Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நான் ஏன் தத்தெடுக்கப்பட்டேன்?

நான் ஏன் தத்தெடுக்கப்பட்டேன்?

இளைஞர் கேட்கின்றனர் . . .

நான் ஏன் தத்தெடுக்கப்பட்டேன்?

“அது காலம் முழுவதும் ஊனத்துடன் வாழ்வதைப் போன்றது. அது குணப்படுத்த முடியாத மன வியாதி.”

—ராபர்ட்.

இப்படித்தான் ஒருவர் தன் வாழ்க்கையை விவரிக்கிறார். இவர் பச்சிளம் குழந்தையாய் இம்மண்ணில் பிறந்ததும் தத்துக் கொடுக்கப்பட்டவர். “சொல்லப்போனால், என் அப்பா, அம்மா, கூடப் பிறந்தவர்கள் எல்லாரும் உண்மையில் யார்? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? ஏன் என்னை தத்துக் கொடுத்தார்கள்? என்றெல்லாம் அறிந்துகொள்ள ஒவ்வொரு நாளும் என் மனம் கிடந்து அடித்துக்கொள்ளும்” என அவர் சொல்கிறார்.

சன்டியேல் என்பவளின் அப்பா ஒரு தத்துப் பிள்ளை. எனவே தன்னுடைய சொந்த தாத்தா பாட்டி யாரென தெரியாததை எண்ணி அவள் புலம்புகிறாள். “பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சின்னம்மா, அவர்களுடைய பிள்ளைகள் என யாருமே எனக்கு இல்லாதது எனக்கு பெரிய ஏமாற்றமா இருக்கு” என்கிறாள் அவள். தத்துப் பிள்ளைகள் அனைவருமே இப்படி கவலைப்படுவதில்லை. ஆனால் சிலர் கவலைப்படத்தான் செய்கிறார்கள். அதற்குக் காரணமென்ன?

கோபத்துக்குக் காரணம்

பெற்ற அப்பா அம்மாவிடமிருந்து பிரிக்கப்பட்டது தெரிய வருகையில் அந்தப் பிள்ளை உணர்ச்சி ரீதியில் நொறுங்கிப் போகிறது. சின்னஞ்சிறு வயதில் கட்ரீனா தத்தெடுக்கப்பட்டாள். அவள் சொல்வதாவது: “என்னைப் பெற்ற அம்மா என்னை ஏன் தத்துக்கொடுத்தார்கள் என புரிந்துகொள்ள முடியாததால் எதற்கெடுத்தாலும் கோபத்தில் எரிந்து விழுந்தேன். என்னை நேசிக்க முடியாதளவுக்கு நான் கோரமாக இருந்ததால் அம்மா என்னை தத்துக்கொடுத்து விட்டார்களென நினைத்தேன். எனக்கு மட்டும் அம்மா ஒரேவொரு வாய்ப்பளித்திருந்தால் என்னைக் குறித்து அவர்கள் பெருமைப்படும் அளவுக்கு நடந்திருப்பேன். என்னைப் பெற்றெடுத்த அம்மாவைப் பற்றி நினைத்தாலே எனக்குக் கோபம் தலைக்கேறிவிடும்.”

அதனால் கட்ரீனாவைத் தத்தெடுத்தவர்களுக்கு அவள் பெரும் தலைவலியாய் இருந்தாள். “என்னைப் பெற்ற தாயிடமிருந்து என் தத்துப் பெற்றோர்களே என்னை அபகரித்து வந்துவிட்டதாக நினைத்தேன். எனவே என் கோபத்தையெல்லாம் அவர்களிடம் காட்டினேன்” என்கிறாள் அவள். ஆம், தத்துக் கொடுக்கப்பட்டதன் பிரதிபலிப்பே சிலசமயங்களில் கோபமாக கோரமுகம் காட்டுகிறது.

அப்படி கோபப்படுவது ஆபத்தாகிவிடலாம். கட்ரீனாவின் அனுபவம் அதைத்தான் காட்டுகிறது. சிலசமயங்களில், கோபத்தில் நீங்கள் ஏடாகூடமாக நடந்து கொள்ளலாம் அல்லது சம்பந்தமில்லாதவர்களிடம் எரிந்து விழலாம். “வெஞ்சினம் கொள்ளாதே; வெகுண்டெழுவதை விட்டுவிடு” என பைபிள் புத்திமதி சொல்கிறது. (சங்கீதம் 37:8, பொது மொழிபெயர்ப்பு) அது நடக்கிற காரியமா? “மனுஷனுடைய விவேகம் [“உட்பார்வை,” NW] அவன் கோபத்தை அடக்கும்” என்றும் கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. (நீதிமொழிகள் 19:11) உட்பார்வையுடன் உங்கள் சூழ்நிலையை ஆராய்வது உங்கள் கோபத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவலாம். எப்படி?

