, உஷ்ண நிலை. இது, வெப்பத்தால், ஈரத்தால், நீர்க்கசிவால் பாதத்தில் ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கிறது. இதனால் பாதத்தின் பருமன் 5 சதவீதம் அதிகரிக்கிறது. நாள் முழுவதும் காலிலிருந்த ஷூவைக் கடைசியாக கழற்றுகையில் அப்பாடா என்ற பெருமூச்சு வெளிப்படுவதற்கான காரணத்தை இப்போது புரிந்துகொள்ள முடிகிறதா? அதுவும் தவறான சைஸ் ஷூவை கழற்றுகையில் கிடைக்கும் ஆசுவாசத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம்! பெரும்பாலும் எல்லாரும் தவறான சைஸ் ஷூவைத்தான் அணிகிறார்கள்.

உங்கள் பாதத்தை எப்படி அளப்பது?

எரிக் ரொம்ப வருஷமாகவே அகலத்தில் மீடியமாக உள்ள 10 1/2 அல்லது 11 சைஸ் ஷூவை வாங்கி அணிந்து வந்தார். அந்த சமயத்திலெல்லாம் மேல் நோக்கி வளைந்திருக்கும் கோணலான கால் விரல் ஒன்றின் அடியில் ஆணி வந்துவிடும், அத்தோடு இடது கால் கட்டைவிரலின் நகம் உட்பக்கம் வளர்ந்து தடித்துவிடும். அவரை பரிசோதித்த அடிக்கால் மருத்துவர், காலுக்குப் பொருத்தமான ஷூவை கண்டுபிடித்துக் கொடுக்கும் திறமைசாலியிடம் சென்று பாதத்தின் சைஸை அளந்து பார்க்க சொன்னார். அவர் காலுக்கு சௌகரியமாக இருக்கும் சைஸ் 12 1/2, அகலம் A சைஸ் என்றும் எரிக் அறிந்தபோது அவருக்கு ஆச்சரியம் தாளவில்லை! “A” சைஸ் என்பது ஒடுங்கிய பாதத்தைக் குறிக்கிறது. கச்சிதமான ஷூ அமைய நீளமும் அகலமும் சரியாக இருந்தால் மட்டும் போதுமா? உங்கள் பாதத்தின் கரெக்ட் சைஸை எப்படி தெரிந்துகொள்வீர்கள்?

சரியான சைஸை அளவிட, பிரான்னாக் (Brannock) என்ற கருவி பொதுவாக சில நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. (படத்தைக் காண்க.) இதன் உதவியால் மூன்று முக்கிய அளவுகளைத் தெரிந்துகொள்ளலாம்: மொத்தத்தில் பாதத்தின் நீளம், குதிகாலிலிருந்து பந்து மூட்டு (ball joint) வரையுள்ள தூரம், அந்த பந்தின் அகலம். ஆனால், ஒவ்வொரு பாதத்தின் வடிவமும் பருமனும் தனி ரகம். அதன் காரணமாகவே ஷூ வாங்க போகையில் பலவற்றைப் போட்டுப் பார்த்து பொருத்தமானதை வாங்குகிறோம். இந்த சமயத்திலும் வசீகரத்துக்கு வளைந்து கொடுப்பது வினையாகி விடலாம். பார்த்தால் பிடித்தமான ஷூ, போட்டுப் பார்த்தால் லேசாக காலைக் கடித்த அனுபவம் ஏதேனும் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா? “நடக்க நடக்க அது தானாகவே லூசாகும்” என சொல்கிறார் கடைக்காரர். அதை நீங்கள் வாங்கிவிடுகிறீர்கள்; சில நாட்களோ வாரங்களோ அணிந்த பிறகு “ஏன்டா வாங்கினோம்” என நொந்துகொள்கிறீர்கள். பிறகென்ன, மீண்டும் பழையபடி கால் ஆணி வருகிறது, விரலின் நகம் உட்பக்கம் வளர்ந்து தடித்துவிடுகிறது அல்லது கால் பெருவிரல் முதற்கணுவில் வீக்கம் ஏற்படுகிறது!

