Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

என் வாழ்வை மாற்றிய விபத்து

என் வாழ்வை மாற்றிய விபத்து

என் வாழ்வை மாற்றிய விபத்து

ஸ்டான்லி ஒம்பிவா சொன்னபடி

அது 1982-வது வருஷம், மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்த ஒரு வண்டி என்னை மோதியது. உடனடியாக மருத்துவ உதவி கொடுக்கப்பட்டதால், சீக்கிரத்திலேயே வழக்கமான வேலைகளை செய்ய ஆரம்பித்துவிட்டேன். ஆனாலும் என் முதுகெலும்பு வட்டு ஒன்று இடம்பெயர்ந்ததால் அவ்வப்போது கழுத்துக்கும் மார்புக்கும் இடையே வலி ஏற்பட்டது. அதன் பிறகு 15 வருடம் கழித்து என்னுடைய விசுவாசத்துக்கு மிகப்பெரிய சோதனை வந்தது.

அந்த விபத்துக்கு முன்பும் சரி சற்று பின்பும் சரி நான் ரொம்பவே தெம்புடன் இருந்தேன். தவறாமல் உடற்பயிற்சிகளை செய்தேன். உதாரணமாக சனி ஞாயிறுகளில் 10-லிருந்து 13 கிலோமீட்டர் தூரம் ஜாகிங் போவேன், ஸ்குவாஷ் (Squash) விளையாடுவேன். உடலை வருத்தும் சில கடினமான வேலையை செய்வேன். அதோடு, நாங்கள் வசித்த கென்யாவிலுள்ள நைரோபியில் யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றங்களையும் பெரிய அசெம்பிளி மன்றங்களையும் கட்டும் பணிகளிலும் உதவினேன்.

பிற்பாடு 1997-⁠ல், எனக்கு அடிக்கடி நெஞ்சுவலி வந்தது, அதுவும் உயிர்போகிற வலி. மருத்துவ பரிசோதனை செய்து பார்த்தபோது என் முதுகெலும்பு வட்டு ஒன்று இடம்பெயர்ந்து தண்டுவடத்தை அழுத்திக்கொண்டிருந்தது தெரிய வந்தது. ஆரம்பத்தில் சொல்லப்பட்ட விபத்தினால் ஒருவேளை இப்படியாகியிருக்கலாம் என்று டாக்டர்கள் சொன்னார்கள்.

என்னுடைய உடல்நிலை மிகவும் மோசமடைவதற்கு முன்பு சேல்ஸ்மேனாக ஒரு வேலையில் சேர்ந்திருந்தேன். அந்த வேலையில் குடும்ப நல காப்பீட்டுத் திட்டமும் இருந்தது. வியாபார உலகில் எனக்கு ஓர் ஒளிமயமான எதிர்காலம் இருப்பதுபோல் தெரிந்தது. ஆனால் 1998-⁠ன் மத்திபத்தில், என்னுடைய மார்பிலிருந்து கால்வரையாக மரத்துப் போக ஆரம்பித்தது. நாட்கள் செல்லச் செல்ல என் ஆரோக்கியம் குறைய ஆரம்பித்தது.

சீக்கிரத்திலேயே வேலையை பறிகொடுத்தேன், அதோடு சேர்ந்த எல்லா சலுகைகளும் கைவிட்டுப் போயின. அந்தச் சமயத்தில் என்னுடைய மூத்த மகள் சில்வியாவுக்கு 13 வயது, இளைய மகள் வில்ஹெல்மினாவுக்கு 10 வயது. என் மனைவி ஜாய்ஸின் சம்பளத்தை வைத்துத்தான் குடும்பத்தை ஓட்ட வேண்டியிருந்தது. புதிய சூழ்நிலைகளை சமாளிக்க அவசியமில்லாத செலவுகளை குறைத்தோம். அதனால் அடிப்படை தேவைகளை எப்படியோ சமாளிக்க முடிந்தது.

விரக்தியான உணர்வுகள்

என்னுடைய உடல் நிலை எவ்வளவு சீரியஸ் என்று உணர ஆரம்பித்தபோது விரக்தி அடைந்தேன், சதா என் நினைவாகவே இருந்தேன், எதற்கெடுத்தாலும் எரிந்து விழுந்தேன். சில சமயம், மூக்குக்கு மேல் கோபம் வந்தது. ஒன்றுமில்லாத விஷயத்திற்கெல்லாம் சண்டை போட்டேன். எப்போதும் மனச்சோர்வின் வாசலிலேயே குடியிருந்தேன். என்னால் குடும்பத்தில் இருந்த எல்லாருக்குமே மன அழுத்தம். என் மனைவியும் பிள்ளைகளும் முன்பின் அனுபவிக்காத புதிய பிரச்சினையை சமாளிக்க வேண்டியிருந்தது.

