Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தெரிவு செய்யும் சுதந்திரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்?

தெரிவு செய்யும் சுதந்திரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்?

பைபிளின் கருத்து

தெரிவு செய்யும் சுதந்திரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்?

கடவுள் முதல் மானிடராகிய ஆதாமுக்கும் ஏவாளுக்கும் சுயமாக தெரிவுகளை செய்யும் திறனை கொடுத்தார். ஏதேன் தோட்டத்தை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை அவர் ஆதாமிடம் ஒப்படைத்தார். அங்குள்ள மிருகங்களுக்குப் பெயர் சூட்டுவதும் ஆதாமுடைய வேலையானது. (ஆதியாகமம் 2:15, 19) ஆனால் அதைவிட முக்கியமாக, ஆதாமும் ஏவாளும் கடவுளுக்குக் கீழ்ப்படிவதா வேண்டாமா என்பதையும் தீர்மானிக்க வேண்டியிருந்தது.​—⁠ஆதியாகமம் 2:17, 18.

அன்று முதல் மனிதன் கோடா கோடி தீர்மானங்களை எடுத்திருக்கிறான். அவற்றில் பல புத்திசாலித்தனமான தீர்மானங்கள், சில முட்டாள்தனமான தீர்மானங்கள், இன்னும் சில முழுக்க முழுக்க வஞ்சம் நிறைந்த தீர்மானங்கள். அவன் செய்த சில ஞானமற்ற தெரிவுகள் விபரீத விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனாலும் கடவுள் மனிதனின் தெரிவு செய்யும் உரிமையில் தலையிட்டதே இல்லை. அன்பான அப்பாவைப் போல் பைபிள் அடிப்படையில் நல்ல தீர்மானங்களை எடுக்க அவர் நமக்கு உதவுகிறார். தவறான தெரிவுகள் செய்கையில் சந்திக்கப் போகும் விளைவுகளைக் குறித்தும் நம்மை எச்சரிக்கிறார். நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம் என பைபிள் சொல்கிறது.​—கலாத்தியர் 6:⁠7.

சொந்த விஷயங்களில் தீர்மானங்கள்

சில காரியங்களில் தம்முடைய சித்தம் என்ன என்பதை கடவுள் தெள்ளத் தெளிவாக தெரிவித்திருக்கிறார், நமக்குக் குறிப்பான வழிநடத்துதலையும் அளிக்கிறார். ஆனால் பெரும்பாலான காரியங்களில் நம் சொந்த வாழ்க்கையை கட்டுப்படுத்தும் எல்லா சட்டதிட்டங்களையும் பைபிள் நேரடியாக குறிப்பிடுவதில்லை. அதற்கு பதிலாக ஒருவருடைய விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்கும் பொதுவான வழிநடத்துதலையே அது அளிக்கிறது. உதாரணமாக, பொழுதுபோக்கைப் பற்றி அது என்ன சொல்கிறதென கவனியுங்கள்.

பைபிள் யெகோவாவை ‘நித்தியானந்த தேவன்’ என அழைக்கிறது. (1 தீமோத்தேயு 1:11) “நகைக்க ஒரு காலமுண்டு,” “நடனம்பண்ண ஒரு காலமுண்டு” என்றும் அது சொல்கிறது. (பிரசங்கி 3:1, 4) பிறருடைய நன்மைக்காக தாவீது ராஜா இசைக் கருவியை இசைத்ததைப் பற்றிக்கூட சொல்கிறது. (1 சாமுவேல் 16:16-18, 23) அதுமட்டுமல்ல, இயேசு கலியாண விருந்தில் கலந்துகொண்டதோடு, தண்ணீரை திராட்ச ரசமாக மாற்றவும் செய்தார்.​—⁠யோவான் 2:1-10.