கனகச்சித ஷூ கிடைக்குமா?

என்னவோ நமக்கென்றே அளவெடுத்து தயாரித்ததுபோல் கனகச்சிதமான ஷூவை வாங்க முடியுமா? வாங்க முடியாதென்று நேரடியாக பதிலளிக்கிறது புரொஃபஷனல் ஷூ ஃபிட்டிங் என்ற புத்தகம். ஏன் வாங்க முடியாது? “ஏனெனில் சமாளிக்க முடியாதளவுக்கு முட்டுக்கட்டைகள் பல உள்ளன. . . . ஒருவருக்குக்கூட இரண்டு காலும் ஒரேயளவில், ஒரே வடிவில், ஒரே நீள, அகல, உயரங்களில் அல்லது செயல்பாட்டில் இல்லையே.” கொஞ்சம் பெரிதாக உள்ள காலுக்கு கனகச்சிதமாக பொருந்தும் ஷூ மற்றொரு காலுக்கு சரியாக பொருந்தாமல் போகலாம். “அப்படியானால் காலுக்குக் கச்சிதமான ஷூவை வாங்கவே முடியாது என நினைத்துவிட வேண்டாம், ஆனால் ‘கனகச்சிதமான’ ஷூ என்பது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்வதில் மட்டும் நாம் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.”

உங்கள் பாதம் ஷூவை எந்த இடத்தில் அதிகம் அழுத்துகிறது என்பதை அறிய உங்கள் பழைய ஷூக்களில் சிலவற்றை எடுத்துப் பாருங்கள். ஷூவினுள் இருக்கும் லைனிங்கை பாருங்கள். எந்த இடம் ரொம்ப தேய்ந்து போயிருக்கிறது? பெரும்பாலும் குதிகால் பகுதி, குதிகாலைச் சுற்றியுள்ள பின்பகுதி, பாதத்தின் பந்துப் பகுதி ஆகிய இடங்களில் அதிக தேய்மானத்தைக் காணலாம். இது எதை அர்த்தப்படுத்துகிறது? “ஷூவின் சில பகுதிகளில் பாதம் சரியாக படியவில்லை” என்பதைக் காட்டுகிறது. “சில பகுதிகள் ரொம்பவே தேய்ந்திருக்கின்றன, சில பகுதிகள் பயன்படுத்தப்படாமலே இருந்திருக்கின்றன.”

சொகுசான ஷூ அமைவதில் அதன் த்ரோட்டுக்கும் முக்கிய பங்குண்டு. ஷூக்களில் பல்வேறு த்ரோட் லைன் ஸ்டைல்கள் இருப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? பால் (bal) ஸ்டைலில், கால் விரல்களுக்கு மிகவும் அருகிலுள்ள லேஸ் பாய்ன்ட்டில் வைத்து ஷூவின் மேற்பக்கத்தில் இரு புறமும் உள்ள குவாட்டர்களை சேர்த்து இழுத்து கட்ட வேண்டியிருக்கும். உங்கள் பாதம் குண்டாக இருந்தால் ப்லுச்சர் (blucher) ஸ்டைல்தான் உங்கள் பாதத்தை சொகுசாக வைத்துக்கொள்ள உதவும். இந்த வகையில், கால் விரல்களுக்கு மிக அருகிலுள்ள லேஸ் பாய்ன்ட்டில் குவாட்டர்கள் இரண்டும் அகன்று நிற்கின்றன. (படத்தைக் காண்க.) ஏன் இந்த விவரம் முக்கியம்? முன்னர் குறிப்பிட்ட அதே புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “ஷூவின் த்ரோட் பகுதி குறுகலாக இருக்கையில் குதிகாலை பின்னோக்கி அதாவது கவுண்டர் எனப்படும் குதிகால் பாகத்திலுள்ள மேற்பகுதியை நோக்கி தள்ள வேண்டியிருக்கிறது, இதனாலேயே அநேகமாக அல்லது பெரும்பாலும் குதிகாலில் உறுத்தல்கள் ஏற்படுகின்றன.”

