பிள்ளைப் பருவம் ஓட்டிவிடப்படுகையில்
பிள்ளைப் பருவம் ஓட்டிவிடப்படுகையில்
கரிய மேகங்களுக்கு கீழே ஒற்றை எஞ்சின் பொருத்தப்பட்ட சிறிய விமானத்தின் மோட்டார் உறும, அது கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை கூட்டி ரன்வேயை விட்டு உயர எழும்பி பறக்க ஆரம்பித்தது. பரபரப்பு செய்தியாக மீடியாவில் இடம் பெற்ற ஒரு சம்பவம் அது. காமிராக்கள் படம்பிடித்தன, நிருபர்கள் வியப்புடன் கேள்விகள் கேட்டனர், வாழ்த்துக்களை பொழிந்தனர். இந்தளவுக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நபர் யார்? அந்த விமானத்தில் சென்ற உரிமம் பெற்ற ஒரே விமானியுமல்ல, அதிலிருந்த ஒரே பயணியுமல்ல, ஆனால் அந்தப் பயணியின் ஏழு வயது புதல்வியே.
அந்தச் சிறுமிதான் விமானத்தை ஓட்ட வேண்டியிருந்தது. அவள் ஒரு புதிய சாதனை படைக்கவிருந்தாள், அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் அடுத்த ஏர்ப்போர்ட்டில் இறங்க வேண்டியிருந்தது. அங்கேயும் மீடியா ஆட்கள் காத்துக்கொண்டிருந்தார்கள். மேகமூட்டமாக இருந்த போதிலும் அந்த மூவரும் விமானத்தில் ஏறினார்கள். அந்தச் சிறுமி விமானத்தை இயக்குவதற்கு இன்ஸ்ட்ருமென்ட் பானலை பார்க்க வசதியாக குஷன் மீது உட்கார்ந்து கொண்டாள். பெடல்களை கால் எட்டுவதற்காக அதோடு பொருத்தப்பட்ட எக்ஸ்டன்டர்களை பயன்படுத்தினாள்.
அந்த விமானம் கொஞ்ச தூரம் மட்டும்தான் பறந்தது. திடீரென வீசிய புயல் காற்றில், விமானம் திசைமாறி, கட்டுப்பாடு இழந்து, கடைசியில் தரையில் விழுந்து நொறுங்கியது. அவ்வளவுதான் அம்மூவரின் கதையும் முடிந்தது. சட்டென்று மீடியா புகழ் பாடுவதை நிறுத்திவிட்டு சோக கீதம் பாட ஆரம்பித்து விட்டது. இந்த அவலத்திற்கு மீடியாவும் ஒரு காரணமாக இருந்திருக்குமோ என சில நிருபர்களும் பதிப்பாசிரியர்களும் யோசிக்க ஆரம்பித்தார்கள். இனி சிறு பிள்ளைகள் யாரும் விமானம் ஓட்டக் கூடாது என பலர் குரலெழுப்ப ஆரம்பித்தார்கள். பிள்ளைகள் விமானம் ஓட்டக் கூடாது என ஐக்கிய மாகாணங்களில் சட்டங்களும் இயற்றப்பட்டன. ஆனால் பரபரப்பூட்டும் செய்திகளுக்கும் மேற்பூச்சான தீர்வுகளுக்கும் பின்னால் பெரிய பிரச்சினைகள் பதுங்கியிருந்தன.
உலகம் போகும் போக்கைக் குறித்து சிலரை அதிகமாக சிந்திக்க வைத்தது அந்த சோக சம்பவம். பெரியவர்கள் செய்யும் வேலைகளை பிஞ்சுக் கரங்களில் ஒப்படைத்து அவர்களை நெருக்குவதே அல்லது அவசரப்படுத்துவதே இன்றைய அவலநிலை. ஆனால், அதன் பாதிப்புகள் எப்போதுமே அந்தளவுக்கு பரபரப்பூட்டுவதாகவோ சோகத்தில் ஆழ்த்துவதாகவோ இருப்பதில்லை என்பது உண்மைதான். என்றாலும், அவை வாழ்க்கையில் ஆழமான பாதிப்புகளை, அழியா பாதிப்புகளை ஏற்படுத்திவிடலாம். என்னென்ன வழிகளில் பிள்ளைப் பருவத்தை வேகமாக உருட்டி விடுகிறார்கள் என்பதை நாம் சிந்திக்கலாம்.
