Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சர்ச்சிடம் கலிலீயோவுக்கு ஏற்பட்ட கருத்து பேதம்

சர்ச்சிடம் கலிலீயோவுக்கு ஏற்பட்ட கருத்து பேதம்

சர்ச்சிடம் கலிலீயோவுக்கு ஏற்பட்ட கருத்து பேதம்

இத்தாலியிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

அது 1633-⁠ம் வருடம், ஜூன் 22-⁠ம் தேதி. தள்ளாத வயதில் அந்த முதியவர் ரோம ஒடுக்குமுறை விசாரணை மன்றத்தின் முன்பு முழங்கால் படியிட்டு நிற்கிறார். அவர் அன்றைய நாளில் நட்சத்திரமாக திகழ்ந்த ஓர் அறிவியல் மேதை. அவருடைய அறிவியல் கருத்துக்கள் பல்லாண்டு கால படிப்பாலும் ஆராய்ச்சியாலும் விளைந்தவை. எனினும் இப்போது, தன் உயிர்மீது ஆசையிருந்தால் தானறிந்த உண்மைகளை தன் வாயாலேயே பொய்யென மறுக்க வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறார் அவர்.

அவருடைய பெயர் கலிலீயோ கலிலி. கலிலீயோ வழக்கு என பெரும்பான்மையோர் அழைக்கும் இவ்வழக்கு, சந்தேகங்களை கிளப்பி, கேள்விகளை எழுப்பி, சர்ச்சையை தூண்டிவிட்டது; இன்றும், சுமார் 370 ஆண்டுகளுக்குப் பிறகும் அது விவாதிக்கப்படுகிறதென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். மதம், அறிவியல் ஆகியவற்றின் சரித்திர ஏடுகளில் அந்த வழக்கு அழியா முத்திரை பதித்திருக்கிறது. இந்த வழக்கு சம்பந்தமாக ஏன் இந்தளவுக்குக் குழப்பமும் கொந்தளிப்பும்? கலிலீயோ வழக்கு இந்த சகாப்தத்தில் மீடியாக்களில் மீண்டும் விமர்சிக்கப்படுவது ஏன்? ஓர் எழுத்தாளர் குறிப்பிட்டதுபோல் உண்மையில் அது “அறிவியலுக்கும் மதத்திற்கும் இடையே ஏற்பட்ட முறிவுக்கு” அடையாளமாக இருக்கிறதா?

“நவீன அறிவியலின் தந்தை” என கலிலீயோ பலராலும் போற்றப்படுகிறார். அவர் ஒரு கணித மேதை, வானவியல் விஞ்ஞானி, இயற்பியல் அறிஞர். டெலஸ்கோப்பின் உதவியுடன் வானை ஆராய்ந்த ஆரம்ப கால ஆராய்ச்சியாளர்களுள் கலிலீயோவும் ஒருவர். அன்று எங்கும் காரசாரமாக விமர்சிக்கப்பட்டு வந்த ஒரு கருத்தை ஆதரிக்க டெலஸ்கோப்பின் உதவியுடன் தான் பார்த்தவற்றை விலாவாரியாக அவர் விளக்கினார். சூரியனை சுற்றி பூமி வலம் வருகிறது, ஆகையால் பிரபஞ்சத்தின் மையத்தில் நம் கிரகமான பூமி இல்லை என அவர் விளக்கினார். எனவே நவீன ஆய்வாராய்ச்சி முறைக்கு வித்திட்டவராக கலிலீயோ சிலசமயங்களில் கருதப்படுவதில் ஆச்சரியமேதுமில்லை!