பெண்கள் அணியும் ஹை ஹீல்ஸ்

ஹை ஹீல் அணிய பெண்கள் ஆசைப்பட்டாலும் அது உடலில் பல்வேறு விதமான அழுத்தங்களை ஏற்படுத்துகிறது. உட்காருவது, நிற்பது என எல்லா விதங்களிலும் ஒருவருடைய தோரணையில் ஹை ஹீல்ஸ் வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது; பெரும்பாலும் அது முன்பக்கம் சாய்ந்து நடக்கும்படி செய்வதால் உடலை நேராக வைத்துக்கொள்வதற்கு முழங்காலை பெருமளவு மடக்க வேண்டியிருக்கிறது. ஹை ஹீல்ஸ் கெண்டைக் கால் தசைகளை சுருங்கச் செய்வதால் அவை புடைத்திருப்பது தெரிகிறது.

ஒரு பெண்ணின் ஷூவில் முக்கிய பகுதி இந்தக் குதிகால் பகுதியே ஆகும், இது அவளுக்கு சொகுசை அளிக்கலாம் அல்லது அவளது ‘உயிரை’ வாங்கலாம். ஷூவில் ஹை ஹீல்ஸ் இருப்பதற்கு மூன்று காரணங்கள் உள்ளதாக புரொஃபஷனல் ஷூ ஃபிட்டிங் புத்தகம் சொல்கிறது. அவை: ‘(1“பெருமைக்கு,” ரொம்ப உயரமானவராக காட்டிக்கொள்வதற்காக, (2பகட்டுக்கு, ஷூவில் இன்னொரு டிசைன் அல்லது ஸ்டைல் இருப்பதற்காக, (3இன்னும் அழகிய தோற்றத்துக்கு, பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிகையில் கால்களுக்கு ஒய்யாரமான தோற்றத்தை கொடுப்பதற்காக.’

ஹீல் எந்தளவுக்கு முன்பக்கம் சரிந்திருக்கிறது என்பதற்குப் பெண்கள் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்; காரணம், உடல் பளுவின் வரி குதிகாலில் எந்த இடத்தில் இறங்குகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு அது அவசியம். இந்த வரி ஹீலின் பின்பக்க விளிம்பில் அல்லது முன்பக்க விளிம்பில் இருந்தால் விபரீதம் ஏற்படலாம். ஏன்? கால் தடுக்கி தடாலென விழ நேரலாம்.

இந்த சுருக்கமான கலந்தாலோசிப்பிலிருந்து பொருத்தமான ஷூவை வாங்க எக்கச்சக்கமான நேரம் தேவை என்பது தெள்ளத் தெளிவாகிறது, ஏனெனில் நேர்த்தியான ஷூவை தயாரிக்க ஏகப்பட்ட நேரம் செலவழிகிறது; அத்தோடு பர்ஸும் கனமாக இருக்க வேண்டும். ஆனால் பொதுவாக உங்கள் சௌகரியத்தையும் ஏன் உங்கள் ஆரோக்கியத்தையும்கூட உங்கள் ஷூ பெருமளவு பாதிக்கலாம். எனவே அரக்கப்பரக்க ஷூ வாங்க போகாதீர்கள். சரியாக அளவெடுங்கள். பொறுமையாக தேடி கண்டுபிடியுங்கள். பார்க்க பகட்டாகவும் அழகாகவும் இருக்கிறது என நினைத்து ஏமாந்துவிடாதீர்கள். (g03 3/8)

[பக்கம் 19-ன் பெட்டி]

ஷூ வாங்க டிப்ஸ்

புரொஃபஷனல் ஷூ ஃபிட்டிங் புத்தகத்தின் எழுத்தாளர்களான வில்லியம் ஏ. ரோஸீயும் ராஸ் டெனன்டும் பின்வரும் உதவிக் குறிப்புகளை அளிக்கிறார்கள்.

