Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

விசுவாசிகளுக்கு வழிகாட்டும் அவிசுவாசிகள்

சர்ச் ஆஃப் இங்லண்டிலுள்ள பெண் பாதிரிகள் “முக்கிய கிறிஸ்தவ கோட்பாடுகளைப் பொருத்ததில் பொதுவாக தங்கள் சக ஆண் பாதிரிகளைக் காட்டிலும் ரொம்பவே சந்தேகவாதிகளாக இருக்கிறார்கள்” என லண்டனில் வெளியாகும் செய்தித்தாளான த டைம்ஸ் அறிக்கை செய்கிறது. “உலகத்தின் பாவத்தை போக்க இயேசு மரித்தார் என பத்து ஆண் பாதிரிகளில் எட்டு பேர் நம்புகையில்” 10 பெண் பாதிரிகளில் 6 பேர் மட்டுமே அதை நம்புவதாக சுமார் 2,000 குருமாரை வைத்து நடத்தப்பட்ட சுற்றாய்வு காட்டியது. 10 ஆண்களில் 7 பேர் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நம்புகையில் 10 பெண்களில் 5 பேர் மட்டுமே அதை நம்புகிறார்கள். இந்தச் சுற்றாய்வை நடத்திய காஸ்ட் ஆஃப் கான்ஷியன்ஸ் என்பதன் பிரதிநிதியான ராபீ லோ என்பவர் இவ்வாறு சொன்னார்: “சர்ச் ஆஃப் இங்லண்டில் இரண்டு சர்ச்சுகள் செயல்படுவது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. ஒன்று விசுவாசிகளின் சர்ச் மற்றொன்று அவிசுவாசிகளின் சர்ச், இது வெட்கக்கேடான விஷயம். மேலும் மேலும் அவிசுவாசிகளாகி வருகிறவர்களே பெரும்பாலும் பொறுப்பான ஸ்தானத்தில் இருக்கிறார்கள். பெருமளவில் அவிசுவாசிகளே விசுவாசிகளை வழிநடத்தும் நிலை ஏற்பட்டிருப்பது வருந்தத்தக்கது.” (g03 4/08)

மனிதக் குரங்குகள் ஆபத்தில்

“மனிதன் அதிரடி நடவடிக்கை எடுக்காவிட்டால் மனிதக் குரங்குகளின் கானக வீடு 30 வருடங்களுக்குள் கிட்டத்தட்ட இல்லாமலே போய்விடும்” என அறிக்கை செய்கிறது ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை. சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா, ஜோஹெனஸ்பர்க்கில் நடைபெற்ற பூமி உச்சிமாநாட்டில் ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் இவ்வாறு சொன்னார்கள்: “சாலை அமைத்தலும், சுரங்க வேலை நடைபெறும் இடத்தில் காளான்கள் போல் முளைக்கும் நகரங்களும், பிற கட்டமைப்பு முன்னேற்றங்களும் இன்று போலவே தொடர்ந்தால், ஆப்பிரிக்காவில் தற்போதுள்ள மனிதக் குரங்குகளின் மீதமுள்ள வாழிடத்தில் 10 சதவீதத்துக்கும் குறைவானதே 2030-⁠ம் ஆண்டில் ஓரளவு பாதிப்பின்றி விடப்பட்டிருக்கும்.” வாழிடம் இப்படி மறைந்து வருவதால் ஏற்கெனவே மனிதக் குரங்குகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 20,00,000 சிம்பான்ஸிகள் இருந்தன, தற்போதோ அவை 2,00,000-மாக குறைந்திருக்கின்றன; தாழ்ந்த நிலப் பகுதி கொரில்லாக்களின் எண்ணிக்கை சில ஆயிரங்களாகவும், மலைப்பகுதி கொரில்லாக்களின் எண்ணிக்கை சில நூறுகளாகவும் குறைந்திருக்கின்றன. ராய்ட்டர்ஸின்படி “மனிதக் குரங்குகள் அதிகமுள்ள 24 நாடுகளில் நிலைமையை சீர்படுத்தும் திட்டங்களை அமைக்க ஆய்வாளர்களுடனும், பாதுகாவலர்களுடனும், அரசாங்கங்களுடனும், உள்ளூர் மக்களுடனும் சேர்ந்து ஐ.நா. உழைக்கிறது.” (g03 4/22)

