Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதோ! ‘மெகா’ பலம் படைத்த நீர்யானை!

அதோ! ‘மெகா’ பலம் படைத்த நீர்யானை!

அதோ! ‘மெகா’ பலம் படைத்த நீர்யானை!

கென்யாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

மாலைமயங்கும் வேளை! கென்யாவில் மாசை மாரா விலங்குகள் சரணாலயத்தில் பரந்து விரிந்த அந்த மாபெரும் குளம் கதிரவனின் இதமான ஒளி மழையில் குளித்துக் கொண்டிருக்கிறது. கதிரவன் கீழ்வானில் இறங்கும்போது அந்தக் குளத்து நீர் தகதகவென பொன்னிறத்தில் மின்னுகிறது. சில அடிகளுக்கு அப்பால், குடும்பம் குடும்பமாக வரிக்குதிரைகளும் மான்களும் ஆடி அசைந்து அந்தக் குளத்தை நோக்கி வந்தவண்ணம் இருக்கின்றன. திடீரென அவை கற்சிலை போல் ஆடாமல் அசையாமல் பயத்தில் உறைந்து நின்று விடுகின்றன. ஏன்? அந்தக் குளத்தின் ஒரு ஓரத்தில் பெரிய பாறை மாதிரி ஒன்று மிதப்பதை அவற்றின் கண்கள் குத்திட்டு பார்க்கின்றன. அந்தப் “பெரிய பாறை” தண்ணீரை முரட்டுத்தனமாக ஒரு கலக்கு கலக்கிவிட்டு நீருக்குள் தலைமறைவாகி விடுகிறது. படுபயங்கர நீர்வாழ் விலங்கு ஒன்றை​—⁠ஆம், நீர்யானையை⁠—​பார்த்த அதிர்ச்சியில்தான் அந்த அழையா விருந்தாளிகள் அப்படி உறைந்துபோய் நின்றன.

கிழக்கு ஆப்பிரிக்காவிலிருக்கும் குளங்களில், ஆறுகளில், ஏரிகளில் நீர்யானைகள் சர்வ சாதாரணமாக காணப்படும். உருவத்தில் யானைக்கு அடுத்தது நீர்யானைதான். சாதாரணமாக, ஒரு நீர்யானை 15 அடி நீளமும், தோள் வரை 5 அடி உயரமும் வளரலாம். அதன் எடை சுமார் நான்கு டன் இருக்கலாம். பைபிளில் யோபு என்ற புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள “பிகெமோத்” என்ற வார்த்தை நீர்யானையைக் குறிக்கிறதென்று பொதுவாக கருதப்படுகிறது. இந்த பருமனான விலங்கின் எலும்புகள் “கெட்டியான வெண்கலத்தைப் போலவும், . . . இருப்புக் கம்பிகளைப் போலவும்” இருக்கின்றன என பைபிள் விவரிப்பதில் ஆச்சரியமே இல்லை.​—யோபு 40:15-18.

உரோமங்களில்லாத முரட்டுத் தோலும், அலங்கோலமான தோற்றமும், பீப்பாயைப் போன்ற உடம்புமுள்ள நீர்யானை நிச்சயம் எந்த அழகுப் போட்டியிலும் தேறவே தேறாது. நீர்யானையின் கால்கள் படுகுட்டையாக இருப்பதால், இந்த ‘மெகா சைஸ்’ உடம்பை வைத்துக் கொண்டு எப்படித்தான் இது சமாளிக்கிறதோ என ஒருவர் மூக்கின் மேல் விரலை வைக்கலாம். ஆனால், அந்தக் குட்டையும் குண்டுமான கால்களின் பலத்தை மட்டமாக எண்ணி விடாதீர்கள். மனிதனுக்கும் நீர்யானைக்கும் ஓட்டப் பந்தயம் வைத்தால், நீர்யானைதான் ஜெயிக்குமாம். அதே போல, நீரில் இருக்கும்போது ஒரு சின்னப் படகின் வேகத்தை, ஏன், ஒரு மோட்டார் படகின் வேகத்தைக்கூட அது விஞ்சிவிடுமாம்.