அந்தச் சமயத்தில், என் உணர்ச்சிகள் எல்லாமே நியாயம்தான் என்று பட்டது. என்னுடைய எடை கிடுகிடுவென ஏறியது. மலம் கழிப்பதில் பயங்கரமான பிரச்சினைகள் ஏற்பட்டது, சிறுநீரையும் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த அவமானத்தால் கூனிக் குறுகினேன். பலமுறை குளமான கண்களுடன் தனியாக ஒரு மூலையில் ஒடுங்கிக்கிடந்தேன். மிகுந்த கோபத்தினால் கோமாளித்தனமாக நடந்து கொண்ட சமயங்களும் உண்டு. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களை நான் சரியான விதத்தில் சமாளிக்கவில்லை என்று எனக்கு நன்றாகவே புரிந்தது.

யெகோவாவின் சாட்சிகளின் கிறிஸ்தவ சபையில் நான் ஒரு மூப்பராக இருந்தேன். எந்த துன்பத்திற்கும் யெகோவாவை காரணங்காட்டி குற்றப்படுத்தக் கூடாது என்பதாக உடன் சகோதரர்களுக்கு அடிக்கடி ஆலோசனைகளையும் வழங்கியிருக்கிறேன். இருந்தபோதிலும், ‘எனக்கு ஏன் இப்படி ஒரு கஷ்டத்தை யெகோவா அனுமதித்தார்?’ என்று பலமுறை என்னை நானே கேட்டிருக்கிறேன். மற்றவர்களை பலப்படுத்தவும் உற்சாகப்படுத்தவும் 1 கொரிந்தியர் 10:13 போன்ற வசனங்களை பயன்படுத்தியிருந்தாலும், எனக்கு வந்த கஷ்டமோ தாங்கிக்கொள்ள முடியாதது என்று நினைத்தேன்!

சிகிச்சை என்ற சிக்கல்

ஒரு நல்ல சிகிச்சை முறையை கண்டுபிடிப்பது சவாலாகவே இருந்தது. ஒரே நாளில் பிசியோதெரபிஸ்ட்டையும் வர்மமுறை மருத்துவரையும் அக்குபங்சரிஸ்ட்டையும் சந்தித்தேன். அந்த சிகிச்சைகளினால் தற்காலிகமான நிவாரணமே கிடைத்தது. எலும்பியல் மற்றும் நரம்பியல் அறுவை மருத்துவர்கள் போன்ற இன்னும் சிலரையும் சந்தித்து கருத்துக்களை கேட்டேன். இவர்கள் அனைவரும் ஒரே விஷயத்தைத்தான் சொன்னார்கள்; அதாவது வலியிலிருந்து விடுபடவும் இடம்பெயர்ந்த வட்டை அகற்றவும் அறுவை சிகிச்சை தேவை என்றார்கள். ஆனால் பைபிள் சார்ந்த என்னுடைய நம்பிக்கையின்படி எந்த சூழ்நிலையிலும் இரத்தம் ஏற்றக்கூடாது என்பதாக அந்த மருத்துவர்களிடம் நான் தெளிவாக விளக்கினேன்.​—⁠அப்போஸ்தலர் 15:28, 29.

நான் சந்தித்த முதல் மருத்துவர் என்னுடைய முதுகில் ஆபரேஷன் செய்வதாக கூறினார். ஆனால் இந்த மருத்துவ முறை ரொம்ப ஆபத்தானது என்றும் எனக்கு விளக்கினார். அதேசமயம் சிகிச்சையின்போது இரத்தம் செலுத்தப்படாது என்பதற்கான எந்த உறுதியையும் அவர் அளிக்காததால் நான் அவரிடம் மறுபடியும் போகவில்லை.