ஆனாலும் பின்வரும் பொருத்தமான எச்சரிப்பை பைபிள் கொடுக்கிறது: “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.” (நீதிமொழிகள் 13:20) ‘கீழ்த்தரமான பரியாசமும்’ ஒழுக்கயீனமான செயல்களும் கடவுளைப் புண்படுத்துபவை, அவருடன் நமக்குள்ள நல்லுறவை பாழ்ப்படுத்துபவை. (எபேசியர் 5:3-5, NW) சமூக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது மனம்போல் மதுபானத்தை குடிக்கையில் மோசமான பிரச்சினைகள் எழலாம். (நீதிமொழிகள் 23:29-35; ஏசாயா 5:11, 12) யெகோவா தேவனுக்கு வன்முறை என்றால் அடியோடு பிடிக்காது.​—⁠சங்கீதம் 11:5; நீதிமொழிகள் 3:31.

இந்த பைபிள் வசனங்கள், பொழுதுபோக்கை கடவுள் நோக்கும் விதத்தில் நோக்க நமக்கு உதவும். தெரிவுகளை செய்கையில் கிறிஸ்தவர்கள் அதைக் குறித்து பைபிள் என்ன சொல்கிறதென அறிந்துகொள்கிறார்கள். நம் தெரிவுகளால் விளையும் நல்லது கெட்டதை நாமே அனுபவிக்கப் போகிறோம் என்பதே உண்மை.​—⁠கலாத்தியர் 6:7-10.

அவ்வாறே, உடைகளை தேர்ந்தெடுப்பதில், மணத் துணையை தேர்ந்தெடுப்பதில், பெற்றோராக செயல்படுவதில், வியாபார நடவடிக்கைகளில் என எந்த விஷயத்திலாகட்டும் பைபிள் நியமங்களின் அடிப்படையில் ஞானமான தீர்மானங்களை எடுக்கும்படி கிறிஸ்தவர்கள் உற்சாகப்படுத்தப்படுகிறார்கள். பைபிளில் நேரடியாக சொல்லப்படாத விஷயங்களைக் குறித்ததிலும் இதையே செய்ய வேண்டும்; அந்த விஷயங்களிலும் மனசாட்சியின் அடிப்படையில் தீர்மானங்கள் எடுப்பதற்கு அதிலுள்ள நியமங்கள் அவர்களுக்கு உதவுகின்றன. (ரோமர் 2:14, 15) கிறிஸ்தவர்கள் செய்யும் சொந்த தீர்மானங்கள் அனைத்திற்கும் பின்வரும் நியதி பொருந்துகிறது: “நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.”​—⁠1 கொரிந்தியர் 10:31.

இந்த விஷயத்தில் ‘உங்கள் வேலையை மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்ற நியமத்தையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். (1 தெசலோனிக்கேயர் 4:11, பொது மொழிபெயர்ப்பு) கடவுளுடைய சித்தத்துக்கு முரண்படாத அநேக தெரிவுகளை கிறிஸ்தவர்கள் அடிக்கடி செய்ய வேண்டி உள்ளது. எனவே ஒரு கிறிஸ்தவருடைய தெரிவு அடுத்தவருடையதிலிருந்து வேறுபடலாம். அடுத்தவர் செய்த தெரிவு தவறென தம் ஊழியர்கள் ஒருவரையொருவர் குற்றப்படுத்துவதை கடவுள் துளியும் விரும்புவதில்லை. (யாக்கோபு 4:11, 12) ‘உங்களுக்கு வரும் துன்பங்கள், நீங்கள் . . . பிறர் காரியங்களில் தலையிடுபவராக இருப்பதால் வந்தவையாய் இருக்கக்கூடாது’ என பைபிள் ஞானமாய் புத்திமதி அளிக்கிறது.​—⁠1 பேதுரு 4:15, பொ.மொ.

கடவுளை சேவிக்க தீர்மானம்

கடவுளுக்குக் கீழ்ப்படிவதனால் வரும் பலன்களை பைபிள் சிறப்பித்துக் காட்டுகிறது. எனினும், கடவுள் தம்மை வணங்கும்படி யாரையும் கட்டாயப்படுத்துவது கிடையாது. மாறாக, தம்முடைய வணக்கத்தாராகும்படி மனிதகுலத்துக்கு அவர் அழைப்பு விடுக்கிறார். உதாரணமாக, “நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்” என பைபிள் சொல்கிறது.​—⁠சங்கீதம் 95:6.

