Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உற்பத்தி திறன் அதிகரித்துள்ளதா?

“இப்போது, கனடாவைச் சேர்ந்த நான்கு பேரில் ஒருவர் வாரத்தில் 50-⁠க்கும் அதிக மணிநேரம் வேலை செய்கிறார்; பத்து வருடத்திற்கு முன்போ 10 பேரில் ஒருவர்தான் அப்படி வேலை செய்தார்” என வான்கூவர் சன் என்ற செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. ஓர் அரசாங்க ஆராய்ச்சிக்காக கனடாவில் வேலை செய்யும் 31,500 பேர் பேட்டி காணப்பட்டார்கள்; “அவர்களில் பாதிப் பேர் வீட்டிலும் அல்லது வாரயிறுதி நாட்களிலும் வேலை செய்வதாக கூறினர், இப்படியாக, மாதத்திற்கு 27 மணிநேரம் சம்பளமில்லாமல் வேலை செய்தார்கள்.” இதற்கு தொழில்நுட்பம் ஒரு முக்கிய காரணமாகும். “ஓவர்டைமாக வீட்டில் செய்யப்படுகிற சம்பளமில்லாத வேலை முழுவதும் . . . ‘கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட’ வேலையே என்பது ஆராய்ச்சியில் தெரிய வந்தது” என செய்தித்தாள் கூறுகிறது. வாரத்தில் நான்கு நாட்களே வேலை செய்ய வேண்டும், ஓய்வெடுக்க அதிக நேரமிருக்கும் என்ற நிலை ஏற்படுவதற்கு பதிலாக, “அழுத்தம், வியாதி, கடும் சோர்வு, வேலைக்கு செல்லாதிருப்பது போன்ற உற்பத்தி திறனை கெடுக்கும் இன்னும் பிற பிரச்சினைகள் அதிகரிக்க தொழில்நுட்பமே முக்கிய குற்றவாளி.” அந்தச் செய்தித்தாள் மேலும் கூறுவதாவது: “தொழில்நுட்பத்தின் காரணமாக வேலையில் ஈடுபாடும் உற்பத்தி திறனும் அதிகரித்திருப்பதாக பெரும்பாலானோர் ஒப்புக்கொண்டனர். அதேசமயம், தொழில்நுட்பத்தால் தங்கள் வேலைப் பளு குறைந்திருப்பதாகவோ வேலையில் நெருக்கடி குறைந்திருப்பதாகவோ யாருமே சொல்லவில்லை.” (g03 5/22)

“பேசும்” செடிகள்

செடிகள் பேசுவதை “கேட்கும்” லேசர் ஒலிவாங்கிகளை ஜெர்மனியிலுள்ள பான் பல்கலைக்கழகத்தின் செயல்முறை இயற்பியல் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் தயாரித்திருக்கிறார்கள். இந்த ஒலிவாங்கிகள், எத்திலீன் வாயு உண்டாக்கும் ஒலி அலைகளை பெறுகின்றன; செடிகள் அழுத்தத்தை சந்திக்கையில் இந்த வாயுவை வெளிவிடுகின்றன. “ஒரு செடி அதிக அழுத்தத்தை எதிர்ப்படுகையில் ஒலிவாங்கியில் அதிக சப்தம் கேட்கிறது” என்று பான் பல்கலைக்கழக விஞ்ஞானியான டாக்டர் ஃபிராங்க் க்யூனமான் கூறுகிறார். கருவி காண்பித்த அளவீடுகளின்படி, பார்க்க செழிப்பாய் தோன்றிய ஒரு வெள்ளரி செடி “பயங்கரமாய் கூச்சலிட்டுக் கொண்டிருந்தது. கவனமாக ஆராய்ந்தபோது அதற்கு பூஞ்சணம் பிடித்திருப்பது தெரிய வந்தது; ஆனாலும் அறிகுறிகள் எதுவும் வெளியில் தெரியவில்லை.” உண்மையில், பூஞ்சணம் பிடித்து எட்டு அல்லது ஒன்பது நாட்களுக்கு பிறகுதான் புள்ளிகள் வெளியில் தெரியும்; அப்போதுதான் விவசாயிகளால் பிரச்சினையை அறிந்துகொள்ள முடியும். “செடிகள் பேசுவதைக் கேட்பதன் மூலம் பூச்சிகளையும் நோய்களையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து எச்சரிக்கும் முறை ஒன்றை உருவாக்க முடியும். பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றின் அழுத்த அளவை அறிவது அவற்றை திறம்பட்ட விதமாக சேமித்து வைக்கவும் மற்ற இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் உதவியாகவும் இருக்கும்” என லண்டனின் த டைம்ஸ் கூறுகிறது. (g03 5/08)

