Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிள்ளைப் பருவத்தை பேணிப் பாதுகாக்கையில்

பிள்ளைப் பருவத்தை பேணிப் பாதுகாக்கையில்

பிள்ளைப் பருவத்தை பேணிப் பாதுகாக்கையில்

அம்மா அப்பாவின் கவனிப்பு எந்தளவுக்கு இருக்கிறதோ அந்தளவுக்குத்தான் பிள்ளைப் பருவத்தை பிள்ளைகள் நன்கு அனுபவித்து மகிழ முடியும். ஆனால் பெற்றோரின் சிறந்த கவனிப்பு என்பது எதையெல்லாம் உட்படுத்துகிறது? இந்த விஷயத்தின் பேரில் ஒருவேளை உங்களுக்கு இப்படிப்பட்ட ஆலோசனைகள் கிடைத்திருக்கலாம்: உங்கள் பிள்ளைகளோடு நேரம் செலவிடுங்கள். அவர்கள் பேசுவதைக் கேளுங்கள். அவர்களுக்கு சிறந்த வழிகாட்டுதல் கொடுங்கள். அவர்களுடைய சுக துக்கங்களில் பங்கு கொண்டு அவர்களுக்கு அனுதாபம் காட்டுங்கள். பெற்றோர் என்கிற அதிகாரத்தை விட்டுக்கொடுக்காமலேயே அவர்களுக்கு உற்ற நண்பர்களாக இருங்கள். பெற்றோர் தங்கள் பங்கை சிறந்த விதத்தில் செய்வதற்கு அடிக்கடி சொல்லப்படும் இந்த நியமங்களெல்லாம் கைகொடுத்தாலும், இவற்றைவிட மிகவும் அடிப்படையான, மிகவும் முக்கியமான ஒன்று உள்ளது.

பைபிள் நியமங்களைப் பின்பற்றுவதே சிறந்த பிள்ளை வளர்ப்புக்கு அடிப்படை என்பதை உலகம் பூராவும் உள்ள லட்சோப லட்சம் பெற்றோர் கண்டிருக்கிறார்கள். ஏன்? ஏனெனில் பைபிளின் ஞானமான நூலாசிரியரான யெகோவா தேவனே குடும்ப ஏற்பாட்டிற்கு அடிக்கல் நாட்டியவர். (ஆதியாகமம் 1:27, 28; 2:18-24; எபேசியர் 3:14) அப்படியானால், அவருடைய ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட புத்தகமாகிய பைபிளே பிள்ளைகளை வளர்ப்பது சம்பந்தமான சிறந்த அறிவுரைகளை பெறுவதற்கு ஏற்ற இடம். ஆனால், பிள்ளைப் பருவத்தை ஓட்டிவிடும் இன்றைய நவீன போக்கு சம்பந்தமாக பழம்பெரும் புத்தகமாகிய பைபிளால் எப்படி அறிவுரை வழங்க முடியும்? பின்பற்றத்தக்க சில பைபிள் நியமங்களை நாம் கலந்தாராயலாம்.

“பிள்ளைகளின் நடைக்கு ஏற்ப”

ஈசாக்கின் மகனான யாக்கோபுக்கு ஒரு டஜனுக்கு மேல் பிள்ளைகள். ஒரு குடும்ப பயணத்தின் போது அவர் கூறிய ஞானமான வார்த்தைகளை பைபிள் இவ்வாறு கூறுகிறது: ‘பிள்ளைகள் மென்மையானவர்கள், . . . என் தலைவராகிய நீர் [யாக்கோபின் அண்ணனாகிய ஏசா] தயவுசெய்து எனக்கு முன்னே செல்லுங்கள், நானோ பிள்ளைகளின் நடைக்கு ஏற்ப மெதுவாக வருகிறேன்.’​—ஆதியாகமம் 33:13, 14, NW.

பெரியவர்களைப் போன்று தன் பிள்ளைகளால் நடக்க முடியாது என்பதை யாக்கோபு அறிந்திருந்தார். அவர்கள் ‘மென்மையானவர்கள்,’ அதாவது அவர்கள் சிறியவர்கள், பலவீனர்கள், பெரியவர்களைவிட அதிக உதவி தேவைப்படுபவர்கள். ஆகவே, தன்னுடைய வேகத்திற்கு ஏற்ப நடக்கும்படி பிள்ளைகளை கட்டாயப்படுத்தாமல் அவர்களுடைய வேகத்திற்கு ஏற்ப யாக்கோபு மெதுவாக நடந்தார். இந்த விஷயத்தில், தம் மனித பிள்ளைகளிடம் கடவுள் ஞானமாக நடந்து கொள்வதைப் போலவே யாக்கோபும் நடந்துகொண்டார். நம் பரலோக தகப்பன் நம்முடைய பலவீனங்களை அறிந்திருப்பவர். நம் சக்திக்கு மிஞ்சி அவர் நம்மிடம் எதிர்பார்ப்பதில்லை.​—சங்கீதம் 103:13, 14.

