குட்டிக் காதின் இரகசியம் அம்பலம்
குட்டிக் காதின் இரகசியம் அம்பலம்
“ஒலிகள் வரும் திசையை மிருகங்கள் உணர்ந்துகொள்ளும் ஒருவித புதிய நுட்பத்தை கடந்த பத்தாண்டுகளில் உயிரியல் நிபுணர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்” என்று ஸைன்ஸ் நியூஸ் சொல்கிறது. “சுவர்க்கோழி (Cricket) எழுப்பும் சத்தத்தை வைத்தே ஒட்டுண்ணி வகையைச் சேர்ந்த ஒரு ஈ, நைஸாக அவற்றை துரத்தித் துரத்திப்போய் ஒட்டிக்கொள்வதை கவனித்த போதுதான் ஒலியை ஒருமுகப்படுத்தும் அந்தப் புதிய நுட்பம் வெட்ட வெளிச்சமானது. இதுவரை நமக்கு தெரிந்த எந்தவொரு ஒலி சம்பந்தப்பட்ட நுட்பமும் இந்த ஈக்கு உதவுவது போல் தெரியவில்லை. காரணம்? இந்த ஈயின் தலை ரொம்ப ரொம்ப குட்டி.” பொதுவாக, இரண்டு செவிப்பறைகளுக்கு இடையில் இருக்கும் கணிசமான இடைவெளியைப் பொருத்தே ஒலி சம்பந்தப்பட்ட அந்த நுட்பங்கள் நன்றாக வேலை செய்ய முடியும்.
என்றபோதிலும், “ஒர்மியா ஒக்ரேசியா இனத்தை சேர்ந்த இந்தப் பெண் ஈக்களின் ஒன்றிணைக்கப்பட்ட இரு செவிப்பறைகளுக்கு இடையிலுள்ள தூரம் ஒரு மில்லிமீட்டர்கூட இல்லையென்றாலும், 2 காம்பஸ் டிகிரி அளவில் ஏற்படும் லேசான ஒலியையும் படுதுல்லியமாக—ஓர் ஆந்தையைப் போல—அவற்றால் கேட்க முடிகிறது” என அ.ஐ.மா.-விலுள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடந்த ஓர் ஆய்வு சொல்கிறது. இந்த ஈயினால் ஆந்தையைப் போல அத்தனை கூர்மையாக கேட்க முடிகிறதென்றால் அதன் திறமை வாய்ந்த செவி உறுப்புக்குத்தான் ‘ஜே!’ சொல்ல வேண்டும்.
இந்த ஈயின் செவிப்பறைகள் ஒருவித பாலம் போன்ற அமைப்பால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருப்பதால் அந்த இரு ஜவ்வுகளும் ஒன்றாக சேர்ந்து, குழந்தைகள் விளையாடும் ‘ஸீஸா’வைப் போல இப்படியும் அப்படியுமாக அசைகின்றன. சுவர்க்கோழி எழுப்பும் சத்தத்தின் ஒலி அதிர்வுகள் அந்த ஈயின் ஒரு செவிப்பறையை—அந்தப் சுவர்க்கோழி இருக்கும் திசையில் உள்ள செவிப்பறையை—எட்டியவுடனேயே மறுபக்கத்திலுள்ள செவிப்பறைக்கு அந்த ஒலி அதிர்வுகள் கடத்தப்படுகின்றன; இவ்வாறு இரண்டாவது செவிப்பறையால் அந்த ஒலி அலைகளுக்கு சரியாக பிரதிபலிக்க முடிவதில்லை; ஆகவே, அந்தச் சுவர்க்கோழி இருக்கும் திசையில் உள்ள காது ஜவ்வுதான் அதிக பலமாக அதிர்கிறது. அதனால் அந்த திசையை நோக்கியே இந்த ஈ சர்ரென்று பறந்துபோய் குறி தப்பாமல் அந்தப் சுவர்க்கோழியின் மீது ஒட்டிக்கொள்கிறது.
இந்தக் கண்டுபிடிப்பால் நமக்கென்ன பிரயோஜனம்? மைக்ரோ போன்கள், காதுகேட்க உதவும் கருவிகள் போன்றவற்றின் வடிவமைப்பை இன்னும் கொஞ்சம் மேம்படுத்த இந்தக் கண்டுபிடிப்பு உதவும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். உதாரணத்திற்கு, “கேட்பவரின் எதிரிலிருந்து வரும் சத்தத்தை மட்டுமே முக்கியமாக ஒருமுகப்படுத்தும்” விதத்தில் காதுகேட்க உதவும் கருவிகளை வடிவமைக்க முடியும் என அந்த அறிக்கை சொல்கிறது. ஆம், யெகோவாவின் வியக்க வைக்கும் படைப்பில்தான் எத்தனை எத்தனை ஞானம்!—யோபு 42:2. (g03 4/22)
[பக்கம் 31-ன் படங்களுக்கான நன்றி]
R. Hoy/Cornell University
மேலே இரண்டு படங்கள்: R. Wyttenbach/ Cornell University