இரண்டாவது மருத்துவர் என் கழுத்து வழியாக தண்டுவடத்தில் ஆபரேஷன் செய்வதாக கூறினார். அந்த சிகிச்சை முறை என்னை பீதியடையச் செய்தது. இரத்தம் இல்லாமல் ஆபரேஷன் செய்ய அவர் ஒத்துக்கொண்டாலும், அதை உடனே செய்ய வேண்டும் என்று சொல்லி சில விவரங்களை அளித்தார். ஆனால் இந்த சிகிச்சை முறையையும் நான் கைவிட்டேன்.

கடைசியாக, யெகோவாவின் சாட்சிகளின் உள்ளூர் மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுவின் உதவியோடு, நன்கு ஒத்துழைக்கும் ஒரு மருத்துவரை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது. இவர் கூறிய சிகிச்சை முறையும் இரண்டாவது மருத்துவர் சொன்ன விதமாகவே இருந்தது; அதாவது கழுத்தில் கீறி அதன் வழியாக செய்யும் சிகிச்சையாகும். இதில் ஆபத்தும் குறைவுதான் என்று கூறினார்.

இந்த சிகிச்சை எப்படி செய்யப்படும் என்பது தெள்ளத்தெளிவாக காட்டப்பட்டபோது மனம் திக் என்றது. அத்தகைய சிகிச்சை, மிகவும் மென்மையான உறுப்புகளாகிய இருதயத்தையும் நுரையீரலையும் சுற்றி செய்யப்பட வேண்டும் என்று தெரிந்ததும் அரண்டுபோனேன். அந்த சிகிச்சையில் நான் பிழைப்பேனா என்ற கேள்வி மனதை ஆட்டிப்படைத்தது. அந்த சந்தேகத்தால் என் பயம் இன்னும் அதிகமானது.

ஒருவழியாக நவம்பர் 25, 1998-⁠ல் நைரோபி மருத்துவமனையில் எனக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது; அது நான்கு மணிநேரம் நீடித்தது. இந்த சிகிச்சையில் என்னுடைய இடுப்பு எலும்பின் ஒரு சிறிய துண்டு வெட்டி எடுக்கப்பட்டது. பிறகு அந்த துண்டு செதுக்கப்பட்டு உலோகத் தகடையும் திருகுகளையும் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டது. இந்த சிகிச்சை எனக்கு கொஞ்சம் உதவினாலும் என்னுடைய எல்லா பிரச்சினைகளையும் அது நீக்கவில்லை. உதாரணமாக நடக்க முடியாமல் நடந்தேன். என் உடல் எந்நேரமும் மரத்துப் போயிருந்தது, இந்நாள் வரை அது சரியாகவில்லை.

நம்பிக்கையான மனப்பான்மை

ஆரம்பத்திலே சொன்ன விதமாக, என்னுடைய பரிதாபமான நிலையை நினைத்து நினைத்து மணிக்கணக்காகவும் நாட்கணக்காகவும் கவலையில் மூழ்கியிருந்தேன். ஆனால் அநேக மருத்துவ பணியாளர்கள், நான் அமைதியாகவும் நம்பிக்கையோடும் இருப்பதாக சொல்லி பாராட்டியதுதான் வேடிக்கையான விஷயம். அவர்கள் அப்படி சொன்னதற்கு காரணம் என்ன தெரியுமா? நான் வலியால் தவித்துக் கொண்டிருந்தபோதும் கடவுள் மீதுள்ள என்னுடைய நம்பிக்கைகளைப் பற்றி அவர்களிடம் பேசியதுதான்.

எனக்கு ஏற்பட்ட நிலையை நினைத்து அவ்வப்போது ஆத்திரமும் எரிச்சலும் அடைந்தேன் என்றாலும் யெகோவாவையே சார்ந்திருந்தேன். எல்லா கஷ்டங்களிலும் அவர்தான் எனக்கு பக்கபலமாக இருந்தார். அவர் அந்த அளவிற்கு உறுதுணையாக இருந்ததை நினைத்து சில சமயம் என்னை பார்த்தே நான் வெட்கப்பட்டிருக்கிறேன். என்னுடைய சூழ்நிலைக்கு எந்த வசனங்கள் எல்லாம் ஆறுதலாக இருக்கும் என்று நினைத்தேனோ அதையெல்லாம் படித்து தியானிக்க உறுதியாக தீர்மானித்தேன். அவற்றில் சில:

வெளிப்படுத்துதல் 21:4: “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை.” புதிய உலகத்தில் கண்ணீரும் வலியும் முற்றிலுமாக நீக்கப்படும் என்ற பைபிளின் வாக்குறுதியை தியானித்தது உண்மையிலே என்னை தேற்றியது.