கலிலீயோ எதையெல்லாம் கண்டுபிடித்தார், உருவாக்கினார் என தெரியுமா? வியாழன் கிரகத்திற்கு நிலாக்கள் உள்ளன, பால்வீதி மண்டலத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் உள்ளன, சந்திரனில் மலைகள் உள்ளன, வெள்ளி கிரகத்தில் சந்திரனைப் போலவே வெவ்வேறு பிறைகள் ஏற்படுகின்றன. இவை, வானவியல் விஞ்ஞானியாக அவருடைய கண்டுபிடிப்புகளில் சில. இயற்பியல் அறிஞராக அவர் ஊசற்குண்டையும் (pendulum) கீழே விழும் பொருட்களின் வேகத்தையும் கட்டுப்படுத்தும் இயற்பியல் சட்டங்களை ஆராய்ந்தார். வடிவியல் காம்பஸையும், நழுவும் சட்டம் (slide rule) போன்ற ஒரு கருவியையும் அவர் உருவாக்கினார். ஹாலந்திலிருந்து பெற்ற தகவலைப் பயன்படுத்தி பிரபஞ்சத்தையே தன் கண் முன் கொண்டு வந்து நிறுத்திய டெலஸ்கோப்பை படைத்தார்.

எனினும், மத குருவர்க்கத்தாருடனான நீண்ட கால மோதல் இந்தப் பிரபல விஞ்ஞானியின் பணிக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தியது; அதுவே கலிலீயோவின் வழக்கிற்கு வித்திட்டது. அது எப்படி ஆரம்பமானது, ஏன்?

ரோமுடன் கருத்து பேதம்

16-⁠ம் நூற்றாண்டின் முடிவிலேயே கோப்பர்னிக்கஸின் கோட்பாட்டை கலிலீயோ ஏற்றுக்கொண்டார். சூரியன் பூமியைச் சுற்றி வலம் வரவில்லை, பூமியே சூரியனை சுற்றி வருகிறது என்பதே அந்தக் கோட்பாடு. இது ஹெலியோசென்ட்ரிக் (சூரியனை மையமாக கொண்ட) அமைப்புமுறை எனவும் அழைக்கப்படுகிறது. வான வீதியில் வலம் வருகிற, இதுவரை அறியப்படாத நட்சத்திரங்களையும் கிரகங்களையும் கண்டுபிடிக்க கலிலீயோ 1610-⁠ல் தன் டெலஸ்கோப்பைப் பயன்படுத்தினார்; பிறகு ஹெலியோசென்ட்ரிக் அமைப்புமுறைக்கான ஆதாரத்தைக் கண்டுபிடித்ததில் அவர் பரமதிருப்தியடைந்தார்.

இப்படி அரும்பெரும் உண்மைகளை கண்டுபிடித்ததுடன் கலிலீயோ திருப்தியடையாமல் இன்னும் முன்னேற விரும்பினார் என்கிறது கிராண்டி டீட்சியானாரியோ என்சீக்லோபிடீகோ UTET என்ற புத்தகம். கோப்பர்னிக்கஸின் கோட்பாடு சரியானதே என்பதை “அன்றைய நாளின் உயர் பதவியிலிருந்த பிரமுகர்களுக்கு (பிரபுக்களுக்கும் கார்டினல்களுக்கும்)” அவர் உணர்த்த விரும்பினார். செல்வாக்குமிக்க நண்பர்களின் உதவியோடு சர்ச்சின் எதிர்ப்புகளை சமாளித்து, அதன் ஆதரவை எப்படியாவது பெற்றுவிடலாம் என மனக்கோட்டையும் கட்டினார்.

1611-⁠ல் கலிலீயோ ரோமிற்குப் பயணப்பட்டார். பொறுப்பான பதவிகளிலிருந்த குருமார்களைக் கண்டார். தன் அரிய வானவியல் கண்டுபிடிப்புகளை காட்ட தன் டெலஸ்கோப்பைப் பயன்படுத்தினார். ஆனால் அவர் ஆசைப்பட்டபடி எதுவும் நடக்கவில்லை. 1616-⁠ல் அதிகாரிகளால் கலிலீயோ தீவிரமாக கண்காணிக்கப்பட்டார்.