அத்தகைய அழைப்பு பூர்வ இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்டது. 3,500-⁠க்கும் அதிக ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரவேல் தேசத்தார் சீனாய் மலைக்கு முன்பாக நின்றார்கள்; லட்சக்கணக்கில் திரண்டிருந்த அந்த ஜனத்தாருக்கு மோசேயின் நியாயப்பிரமாணத்தில் உள்ளடங்கிய மெய் மத வணக்க முறையை கடவுள் அறிமுகப்படுத்தினார். இப்போது அவர்கள் தெரிவு செய்ய வேண்டியிருந்தது: அவர்கள் கடவுளை சேவிப்பார்களா, மாட்டார்களா? அவர்கள் என்ன பதிலளித்தார்கள்? “கர்த்தர் சொன்னபடியெல்லாம் [“மனப்பூர்வமாய்,” NW] செய்து, கீழ்ப்படிந்து நடப்போம்” என ஏககுரலில் பதிலளித்தார்கள். (யாத்திராகமம் 24:7) யெகோவாவை வணங்குவதற்கு அவர்களாகவே தீர்மானம் எடுத்தார்கள்.

முதல் நூற்றாண்டில், கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதை இயேசு ஆரம்பித்து வைத்தார். (மத்தேயு 4:17; 24:14) இந்த வேலையில் பங்குகொள்ளும்படி யாரையும் அவர் வற்புறுத்தவில்லை. மாறாக, “என்னைப் பின்பற்றிவா” என மற்றவர்களுக்கு அவர் கனிவுடன் அழைப்பு விடுத்தார். (மாற்கு 2:14; 10:21) அநேகர் அவரது அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள், அவருடன் சேர்ந்து பிரசங்கிக்க ஆரம்பித்தார்கள். (லூக்கா 10:1-9) கொஞ்ச காலத்திற்குப் பிறகு, சிலர் இயேசுவை விட்டு விலக தீர்மானித்தார்கள். யூதாஸ் அவரைக் காட்டிக் கொடுக்கும் தெரிவை செய்தான். (யோவான் 6:66; அப்போஸ்தலர் 1:24) பின்னர், அப்போஸ்தலர்கள் உதவியதால் பெரும் திரளானோர் சீஷர்களானார்கள்; அவர்கள் பட்டயத்தைக் காட்டி பயமுறுத்தியதால் அல்ல, ஆனால் சீஷர்களாகும் தெரிவை அவர்களாகவே செய்தார்கள். அவர்கள் ‘சரியான மனச்சாய்வுடையவர்களாக’ இருந்தார்கள், ‘விசுவாசிகளானார்கள்.’ (அப்போஸ்தலர் 13:48, NW; 17:34) இன்றும் மெய் கிறிஸ்தவர்கள் கடவுளுடைய வார்த்தைக்கு மனப்பூர்வமாய் கீழ்ப்படிந்து, இயேசுவின் போதனைகளைப் பின்பற்றுகிறார்கள்.

தெரிவுகளை செய்ய நம்மிடமுள்ள திறன்களைப் பயன்படுத்த வேண்டுமென கடவுள் விரும்புவது தெளிவாக தெரிகிறது. புத்திசாலித்தனமான தீர்மானங்களை செய்வதற்கு ஏற்ற வழிநடத்துதலை அவர் பைபிளில் நமக்கு அளித்திருக்கிறார். (சங்கீதம் 25:12) சொந்த தீர்மானங்கள் செய்ய வேண்டிய கட்டத்தில் ஒவ்வொரு கிறிஸ்தவரும் கடவுள் கொடுத்த நியமங்களை கவனமாக ஆராய வேண்டும். அந்த விதத்தில் மட்டுமே கடவுளுக்கு நாம் ‘பகுத்தறியும் திறனைப் பயன்படுத்தி பரிசுத்த சேவை’ செய்ய முடியும்.​—⁠ரோமர் 12:1, NW. (g03 3/8)