உலகளாவ அதிகரித்து வரும் ஆயுத குவிப்பு

2001-⁠ல் உலகெங்கும் போலீஸார், இராணுவம், கலக கும்பல்கள், தனிநபர்கள் ஆகியோரின் கைகளில் 63.9 கோடி சிறிய ஆயுதங்கள் இருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது என சிறிய ஆயுதங்கள் கணக்கெடுப்பு 2002 (ஆங்கிலம்) என்ற ஐநா ஆதரவு பெற்ற ஆய்வு அறிக்கை சொல்கிறது. “முந்திய எண்ணிக்கையோடு ஒப்பிட இது சுமார் 16 சதவீதம் அதிகம்” என அந்த கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. எனினும் புதிய உற்பத்தியின் விளைவால் உலகெங்கும் சிறிய ஆயுதங்களின் குவிப்பு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 சதவீதம் அதிகரிக்கிறது. தற்போது பிஸ்டல்கள், ரைஃபில்கள், சிறுபீரங்கிகள், தோளில் வைத்து ராக்கெட்டுகளை ஏவ உதவும் கலங்கள் ஆகியவற்றை உலகெங்குமுள்ள 98-⁠க்கும் அதிகமான நாடுகளில் சுமார் 1,000 கம்பெனிகள் தயாரிக்கின்றன. அந்த அறிக்கையின்படி, “2000-⁠ல் வெடி மருந்துகள் உட்பட சிறிய ஆயுதங்களின் உலகளாவிய உற்பத்தியின் [மொத்த] மதிப்பு . . . சுமார் 700 கோடி ஐ.மா. டாலரென கணக்கிடப்பட்டது.” 80 முதல் 90 சதவீத சிறிய ஆயுதங்களின் உலகளாவிய வர்த்தகம் சட்டப்பூர்வமாக நடக்கிறது, இதில் பெருமளவு (59 சதவீத) ஆயுதங்கள் பொது மக்களின் கைகளில் புரளுகின்றன. (g03 2/22)

உருமாறும் சர்ச்சுகள்

எக்கச்சக்கமான சர்ச்சுகள் இருப்பதால், “‘நீங்கள் செங்கலை விட்டெறிந்தால் அது நிச்சயம் ஒரு சர்ச் ஜன்னலையே பதம்பார்க்கும்’ என மார்க் டுவெய்ன் 1881-⁠ல் மான்ட்ரீலுக்கு விஜயம் செய்த போது சொன்னார். ஆனால் இன்றோ அது முன்னாளைய சர்ச்சிலுள்ள ஒரு அப்பார்ட்மென்ட் ஜன்னலைத்தான் பதம்பார்க்கலாம்” என்கிறது மான்ட்ரீலில் வெளியாகும் செய்தித்தாளான த கெஸட். அந்த நகரத்தில் இன்னும் சுமார் 600 சர்ச்சுகள் இருந்தாலும் அவற்றில் ஏறக்குறைய 100 சர்ச்சுகள் அடுத்த பத்து வருடங்களுக்குள் விற்பனைக்கு வருமென அந்தச் செய்தித்தாள் சொல்கிறது; அவற்றுள் பெரும்பாலானவை கத்தோலிக்க சர்ச்சுகள். “மான்ட்ரீலின் ஆர்ச்டையோசிஸின்படி, 1960 முதல் ஏறக்குறைய 25 கத்தோலிக்க கிளை மறைமாவட்டங்கள் (parishes) மூடப்பட்டுள்ளன.” 1871-⁠ல் சுமார் 15 லட்சமாக இருந்த கத்தோலிக்க ஜனத்தொகை 1971-⁠ல் கிட்டத்தட்ட 1 கோடியாக அதிகரித்தது; ஆனாலும் “முக்கியமாக கியுபெக்கில், தேவாலயத்துக்கு வருவோரின் எண்ணிக்கையோ தடாலென சரிந்துள்ளது” என்கிறது த கெஸட். அந்தப் பகுதியில் 1970-⁠ல் 75 சதவீதத்தினர் சர்ச்சுகளுக்கு வந்து கொண்டிருந்ததாகவும் இன்று சுமார் 8 சதவீதத்தினர் மட்டுமே வருவதாகவும் மான்ட்ரீலின் ஆர்ச்டையோசிஸைச் சேர்ந்த சர்ச்சின் மந்தைக்காக திட்டமிடும் பொறுப்பிலிருக்கும் பெர்னார்ட் ஃபார்டன் செய்தித்தாளுக்கு அறிவித்தார். (g03 2/22)