தவறான ஊகங்களை சரி செய்தல்

பற்றியெரியும் உங்கள் கோபத்துக்கு எண்ணெய் வார்க்கும் தவறான ஊகங்கள் சரிதானா என்பதை சோதித்துப் பார்க்க உட்பார்வை உங்களுக்கு உதவலாம். உதாரணமாக, நீங்கள் தத்தெடுக்கப்பட்டவரா? அப்படியானால் உங்களிடம் ஏதோ குறை கண்டதால் உங்களைப் பெற்றவர்கள் தத்துப் பிள்ளையாக தாரை வார்த்துவிட்டதாக நினைக்கிறீர்களா? கட்ரீனா அப்படித்தான் நினைத்தாள். ஆனால் தத்துக் கொடுப்பதற்கு எப்போதும் அதுவே காரணமா? பெற்றவர்கள் ஏன் உங்களை தத்துக் கொடுத்தார்கள் என்பதை கண்டறிவது கஷ்டம், ஆனால் அது பற்றி தேவையில்லாமல் நீங்களாகவே ஏதேதோ கற்பனை செய்யாமலிருப்பதற்கு நல்ல காரணங்கள் உள்ளன. பொதுவாக பெற்றோர் ஏன் பிள்ளைகளை தத்துக் கொடுக்கிறார்கள்? அதைவிட்டால் வேறு வழியேயில்லை என அவர்கள் பெரும்பாலும் நினைக்கிறார்கள்.

மோசேயின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். எகிப்தின் பார்வோன் இஸ்ரவேலரின் ஆண் குழந்தைகள் அனைத்தையும் பூண்டோடு அழிக்க கட்டளையிட்ட போது யோகெபேத் தன் பச்சிளம் குழந்தையான மோசேயை மூன்று மாதங்கள் வரை ஒளித்து வைத்திருந்தாள் என பைபிளில் யாத்திராகமம் 2-⁠ம் அதிகாரம் சொல்கிறது. இறுதியில், இனிமேலும் ஒளித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் தன் கண் முன்னாலேயே தன் குழந்தை கொல்லப்படுவதை அவளால் எண்ணிப் பார்க்கவும் முடியவில்லை. எனவே, “அவள் அதை அப்புறம் ஒளித்து வைக்கக்கூடாமல், ஒரு நாணற்பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் கீலும் பூசி, அதிலே பிள்ளையை வளர்த்தி, நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்தாள்.”​—⁠யாத்திராகமம் 2:3.

இப்படி பிள்ளையை அனாதையைப் போல் விட்டபோது அந்தத் தாயின் மனம் எவ்வளவு பாடுபட்டிருக்கும்! ஆனால் அவளுக்கு இதைவிட்டால் வேறு வழி? அவளுடைய மகனிடமுள்ள அன்பு அவனுக்கு எது நல்லதென்று அவளுக்கு பட்டதோ அதை செய்யும்படியே அவளைத் தூண்டியது. ஆர்வத்திற்குரிய விஷயம் என்னவென்றால், அந்தத் தாயின் மகள் சற்று தூரத்தில் காவலுக்கு நின்றாள், அவளுடைய குட்டி தம்பி பாதுகாப்பான கரங்களில் போய் சேரும்வரை கவனித்துக் கொண்டிருந்தாள். கவலையில் துவண்டு போயிருந்த அந்தத் தாய் அப்படி கவனிக்கும்படி அந்தச் சிறுமியிடம் சொல்லியிருக்கலாம்.

தத்துக் கொடுக்கும் அனைவரும் சாவா வாழ்வா என்ற இதுபோன்ற இக்கட்டான நிலைமையை எதிர்ப்படுவதில்லை என்பது உண்மைதான், ஆனால் உள்நோக்கத்தைப் பொறுத்தவரை பெரும்பாலும் எல்லாம் ஒன்றுதான். “வாழ்க்கையில் என் அம்மா வழிதவறிப் போனதால் நான் பிறந்தேன். வீட்டில் ஏற்கெனவே வேறு குழந்தைகள் இருந்ததால் அவர்களில் ஒருவனாக என்னை வளர்ப்பது அம்மாவுக்கு அதிக கஷ்டமாக இருந்திருக்கலாம். என்னை தத்துக் கொடுப்பதுதான் எனக்கு நல்லது என அவர்கள் யோசித்து முடிவு செய்திருக்கலாம்” என்கிறார் ராபர்ட்.