எபிரெயர் 6:10: “உங்கள் கிரியையையும், நீங்கள் . . . தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே.” என்னால் கடவுளுடைய வேலையில் அதிகமாக செய்ய முடியாமல் போயிருந்தாலும் நான் எடுக்கும் முயற்சிகளை யெகோவா உயர்வாக மதிப்பது புரிந்தது.

யாக்கோபு 1:13: “சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.” இது எவ்வளவு உண்மை! என்னுடைய துன்பங்களை யெகோவா அனுமதித்தாரே தவிர அவர் அதற்கு காரணரே அல்ல.

பிலிப்பியர் 4:6, 7: “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.” நான் பெற ஏங்கிய மன நிம்மதியை ஜெபம் எனக்கு தந்தது, இது என்னுடைய சூழ்நிலைகளை அதிக ஞானமாக கையாளுவதற்கு உதவியது.

வேதனையில் இருந்த மற்றவர்களை உற்சாகப்படுத்துவதற்கு இந்த வசனங்களை நான் முன்பு பயன்படுத்தியிருந்தேன்; அவை அவர்களுக்கு உண்மையிலேயே உதவின! ஆனால் அந்த வசனங்களின் மதிப்பை அப்போது நான் முழுவதுமாக புரிந்துகொள்ளவில்லை; வியாதியால் கஷ்டப்பட்ட பிறகுதான் உணர்ந்தேன். மனத்தாழ்மையையும் யெகோவாவின் மீது முழுமையாக சார்ந்திருப்பதையும் கற்றுக்கொள்வதற்காக இந்தப் பெரிய கஷ்டம் எனக்கு தேவையாகத்தான் இருந்தது.

பக்கபலமாக இருந்த மற்றவர்கள்

கஷ்டமான சூழ்நிலையில் கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் தூணாகவும் துணையாகவும் இருப்பதாக அநேகர் சொல்கின்றனர். இருந்தாலும், சில சமயங்களில் அவர்களை ரொம்ப துச்சமாக நினைத்துவிடுவது எவ்வளவு சுலபம்! அவர்களால் எல்லா வித உதவிகளையும் செய்ய முடியாமல் இருக்கலாம், ஆனால் நமக்கு உதவ அவர்கள் எப்பொழுதும் காத்திருக்கிறார்கள். என்னுடைய விஷயத்தில் இதுவே உண்மை. மருத்துவமனையில் என்னுடைய படுக்கைக்கு அருகில் சகோதர சகோதரிகள் இல்லாத நாளே இல்லை; சில சமயம் விடியற்காலையிலும்கூட இருப்பார்கள். மருத்துவ செலவுக்கான பணத்தையும்கூட நன்கொடையாக அளித்தார்கள். என்னுடைய நெருக்கடியான நிலையைப் பார்த்து மனம் தூண்டப்பட்டு எனக்கு உதவி செய்த அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றியை செலுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.

என்னால் அதிகமான வேலைகளை செய்ய முடியாது என்று எங்களுடைய உள்ளூர் சபையில் இருக்கும் சாட்சிகளுக்கு தெரியும். தற்பொழுது நடத்தும் கண்காணியாக நான் சேவிக்கிறேன். சபையில் நல்ல ஆதரவைத் தரும் கிறிஸ்தவ மூப்பர் குழுவோடு சேர்ந்து பணியாற்றுகிறேன். எந்த சூழ்நிலையிலும் நான் பிரசங்க வேலையில் ஒழுங்கற்றவனாக ஆனதேயில்லை. கடுமையான வேதனையின் மத்தியிலும், யெகோவாவுக்கு தங்களை ஒப்புக்கொடுக்க இரண்டு நபர்களுக்கு நான் உதவி செய்தேன். அவர்களில் ஒருவர் நைரோபியில் உள்ள யெகோவாவின் சாட்சிகளின் சபையில் இப்போது உதவி ஊழியராக சேவை செய்கிறார்.