ஆஸ்தியும் ஆரோக்கியமும் இருந்தும் மங்கும் நம்பிக்கை ஒளி

கனடா “பொருளாதார, சமூக நிலைகளில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக முன்னேற்றம் கண்டிருப்பதாக” 2001-⁠ல் வெளியான ஓர் அறிக்கை காட்டினாலும் அங்குள்ளோருக்கு ஒளிமயமான எதிர்காலம் வருமென்ற நம்பிக்கையில்லை என த டோரான்டோ ஸ்டார் செய்தித்தாள் சொல்கிறது. “பண சம்பந்தமாக போதிய பாதுகாப்பின்மை, வேலையில் பெருமளவு அழுத்தம், சமூக பாதுகாப்பு ஏற்பாடுகளில் அதிகரித்துவரும் அவநம்பிக்கை, குற்றச் செயல்களால் பாதிக்கப்படும் பயம் ஆகியவற்றை கனடாவை சேர்ந்தவர்கள் அனுபவிப்பதாக” சமூக முன்னேற்றத்துக்கான கனடியன் கவுன்சிலின் ஆய்வாளர்கள் கண்டறிந்தார்கள். அவர்கள் எதைப் பற்றியெல்லாம் கவலைப்படுகிறார்கள் என்ற பட்டியலில் இடம் பெறுபவை: “பணவீக்கத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத சம்பள உயர்வுகள், சுமக்க முடியாத கடன் சுமை, . . . சில மருத்துவ சிகிச்சைக்காக “கால் கடுக்க” காத்திருத்தல், ராக்கெட் வேகத்தில் உயரும் மருந்துகளின் விலை, பெருகி வரும் சாலை விபத்துக்களால் ஏற்படும் காயங்கள், வன்முறைமிக்க குற்றச் செயல்கள் அதிகரிப்பதால் ஏற்படும் இனம் புரியா பயங்கள்.” இந்த அறிக்கையை சமர்ப்பித்த எழுத்தாளர்களின்படி, “பாதுகாப்பு என்பது வெறும் ஒரு மனநிலையென விளக்கமளித்தால் நாம் முன்னேற்றப் பாதையில் செல்லவில்லை என்பதே உண்மை நிலை.” (g03 4/08)

போதிய பயிற்சியின்றி கல்யாணத்தில் கால்பதிப்போர்

மணமுடிக்கும் முன் சேர்ந்து வாழும் தம்பதியரில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் பத்தாவது திருமண தினத்தைக் காணும் முன் மணவிலக்கு செய்துவிடுவதாக நியுயார்க்கில் வெளியாகும் டெய்லி நியூஸ் அறிக்கை செய்கிறது. திருமணத்திற்கு முன்பே சேர்ந்து வாழ்ந்த தம்பதியினர் மணமாகி பத்துக்கும் அதிக வருடங்களுக்குப் பின்பு விவாகரத்தைப் பெறும் சாத்தியம் இரண்டு மடங்கு அதிகம் உள்ளது எனவும் நேஷனல் சென்டர் ஃபார் ஹெல்த் ஸ்டாடிஸ்டிக்ஸ் சேகரித்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. “மண முடிக்க ஒரு தம்பதியினர் ஆசைப்பட்டாலும் திருமணத்திற்கு முன்பே சேர்ந்து வாழ அவர்கள் விரும்பாதிருக்கலாம், இப்படிப்பட்டவர்களே பெரும்பாலும் விவாகரத்து செய்துகொள்ள மாட்டார்கள்” என்கிறார் அந்த அறிக்கையின் முதன்மை எழுத்தாளர் மேத்யூ பிராம்லட். மேலும் திருமணத்திற்கு முன்பே சேர்ந்து வாழ்ந்தவர்கள் “தங்கள் உறவில் தலைதூக்கும் பிரச்சினைகளை சமாளிக்கையில் ஏற்படும் மன அழுத்தத்தை சகிக்க விரும்புவதில்லை” என்கிறார் திருமண ஆலோசகரான ஆலிஸ் ஸ்டீஃபன்ஸ். (g03 4/08)