ஹெலியோசென்ட்ரிக் அமைப்புமுறை பற்றிய ஆய்வுக் கோட்பாடு, “அநேக இடங்களில் பரிசுத்த வேதாகமத்திலுள்ள வாக்கியங்களின் நேர்ப்பொருளுடனும், பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விளக்கவுரையுடனும், பரிசுத்த போப்புகள் மற்றும் தலைசிறந்த இறையியலாளர்களின் புரிந்துகொள்ளுதலுடனும் பகிரங்கமாகவே முன்னுக்குப் பின் முரண்படுகிறது; எனவே அந்தத் தத்துவம் முட்டாள்தனமானது, அர்த்தமற்றது, விதிப்படி முரண்பாடானது” என ரோம ஒடுக்குமுறை விசாரணை மன்ற இறையியலாளர்கள் முத்திரை குத்தினார்கள்.

ராபர்ட் பெல்லார்மீன் என்ற கார்டினலை கலிலீயோ சந்தித்தார்; அன்று அவர் கத்தோலிக்க இறையியலாளர்களில் முதன்மையானவராக கருதப்பட்டவர், “முரண் சமய கோட்பாட்டாளர்களை உடைத்தெறியும் சுத்தியல்” என சிறப்பு பெயர் பெற்றவர். சூரியனை மையமாக கொண்ட அமைப்புமுறை பற்றிய தன் கருத்துக்களை கலிலீயோ பரப்பாதிருக்கும்படி வெகு கண்டிப்புடன் அவர் சொல்லியிருந்தார்.

ஒடுக்குமுறை விசாரணை மன்றத்தில்

கலிலீயோ ரொம்பவே முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ள முயன்றார்; ஆனால் கோப்பர்னிக்கஸின் ஆய்வுக் கருத்துக்களை அவர் தொடர்ந்து ஆதரித்து வந்தார். பதினேழு வருடங்களுக்குப் பிறகு 1633-⁠ல் ஒடுக்குமுறை விசாரணை மன்றத்தில் ஆஜரானார் கலிலீயோ. அதற்குள் கார்டினல் பெல்லார்மீன் இறந்திருந்தார், ஆனால் ஒருகாலத்தில் கலிலீயோவிற்கு சாதகமாக இருந்த எட்டாம் போப் அர்பன் என்பவர் அவருக்கு முக்கிய எதிரியாக முளைத்தார். அன்று நடந்த விசாரணைகளிலேயே இது, மிகப் பிரபலமானது, துளியும் நியாயமற்றது என எழுத்தாளர்கள் விமர்சித்தார்கள்; இதை சாக்ரடீஸ், இயேசு ஆகியோரின் விசாரணைகளுக்கு சமமாக கருதினார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

இந்த விசாரணைக்குக் காரணம்? உலகின் முக்கியமான இரு ஒழுங்கு முறைகளின் உரையாடல் என்ற புத்தகத்தை இத்தாலிய மொழியில் கலிலீயோ எழுதினார். பூமி சூரியனைச் சுற்றி வருவதை இப்புத்தகம் ஆதரித்தது. 1632-⁠ம் ஆண்டு விசாரணை மன்றத்தில் ஆஜராகும்படி இந்த புத்தகத்தை எழுதிய கலிலீயோவிடம் சொல்லப்பட்டது. ஆனால் சுமார் 70 வயதானவராகவும் வியாதிப்பட்டவராகவும் இருந்ததால் அவர் அங்கு செல்வது தாமதமானது. சிறையிலடைக்கப்படுவார், பலவந்தமாக இழுத்து வரப்படுவார் என்றெல்லாம் மிரட்டப்பட்டதால் மறுவருடமே ரோமுக்கு புறப்பட்டார். அங்கு போப்பின் ஆணைப்படி விசாரணை செய்யப்பட்டார், துன்புறுத்தப்படுவார் என்றும் பயமுறுத்தப்பட்டார்.