இந்த எல்லா கடுமையான சோதனைகளிலும் எனக்கு ஆதரவாக இருந்த என் மனைவிக்கு நன்றி சொல்ல இன்னும் எனக்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை. என்னுடைய கோபத்தையும், அடிக்கடி மாறிய ‘மூட்’-ஐயும், நியாயமில்லாத நடத்தையையும், விரக்தியையும் என் மனைவி சகித்தாள். எப்போதெல்லாம் நான் கண்ணீரோடும் வேதனையோடும் இருந்தேனோ அப்போதெல்லாம் நம்பிக்கை எனும் ஒளியை என் மனதிலே ஏற்றி என்னை தேற்றினாள். அவள் நெஞ்சுரத்தோடு இன்னல்களை சந்தித்து மேற்கொண்ட விதம் இன்னும் என்னை திகைக்க வைக்கிறது. ‘எல்லாக் காலத்திலும் . . . ஒரு உண்மையான சிநேகிதியாக’ அவள் நிரூபித்தாள்.​—⁠நீதிமொழிகள் 17:17, NW.

என் மகள்களும்கூட என்னுடைய பிரச்சினையை கையாள கற்றிருக்கிறார்கள். முடிந்த அளவிற்கு அவர்கள் எனக்கு உதவி செய்கிறார்கள். தேவைகளை உணர்ந்து உடனடியாக செயல்படுகிறார்கள், அதுவும் அவர்களுடைய அம்மா வீட்டில் இல்லாத சமயங்களில் எனக்கு வேண்டியதை எல்லாம் செய்கிறார்கள். சில்வியாதான் என்னுடைய “வாக்கிங்-⁠ஸ்டிக்,” நான் களைப்பாக உணரும் போதெல்லாம் அவள்தான் என்னை வீட்டைச் சுற்றி கைத்தாங்கலாக கூட்டிச்செல்கிறாள்.

கடைக்குட்டி வில்ஹெல்மினாவைப் பற்றியென்ன? ஒருசமயம் வீட்டில் இருக்கும்போது நான் கீழே விழுந்துவிட்டேன், என்னால் எழுந்திருக்கவே முடியவில்லை. அப்போது அவளைத் தவிர வீட்டில் வேறு யாருமே இல்லை. உடனடியாக அவள் தனக்கிருந்த எல்லா சக்தியையும் ஒன்றுதிரட்டி, என்னை தூக்கி மெதுவாக என்னுடைய ரூமிற்கு கூட்டிச் சென்றாள். அப்படி ஒரு செயலை எப்படி செய்ய முடிந்தது என்பது இன்னும் அவளுக்கு புரியாத புதிராகவே இருக்கிறது. அவளுடைய அந்த வீரச் செயல் என்னுடைய மனதில் பசுமரத்து ஆணியாக பதிந்துவிட்டது.

இதுவரை நான் சொன்ன கொடுமையான கஷ்டத்தை என் வாழ்க்கையில் இதற்கு முன்பு அனுபவித்ததே இல்லை, இன்னும் அந்தக் கஷ்டத்தோடு போராடிக்கொண்டுதான் இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையையும் விசுவாசத்தையும் இந்த அளவிற்கு வேறு எதுவுமே சோதித்ததில்லை. மனத்தாழ்மையையும் நியாயத்தையும் அனுதாபத்தையும் பற்றி என்னால் அதிகமாக கற்றுக்கொள்ள முடிந்திருக்கிறது. யெகோவாவின் மீது முழு நம்பிக்கையுடனும் விசுவாசத்துடனும் இருந்தது இந்தப் பிரச்சினையை வெற்றிகரமாக சமாளிக்க எனக்கு உதவியது.

“இந்த மகத்துவமுள்ள [“இயல்புக்கு அப்பாற்பட்ட,” NW] வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்” என்ற அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகளில் உள்ள சத்தியத்தை நான் கற்றுக்கொண்டேன். (2 கொரிந்தியர் 4:7) “புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகு”ம் என்ற கடவுளுடைய வாக்குறுதி எனக்கு மிகுந்த ஆறுதலை அளிக்கிறது. (2 பேதுரு 3:13) நான் இன்னமும் பலவீனமாக இருப்பதால் என்னுடைய சொந்த சக்தியால் எதையுமே சாதிக்க முடியாது. ஆகவே புதிய உலகம் வரும் வரையாக என்னை தொடர்ந்து காப்பாற்றும்படி நான் யெகோவாவிடம் ஜெபிக்கிறேன். (g03 4/22)

[பக்கம் 20-ன் படங்கள்]

குடும்பத்தோடு கிறிஸ்தவ நடவடிக்கைகளில் ஈடுபட்டது சகித்திருக்க எனக்கு உதவியிருக்கிறது