தலைவலி நிவாரணியே தலைவலியாகையில்

“தலைவலியால் அவதிப்படுவோரில் சுமார் 10 சதவீதத்தினர் ‘வலிநிவாரணி துஷ்பிரயோகத்தால்’ தூண்டிவிடப்படும் ‘தலைவலியால் வேதனைப்படுகிறார்கள் என நரம்பு மருத்துவரான மைக்கல் ஆன்தனீ கணக்கிட்டதாக” ஆஸ்திரேலியா, சிட்னியிலிருந்து வெளியாகும் செய்தித்தாளான த டெய்லி டெலிகிராஃப் குறிப்பிடுகிறது. “கடைகளில் சாதாரணமாக கிடைக்கும் தலைவலி மாத்திரைகளை தைரியமாக வாங்கி விழுங்குவதால் வாரத்திற்கு ஒரு முறை தலைகாட்டிய தலைவலி தினந்தினம் வந்து உயிரை வாங்கலாம்.” “தலைவலி மாத்திரைகளை எக்கச்சக்கமாக வாங்கி விழுங்கும் நோயாளிகளில்” இரத்தக் குழாய்கள் விரிவடைவதை தடுக்க உதவும் “சிராடோனின் (serotonin) குறைவுபடுகிறது” என நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய பேராசிரியர் ஆன்தனீ கண்டறிந்தார். “சிராடோனின் குறைவுபடுகையில் இரத்தக் குழாய்கள் விரிவடைகின்றன, இதனால் தலைவலிக்க ஆரம்பிக்கிறது” என்கிறார் அவர். ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுவோர் டாக்டர் எழுதிக் கொடுக்கும் மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்றும் கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட மாத்திரைகளை வாங்கி விழுங்கக்கூடாது என்றும் ஆன்தனீ பரிந்துரைக்கிறார். “வாரத்தில் மூன்று தடவைக்கும் அதிகமாக [வலி மரத்துப் போக செய்யும்] மாத்திரைகளை [நோயாளிகள்] விழுங்கினால், ஒரு மாத்திரை வீதம் வாரத்திற்கு மூன்று தடவை விழுங்கினால்கூட சில மாதங்களில் அவர்களுடைய தலைவலி இன்னும் மோசமாகலாம்.” (g03 4/22)

மசக்கையை சமாளிக்க

“கர்ப்பிணிகளில் 70 முதல் 80 சதவீதத்தினர் மசக்கையால் கஷ்டப்படுவது தெரிய வந்துள்ளது” என்கிறது ஆஸ்திரேலியாவின் செய்தித்தாளான சன்-ஹெரால்ட். காலையில் எழுந்திருக்கையில் ஓரிரு மாத கர்ப்பிணிகளுக்கு குமட்டலோடுகூட வாந்தியும் சேர்ந்துகொள்கையில் படாதபாடு படுகிறார்கள். கர்ப்ப காலத்தில், புரோஜஸ்டிரான் (progesterone) என்ற ஹார்மோனின் அளவு அதிகரிப்பதே இதற்கான காரணங்களுள் ஒன்றென கருதப்படுகிறது; இதனால் இரைப்பையில் எக்கச்சக்கமான அமிலங்கள் சுரக்கலாம். மேலும், பலமாய் வீசும் எந்த மணமும் கர்ப்பிணிகளுக்கு குமட்டலை ஏற்படுத்தலாம்.” மசக்கையை போக்க எந்த மருந்தும் இல்லாவிட்டாலும் உஷ்ணம் குமட்டலை தூண்டிவிடுமாகையால் அப்படிப்பட்ட கதகதப்பான இடங்களைத் தவிர்க்கும்படியும், அவ்வப்போது குட்டித் தூக்கம் போட்டு எழுந்திருக்கும்படியும், போதுமானளவு தூங்கும்படியும், எலுமிச்சம் பழத்தை அறுத்து முகர்ந்து பார்க்கும்படியும் அந்த செய்தித்தாள் பரிந்துரைக்கிறது. “படுக்கையைவிட்டு எழுந்ததும் சாதாரண க்ராக்கர்ஸ் பிஸ்கெட்டையோ பால் அல்லது வேறெதுவுமே சேர்க்காத சீரியலையோ சாப்பிட முயலுங்கள். படுக்கையிலிருந்து எப்போதும் மெல்ல எழுந்திருங்கள். அடிக்கடி புரத சத்துமிக்க தின்பண்டங்களை சாப்பிடுங்கள்” என்றும் அந்தச் செய்தித்தாள் சொல்கிறது. “மசக்கையால் பலனும் உண்டு. இப்படி மசக்கையால் அவதிப்படுகிறவர்களுக்கு கருச்சிதைவு ஏற்பட அற்ப சொற்ப வாய்ப்பே உள்ளதென சமீபத்திய ஆய்வு காட்டுகிறது” என அந்தச் செய்தித்தாள் சொல்கிறது. (g03 4/22)