வியாதிப்பட்ட இந்த முதியவர் உண்மையில் துன்புறுத்தப்பட்டாரா இல்லையா என்பது சர்சைக்குரிய விஷயம். அவருக்கு வழங்கப்பட்ட குற்றத்தீர்ப்பின்படி, “கடும் விசாரணைக்கு” உட்படுத்தப்பட்டார். துன்புறுத்துதலை விவரிக்க சட்ட ரீதியாக அன்று உபயோகிக்கப்பட்டவையே இவ்வார்த்தைகள் என இத்தாலிய சட்டத்தில் கரைகண்ட, ஈடாலோ மெரேயூ என்ற சரித்திராசிரியர் சொல்கிறார். அந்த விளக்கத்தை அநேக கல்விமான்கள் ஆமோதிக்கிறார்கள்.

அவர் துன்புறுத்தப்பட்டாரோ இல்லையோ ஆனால் 1633, ஜூன் 22-⁠ம் தேதி ஒரு சாதாரண அறையில், ஒடுக்குமுறை விசாரணை மன்றத்தாரின் முன்னிலையில் அவருக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது. “பரிசுத்த தெய்வீக வேதாகமம் கற்பிக்காத பொய் போதகங்களை, அதாவது சூரியன் . . . கிழக்கிலிருந்து மேற்கே நகருவதில்லை, பூமிதான் அதைச் சுற்றி வருகிறது, பூமி அண்டத்தின் மையத்தில் இல்லை என்றெல்லாம் நம்பினார்” என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கலிலீயோ உயிர் தியாகியாக இறக்க விரும்பவில்லை; எனவே தவறான கருத்துக்களேயே தான் நம்பியதாக தன் வாயாலேயே சொல்லும்படி அவர் நிர்ப்பந்திக்கப்பட்டார். அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு வாசிக்கப்பட்ட பிறகு, செய்த தவறுக்காக வருந்துகிறவர் போல் உடை அணிந்து, இந்த வயதான அறிவியலாளர் முழங்காலில் நின்றுகொண்டு இவ்வாறு சொன்னார்: “முன்பு சொன்ன தவறான கூற்றுகளையும் [கோப்பர்னிக்கஸ் கோட்பாட்டு] முரண்பாடுகளையும் இன்னும் பிற தவறுகளையும் அத்தோடு புனித சர்ச்சுக்கு எதிரான எல்லா தவற்றையும், முரண்பாட்டையும், பிரிவினையையும் நான் மறுக்கிறேன், சபிக்கிறேன், வெறுக்கிறேன்.”

இவ்வாறு சொல்லிவிட்டு, நிலத்தை காலால் ஓங்கி ஒரு மிதி மிதித்து “எனினும் இது சுற்றி வருகிறது!” என அவர் எதிர்த்ததாக ஒரு கதையும் உள்ளது; ஆனால் அது போதிய ஆதாரமற்றது. தன் கண்டுபிடிப்புகளையே பொய்யென சொன்னதால் ஏற்பட்ட அவமானம் அந்த அறிவியலாளர் இறக்கும் வரை அவரை வாட்டி வதைத்ததாக கருத்துரையாளர்கள் சொல்கிறார்கள். அவருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை, நிரந்தரமான வீட்டுக் காவல் தண்டனையாக மாற்றப்பட்டது. அவர் மெல்ல மெல்ல கண்ணொளியை இழக்க ஆரம்பித்ததால் தனிமையிலேயே வாழ்நாளைக் கழித்தார் என்றே சொல்லலாம்.

ஆன்மீகத்துக்கும் அறிவியலுக்கும் இடையே பேதம்

அறிவியலும் மதமும் எந்தக் காலத்திலும் ஒத்துப் போகாது என்பதற்கு கலிலீயோவின் உதாரணமே போதுமென அநேகர் முடிவுக்கு வருகிறார்கள். அதனால், பல நூற்றாண்டுகளாக கலிலீயோவின் வழக்கு மக்களை மதத்திலிருந்து காத தூரம் ஒதுங்கி நிற்கும்படி செய்திருக்கிறது. மதம் இயற்கையாகவே அறிவியல் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை என்பது பலரது கணிப்பாகிவிட்டது. அது உண்மையா?

