Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஒரு பயங்கர அவலம்

ஒரு பயங்கர அவலம்

ஒரு பயங்கர அவலம்

எரிக் a​—⁠ஆறு மாதக் குழந்தை. ஆனால் எடையையும் உயரத்தையும் பார்த்தால் ஒன்று அல்லது இரண்டு மாதக் குழந்தை மாதிரிதான் இருப்பான். இந்தளவுக்கு எடைக் குறைவு என்றாலும், அவனுடைய கால்களும் வயிறும் மட்டும் புடைத்துக் கொண்டிருக்கும், முகமோ வட்ட வடிவில் பலூன் மாதிரி வீங்கி இருக்கும். பார்ப்பதற்கு வெளிறிப்போய் இருப்பான், முடியெல்லாம் சருகு போல் வறண்டு இருக்கும். தோலெல்லாம் ஒரே புண். எப்பொழுது பார்த்தாலும் சிணுங்கிக் கொண்டே இருப்பான். எரிக்கின் கண்களை டாக்டர் பரிசோதிக்கும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், இல்லையென்றால் கண் திசுக்கள் எளிதில் கிழிந்துவிடும். அவனுக்கு மன வளர்ச்சியும் குன்றியிருக்கலாம். ஏதோ இந்தப் பிள்ளைக்கு மட்டும்தான் இப்படிப்பட்ட நிலைமை என்று எண்ணிவிடாதீர்கள்.

“உலகெங்கிலும் வாழும் பிள்ளைகளில் பாதிக்கும் மேற்பட்டோர் இதனால்தான் மடிந்து போகிறார்கள்​—பிளாக் டெத் முதல் வேறெந்த தொற்று வியாதியும் இந்தச் சதவீதத்தோடு போட்டி போட முடியாது. ஆனால் இது ஒரு தொற்று வியாதி அல்ல. இதனால் பாதிக்கப்பட்டு உயிர் தப்பியவர்களைக்கூட இது விட்டுவைப்பதில்லை; கோடிக்கணக்கானோரை முடமாக்கியிருக்கிறது, தீராத வியாதிக்கு வழிவகுத்திருக்கிறது, அறிவையும் மழுங்கடித்திருக்கிறது. இது பெண்களை, குடும்பங்களை, கடைசியில் முழு சமுதாயத்தையுமே ஆபத்திற்குள்ளாக்குகிறது.”​—⁠உலக பிள்ளைகளின் நிலை, (ஆங்கிலம்) ஐக்கிய நாட்டு குழந்தைகள் நல நிதி.

இந்த வார்த்தைகள் என்ன வியாதியை வர்ணிக்கின்றன? ஊட்டக்குறைவை​—⁠முக்கியமாக, புரதச்சத்து-கலோரி குறைவை (PEM)​—⁠வர்ணிக்கின்றன. இதை “மெளன அபாயம்” என உலக சுகாதார நிறுவனம் (WHO) அழைக்கிறது. இந்த அவலம் தனது கோரமான கைகளை எவ்வளவு தூரம் நீட்டுகிறது? “ஒவ்வொரு ஆண்டும் இறந்துபோகும் 1 கோடியே 4 லட்சம் பிள்ளைகளில் குறைந்தது பாதிப் பேர் செத்துமடிவது இதனால்தான்” என WHO அறிவிக்கிறது.

ஊட்டக்குறைவில் பல்வேறு வகையான வியாதிகள் உட்பட்டுள்ளன. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஊட்டச்சத்து குறைவினால்​—⁠வைட்டமின், தாதுப்பொருட்கள் குறைவினால்​—⁠ஏற்படும் ஊட்டக்குறைவு முதல் உடல் பருமன் மற்றும் உணவுப் பழக்கத்தோடு சம்பந்தப்பட்ட மற்ற தீரா வியாதிகள் வரை பல வியாதிகள் இருக்கின்றன. என்றாலும், புரதச்சத்து-கலோரி குறைவே “அதிக ஆபத்தான ஊட்டக்குறைவு” என WHO குறிப்பிடுகிறது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளே முக்கியமாக இதற்கு பலியாகின்றன.

ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட எரிக்கையும் ஊட்டக்குறைவினால் அவதியுறும் கோடிக்கணக்கான பிள்ளைகளையும் பற்றி சற்று யோசித்துப் பாருங்கள். அப்படிப்பட்ட நிலைமைக்கு அவர்களை குற்றம்சாட்ட முடியாது, அதேசமயம் அதிலிருந்து அவர்கள் தப்பவும் முடியாது. குழந்தைகள் ஊட்டச்சத்து நிபுணர் கியோர்கீனா டூசாயீன்ட் விழித்தெழு! எழுத்தாளரிடம் இவ்வாறு கூறினார்: “இந்த ஊட்டக்குறைவினால் அவதியுற்று மோசமான விளைவுகளை அறுவடை செய்கிற இவர்களை குற்றம்சாட்ட முடியாது, ஆனாலும் அதிக ஆபத்தில் இருப்பவர்கள் இவர்கள்தான்.”

