Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“மெளன அபாயம்” முடிவு விரைவில்!

“மெளன அபாயம்” முடிவு விரைவில்!

“மெளன அபாயம்” முடிவு விரைவில்!

“கடந்த காலத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நாம் இன்றைக்கு ஏராளமாக மகசூல் பெறும் ஓர் உலகில் வாழ்ந்து வருகிறோம். . . . கொள்கை ரீதியில் . . . போதுமானவற்றிற்கும் அதிகமான உணவு அனைவருக்கும் இருக்கிறது.” இப்படித்தான் உலக சுகாதார நிறுவனம் (WHO) நடத்திய ஓர் ஆராய்ச்சி கூறுகிறது. அப்படியானால், ஊட்டக்குறைவுக்கு உண்மையான பிரச்சினைதான் என்ன?

“பிரச்சினை என்னவென்றால் உணவு சரிவிகிதத்தில் உற்பத்தி செய்யப்படுவதுமில்லை, பங்கிடப்படுவதுமில்லை” என WHO கூறுகிறது. “வளங்கொழிக்கும் வளரும் நாடுகளில், ஒருபக்கம் ஏழை எளியோர் வெறுங்கையுடன்தான்​—⁠வெறும் வயிற்றுடனும்தான்​—⁠நின்றுகொண்டு வேடிக்கை பார்க்கின்றனர்; மறுபக்கமோ, பணத்திற்காக எக்கச்சக்கமான விளைச்சலையும் பம்பர் மகசூலையும் அந்நாடுகள் ஏற்றுமதி செய்துவிடுகின்றன. விளைவு? சிலருக்கு குறுகிய கால லாபம், பலருக்கோ நீண்ட கால நஷ்டம்.” இந்த உலகின் ‘செல்வந்தர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர், இறைச்சி மற்றும் மீன் வகைகளில் 45 சதவீதத்தை கபளீகரம் செய்துவிடுகிறார்கள், மிகவும் ஏழ்மையில் வாடும் ஐந்தில் ஒரு பகுதியினருக்கோ வெறும் 5 சதவீதம்தான் கிடைக்கிறது’ என சமீப காலத்தில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் (FAO) செய்த ஆராய்ச்சி காட்டுகிறது.

மறுபட்சத்தில், “தரமான கல்வியையும் திருத்தமான தகவலையும் பெற முடியாததும்கூட ஊட்டக்குறைவை உண்டாக்குகிறது” என ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நல நிதி நிறுவனம் கூறுகிறது. “தகவலை பரப்பும் நுணுக்கங்களும் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய சிறந்த கல்வித் திட்டங்களும் இல்லையென்றால், ஊட்டக்குறைவை முறியடிக்க தேவையான விழிப்புணர்வையும் திறமைகளையும் நடத்தைகளையும் வளர்க்க முடியாது” என்றும் அது கூறுகிறது. ஆனால் உணவுப் பற்றாக்குறையோ ஒருவருடைய ஆரோக்கியத்தையும் சிறந்த கல்வியைப் பெறும் திறமையையும் குறைக்கிறது​—⁠மற்றுமொரு நச்சுச் சுழல்.

நீதியும் பிறர்மீது சுயநலமற்ற அக்கறையும்

சவால்மிக்க இந்தத் தடைகள் மத்தியிலும் இத்துறையிலுள்ள வல்லுநர்கள் சிலர் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். உதாரணமாக, FAO மேலாண்மை இயக்குநர் ஷாக் ஜூஃப் இவ்வாறு நம்பிக்கை தெரிவித்தார்: “ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் குழந்தைக்கும் அன்றாடம் ஊட்டச்சத்துமிக்க உணவு போதுமான அளவு கிடைக்கும் ஓர் உலகைப் பற்றிய கற்பனை எனக்கு இருக்கிறது. அந்த உலகில் மிகுந்த செல்வமும் வாட்டும் வறுமையும் குறைந்திருக்கும். சகிப்புத்தன்மை இருக்கும், வேற்றுமை இருக்காது; சமாதானம் நிலவும், சண்டை இருக்காது; சுற்றுச்சூழலில் சமநிலை இருக்கும், தூய்மைக்கேடு இருக்காது; பொதுவில் செழுமை நிலவும், சோர்வுண்டாக்கும் நம்பிக்கையற்ற நிலை இருக்காது.”

இருந்தாலும், நாம் ஏற்கெனவே பார்த்தபடி, இத்தகைய நம்பிக்கைகள் ஈடேற உணவு உற்பத்தியை அதிகமாக்குவதும் அதை பகிர்ந்தளிப்பதுமே போதாது. நீதியும் பிறர் மீது சுயநலமற்ற அக்கறையும் எங்கும் நிலவ வேண்டும். ஆனால் இந்த உயர்ந்த மனப்பான்மைகளை நவீன வியாபாரக் கொள்கையில் சல்லடை போட்டு தேடினாலும் காண முடியாது.

பேராசை, வறுமை, போர், சுயநலம் போன்ற இமாலய தடைகளைத் தகர்த்தெறிந்து, இந்த உலகிலிருந்து ஊட்டக்குறைவை ஒழிக்க முடியுமா? அல்லது இது வெறும் கனவுதானா?