வேறொரு குடும்ப சூழலில் வளரும்படி பிள்ளைகள் தத்துக் கொடுக்கப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம் என்பது உண்மைதான். ஆனால் இதுவரை பார்த்த அனுபவங்களின்படி, எப்போதுமே, தாய் தன் குழந்தையை வெறுப்பதால் அல்லது குழந்தையிடம் ஏதோ குறைபாடிருப்பதால் அதைத் தத்துக் கொடுப்பதில்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குழந்தை வேறொரு வீட்டில் வளர்ந்தால் கண்ணும் கருத்துமாக பராமரிக்கப்படுவான் என நம்புவதாலேயே அவள் அதை தத்துக் கொடுக்கிறாள்.

அன்பு காட்டப்படுவதன் மதிப்பு

உட்பார்வையைப் பெறுவது நீங்கள் தத்தெடுக்கப்பட்டதற்கான காரணத்தை புரிந்துகொள்ள உங்களுக்கு மேலும் உதவலாம். மீண்டும் மோசேயின் உதாரணத்திற்குக் கவனத்தைத் திருப்புங்கள். உரிய சமயத்தில் “பார்வோனுடைய குமாரத்தி அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள்.” (அப்போஸ்தலர் 7:21) தண்டிக்கப்பட்ட எபிரெயர்களுடைய குழந்தை என்பதை அறிந்தும் அவனைப் பாதுகாக்க பார்வோனின் மகள் முன்வந்ததற்கு எது அவளைத் தூண்டியது? “பிள்ளை அழுதது; அவள் அதின்மேல் இரக்கமுற்”றாள் என பைபிள் சொல்கிறது. (யாத்திராகமம் 2:6) ஆம், மோசே வெறுக்கப்பட்டதால், ஒதுக்கப்பட்டதால் அல்ல, ஆனால் நேசிக்கப்பட்டதாலேயே தத்தெடுக்கப்பட்டார்.

இன்றைய நாளில் பிள்ளைகள் கைவிடப்படுவது ரொம்ப சகஜமாகிவிட்டது; ஆனால் அப்படி ஏனோதானோவென்று விட்டுச் செல்லாமல் சரிவர கவனித்து பராமரிப்பதாக உறுதியளிக்கும் குழந்தைகள் நல அமைப்புகளிடமே பெற்றவர்கள் தங்களை ஒப்படைத்தார்கள் என்பதை பல தத்துப் பிள்ளைகள் புரிந்திருக்கிறார்கள். அவர்களை தத்தெடுத்தவர்கள், கண்ணும் கருத்துமாக பேணுமளவுக்கு அவர்களிடம் அன்பு பிறந்ததாலேயே அப்படி செய்தார்கள். நீங்களும் அப்படித்தான் அன்பின் காரணமாக தத்தெடுக்கப்பட்டீர்கள் என சொல்லலாமா? உங்கள்மீது பொழியப்பட்ட அன்பு மழையை எண்ணிப் பார்ப்பதும் அதை மதிப்பதும் உங்கள் உள்ளத்தை நெருடும் எந்த வேதனையையும் லேசாக்கும்.

மேலும் தத்தெடுத்த குடும்பத்தார் மட்டுமல்லாமல் மற்றவர்களும் உங்களிடம் அன்பு காட்டியிருக்கலாம். நீங்கள் கிறிஸ்தவ சபைக்கு போகிறவராக இருந்தால் ஆசை ஆசையாக உங்களிடம் அன்பைக் கொட்டும் ஆவிக்குரிய அம்மா, அப்பாக்கள், அண்ணன், தம்பிகள், அக்கா, தங்கைகள் என பலரையும் பெறும் சந்தோஷம் கிடைக்கும். (மாற்கு 10:29, 30) அங்கு கிறிஸ்தவ மூப்பர்கள், “காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார்”கள். (ஏசாயா 32:2) முதிர்ச்சியுள்ள சக கிறிஸ்தவர்களை அணுகவும், மனதிலுள்ளதைக் அவர்களிடம் கொட்டவும் தயங்காதீர்கள். நீங்கள் என்ன யோசிக்கிறீர்கள், எப்படி உணருகிறீர்கள் என்பதை அவர்கள் அறியட்டும்.