போப் எட்டாம் அர்பனும், ரோம ஒடுக்குமுறை விசாரணை மன்றத்திலிருந்த இறையியலாளர்களும் கோப்பர்னிக்கஸின் கோட்பாட்டை வன்மையாக கண்டித்து, அது பைபிளுக்கு முரணானது என முத்திரை குத்தினது உண்மைதான். அதற்கு ஆதாரமாக கலிலீயோவின் எதிரிகள் “சூரியனே . . . தரித்துநில்” என யோசுவா சொன்னதை சுட்டிக்காட்டினார்கள்; அவர்கள் இதை சொல்லர்த்தமாக புரிந்துகொண்டிருந்தார்கள். (யோசுவா 10:12) அப்படியானால் உண்மையில் பைபிள் கோப்பர்னிக்கஸ் கோட்பாட்டுக்கு முரணானதா? இல்லவே இல்லை.

அறிவியலுக்கும் வேத வசனங்களின் தவறான விளக்கத்திற்கும் இடையேதான் முரண்பாடு இருந்தது. கலிலீயோவின் கண்ணோட்டமும் அதுதான். அவர் தன் மாணவன் ஒருவருக்கு இவ்வாறு எழுதினார்: “பைபிள் தவறானதாக இல்லாவிட்டாலும் அதன் கருத்துரையாளர்களும், விளக்கவுரையாளர்களும் பல்வேறு வழிகளில் தவறு செய்யலாம். சொல்லர்த்தமாக மட்டுமே எப்போதும் காரியங்களைப் புரிந்துகொள்வதுதான் அவர்கள் அடிக்கடி செய்யும் படுமோசமான தவறுகளில் ஒன்று.” பைபிளை கவனமாக ஆராயும் எந்த மாணவரும் இக்கருத்தை கண்டிப்பாக ஆமோதிப்பார். a

கலிலீயோ அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. பைபிளெனும் புத்தகத்தையும் இயற்கையெனும் புத்தகத்தையும் எழுதிய எழுத்தாளர் ஒருவரே, அப்படியிருக்க அவை ஒன்றுக்கொன்று முரண்பட வாய்ப்பில்லையென அவர் வாதிட்டார். “விளக்கமளிப்பவர்கள் அனைவருமே கடவுளுடைய ஆவியின் வழிநடத்துதலுடன்தான் சொல்கிறார்கள் என உறுதியாக” யாரும் நம்பிவிட முடியாது எனவும் சொன்னார். இப்படி மறைமுகமாக சர்ச்சின் அதிகாரப்பூர்வ விளக்கத்தை சாடியது, கோபத்தைக் கிளறியது; இதனால் ரோம ஒடுக்குமுறை விசாரணை மன்றம் இந்த அறிவியலாளரை கண்டித்தது. திருச்சபையின் விசேஷ உரிமையில் அத்துமீறி மூக்கை நுழைப்பதற்கு ஒரு சாதாரண பாமரனுக்கு எந்தளவு துணிச்சல் என்று நினைத்தது.

கலிலீயோவின் வழக்கை ஆதாரம் காட்டி, சர்ச்சும் போப்பும் பிழையற்றவர்கள்தானா என்ற சந்தேகத்தை அநேக கல்விமான்கள் எழுப்பியிருக்கிறார்கள். “கலிலீயோ குற்றம் சாட்டப்பட்டது” உட்பட “சர்ச்சின் போதனைகளிலுள்ள எண்ணற்ற, மறுக்க முடியாத” தவறுகள், பிழையற்ற தன்மை என்ற கோட்பாட்டின்மீது சந்தேகங்களை கிளப்பிவிட்டிருப்பதாக கத்தோலிக்க இறையியலாளரான ஹன்ஸ் க்யூங் எழுதுகிறார்.

