Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பொருளாசை என்றால் என்ன?

பொருளாசை என்றால் என்ன?

பைபிளின் கருத்து

பொருளாசை என்றால் என்ன?

மனிதர்கள் ஆன்மீக உணர்வுடனும் கடவுளை வணங்க வேண்டும் என்ற தேவையோடும் பிறக்கிறார்கள். ஆயினும், மண்ணில் உள்ள பொருட்களின் மூலக்கூறுகளால் மனிதன் உண்டாக்கப்பட்டதால் பொருட்களின் தேவையும் அதை அனுபவிக்கும் திறனும் அவனிடம் இருக்கிறது. கிறிஸ்தவர்கள் சிலரிடம் பொருட்செல்வங்கள் ஏராளமாக இருக்கின்றன. அதற்காக அவர்கள் பொருளாசைமிக்கவர்கள் என்றோ ஆவிக்குரிய காரியங்களில் நாட்டமில்லாதவர்கள் என்றோ சொல்ல முடியுமா? மறுபட்சத்தில், ஏழைகளாக இருப்பவர்களுக்கு பொருளாசை இல்லை என்றோ ஆவிக்குரிய ஆவல் அதிகமிருக்கிறது என்றோ சொல்லிவிட முடியுமா?

எக்கச்சக்கமான பணத்தையும் பொருளையும் வைத்திருப்பதுதான் பொருளாசைக்கு அடையாளம் என்று சொல்ல முடியாது என்பதை நீங்கள் கண்டிப்பாக ஒத்துக்கொள்வீர்கள். அப்படியென்றால் பொருளாசை என்பது உண்மையில் என்ன? இதனால் நம்முடைய ஆன்மீகத்திற்கு வரும் ஆபத்துக்களை எப்படி தவிர்க்கலாம்? இவற்றை அறிந்துகொள்ள பின்வரும் பைபிள் உதாரணங்களை கவனியுங்கள்.

செல்வச் சீமான்களாக இருந்தார்கள்

பைபிள் காலங்களில் கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்களில் சிலர் செல்வச் சீமான்களாக இருந்தார்கள். உதாரணமாக, “ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளை உடைய சீமானாயிருந்தான்.” (ஆதியாகமம் 13:2) யோபுவிடம் ஏராளமான மிருகஜீவன்களும் திரளான பணிவிடைக்காரர்களும் இருந்ததால், “கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான்.” (யோபு 1:3) இஸ்ரவேலின் ராஜாக்களான தாவீதிடமும் சாலொமோனிடமும் செல்வம் கொட்டிக் கிடந்தது.​—⁠1 நாளாகமம் 29:1-5; 2 நாளாகமம் 1:11, 12; பிரசங்கி 2:4-9.

முதல் நூற்றாண்டு சபைகளில் வசதிபடைத்த கிறிஸ்தவர்கள் இருந்தார்கள். (1 தீமோத்தேயு 6:17) உதாரணமாக, லீதியாள் என்பவள் ‘தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாக’ இருந்தாள். (அப்போஸ்தலர் 16:14) இரத்தாம்பர சாயமும் அந்த சாயம் பூசப்பட்ட ஆடைகளும் விலை உயர்ந்தவையாக இருந்தன. ஆஸ்தியும் அந்தஸ்தும் பெற்றவர்களால்தான் அவற்றை வாங்க முடிந்தது. எனவே லீதியாள் ஓரளவு வசதிமிக்கவளாகவே இருந்திருக்க வேண்டும்.

அதேசமயம், பைபிள் காலத்தில் வாழ்ந்த யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களில் சிலர் ஏழை எளியவர்களாக இருந்தனர். இயற்கை சீற்றங்களினாலும் விபத்துகளினாலும் உயிர் இழப்புகளினாலும் சில குடும்பங்கள் வறுமையில் மூழ்கியிருந்தன. (பிரசங்கி 9:11, 12, NW) இப்படி வறுமையில் வாடியவர்கள், மற்றவர்களிடம் செல்வம் புரளுவதைப் பார்த்து எவ்வளவு மனம் புழுங்கியிருப்பார்கள்! அதேசமயம் செல்வமிக்கவர்கள் எல்லாரும் பொருளாசைமிக்கவர்கள் என்றும் ஏழைகள் அனைவரும் பக்திமான்கள் என்றும் அவர்கள் நியாயம் தீர்த்திருந்தால் அது தவறு. ஏன்? ஏனென்று புரிந்துகொள்ள, முதலில் பொருளாசையின் ஆணிவேர் எது என்பதை கவனியுங்கள்.

பண ஆசை

“அறிவுப்பூர்வமான விஷயங்களையோ ஆன்மீக விஷயங்களையோவிட பணத்திலும் பொருளிலுமே குறியாக இருப்பதுதான்” பொருளாசை என ஓர் ஆங்கில அகராதி விளக்குகிறது. எனவே நம்முடைய ஆசைகள், முன்னுரிமைகள், வாழ்க்கையின் குறிக்கோள் ஆகியவையே ஒட்டுமொத்தமாக பொருளாசையின் ஆணிவேராக அமைகின்றன. இதை பின்வரும் இரண்டு பைபிள் உதாரணங்கள் தெளிவாக காட்டுகின்றன.

எரேமியா தீர்க்கதரிசியின் செயலரான பாருக்கை யெகோவா கண்டித்தார். எருசலேமுடைய சூழ்நிலையின் காரணமாகவும் பிரபலமில்லாத எரேமியாவிடம் வேலை செய்ததாலும் பாருக் கொஞ்சம் வசதி குறைந்தவராகவே இருந்தார். ஆனாலும், யெகோவா அவரிடம் “நீ உனக்குப் பெரிய காரியங்களைத் தேடுகிறாயோ? தேடாதே” என்று சொன்னார். ஒருவேளை மற்றவர்களுடைய செல்வ செழிப்பைப் பற்றி யோசித்து யோசித்தே அவரும் பொருளாசையை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்திருக்கலாம். ஆகவே, எருசலேமின் மீது வரவிருந்த அழிவில் அவர் உயிரை மட்டுமே காப்பாற்றுவதாக யெகோவா சொன்னார், அவருடைய பொருளுடைமைகளோ அழியும் என்றார்.​—எரேமியா 45:4, 5.

இயேசு ஓர் உதாரணத்தை கொடுத்தார்; அது, ஐசுவரியவானாக வேண்டும் என்று பாருக்கை போலவே ஆசைப்பட்ட ஒரு மனிதனை பற்றியது. இந்த மனிதன் ஏற்கெனவே தன்னிடமிருந்த செல்வங்களை கடவுளுடைய சேவைக்காக பயன்படுத்துவதற்கு பதிலாக இன்னும் அதிக செல்வம் சேர்ப்பதிலேயே குறியாக இருந்தான். அதனால்தான், “என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, . . . பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன்” என்றான். ஆனால், “தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார். தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார்.”​—⁠லூக்கா 12:16-21.

இந்த இரண்டு உதாரணங்களும் எதை உணர்த்துகின்றன? பொருளாசை என்பது, ஒருவர் எவ்வளவு பொருட்களை வைத்திருக்கிறார் என்பதை அல்ல, ஆனால் பணத்துக்கும் பொருளுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதையே சார்ந்திருக்கிறது என்ற குறிப்பைத்தான் இவை உணர்த்துகின்றன. அப்போஸ்தலனாகிய பவுல் இதைக் குறித்து சொல்லும்போது, “பணக்காரர்களாக வேண்டும் என்பதில் உறுதியாய் இருப்பவர்கள்” “சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்றார். (1 தீமோத்தேயு 6:9, 10; NW) எனவே, பணக்காரர்களாகியே தீருவது என்ற உறுதியும் பண ஆசையும்தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம்.

சுய பரிசீலனை தேவை

கிறிஸ்தவர்களின் பொருளாதார நிலை என்னவாக இருந்தாலும் சரி, அவர்கள் பொருளாசை என்னும் கண்ணியை குறித்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஐசுவரியத்தின் செல்வாக்கு வஞ்சகமானது, அது ஆவிக்குரிய தன்மையை நெருக்கிவிடும். (மத்தேயு 13:22, NW) எனவே, நம்முடைய கவனத்தை ஆவிக்குரிய காரியங்களிலிருந்து பொருளாதார காரியங்களிடம் திருப்பினால் அது நமக்கே தெரியாமல் நம்மை ஆட்கொள்ள ஆரம்பித்துவிடும்; அதன் விளைவுகள் விபரீதமானவை.​—⁠நீதிமொழிகள் 28:20; பிரசங்கி 5:10.

ஆகையால், கிறிஸ்தவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் எதற்கு முதலிடமும் முக்கியத்துவமும் கொடுக்கிறார்கள் என்பதை பரிசீலித்து பார்ப்பது அவசியம். ஆவிக்குரிய சிந்தையுள்ள ஒவ்வொருவரும், ஏழையாக இருந்தாலும்சரி பணக்காரராக இருந்தாலும்சரி, பவுலின் பின்வரும் அறிவுரையை பின்பற்ற முயற்சி செய்வார்கள்: ‘நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமல், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைப்போமாக.’​—⁠1 தீமோத்தேயு 6:17-19. (g03 4/08)