படிப்பில் அவசரப்படுத்துதல்
பிள்ளைகளின் முன்னேற்றத்தைக் காண பெற்றோர் துடிப்பது நியாயம்தான். ஆனால் அந்தத் துடிப்பு கவலையாக மாறும்போதோ, குருவி தலையில் பனங்காய் வைக்கும் கதைதான்; எடுத்த எடுப்பிலேயே முன்னுக்கு வர வேண்டுமென்று பிள்ளைகளை மிகவும் நெருக்குகிறார்கள். பெரும்பாலும் நல்ல மனதுடன்தான் அதை செய்ய ஆரம்பிக்கிறார்கள். உதாரணமாக, பள்ளிப் படிப்பு தவிர, ஸ்போர்ட்ஸ், மியூசிக், டான்ஸ் என சகட்டு மேனிக்கு எல்லாவற்றிலும் பிள்ளைகளை பெற்றோர் சேர்த்து விடுவது ரொம்ப சகஜமாகி வருகிறது. பள்ளிப் பாடங்களுக்கு ஸ்பெஷல் ட்யூஷன் வேறு.
பிள்ளையின் திறமைகளையோ ஆர்வத்தையோ ஊக்குவிப்பதில் தவறில்லைதான். ஆனால் அளவுக்கு மிஞ்சினால்? ஆபத்துதான். ஏனெனில் பெரியவர்களைப் போலவே பிள்ளைகளும் பல அழுத்தங்களால் திணறுவதாக தெரிகிறது. “ஒருசமயம் பிள்ளைப் பருவத்தை ஜாலியாக அனுபவித்த பிள்ளைகள் இப்போதோ பள்ளிப் பாடத்தோடு மாரடிக்கிறார்கள்; இஷ்டத்திற்கு ஓடியாடித் திரிய வேண்டிய சிறுசுகள் இப்போது உயர்ந்த நோக்குடைய வேலைக்கார தேனீ போல உழைக்கிறார்கள்” என்று டைம் பத்திரிகை குறிப்பிடுகிறது.
விளையாட்டு, இசை அல்லது நடிப்பு போன்றவற்றில் தங்களுடைய பிள்ளைகள் நட்சத்திரங்களாக மின்ன வேண்டுமென்றும் பெற்றோர் சிலர் மனக்கோட்டை கட்டுகிறார்கள். பிள்ளைகளை புகழ் ஏணியில் ஏற்றிவிடும் நம்பிக்கையில், பிள்ளைகள் பிறப்பதற்கு முன்பே நர்சரியில் பெயர்களை பெற்றோர் பதிவு செய்துவிடுகிறார்கள். அது தவிர, குழந்தைகள் வயிற்றில் இருக்கையிலேயே அவற்றிற்கு இசை கற்றுக்கொடுப்பதற்காக பெற்றோர் சிலர் “ப்ரீநேட்டல் யுனிவர்சிட்டி”களிலும் சேர்ந்து கொள்கிறார்கள். பிறவா குழந்தையின் மூளை வளர்ச்சியை தூண்டுவிப்பதே இதன் நோக்கம்.
சில நாடுகளில், வாசிப்பதிலும் கணக்கு போடுவதிலும் பிள்ளைகளுக்கு எந்தளவுக்கு திறமை இருக்கிறது என்பதை அவர்கள் ஆறு வயதை எட்டுவதற்கு முன்பே மதிப்பிடுகிறார்கள். இப்படிப்பட்ட பழக்கங்கள், மனோ ரீதியில் பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்ற கவலையை எழுப்பியிருக்கின்றன. உதாரணத்திற்கு ஒரு பிள்ளை நர்சரியில் “தோல்வி”யடைந்து விட்டால் என்ன நடக்கிறது? பள்ளிகள் மிகவும் அவசரப்பட்டு பிஞ்சு வயதிலேயே பிள்ளைகளை தரம் பிரித்துவிடுகின்றன என அவசரப்படுத்தப்படும் பிள்ளை என்ற புத்தகத்தின் ஆசிரியர் டேவிட் எல்கின்ட் குறிப்பிடுகிறார். பிள்ளைகளுக்கு சிறந்த விதத்தில் கற்றுக் கொடுப்பதற்காக அல்ல, ஆனால் பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட காரணங்களுக்காகவே அவ்வாறு செய்கிறார்கள் என எல்கின்ட் விவாதிக்கிறார்.