கலிலீயோ மீண்டும் கௌரவிக்கப்பட்டாரா?

இரண்டாம் ஜான் பால் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அடுத்த வருடமாகிய, 1979, நவம்பர் மாதம், கலிலீயோவின் நிலையை அவர் பரிசீலிக்க விரும்பினார். “மனிதர்களின் கைகளிலும் சர்ச் அமைப்புகளின் கைகளிலும் . . . அவர் பெரும் கஷ்டத்தை அனுபவித்ததை” அந்தப் போப் ஒப்புக்கொண்டார். பதின்மூன்று வருடங்களுக்குப் பிறகு 1992-⁠ல் அதே போப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கமிஷன், “கலிலீயோவின் காலத்தில் வாழ்ந்த சில இறையியலாளர்கள் . . . படைக்கப்பட்ட பிரபஞ்சத்தின் அமைப்பைக் குறித்த பைபிள் விவரிப்புகளின் ஆழமான, அடையாள அர்த்தத்தைப் புரிந்துகொள்ள தவறினார்கள்” என ஒப்புக்கொண்டது.

எனினும் சூரியன் மையத்திலிருப்பதைப் பற்றிய கோட்பாட்டை உண்மையில் இறையியலாளர்கள் மட்டுமே குறைகூறவில்லை. அந்த வழக்கின் முக்கிய நபரான போப் எட்டாம் அர்பன், பிரபஞ்சத்தின் மையத்தில் பூமி உள்ளது என்ற ஆண்டாண்டு கால சர்ச் போதனையை கலிலீயோ ஆட்டம் காண செய்துவிடக் கூடாதென்று சொல்லி அவரைக் கடுமையாய் எதிர்த்தார். அந்தச் சர்ச் போதனை பைபிளில் உள்ளதல்ல, அது கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டில் கற்பித்ததே.

இந்நாளைய கமிஷன் அந்த வழக்கை அயராது பரிசீலித்தது; பிறகு, கலிலீயோவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை “அவசரப்பட்டு எடுக்கப்பட்ட தவறான தீர்ப்பு” என போப் அழைத்தார். அந்த அறிவியலாளர் கௌரவிக்கப்பட்டாரா? “சிலர் பேசுவது போல், கலிலீயோவை கௌரவிப்பது பற்றி பேசுவது பொருத்தமற்றதாக தோன்றுகிறது. காரணம், சரித்திரம் கலிலீயோவை அல்ல ஆனால் திருச்சபை விசாரணை மன்றத்தையே வன்மையாக கண்டிக்கிறது” என்றார் எழுத்தாளர் ஒருவர். “துன்புறுத்தப்பட்டவர்களை கௌரவிப்பது அவர்களை துன்புறுத்தியவர்களின் பொறுப்பல்ல” என்கிறார் சரித்திராசிரியர் லூயீஜீ ஃபீர்போ.

பைபிள் ‘இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கு.’ (2 பேதுரு 1:19) ஒரு தவறான விளக்கத்தை எதிர்ப்பதன் மூலம் கலிலீயோ பைபிளை ஆதரித்தார். ஆனால் சர்ச்சோ பைபிளைக் களங்கப்படுத்தி மனித பாரம்பரியத்தை ஆதரித்ததன் மூலம் அதற்கு எதிர்மாறானதை செய்தது. (g03 4/22)