இந்தப் பிரச்சினை தவிர்க்க முடியாத ஒன்று, ஏனெனில் எல்லாருக்கும் போதிய உணவு இல்லையே என்று சிலர் நினைக்கலாம். ஆனால் “உணவுப்பொருட்கள் அபரிமிதமாக கிடைக்கும் ஓர் உலகில்தான் நாம் வாழ்கிறோம்” என WHO சொல்கிறது, இது முரண்பாடாக தொனிக்கிறது அல்லவா? சொல்லப்போனால், எல்லா மனிதருக்கும் போதிய உணவு இருக்கிறது, ஏன், அதற்கு அதிகமாகவும் இந்தப் பூமி விளைவிக்கிறது. அதோடு, மனிதருக்கு ஏற்படும் ஊட்டக்குறைவு என்ற வியாதி மிக எளிதில் தடுக்கப்படக்கூடியது, குணப்படுத்துவதற்கும் அதிக செலவாகாது. இந்த உண்மைகள் உங்களை கொதிப்படையச் செய்கின்றன அல்லவா?

யார் பாதிக்கப்படுகின்றனர்?

ஊட்டக்குறைவு என்பது பிள்ளைகளுக்கு மட்டுமே உண்டாகும் வியாதியல்ல. “ஊட்டக்குறைவினால் உண்டாகும் விளைவுகள் ஊடுருவி பரவியுள்ளன, அது சுமார் 80 கோடி மக்களை, அதாவது வளரும் நாடுகளில் 20 சதவீத மக்களை பாதிக்கிறது” என ஜூலை 2001-⁠ன் WHO அறிக்கை காட்டுகிறது. அப்படியானால், இந்த உலகில் 8 பேருக்கு ஒருவர் இதனால் பாதிக்கப்படுகிறார் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

ஊட்டக்குறைவால் பாதிக்கப்படும் பெரும்பாலோர் ஆசியாவில்​—⁠முக்கியமாக தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களில்⁠—​வசிக்கிறபோதிலும், ஜனத்தொகை வீதப்படி பார்த்தால், ஆப்பிரிக்காவில் இருப்பவர்களே முதலிடம் வகிக்கிறார்கள். லத்தீன் அமெரிக்கா, கரிபியன் போன்ற வளரும் நாடுகளில் வசிப்பவர்கள் அடுத்த இடத்தைப் பிடிக்கிறார்கள்.

அப்படியானால், ஊட்டக்குறைவினால் பாதிக்கப்படுவோர் வளர்ச்சியடைந்த நாடுகளில் இல்லையா? அப்படியல்ல. 2001-⁠ம் உலகில் உணவு பாதுகாப்பின்மை நிலை (ஆங்கிலம்) கூறுகிறபடி, தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளில்கூட 1.1 கோடி மக்கள் ஊட்டக்குறைவினால் அவதியுறுகிறார்கள். மேலும், முன்னேற்றப் பாதையில் இருப்பதாக கருதப்படும் நாடுகளில், முக்கியமாக கிழக்கு ஐரோப்பா மற்றும் முன்னாள் சோவியத் குடியரசு நாடுகளில் வாழ்பவர்களில் கூடுதலாக 2.7 கோடி மக்கள் ஊட்டக்குறைவினால் தவிக்கிறார்கள்.

ஊட்டக்குறைவு ஏன் இவ்வளவு கொடிய பிரச்சினையாக விசுவரூபம் எடுத்திருக்கிறது? ஊட்டக்குறைவை சரிப்படுத்த இப்பொழுதே ஏதாவது வழி இருக்கிறதா? என்றாவது நமது கோளம் ஊட்டக்குறைவிலிருந்து விடுதலை பெறுமா? பின்வரும் கட்டுரைகள் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும். (g03 2/22)

[அடிக்குறிப்பு]

a அவனுடைய உண்மையான பெயர் அல்ல.

[பக்கம் 4-ன் அட்டவணை/தேசப்படம்]

ஜனங்களுக்கு ஊட்டக்குறைவு ஏற்படும் ஆபத்துள்ள நாடுகள்

அதிக ஆபத்து

நடுத்தர ஆபத்து

குறைந்த ஆபத்து

ஆபத்து இல்லை அல்லது போதாத தகவல்

[பக்கம் 3-ன் படம்]

சூடானில் நிவாரண பொருட்களுக்காக காத்திருக்கிறார்கள்

[படத்திற்கான நன்றி]

UN/DPI Photo by Eskinder Debebe