அப்படியானால், பிள்ளைகள் முளைத்து மூன்று இலை விடுவதற்குள் அவர்களை மரமாக்கப் பார்ப்பதில் ஏதாவது பயனுண்டா? சின்ன வயதிலேயே பெரியவர்களின் சுமைகளை சுமக்க பிள்ளைகளை தகுதியாக்க வேண்டும் என்ற கருத்தை சமுதாயம் ஏற்றுக்கொண்டிருப்பது எல்கின்ட்டின் மனதைக் குடைகிறது. “இன்றைய பிள்ளைகள் மீது தொடர்ந்து அதிகமதிகமாய் அழுத்தங்களை
குவிப்பது ‘இயல்பானதே’ என ஏற்றுக்கொள்ளும் நம் மனப்பான்மையை அது காட்டுகிறது” என அவர் கூறுகிறார். ஆம், பிள்ளைகளுக்கு எது இயல்பானது என்பதைப் பற்றிய கருத்துகள் மிக விரைவாக மாறிக் கொண்டே வருவதாக தெரிகிறது.வெற்றி பெற அவசரப்படுத்துதல்
வெற்றி பெறுவதே முக்கியம், அதுவும் போட்டி விளையாட்டுகளில் வெற்றி பெறுவதே முக்கியம் என பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பது இயல்பானது, நல்லதும்கூட என பெற்றோர் பலர் நினைப்பதாக தெரிகிறது. இன்று அநேக பிள்ளைகளை தூண்டிவிடுவது ஒலிம்பிக் பதக்கங்களே. வெற்றிக் களிப்பில் சில கண நேரம் மிதப்பதற்காகவும் பெரியவர்களாகும் போது திருப்தியாக வாழ்வதற்காகவும் சில பிள்ளைகள் நெருக்கப்படுகிறார்கள். இதனால் பிள்ளைப் பருவத்தை அவர்கள் அனுபவிக்க முடியாமல் ஓட்டிவிடப்படுகிறார்கள் அல்லது பிள்ளைப் பருவத்தையே மறந்துவிட வேண்டியுள்ளது.
ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளை கவனியுங்கள். அவர்கள் சின்ன வயதிலிருந்தே கடும் பயிற்சியை செய்துகொண்டே இருக்கிறார்கள். அது அவர்களுடைய பிஞ்சு உடல்களை சக்கையாக பிழிந்தெடுத்து விடுகிறது. ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற மனோ ரீதியிலும் உடல் ரீதியிலும் வருடக்கணக்காக தங்களை தயார்படுத்துகிறார்கள். ஆனால், முடிவில் பதக்கத்தை தட்டிச் செல்பவர்கள் வெகு சிலரே. அதில் வெற்றி பெறாதவர்கள், தங்கள் இளமைப் பருவத்தின் பெரும்பாகத்தை தியாகம் செய்தது சரி என்றா நினைப்பார்கள்? வெற்றி பெற்றவர்களும்கூட தங்கள் இளம் பிராயத்தை இதற்காக ஏன் தியாகம் செய்தோம் என்றே நாளடைவில் யோசிப்பார்கள்.