நீரைச் சுற்றி வாழ்க்கை

நீர்யானைகள் கூடிவாழும் இயல்புடையவை; பொதுவாக அவை தொகுதி தொகுதியாக வாழ்கின்றன; ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு ஆண் நீர்யானை தலைவனாக இருக்கும். ஒரு தொகுதியில் 10-லிருந்து 15 நீர்யானைகள் வரை இருக்கும்; என்றாலும், சுமார் 150 நீர்யானைகள் சேர்ந்த பெரிய தொகுதிகளும் உண்டு. நீர்யானைகள் நிலத்திலும் வாழும், நீரிலும் வாழும். முக்கியமாக இரவு நேரத்தில் அவை தண்ணீரை விட்டு வெளியே வந்து கரையோரங்களில் புசுபுசுவென்று வளர்ந்திருக்கும் பச்சைப் புற்களையும் இலைதழைகளையும் ‘ஒரு பிடி பிடித்துவிடும்.’ பொதுவாக, தண்ணீர் இருக்கும் இடங்களை விட்டு தூரமாக போவதற்கு அவற்றிற்கு மனமே வராது. ஆனால், வறண்ட காலத்தில் உணவைத் தேடித்தேடி சில நீர்யானைகள் 10 கிலோமீட்டர் வரை சென்றிருக்கின்றனவாம்.

நீர்யானைகள் தங்கள் எல்லைப் பகுதியை எப்படி அடையாளம் காட்டுகின்றன என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. தங்கள் சாணியை வால்களாலேயே நாலா புறமும் பரப்பி ‘கோலமிடும்’ விந்தையான பழக்கம் இவற்றிற்கு இருக்கிறது; ஒருவேளை பெண் நீர்யானைகளின் மனதில் இடம் பிடிக்க கையாளப்படும் வழியாக இது இருக்கலாம் அல்லது ஒரு எதிரியை பயமுறுத்தும் ஒரு வழியாக இருக்கலாமென சிலர் ஊகிக்கிறார்கள். எதிரிகள் தாக்கும்போது, அவை குதிரையைப் போல கனைக்கின்றன; சண்டையில் இறங்குகையில் உறுமுகின்றன. தண்ணீருக்குள் அவை மூச்சு விடும் சத்தத்தைக்கூட கேட்க முடியும். மூ-மூ-மூ என்று கத்துகிறதை வைத்து அதுதான் ‘தலைவன்’ என்று டக்கென்று சொல்லிவிடலாம்.

நீர்யானை நாள்பூராவும் தண்ணீருக்குள் முழுவதுமாகவோ அரைகுறையாகவோ முங்கி கிடக்கும்; இதற்கு அதன் பயில்வான் உடம்பு ஏகப் பொருத்தம். மற்ற நில, நீர்வாழ் விலங்குகளைப் போல படுஜோராக நீந்தத் தெரியாவிட்டாலும், நீர்யானைகளால் 15 நிமிடம் வரை வெளியே வராமல் தண்ணீருக்கடியில் இருக்க முடியும்! அதனுடைய மூக்குத் துவாரங்கள், கண்கள், காதுகள் ஆகியவை ஒரே மட்டத்தில் இருப்பதால், மீதி உடம்பு முழுவதையும் தண்ணீருக்குள் மறைத்துக் கொள்ள முடிகிறது. நீருக்கு அடியில்தான் சகலமும் நடக்கிறது​—⁠காதல் விளையாட்டுகள், இனச்சேர்க்கை உட்பட.

கருவுற்று சுமார் எட்டு மாதங்கள் கழித்து தாய் நீர்யானை ஒரேவொரு குட்டியை ஆழமில்லாத நீர் பரப்பில் ஈன்றெடுக்கிறது. அந்தக் குட்டி தண்ணீருக்கு அடியிலோ கணுக்காலளவு நீரிலோ இருந்துகொண்டு தாய்ப்பால் குடிக்கிறது. நீர்யானை பயில்வானாக இருந்தாலும், குட்டியை ஆச்சரியப்படும் விதத்தில் கனிவோடு கவனித்துக் கொள்கிறது; இப்படியாக குட்டிகளை வளர்த்தெடுப்பதில் கருத்தாக இருக்கிறது. சொல்லப்போனால், நீந்திச் செல்லும் தாயின் முதுகில் ஒரு குட்டி நீர்யானை ஜம்மென்று சவாரி செய்யும் அருமையான காட்சியைப் பார்க்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். உண்மைதான், பார்ப்பதற்கு அது ரொம்ப சாதுவாக இருந்தாலும், குட்டியை யாராவது அதன் முதுகிலிருந்து அகற்ற முயன்றால் அவ்வளவுதான், வெறிபிடித்த மாதிரி சண்டைபோட ஆரம்பித்துவிடும்!

நீர்யானையின் தோல் நீரில் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்கிறது. தண்ணீரை விட்டு வெளியேறியதுமே குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அதன் தோலில் ஏற்படுகின்றன. தோலுக்கு அடியிலுள்ள சுரப்பிகள் ஒருவித மெல்லிய கருஞ்சிவப்பு சவ்வையும் அதோடு, அதிகளவு உப்பையும் சுரக்கின்றன. அந்தக் கருஞ்சிவப்பு நிறத்தை தூரத்திலிருந்து பார்க்கும்போது அந்த நீர்யானையின் உடம்பிலிருந்து இரத்தம் வேர்வையாக வெளிவந்திருப்பது போல தெரியும். அந்த சவ்வு, நீர்யானை தண்ணீருக்குள் இருக்கும்போதும், வறண்ட நிலத்தில் இருக்கும்போதும் அதன் தோலை பத்திரமாக பாதுகாக்கிறது. பூர்வ ஆப்பிரிக்க சமுதாயத்தில், நீர்யானையின் தோலை நீளநீள பட்டைகளாக வெட்டி, எண்ணெய்யில் ஊற வைத்தார்கள். அதன் பின், அந்தப் பட்டைகளை கயிறுபோல் திரித்து காயப் போட்டு படுபயங்கர சாட்டையாக உருவாக்கினார்கள்; அவற்றை நிலத்தகராறு சண்டைகளின்போது பயன்படுத்தினார்கள். a இந்தத் தோலை பதப்படுத்துவதற்கு குறைந்தது ஆறு வருடங்கள் பிடிக்கிறது; பதப்படுத்தப்பட்ட பிறகு, நீர்யானைகளின் தோல் “கற்பாறையைப் போல அவ்வளவு கெட்டியாகவும் சுமார் நாலரை சென்டிமீட்டர் தடிமனாகவும் இருக்கும்” என்பதாக ஜிமக்ஸ் அனிமல் லைஃப் என்ஸைக்ளோப்பீடியா குறிப்பிடுகிறது.

மறக்க முடியாத, பயமுறுத்தும் கொட்டாவி

நீர்யானையைப் பார்த்ததும் முதலில் பளிச்சென்று தெரிவது அதன் வாய்தான். அது நிலத்தில் கரையோரமாக புல்மேய்கையில் ஒன்றரை அடி அகலமுள்ள தன் உதடுகளை பயன்படுத்துகிறது. ஆனாலும், சாப்பிடுவதற்கு மட்டுமே அது தன் வாயை உபயோகிப்பதில்லை. அது வாயை 150 டிகிரிக்கு பிளக்கும்போது அது ஏதோ கொட்டாவி விடுகிறது என்று மட்டும் நினைத்து விடாதீர்கள், தாக்குவதற்கு தயாரென சிக்னல் கொடுப்பதற்கும் அப்படி செய்து பயமுறுத்தும். ஒரு நீர்யானை தன் எல்லைக்குள் யாரையும் அனுமதிக்காது; அப்படி அத்துமீறி எதிரி நுழைந்து விட்டால் அந்த இடம் போர்க் களமாகவே மாறிவிடும். அது வாயைப் பிளக்கும்போது கீழ்வரிசையிலுள்ள பெரிய பெரிய கோரைப் பற்கள் நீட்டிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். தற்காப்பு கருவிகளாக பயன்படும் இப்பற்கள், ஈறிலிருந்து 12 அங்குலம் வரை நீளமாக வளரலாம்.

நீர்யானையின் வாய் மற்ற நீர்யானைகளுக்கு மட்டுமல்ல, மனுஷருக்கும் ஆபத்தானதுதான். நீர்யானையோடு எப்படியாவது சுமுகமாக இருக்க வேண்டும் என்பதற்காக மனிதர்கள் எடுத்த எல்லா முயற்சிகளும் படுதோல்வி கண்டிருக்கின்றன. நீர்யானை தன் ஆதிக்கத்துக்கு உட்பட்ட பகுதிக்கு ரொம்ப பக்கத்தில் போகிறவர்கள்மீது அதிரடித் தாக்குதலை நடத்திவிடும்; அதை எந்த விதத்திலும் கோபமூட்டாவிட்டாலும் தாக்க ஆரம்பித்துவிடும். அதுவும் ஒரு நீர்யானைக்கு ஏதாவது காயம் ஏற்பட்டிருந்தால், கேட்கவே வேண்டாம், இன்னும் பயங்கர எரிச்சலோடு இருக்கும்; அதனால், கிட்ட வரும் எவரையும் சின்னாபின்னமாக்கிவிடும். கோபாவேசத்தில் ஒரு நீர்யானை தன் அகன்ற வாயினால் படகுகளைக்கூட கவிழ்த்திப் போட்டிருக்கிறதாம்.

நீரிலிருக்கும் போது நீர்யானைகள் எப்படி மூர்க்கமாக நடந்து கொள்கின்றனவோ அப்படிதான் நிலத்தில் இருக்கும்போதும். உதாரணமாக, புல்மேயும் ஒரு நீர்யானைக்கும் தண்ணீருக்கும் இடைப்பட்ட பகுதியில் யாராவது இருந்தால் உயிருக்கே ஆபத்துதான். ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில், அப்பாவி கிராமவாசிகள் சிலரை நீர்யானைகள் தாக்கியிருக்கின்றன; காரணம்? நீர்யானைகள் நீரண்டைக்கு போகும் பாதையில் தெரியாத்தனமாக குறுக்கிட்டதால்தான் இந்தச் சோகம். இந்த விலங்கு மனிதனையும் மிருகங்களையும் வெலவெலக்கச் செய்கிறது, ஆகவே, அதனிடம் படுஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும், அதை மதித்தும் நடக்க வேண்டும்.

நீர்யானைகள் அழிந்து போகாமல் இருக்குமா?

தன்னந்தனியாக புல்மேய்ந்து கொண்டிருக்கும் ஒரு நீர்யானை வெகு சுலபமாக சிங்கங்களிடம் மாட்டிக்கொள்ளும். ஆனால், சிங்கங்களைவிட நீர்யானையின் முக்கிய எதிரி மனிதன் தானாம். “நீர்யானைகளின் எண்ணிக்கையை மனிதர்கள் பெருமளவு குறைத்திருக்கிறார்கள், அதன் வாழிடங்களின் பரப்பளவையும் பெருமளவு குறைத்திருக்கிறார்கள். வேட்டைக்காரர்கள் அவற்றை ஏராளமாக கொன்று குவித்திருக்கிறார்கள்; அதோடு, விவசாயிகள் அவற்றின் முன்னாள் குடியிருப்புப் பகுதிகள் அநேகத்தை விளைநிலமாக மாற்றியிருக்கிறார்கள்” என உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது.

ஆம், நீர்யானைகளின் வாழிடங்களுக்குள் மனிதர்கள் அத்துமீறி நுழைந்ததால், அந்த விலங்குகள் ஒரு சிறிய பகுதியில் மட்டுமே வாழும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியிருக்கின்றன; இதனால், அவை சுதந்திரமாக இங்குமங்கும் திரிய முடிவதில்லை; அதோடு, அவற்றின் இனப்பெருக்க முறைகளும் தடைபடுகின்றன. ஆனால், கடவுளுடைய ராஜ்ய ஆட்சியில் மனிதனுக்கும் மிருகங்களுக்கும் இடையே சுமுகமான உறவு நிலவும்; அப்பொழுது, மீண்டும் ஸ்தாபிக்கப்படும் பூமிக்குரிய பரதீஸில் யாருமே ஒருவருக்கொருவர் ‘தீங்கும் செய்ய மாட்டார்கள்; கேடும் செய்ய மாட்டார்கள்.’ அது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்!​—ஏசாயா 11:⁠9. (g03 5/08)

[அடிக்குறிப்பு]

a சுவாஹிலி மொழியில் நீர்யானையின் பெயர் கீபோக்கோ; இதன் அர்த்தம் “சாட்டை.”

[பக்கம் 25-ன் படத்திற்கான நன்றி]

Elizabeth DeLaney/Index Stock Photography