[அடிக்குறிப்பு]

a சூரியன் வானத்தில் தரித்து நின்றதைப் பற்றிய வாக்கியம், அறிவியல் விளக்கமாக அல்லாமல், மனித கண்ணோட்டத்தில் அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு சாதாரணமாக அது எப்படி தோன்றியது என்பதையே குறிப்பிடுவதாக நேர்மை மனம் படைத்த எந்த வாசகரும் உடனடியாக ஒப்புக்கொள்வார். வானவியல் கணிப்பாளர்களும்கூட சூரியன், சந்திரன், கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவை உதயமாவதையும் அஸ்தமிப்பதையும் பற்றி அடிக்கடி சொல்கிறார்கள். இவை சொல்லர்த்தமாகவே பூமியை சுற்றி வருவதாக அவர்கள் சொல்லவில்லை, ஆனால் அவை வானவெளியில் பயணிப்பதைப் போல் தோன்றுவதையே அவ்வாறு சொல்கிறார்கள்.

[பக்கம் 14-ன் பெட்டி/படம்]

கலிலீயோவின் வாழ்க்கை

பைசா என்ற இடத்தில் 1564-⁠ம் ஆண்டு ஃப்ளாரென்ஸ் நகரைச் சேர்ந்தவருக்கு மகனாக கலிலீயோ பிறந்தார். அங்கிருந்த பல்கலைக்கழகத்தில் அவர் மருத்துவம் பயின்றார். அதில் அவருக்கு அந்தளவு நாட்டமில்லாததால் அப்படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இயற்பியலையும் கணிதத்தையும் ஆர்வமாக பயின்றார். 1585-⁠ல் படிப்பு தகுதிகள் ஏதுமின்றி வீடு திரும்பினார். ஆனாலும் அந்நாளைய கணித மேதைகளில் ஒருவராக கௌரவிக்கப்பட்டார், பைசா பல்கலைக்கழகத்தில் கணித விரிவுரையாளராக பெரும் பதவியைப் பெற்றார். அவருடைய அப்பா இறந்த பின்பு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அவர் பாதுவா என்ற இடத்திற்குக் குடிமாறினார். அங்குள்ள பல்கலைக்கழகத்தில் கணித விரிவுரையாளர் என்ற பெரும் பதவியில் அமர்த்தப்பட்டு மேலும் பெருமைப்படுத்தப்பட்டார்.

பாதுவாவில் 18 வருடம் பணியாற்றிய காலத்தில், கலிலீயோ நீண்ட காலம் தொடர்பு வைத்திருந்த வெனிஸ் நகர பெண் மூலம் அவருக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். 1610-⁠ல் அவர் ஃப்ளாரென்ஸுக்குத் திரும்பினார், அச்சமயத்தில் வாழ்க்கையில் பொருளாதார ரீதியில் வசதியாக இருந்தார். இது ஆய்வில் பெருமளவு நேரத்தை செலவிட வழிசெய்தது; ஆனால் வெனிஸ் குடியரசில் அவர் அனுபவித்த சுதந்திரம் இங்கு பறிபோனது. டஸ்கனியின் அரசர் அவரை ‘பிரதான தத்துவஞானியாகவும் கணித மேதையாகவும்’ நியமித்தார். ஒடுக்குமுறை விசாரணை மன்றம் அளித்த தண்டனையால் ஃப்ளாரென்ஸ் நகரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த கலிலீயோ 1642-⁠ல் உயிர் நீத்தார்.

[படத்திற்கான நன்றி]

From the book The Library of Original Sources, Volume VI, 1915

[பக்கம் 12-ன் படம்]

பிரபஞ்சத்தின் மையத்தில் பூமி இல்லை என்பதை உறுதிப்படுத்த உதவிய கலிலீயோவின் டெலஸ்கோப்

[படத்திற்கான நன்றி]

Scala/Art Resource, NY

[பக்கம் 12-ன் படங்கள்]

பூமியை மையமாக கொண்ட அமைப்புமுறை

சூரியனை மையமாக கொண்ட அமைப்புமுறை

[படத்திற்கான நன்றி]

பின்னணி: © 1998 Visual Language

[பக்கம் 11-ன் படத்திற்கான நன்றி]

படம்: From the book The Historian’s History of the World