சூப்பர் ஸ்டார் வீராங்கனைகளாக விளங்க வேண்டும் என்ற அதீத ஆசையால் உணர்ச்சி ரீதியில் இந்தச் சிறுமிகளின் பிள்ளைப் பருவம் ஓட்டிவிடப்படலாம். ஆனால் இத்தகைய கடுமையான பயிற்சியால் அவர்களுடைய இயல்பான சரீர வளர்ச்சிக்கு தடங்கல் ஏற்படலாம். சிலருக்கு எலும்பு வளர்ச்சி தாமதமாகிறது. சாப்பிடுவதில் ஏற்படும் பிரச்சினைகளும் சர்வசாதாரணம். பெண் பிள்ளைகள் பலருடைய விஷயத்தில் அவர்களுடைய பூப்புப் பருவம் பல வருடங்களுக்குக்கூட தள்ளிப்போய் விடுகிறது. இன்று அநேக பெண் பிள்ளைகளோ இதற்கு நேரெதிரான பிரச்சினையைத்தான் எதிர்ப்படுகிறார்கள், அதாவது சீக்கிரமாகவே பருவமடைந்து விடுகிறார்கள்.—மேலே உள்ள பெட்டியைக் காண்க.
பிள்ளைப் பருவம் தவிர எல்லாவற்றையும் அனுபவிக்கும் பிள்ளைகள்
பொழுதுபோக்கு மீடியாவை நம்புவீர்களானால், எல்லா வசதிகளும் இருந்தால்தான் பிள்ளைப் பருவத்தை சிறந்த விதத்தில் அனுபவிக்க முடியும் என நீங்கள் ஒருவேளை நினைத்து விடலாம். ஆகவே ஆடம்பரமான வீடு, ஏராளமான பொழுதுபோக்கு, விலையுயர்ந்த துணிமணிகள் என சொகுசான வாழ்க்கைக்கு வேண்டிய எல்லாவற்றையும் பிள்ளைகளுக்கு தர பெற்றோர் சிலர் கடினமாய் உழைக்கிறார்கள்.
ஆனாலும், அப்படி வளர்ந்த அநேக பிள்ளைகள் மது அருந்துகிறார்கள், போதைப் பொருட்களை பயன்படுத்துகிறார்கள், அதோடு சிடுசிடுப்பாகவும் அடங்காதவர்களாகவும் இருக்கிறார்கள். ஏன்? தாங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக உணருவதால் வெறுப்புடன் உள்ளுக்குள் புகைந்துகொண்டு இருக்கிறார்கள். பிள்ளைகளுக்கு பாசத்தைக் கொட்டி அரவணைக்கும் பெற்றோர்கள் தேவை. அப்படி செய்வதற்கு நேரமில்லாமல் பம்பரமாக சுழலும் பெற்றோர்கள், தாங்கள் உழைப்பது பிள்ளைகளின் சந்தோஷத்துக்காகத்தான் என நினைக்கலாம். ஆனால், உண்மையில் அந்த சந்தோஷத்திற்கு அவர்களே ஊறு விளைவிக்கலாம்.
“பெற்றோர் இருவருமே வேலை பார்க்கும் மேல்தட்டு வகுப்பைச் சேர்ந்தவர்களைப்” பற்றி டாக்டர் ஜூடத் பாஃபாஸி பேசுகையில், அவர்கள் எப்போதுமே “பணம் பணம் என ஆலாய் பறப்பது குடும்பத்திற்கு ஊறு விளைவிக்கும் என்பதை உணருவதால்தான் தங்கள் பிள்ளைகளை இஷ்டத்திற்கு விடுகிறார்கள்” என கூறுகிறார். அவருடைய கருத்துப்படி, இப்படிப்பட்டவர்கள், “பெற்றோருக்குரிய பொறுப்பிலிருந்து நழுவுகிறார்கள்.”
இதனால் பிள்ளைகள் மிக அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். சுகபோக வாழ்க்கைக்கு எத்தனைதான் இருந்தாலும் சிறந்த பிள்ளைப் பருவத்திற்கு தேவையான மிக முக்கியமான அம்சங்கள் அதாவது, பெற்றோரின் நேரமும் அன்பும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. வழிகாட்டவோ கண்டிக்கவோ அறிவுரை கூறவோ யாரும் இல்லாததால், பெரியவர்கள் எதிர்ப்படும் கேள்விகளை பக்குவமடையாத பிஞ்சு வயதிலேயே எதிர்ப்படுகிறார்கள். ‘நான் போதைப் பொருட்களை உபயோகிக்க வேண்டுமா? செக்ஸில் ஈடுபட வேண்டுமா? கோபம் வரும்போது அடிதடியில் இறங்க வேண்டுமா?’ இதற்கான பதில்களை அவர்களாகவே கண்டுபிடிக்கிறார்கள்; சகாக்களிடமிருந்தோ டிவி அல்லது திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்களிடமிருந்தோ பெறுகிறார்கள். விளைவு? பிள்ளைப் பருவம் சடுதியில் சோகத்தில் முடிவடைகிறது.