“பாதத்தை அளப்பதன் நோக்கம், ஒருவர் நினைப்பதுபோல, கரெக்ட்டான சைஸ் ஷூ வாங்குவதற்காக மட்டுமே அல்ல.” ஏன் அப்படி? ஷூவின் சைஸில் அநேக அம்சங்கள் அடங்கியுள்ளன. குதிகால் உயரம், ஸ்டைல், வெவ்வேறு வடிவங்கள், தயாரிக்கப்பட்ட பொருட்கள், பிராண்ட். எக்கச்சக்கமான நாடுகளில் பல்வேறு தரங்களில் இன்று காலணிகள் தயாரிக்கப்படுவதால் இது மிகவும் உண்மையாக உள்ளது.

உங்கள் பாதத்தை அளக்கையில் நீங்கள் சாக்ஸ் அல்லது ஸ்டாக்கிங் அணிந்திருந்தால் விரல்கள் வளைந்திருக்காதபடிக்கு விரல் பகுதியில் அதை முன்னால் இழுத்துவிடுங்கள்; அளக்கப்படுகையில் தவறான அளவைக் காட்டாதிருக்க இது உதவும்.

உங்கள் பாதத்தை எப்படி அளக்க விரும்புகிறீர்கள்? உட்கார்ந்திருக்கையிலா அல்லது நிற்கையிலா? “வாடிக்கையாளர் உட்கார்ந்திருக்கையில் அளப்பது எளிதாக இருக்கும்.” ஆனால் அது சரியான அளவாக இருக்காது. ஆகையால் பாதத்தை அளக்கையில் நின்றுகொள்ளுங்கள். இரண்டு பாதங்களையும் அளக்க சொல்லுங்கள். இடது பாதம்தான் பெரியது என நீங்களாகவே முடிவு செய்துவிடாதீர்கள். இரண்டு பாதங்களையும் அளந்து பார்ப்பது அவசியம்!

“கனகச்சிதமான ஷூவை மக்களுக்கு கண்டுபிடித்துக் கொடுப்பது தனித்திறமை, அது ஒரு பணியும்கூட. கைதேர்ந்த தொகுதியினருக்கு மட்டுமே உரிய தனித்துறை இது. பிரபலமான கடைகளில் பணிபுரியும் திறம்பட்ட இந்த நபர்கள் மக்களுக்கு கனகச்சிதமான ஷூ தேவை என்பதை புரிந்திருப்பவர்கள், மதிக்கிறவர்கள்.”

[பக்கம் 19-ன் படங்கள்]

ஷூவின் பாகங்கள்

சோல்

வாம்ப்

த்ரோட்

சாக்ஸ் லைனிங்

ஹீல் திண்டு

டாப் லிப்ட்

விரல் நுனி மேற்தோல்

வெளிப்புற சோல்

சுற்றுவரிப் பட்டை

வாம்ப்

த்ரோட் லைன்

நாக்கு போன்ற பகுதி

குவாட்டர்

ஹீலின் வளைந்த பகுதி

ஹீல்

[பக்கம் 19-ன் படங்கள்]

பிரான்னாக் கருவி

[பக்கம் 20-ன் படம்]

இந்த ஏழு முக்கிய ஸ்டைல்களின் அடிப்படையிலேயே எல்லா ஷூக்களும் வடிவமைக்கப்படுகின்றன

[பக்கம் 20-ன் படங்கள்]

த்ரோட் லைன் ஸ்டைல்கள்

ப்லுச்சர்

பால்