உண்மையான ஒரே பரிகாரம்

ஊட்டக்குறைவுக்கு ஆணிவேராக இருக்கும் பிரச்சினைகளைக் குறித்து நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஏனென்றால் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் இவ்வாறு கூறுகிறது: ‘கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வரும். எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், . . . சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், . . . நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், . . . தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்.’​—2 தீமோத்தேயு 3:1-5.

ஆழமாக வேரூன்றிய இத்தகைய மனப்பான்மைகளை கடவுளுடைய உதவியின்றி மனிதகுலம் பிடுங்கியெறிய முடியுமா? முடியவே முடியாது என்பது தெளிவு. மனிதர் படும் சமூக பிரச்சினைகளைக் களைய அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு நல்லெண்ணம் இருப்பதை ஒருவேளை நீங்கள் கவனித்திருக்கலாம், ஆனால் சுயநலம், பண ஆசை, மற்றவர்களுடைய குறைபாடுகள் ஆகியவை குறுக்கிட்டு நல்ல முயற்சிகளையும்கூட தடுத்துவிடலாம்.​—எரேமியா 10:⁠23.

ஆனாலும் இது நனவாகாத ஒரு கனவல்ல. அநீதிக்கும் மனிதவர்க்கத்தை வாட்டும் மற்றெல்லா வேதனைகளுக்கும் கடவுளுடைய ராஜ்யம் முடிவுகட்டும் என பைபிள் வாக்குறுதி அளிக்கிறது.

ஏசாயா 9:6-7 இந்த மகத்தான நம்பிக்கையை நமக்குத் தருகிறது: “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப் பிரபு என்னப்படும். தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இது முதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய [“யெகோவாவின்,” NW] வைராக்கியம் இதைச் செய்யும்.”

பரமண்டல ஜெபத்தில், “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்று சொல்லி கடவுளிடம் ஜெபிக்கும்போது மக்கள் இந்த ராஜ்யத்திற்காகவே ஜெபிக்கிறார்கள். (மத்தேயு 6:9, 10) ‘சேனைகளுடைய யெகோவாவின் வைராக்கியம் இதைச் செய்யும்’ என ஏசாயா குறிப்பிடுவதை கவனியுங்கள். ஆம், மனிதருடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதில் யெகோவா தேவன் எப்பொழுதும் மிகுந்த அக்கறையுள்ளவராக இருந்திருக்கிறார். அனைவருக்கும் போதுமான உணவை உற்பத்தி செய்யும் திறனுடன் இந்தப் பூமியை படைத்திருக்கிறார்.

சங்கீதம் 65:9-13 அவரைப் பற்றி இவ்வாறு கூறுகிறது: “தேவரீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப் பாய்ச்சுகிறீர்; தண்ணீர் நிறைந்த தேவ நதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர்; இப்படி நீர் அதைத் திருத்தி, அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறீர். அதின் வரப்புகள் தணியத்தக்கதாய் அதின் படைச்சால்களுக்குத் தண்ணீர் இறைத்து, அதை மழைகளால் கரையப்பண்ணி, அதின் பயிரை ஆசீர்வதிக்கிறீர். . . . மேய்ச்சலுள்ள வெளிகளில் ஆடுகள் நிறைந்திருக்கிறது; பள்ளத்தாக்குகள் தானியத்தால் மூடியிருக்கிறது.”

ஆம், படைப்பாளராகிய யெகோவாவே மனிதருக்கு அருட்கொடை வழங்குவதில் சிறந்து விளங்குகிறார். அவரே ‘மாம்ச தேகமுள்ள யாவுக்கும் ஆகாரங் கொடுக்கிறவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.’​—சங்கீதம் 136:25.

கிறிஸ்துவினால் ஆளப்படும் கடவுளுடைய ராஜ்யம் அனைவரையும் கவனித்துக்கொள்ளும் என்பதில் நாம் நம்பிக்கையுடன் இருக்கலாம். “பூமியில் தானியம் ஏராளமாக இருக்கும்; மலைகளின் உச்சிகளில் வழிந்தோடும்” என பைபிள் சொல்கிறது. ஆனால் அவை அனைவருக்கும் சமமாக பங்கிட்டுக் கொடுக்கப்படும், ஏனென்றால் ‘தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் [இயேசு கிறிஸ்து] விடுவிப்பார். . . . ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்.’ (சங்கீதம் 72:12, 13, பொது மொழிபெயர்ப்பு; 16, NW) ஆகவே தைரியங்கொள்ளுங்கள்! இந்த “மெளன அபாயம்” சீக்கிரத்தில் அடியோடு அகலும். (g03 2/22)

[பக்கம் 11-ன் சிறு குறிப்பு]

“பசியையும் ஊட்டக்குறைவையும் போக்குவது கொள்கை ரீதியில் சாத்தியம். இதற்கு வள ஆதாரங்கள் இருக்கின்றன. தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுப்பதே . . . சவால்.” ​—⁠உலக சுகாதார நிறுவனம்

[பக்கம் 10-ன் முழுபக்க படம்]