அம்மா அல்லது அப்பா ஸ்தானத்தை ஏற்கையில்
சாவினாலோ பிரிவினாலோ மணவிலக்கினாலோ பெற்றோரில் ஒருவரை திடீரென இழந்துவிடும் போது பிள்ளைகள் உணர்ச்சி ரீதியில் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர். அம்மாவோ அப்பாவோ இல்லாத அநேக குடும்பங்கள் வாழ்க்கை எனும் ஓடத்தை வெற்றிகரமாக கரை சேர்ப்பது வாஸ்தவம்தான். ஆனால் சில குடும்பங்களிலோ பிள்ளைகள் அவர்களுடைய பிள்ளைப் பருவத்தை அனுபவிக்க முடியாமல் ஓட்டிவிடப்படுகிறார்கள்.
சில சமயங்களில் தனிமை உணர்வு ஒற்றைப் பெற்றோரை வாட்டுவது இயல்பு. இதனால், பெற்றோர் சிலர் தங்களுடைய பிள்ளை—முக்கியமாக மூத்த பிள்ளை—இழந்த துணையின் பொறுப்பை எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறார்கள். ஒருவேளை மனவேதனையின் பாரத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் இளம் மகனிடமோ மகளிடமோ மனந்திறந்து கொட்டிவிடலாம். அந்தப் பிள்ளையோ பிரச்சினைகளை சுமக்க வேண்டிய வயதில் இல்லை. ஒற்றைப் பெற்றோர் சிலர் உணர்ச்சி ரீதியில் தங்கள் பிள்ளைகளை பெரிதும் சார்ந்திருக்கிறார்கள்.
இன்னும் சிலரோ, தங்களுடைய பொறுப்புகளை வலுக்கட்டாயமாக பிள்ளையின் தலையில் தூக்கி வைத்து விடுகிறார்கள். முன்பு குறிப்பிட்ட கார்மெனும் அவளுடைய அக்காவும் இப்படிப்பட்ட சூழ்நிலையிலிருந்து தப்பிக்கவே வீட்டை விட்டு தெருக்களில் வாழ ஆரம்பித்தார்கள். பிள்ளைப் பருவத்திலேயே ஒரு பெற்றோர் போல் தங்களுடைய தம்பி தங்கைகளை கவனிக்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. அது அவர்களுடைய சக்திக்கு மிஞ்சிய பாரமாக இருந்தது.
பிள்ளைப் பருவத்தை அனுபவிக்க முடியாமல் ஓட்டிவிடுவது ஆபத்தானது, முடிந்தவரை தவிர்க்க வேண்டிய ஒன்று என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இதோ ஒரு சந்தோஷமான செய்தி: தங்களுடைய பிள்ளைகள் பிள்ளைப் பருவத்தை அனுபவித்து மகிழ்வதற்கு ஏற்ற பயனுள்ள படிகளை பெரியவர்களால் எடுக்க முடியும். அவை என்ன படிகள்? காலத்தால் பரிசோதிக்கப்பட்ட பதில்கள் சிலவற்றை நாம் இப்போது ஆராயலாம். (g03 4/22)
[பக்கம் 6-ன் பெட்டி]
சிறு வயதிலேயே பூப்படைவதால் வரும் சிரமங்கள்
இன்றைய பெண் பிள்ளைகள் சின்ன வயதிலேயே பருவமடைந்து விடுகிறார்களா? விஞ்ஞானிகள் மத்தியில் இந்தக் கேள்வி சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருக்கிறது. 19-ம் நூற்றாண்டின் மத்திபத்தில் சராசரியாக 17 வயதில் பெண் பிள்ளைகள் பூப்படைந்தார்கள், இன்றோ 13 வயதுக்குள்ளாகவே பூப்படைந்து விடுகிறார்கள் என்று சிலர் சொல்கிறார்கள். 1997-ல் 17,000 பெண் பிள்ளைகளை ஆய்வு செய்ததில் வெள்ளை இனத்தவரில் 15 சதவீத பிள்ளைகளும் ஐக்கிய மாகாணங்களிலுள்ள ஆப்பிரிக்க-அமெரிக்க பிள்ளைகளில் 50 சதவீதத்தினரும் எட்டு வயதிலேயே பூப்படைவது தெரிய வந்தது! ஆனால் மருத்துவர்கள் சிலரோ இந்தக் கண்டுபிடிப்புகளுக்கு எதிராக வாதிடுகிறார்கள். அதோடு, மிகவும் சிறிய வயதிலேயே வளர்ந்து விடுவது “இயல்பானதே” என்ற கருத்தை பெற்றோர்கள் ஏற்கக் கூடாது எனவும் எச்சரிக்கிறார்கள்.
அவர்களுடைய விவாதம் எதுவாயினும், சீக்கிரத்திலேயே பூப்படைவது பெற்றோர், பிள்ளை ஆகிய இரு சாராருக்குமே சவாலை முன்வைக்கிறது. டைம் பத்திரிகை இவ்வாறு குறிப்பிடுகிறது: “சின்ன வயதிலேயே பாலின முதிர்ச்சி ஏற்படுவதால் வரும் சரீர மாற்றங்களைவிட மனோவியல் பாதிப்புகளே பிள்ளைகளுக்கு அதிக இன்னல்களை ஏற்படுத்துகின்றன; அவர்கள் மனித ஓநாய்களிடமிருந்து தப்பிக்க முயலும் வயதில் அல்ல, ஆனால் ‘ராஜா-ராணி’ கதைகளைப் படிக்க வேண்டிய வயதில் இருக்கிறார்கள், . . . எப்படியானாலும் பிள்ளைப் பருவமே கொஞ்ச காலத்திற்குதான்.” அந்தக் கட்டுரை கவலைக்குரிய இந்தக் கேள்வியை எழுப்புகிறது: “மனதும் இதயமும் பக்குவமடைவதற்கு முன்பே இந்த இளம் பெண் பிள்ளைகளுடைய உடல் பெரியவர்களைப் போல ஆகும்போது அவர்கள் எதை என்றென்றும் இழந்துவிடுகிறார்கள்?”
பெரும்பாலும், பாலியல் பலாத்காரத்தினால் கள்ளங்கபடமில்லாத வெகுளித்தனத்தை அவர்கள் இழந்துவிடுகிறார்கள். ஒரு தாய் நேரடியாகவே இவ்வாறு சொல்கிறார்: “வயசுக்கு மீறிய வளப்பம் உடலில் தெரிவதால் [வண்டுகளை சுண்டி இழுக்கும்] தேன்போல் பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். வயசு பையன்களை அவர்கள் ஈர்க்கிறார்கள்.” மழலை வாடை நீங்காத பருவத்திலேயே பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாவதால் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகம். இதனால் சுய மரியாதையையும் சுத்த மனசாட்சியையும் ஏன், சரீர மற்றும் உணர்ச்சி ரீதியில் ஆரோக்கியத்தையும் ஓர் இளம் பெண் இழந்துவிடலாம்.
[பக்கம் 5-ன் படம்]
ஓய்வே கொடுக்காமல் பிழிந்தெடுப்பது பிரச்சினைகளில் முடிவடையலாம்
[பக்கம் 7-ன் படம்]
பிள்ளைகளை போட்டா போட்டி போட உந்தித் தள்ளுவதால் ஸ்போர்ட்ஸிலும் கேம்ஸிலும் கிடைக்கும் இன்பம் பறிபோய்விடலாம்
[பக்கம் 7-ன் படம்]
சிறந்த பிள்ளை வளர்ப்புக்கு பொருளுடைமை ஈடாகாது