கிறிஸ்தவ சபையில் உள்ளவர்களுடன் நெருக்கமான உறவை வளர்த்துக் கொள்வது ரொம்பவே முக்கியம் என ராபர்ட் நினைக்கிறார். “எனக்குள் வெறுமையெனும் சூனியம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் என் ஆவிக்குரிய குடும்பத்தார் காட்டும் அன்பு அந்த வெறுமையை என் இதயத்தின் ஒரு மூலைக்குத் தள்ளிவிடுகிறது” என அவர் ஒப்புக்கொள்கிறார்.

வெற்றி உங்கள் கையில்

எனவே வேண்டாத கற்பனைகளை வளர்த்துக்கொள்வதையும் ஏடாகூடமாக சிந்திப்பதையும் விட்டுவிடுங்கள். நீங்கள் தத்துப் பிள்ளையாக இருப்பதால் வாழ்க்கையில் வெற்றி காண்பது என்பது எட்டா கனி என்ற எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். அப்படிப்பட்ட நேர்மாறான யோசனைகள் ஒரேயடியாக உங்களை சோர்வில் அழுத்திவிடும்! (நீதிமொழிகள் 24:10) அத்தோடு இப்படியெல்லாம் சிந்திப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லையே.

மோசே தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொண்டதை சற்று யோசித்துப் பாருங்கள். “மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்” என பைபிள் சொல்கிறது. (அப்போஸ்தலர் 7:22) அதைவிட முக்கியமாக, மோசேக்கு தன் பரலோக தகப்பனாகிய யெகோவா முற்றிலும் நிஜமானவராக ஆகுமளவுக்கு அவர் ஆவிக்குரிய போதனைகளைக் கற்றறிந்தார். (எபிரெயர் 11:27) அவர் வாழ்க்கையில் வெற்றி கண்டாரா?

ஆம், 30 லட்சம் அல்லது அதற்கும் அதிகமானோர் இருந்த பெரும் தேசத்தாருக்கு மோசே தலைவரானார். தீர்க்கதரிசி, நியாயாதிபதி, தலைவர், சரித்திராசிரியர், நியாயப்பிரமாண சட்டத்தின் மத்தியஸ்தர், பைபிளில் முதல் ஐந்து புத்தகங்களை எழுதிய எழுத்தாளர் என்றெல்லாம் ஆனார். மேலும், யோபு புத்தகத்தையும் 90-⁠ம் சங்கீதத்தையும் இவரே எழுதியதாக பொதுவாக நம்பப்படுகிறது. ஆம், மோசே வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி கண்டார். தத்துப் பிள்ளைகளில் பலர் இதே போன்று வெற்றியடைகிறார்கள், உங்களுக்கும் வெற்றி நிச்சயம்.

ராபர்ட் நல்ல முறையில் இரண்டு பிள்ளைகளை வளர்த்தெடுத்தார், இப்போது கிறிஸ்தவ சபையில் மூப்பராக சேவிக்கிறார். தத்துப் பிள்ளையாக தான் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கையில் இவ்வாறு சொல்கிறார்: “என்னால் சரிசெய்ய முடியாத ஒன்றைக் குறித்து எப்போதும் சிந்திப்பதற்குப் பதிலாக அனுபவிக்கும் ஆசீர்வாதங்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்க வேண்டும் என்பதை அனுபவத்தில் கற்றிருக்கிறேன்.”

நீங்கள் வளர்ப்பு பிள்ளையாக இருக்கலாம் அல்லது தத்துப் பிள்ளையாக இருக்கலாம்; அதனால் சில சமயங்களில் வேண்டாத எண்ணங்கள் மனதை அலைக்கழிக்கலாம். அப்போது அவற்றிற்குப் பதிலாக நல்ல காரியங்களை சிந்திக்க முயலுங்கள். கடவுளுக்குப் பிரியமான காரியங்களையே “[தொடர்ந்து] சிந்தித்துக் கொண்டிரு”ந்தால் “சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்” என பிலிப்பியர் 4:8, 9 உறுதியளிக்கிறது. எனினும், உங்களைத் தத்தெடுத்த குடும்பத்தாருடன் சேர்ந்து வாழ்வதில் வெற்றி காண மேலும் என்ன நடைமுறையான படிகளை எடுக்கலாம்? இந்தக் கேள்விக்கான பதிலை இந்தத் தொடரில் இனிவரும் கட்டுரையில் காணலாம். (g03 4/22)

[பக்கம் 26-ன் படங்கள்]

தங்கள் குடும்பத்தில் ஒருவராக, கண்ணும் கருத்துமாக பேணுமளவுக்கு உங்கள்மீது ஒருவர் அன்பு காட்டியதாலேயே தத்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள்