Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிள்ளைப் பருவம் பறிபோகையில்

பிள்ளைப் பருவம் பறிபோகையில்

பிள்ளைப் பருவம் பறிபோகையில்

“பிள்ளைப் பருவத்தை அனுபவிப்பதே பிள்ளைகளின் மிக அடிப்படையான உரிமை.”​—⁠“அவசரப்படுத்தப்படும் பிள்ளை” (ஆங்கிலம்)

கவலையோ கள்ளங்கபடமோ இல்லாத பிள்ளைப் பருவம் எனும் வானில் சின்னஞ்சிறுசுகள் எல்லாரும் சிட்டாக சிறகடித்து பறந்து திரிய வேண்டும் என்பதை நீங்கள் ஒருவேளை ஒத்துக்கொள்வீர்கள். ஆனால் சிறுபிள்ளைகள் பலருக்கு இப்படிப்பட்ட பிள்ளைப் பருவம் ஓர் எட்டாக் கனியாக இருப்பதுதான் கசப்பான உண்மை. போரினால் இந்த இளந்தளிர்கள் கசங்குகையில் அவர்களுடைய பிள்ளைப் பருவ மனக்கோட்டைகள் ஆயிரமாயிரம், ஏன் லட்சோபலட்சம் மனக்கோட்டைகள் தூள் தூளாகி நொறுங்கி விடுவதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அடிமைத்தனத்தாலும் கொடுமையாலும் வாழ்க்கையே சின்னாபின்னமாக்கப்படும் பிள்ளைகளையும் சற்று யோசித்துப் பாருங்கள்.

வீட்டைவிட தெருவையே புகலிடமாக நினைத்து ஒரு பிள்ளை தெருக்களில் வாழ வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படும் போது அது எப்படி உணரும் என்பதை நாம் கற்பனைகூட செய்ய முடியாது. அன்பையும் அரவணைப்பையும் பெற வேண்டிய வயதில், வக்கிர ஆசையை தீர்த்துக்கொள்ள துடிக்கும் வெறியர்களிடம் சிக்காமல் எப்படி தப்பிக்கலாம் என்பதை அந்தப் பிள்ளைகள் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இக்கட்டான நம்முடைய காலங்களில் பிள்ளைப் பருவமே அடிக்கடி பலிகடா ஆகிறது.

“மறுபடியும் நான் ஒரு குட்டிப் பிள்ளையானால் எவ்வளவு நல்லாயிருக்கும்!”

கார்மெனுக்கு 22 வயது. பிஞ்சுப் பருவத்தில் நிறைய கஷ்டநஷ்டங்கள் அவளை பிழிந்தெடுத்தது. a அவளையும் அவளுடைய அக்காவையும் அப்பா துஷ்பிரயோகம் செய்ததால், அம்மாவும் புறக்கணித்து விட்டதால், அவர்கள் இருவரும் தெருக்களில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம். இதனால் வரும் ஆபத்துக்கள் மத்தியிலும், வீட்டை விட்டு ஓடிப்போகும் அநேக பிள்ளைகளை சிக்க வைக்கும் சில படுகுழிகளை இவர்களால் எப்படியோ சமாளிக்க முடிந்தது.

இருந்தாலும், பிள்ளைப் பருவத்தை நினைத்து மனம் வெதும்புகிறாள் கார்மென். காரணம்? அப்படியொரு பருவத்தை அனுபவித்ததாக அவளுக்கு ஞாபகமே இல்லையாம். “குழந்தைப் பருவத்திலிருந்து நேரடியா 22 வயசுக்கு தாவிட்டேன்; இடையே பிள்ளைப் பருவம்னு ஒண்ண அனுபவிச்சதா தெரியல” என அவள் புலம்புகிறாள். “இப்போ எனக்கு கல்யாணமாகி ஒரு மகனும் இருக்கிறான்; ஆனால் குட்டிப் பிள்ளைங்களெல்லாம் பொம்மைகள வச்சு விளையாடுறதையும் மற்ற காரியங்கள செய்றதையும் பார்க்க பார்க்க எனக்கும் அதையெல்லாம் செய்யணும்னு மனசு துடியா துடிக்கும். அம்மாவும் அப்பாவும் என் மேலே அன்புகாட்டி அரவணைக்கணும்னு விரும்புறேன். மறுபடியும் நான் ஒரு குட்டிப் பிள்ளையானால் எவ்வளவு நல்லாயிருக்கும்!” என்கிறாள்.

கார்மெனையும் அவளுடைய அக்காவையும் போல அவதிப்படும் பிள்ளைகள் ஏராளம் ஏராளம். தெருக்களே அவர்களது வீடுகள். இதனால் பிள்ளைப் பருவத்தை அவர்கள் அனுபவிக்க முடியாமல் போகிறது. இவர்களில் பலர் வயிற்றுப்பாட்டுக்காக தப்பு தண்டாக்களில் ஈடுபடுகிறார்கள். இவ்வளவு சின்ன வயதிலேயே பிள்ளைகள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக செய்தி குறிப்புகளும் புள்ளி விவரங்களும் தெரிவிப்பதைப் பார்க்கும்போது நம்பவே முடிவதில்லை. பெண் பிள்ளைகள் பலர் பருவ வயதிலேயே தாயாக ஆவதுதான் மற்றொரு மகா கொடுமை​—⁠ஆம், பிள்ளைகளுக்கே பிள்ளைகள்!

சமுதாயத்தின் மறைமுக நெருக்கடி

பிள்ளைகள் வளர்ப்பு இல்லங்களில் தள்ளப்படுவது சகஜமாகி வருவதில் ஆச்சரியமில்லை. “நமக்குத் தெரியாமலேயே வளர்ப்பு இல்லங்களில் ஒரு நெருக்கடிநிலை மெது மெதுவாக தலைதூக்கியிருக்கிறது. பிளவுபட்ட குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் அநேகர் கவனிப்பாரின்றி விடப்படுகின்றனர்” என வீக்கென்ட் ஆஸ்ட்ரேலியன் செய்தித்தாளின் தலையங்கம் குறிப்பிட்டது. “வளர்ப்பு இல்லத்து பிள்ளைகளை கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டவர்கள் மாதக்கணக்காக, ஏன் வருடக்கணக்காகவும்கூட அவர்களில் சிலரை சென்று பார்ப்பதில்லை; அதே சமயத்தில் இன்னும் சில பிள்ளைகளோ எந்தவொரு நிலையான இல்லமுமின்றி பலரிடம் கைமாறிக்கொண்டே இருக்கிறார்கள்” என்றும் அந்தச் செய்தித்தாள் குறிப்பிட்டது.

அத்தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஓர் அனுபவம் 13 வயது பெண் பிள்ளையை பற்றியது. அவள் மூன்று வருடங்களில் 97 வளர்ப்பு இல்லங்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறாள். சில இல்லங்களில் ஓர் இரவு மட்டுமே தங்கியிருக்கிறாள். வேண்டாதவளாக ஒதுக்கித் தள்ளப்பட்டதால் அவள் அடைந்த வேதனையும் பாதுகாப்பற்ற உணர்வால் தவித்த தவிப்பும் இன்னும் அவள் நெஞ்சில் ரணமாக இருக்கிறது. இவளைப் போன்று வளர்ப்பு இல்லங்களில் வளரும் அநேகர் பிள்ளைப் பருவத்தை அனுபவிக்க முடியாமல் போயிருக்கிறார்கள்.

அப்படியானால், பிள்ளைப் பருவம் கைவிட்டுப் போகும் சோகக் கதை ஒரு தொடர்கதையாகி வருவதைப் பற்றி இன்று வல்லுநர்கள் பேசுவது ஆச்சரியமல்ல. ஒரு பெற்றோராக இந்தப் பயங்கரமான உண்மைகளை சிந்தித்துப் பார்க்கையில், உங்கள் பிள்ளைகளுக்கு அருமையான வீட்டையும் அனைத்து தேவைகளையும் அளிக்க முடிந்திருப்பதை நினைத்து நீங்கள் சந்தோஷப்படுவீர்கள். ஆனால் மற்றொரு ஆபத்து இருக்கிறது. இன்றைய உலகில் பிள்ளைப் பருவம் எப்போதுமே அடியோடு பறிபோய்விடுவதில்லை. சிலசமயங்களில் அது வெறுமனே வேகமாக ஓட்டிவிடப்படுகிறது. என்ன கருத்தில்? அதனால் வரும் பாதிப்புகள் என்ன? (g03 4/22)

[அடிக்குறிப்பு]

a பெயர் மாற்றப்பட்டுள்ளது.