சில மிருகங்களும்கூட அத்தகைய ஞானத்தை வெளிக்காட்டுகின்றன; ஏனெனில் அவற்றை ‘இயல்பாகவே ஞானமுள்ளவையாக’ கடவுள் படைத்திருக்கிறார். (நீதிமொழிகள் 30:24, NW) உதாரணமாக, ஓர் யானைக் கூட்டம் அதன் மத்தியில் உள்ள குட்டி யானை வேகமாக நடக்க பழகிக்கொள்ளும் வரையில் அதன் நடைக்கு ஏற்றாற்போல் மெதுவாக நடந்து செல்லும் என்பதை இயற்கையியலாளர்கள் கவனித்திருக்கிறார்கள்.

நவீன சமுதாயத்தில் சில பிரிவினர் தெய்வீக ஞானத்தை அலட்சியம் செய்துள்ளனர். ஆனால் நீங்களும் அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. உங்கள் பிள்ளை ‘மென்மையானது’ என்பதை மறந்துவிடாதீர்கள்; பெரியவர்களின் சுமைகளையும் பொறுப்புகளையும் பிள்ளையால் சுமக்க முடியாது. உதாரணமாக, நீங்கள் ஓர் ஒற்றைப் பெற்றோர் என வைத்துக்கொள்வோம்; உங்களுக்கு ஏதோ சிக்கலான பிரச்சினை இருக்கிறது; அந்த மனபாரத்தை பிள்ளைமீது இறக்கி வைக்க வேண்டும்போல் இருந்தாலும் அந்த உள்ளத் தூண்டுதலுக்கு அணை போடுங்கள். அதற்கு பதிலாக, பிரச்சினைகளை திறமையாக கையாளத் தெரிந்த முதிர்ச்சியுள்ள நண்பரின் உதவியை நாடுங்கள்; பைபிளின் ஞானமான ஆலோசனையை கடைப்பிடிக்க உதவும் நண்பரை தேர்ந்தெடுப்பது சிறந்தது.​—நீதிமொழிகள் 17:17.

அவ்வாறே, பிள்ளையின் வாழ்க்கை எனும் நடைப்பயணத்தை சதா நச்சரிப்பும், கட்டுப்பாடும், கண்டிப்பும் நிறைந்ததாய் ஆக்காதீர்கள். அப்படி செய்வது உல்லாசமாக பறக்க வேண்டிய வயதில் கூண்டில் அடைப்பது போல் இருக்கும். உங்களுடைய பிள்ளைக்கு பொருத்தமான வேகத்தில் அவர்களை நடத்துங்கள். கண்ணை மூடிக்கொண்டு உலகம் போகிற வேகத்திற்கு ஈடுகொடுக்கும்படி அவர்களை அவசரப்படுத்தாதீர்கள். “உங்களைச் சுற்றியுள்ள உலகம் அதன் அச்சுக்குள் உங்களை அமுக்கிவிட அனுமதிக்காதீர்கள்” என பைபிள் ஞானமாக அறிவுரை வழங்குகிறது.​—ரோமர் 12:2, ஃபிலிப்ஸ்.

“ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு”

பைபிளின் மற்றொரு ஞானமான நியமம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு; உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலமுண்டு.” ஆம், வேலை செய்வதற்கும் ஒரு நேரமுண்டு. பிள்ளைகளுக்கு நிறைய வேலைகள்​—⁠பள்ளிப்பாடம், வீட்டில் எடுபிடி வேலைகள், ஆவிக்குரிய காரியங்களில் ஈடுபடுவது உள்ளிட்ட நிறைய வேலைகள்​—⁠உண்டு. ஆனால், அதே பைபிள் பகுதி, “சிரிப்புக்கு ஒரு காலம்” உண்டு என்றும் “துள்ளி மகிழ்தலுக்கு ஒரு காலம்” உண்டு என்றும் கூறுகிறது.​—⁠பிரசங்கி (சபை உரையாளர்) 3:1, 4, பொது மொழிபெயர்ப்பு.

விளையாடுவதும், சிரிப்பதும், இளமை காலத்தை ஓரளவு ஜாலியாக கழிப்பதும் பிள்ளைகளுக்கு மிக மிக அவசியம். எப்போது பார்த்தாலும் பள்ளிக்கூடம், படிப்பு, கலைகள், மற்ற பெரிய பொறுப்புகள் என்று இருந்தால் அவர்களுக்கு விளையாடவே நேரமில்லாமல் போய்விடும். இதனால் அவர்கள் எரிச்சலடைந்து மனந்தளர்ந்து போகலாம்.​—கொலோசெயர் 3:21, பொ.மொ.

இதே பைபிள் நியமத்தை வேறு என்னென்ன வழிகளில் பொருத்தலாம் என்பதை கவனியுங்கள். எடுத்துக்காட்டாக, எல்லாவற்றிற்கும் ஒரு காலம் இருக்கிறது என்றால், ஒரு பிள்ளைக்கு பிள்ளைப் பருவம் என்ற ஒரு காலம் இருப்பதையும் அது குறிக்கிறது அல்லவா? ஆம் என நீங்கள் சொன்னாலும் உங்களுடைய பிள்ளைகள் எப்போதும் அதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். சிறுவர் சிறுமியர் எப்போதுமே பெரியவர்கள் செய்வதைப் பார்த்து அதைப் போல செய்யவே ஆசைப்படுகிறார்கள். உதாரணமாக, சிறுமிகள் பெரிய பெண்கள் போல உடை உடுத்தி சீவி சிங்காரிக்க விரும்பலாம். சீக்கிரமாகவே பருவமடைந்து விடுவது, பெரியவர்களைப் போல தோற்றமளிப்பதற்கான ஆவலை இன்னும் அதிகரிக்க செய்யலாம்.

அத்தகைய மனப்போக்கால் வரும் ஆபத்தை ஞானமுள்ள பெற்றோர் அறிந்திருக்கிறார்கள். சீரழிந்த இந்த உலகத்தின் சில விளம்பரங்களும் பொழுதுபோக்குகளும் பிள்ளைகளை பாலியல் விஷயங்கள் அறிந்தவர்களாகவும் வயதுக்கு மிஞ்சிய அறிவுள்ளவர்களாகவும் காட்டுகின்றன. மேக்கப், நகைநட்டுகள், ஆபாசமான ஆடைகள் எல்லாமே சிறுவர் வட்டாரத்தில் சர்வ சாதாரணமாகி வருகின்றன. ஆனால் காம பசியை தீர்க்க வகைதேடும் வக்கிர புத்தியுடைய ஆசாமிகளின் கண்களை கவரும் அளவுக்கு பிள்ளைகளை ஏன் விடவேண்டும்? வயதுக்கு பொருத்தமான விதத்தில் உடையணிய பிள்ளைகளுக்கு உதவுவதன் மூலம் “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்” என்ற மற்றொரு பைபிள் நியமத்தை பெற்றோர் பின்பற்றுகிறார்கள்.​—நீதிமொழிகள் 27:12.

மற்றொரு உதாரணம்: ஸ்போர்ட்ஸுக்கு முதலிடம் கொடுக்கும்படி பிள்ளையை அனுமதிப்பது சமநிலையற்ற வாழ்க்கைக்கு வழிவகுக்கலாம். அப்படிப்பட்ட வாழ்க்கையில் ஒவ்வொன்றுக்கும் ஒரு காலம் இருக்காது. “சரீரமுயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது” என பைபிள் அறிவுப்பூர்வமாக ஆலோசனை கொடுக்கிறது.​—1 தீமோத்தேயு 4:8.

“வெற்றி பெறுவதே முக்கியம்” என்ற மனப்போக்கை பிள்ளைகள் ஏற்றுக்கொள்ள இடமளிக்காதீர்கள். என்ன வந்தாலும் பரவாயில்லை போட்டாபோட்டி போட்டு வெற்றிபெற வேண்டும் என பிள்ளைகளை அநேக பெற்றோர் நெருக்கித் தள்ளுகிறார்கள். இதன் மூலம் ஸ்போர்ட்ஸிலும் கேம்ஸிலும் உள்ள இன்பத்தை குலைத்து விடுகிறார்கள். இதனால் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சில பிள்ளைகள் தங்களோடு விளையாடுபவர்களை ஏமாற்ற அல்லது காயப்படுத்த தூண்டப்படுகிறார்கள். இப்படியொரு வெற்றி தேவைதானா?

தன்னடக்கத்தை கற்றுக்கொள்ளுதல்

ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு என்பதை கற்றுக்கொள்வது பிள்ளைகளுக்கு பெரும்பாலும் கஷ்டம்தான். விரும்பியதை பெறுவதற்கு பொறுமையோடு காத்திருப்பது அவர்களுக்கு பெரும்பாடு. ஆசையை உடனுக்குடன் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற தணியா தாகம் மனித சமுதாயத்தில் காணப்படுவதே நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது. “உங்களுக்கு வேண்டியதை பெற்றுக்கொள்ளுங்கள், இப்போதே பெற்றுக்கொள்ளுங்கள்” என்பதே பொழுதுபோக்கு மீடியாவின் வழக்கமான தாரகமந்திரம்.

பிள்ளைகளுக்கு செல்லம் கொடுப்பதன் மூலம் அவர்களை கெடுத்து இத்தகைய செல்வாக்குகளுக்கு இடமளித்து விடாதீர்கள். “கஷ்டப்பட்டு காத்திருந்தால்தான் எதுவுமே கிடைக்கும் என்ற மனப்பக்குவமே உணர்ச்சிப்பூர்வ முதிர்ச்சியின் ஒரு முக்கிய அம்சம்” என பிள்ளையும் மெஷினும் (ஆங்கிலம்) என்ற புத்தகம் கூறுகிறது. “பள்ளிக்கு உள்ளேயும் வெளியேயும் பிள்ளைகள் மத்தியில் வன்முறை அதிகரித்து வருவதை முறியடிக்க சுயகட்டுப்பாடும் சமுதாய ஒற்றுமையும் சக்திவாய்ந்த மருந்தாக செயல்படுகின்றன.” பயனுள்ள இந்த நியமம் பைபிளில் உள்ளது: “அடிமையை இளமைப் பருவமுதல் இளக்காரம் காட்டி வளர்த்தால், அவர் பிற்காலத்தில் நன்றிகெட்டவராவார்.” (நீதிமொழிகள் 29:21, பொ.மொ.) இளம் அடிமைகளை நடத்துவதைக் குறித்து இந்த வசனம் சொன்னாலும், அதே நியமம் தங்களுடைய பிள்ளைகளுக்கும் அதிக பயனுள்ளதாக இருப்பதை அநேக பெற்றோர் கண்டிருக்கிறார்கள்.

பிள்ளைகளுக்கு அளிக்க வேண்டிய தேவைகளில், பைபிள் சொல்கிறபடி ‘யெகோவாவுக்கேற்ற சிட்சையும் மனக் கட்டுப்பாடுமே’ முதலிடம் வகிக்கின்றன. (எபேசியர் 6:4, NW) சுயகட்டுப்பாடு, பொறுமை போன்ற குணங்களை வளர்க்க அன்பான சிட்சை பிள்ளைகளுக்கு உதவும். வாழ்க்கை பூராவும் மகிழ்ச்சியையும் திருப்தியையும் கண்டடைவதற்கு இந்த குணங்கள் அவர்களுக்கு உதவும்.

பிள்ளைப் பருவத்திற்கு வரும் அச்சுறுத்தல்கள் அனைத்தும் முடிவுறுகையில்

ஆனால் நீங்கள் இவ்வாறு யோசிக்கலாம்: ‘பயனுள்ள இந்த நியமங்களை அருளிய ஞானமுள்ள அன்பான கடவுள், இந்த உலகம் இப்படி இருக்க வேண்டுமென்றா உத்தேசித்தார்?’ அன்பான பராமரிப்பை விட ஆபத்தே அதிகமாக இருக்கும் ஓர் உலகில் பிள்ளைகள் வளர வேண்டுமென்றா அவர் கருதினார்? எல்லா வயது பிள்ளைகளும் உட்பட மனிதகுலத்திடம் யெகோவா தேவனும் அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்துவும் கனிவான அன்பைக் காட்டுகின்றனர் என்பதை அறிவது உங்களுக்கு ஆறுதலாய் இருக்கலாம். அவர்கள் பூமியிலிருந்து துன்மார்க்கரை விரைவில் ஒழித்துக்கட்டுவார்கள்.​—சங்கீதம் 37:10, 11.

அமைதி வீசும் அந்த இன்பப் பொழுதின் முற்காட்சியைக் காண ஆசைப்படுகிறீர்களா? பைபிளில் அழகாக விவரிக்கப்பட்டிருக்கும் இந்தக் காட்சியை உங்கள் மனத்திரையில் ஓடவிடுங்கள்: “ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான்.” (ஏசாயா 11:6) பூந்தளிர் பருவத்தை கருணையின்றி கசக்கும் அல்லது வலுக்கட்டாயமாக விரட்டும் ஓர் உலகில், மனிதகுலத்திற்காக இத்தகைய ஒளிமயமான எதிர்காலத்தை கடவுள் வாக்குறுதி அளித்திருப்பதைப் பற்றி அறிவது எவ்வளவு ஆறுதல் அளிக்கிறது! ஆகவே, பிள்ளைப் பருவம் பறிபோவதோ ஓட்டிவிடப்படுவதோ படைப்பாளரின் நோக்கமல்ல, அதை பிள்ளைகள் சந்தோஷமாக அனுபவித்து மகிழ வேண்டும் என்பதே அவருடைய நோக்கம். (g03 4/22)

[பக்கம் 8-ன் படம்]

உங்கள் மனபாரத்தை பிள்ளையின் தலையில் தூக்கி வைக்காமல் முதிர்ச்சியுள்ள ஒருவரிடம் இறக்குங்கள்

[பக்கம் 9-ன் படம்]

பிள்ளைகளுக்கு விளையாட்டு அவசியம்