இந்தியாவில் செய்தித்துறை வளர்ச்சி

இந்தியாவில், 1999 முதல் 2002 வரைக்கான மூன்று வருட காலப்பகுதியில் செய்தித்தாள்கள் வாசிப்போரின் எண்ணிக்கை 13.1 கோடியிலிருந்து 15.5 கோடியாக அதிகரித்துள்ளது என தேசிய வாசகர் ஆராய்ச்சி குழு நடத்திய ஆய்வு கூறுகிறது. செய்தித்தாள்கள், பத்திரிகைகள், பிற இதழ்கள் ஆகியவை உட்பட அச்சிடப்பட்ட பிரசுரங்களை வாசிப்போரின் எண்ணிக்கை நாட்டில் மொத்தம் 18 கோடியாகும். இந்திய ஜனத்தொகையான 100 கோடிக்கும் அதிகமானோரில் 65 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் கல்வியறிவு பெற்றவர்கள்; ஆகவே, வாசகர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இன்னும் அதிக வாய்ப்புள்ளது. டிவி ரசிகர்களின் எண்ணிக்கை 38.36 கோடியாகும், ரேடியோ நேயர்களின் எண்ணிக்கை 68.06 கோடியாகும். இப்போது 60 லட்சத்திற்கும் அதிகமானோர் இன்டர்நெட்டை உபயோகிக்கின்றனர், 1999-⁠ல் 14 லட்சம் பேரே அதை உபயோகித்தனர். இந்தியாவில், டிவி வைத்திருப்போரில் ஏறக்குறைய பாதிப் பேரிடம் கேபிள், சாட்டிலைட் டிவி தொடர்புகள் உள்ளன; இது, மூன்று ஆண்டுகளில் 31 சதவிகித அதிகரிப்பாகும். (g03 5/08)

திருமண முறிவின் விளைவுகள்

20-⁠க்கும் அதிக வருடங்களாக செய்யப்பட்ட 100-⁠க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளை ஆராய்ந்த பின் சிவிட்டாஸ் குடும்ப ஆராய்ச்சி அமைப்பின் திட்ட மேலாளரான ரிபெக்கா ஓநீல் இவ்வாறு அறிக்கை செய்கிறார்: “‘தகப்பனில்லாத குடும்பமாக’ இருப்பதால் அநேக தாய் தகப்பன்மாரும், பிள்ளைகளும் ஏழ்மை, உணர்ச்சி ரீதியான துயரம், உடல்நலக் கேடு, வாய்ப்புகளை இழத்தல், ஸ்திரமின்மை போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.” பிளவுபட்ட குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள், “உடல்நலக் கேட்டில் அவதிப்பட 50 சதவிகிதம் அதிக வாய்ப்புள்ளது, வீட்டைவிட்டு ஓடிவிட இரண்டு மடங்கும் துஷ்பிரயோகம் செய்யப்பட ஐந்து மடங்கும் அதிக சாத்தியமுள்ளது” என ஓநீல் கூறியதாக லண்டனின் த சன்டே டெலிகிராஃப் அறிக்கை செய்கிறது. அந்த செய்தித்தாள் தொடர்ந்து இவ்வாறு கூறியது: “சொந்த தகப்பனோடு வாழாத பிள்ளைகள், மற்றவர்களோடு ஒத்துப்போகாதிருப்பதற்கும் பள்ளியில் பிரச்சினைகளை சந்திப்பதற்கும் மூன்று மடங்கு அதிக வாய்ப்புள்ளது. டீனேஜர்களாகையில் அவர்கள் குடிப்பதற்கும், புகைப்பதற்கும், போதைப் பொருட்களை உபயோகிப்பதற்கும், . . . குற்றச்செயல் புரிவதற்கும், பிஞ்சிலேயே செக்ஸில் ஈடுபடுவதற்கும், டீனேஜிலேயே பெற்றோராவதற்கும் இரண்டு மடங்கு அதிக சாத்தியமுள்ளது.” திருமணமானவர்கள் ஒற்றைப் பெற்றோரைவிட மோசமாகவும் தாழ்த்தப்பட்ட நிலையிலும் இருந்தால்கூட அவர்களுடைய பிள்ளைகள் இப்படிப்பட்ட பிரச்சினைகளை சந்திப்பதற்கு வாய்ப்புகள் குறைவே என அந்த அறிக்கை கூறுகிறது. (g03 5/22)

கொடூர மரணங்களுக்கு முதல் காரணம் தற்கொலையே

“உலக முழுவதிலும் கொடூர மரணங்களுக்கு முதல் காரணம் தற்கொலையாகும்” என லண்டனின் செய்தித்தாளான தி இன்டிபென்டன்ட் அறிக்கை செய்கிறது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையை சார்ந்த அந்த கட்டுரை, 2000-⁠த்தில் 16 லட்சம் பேர் கொடூரமான விதங்களில் மரித்தனர் என மேலும் கூறுகிறது. அந்த வருடம் 8,15,000 பேர் தற்கொலை செய்துகொண்டனர், 5,20,000 பேர் கொலை செய்யப்பட்டனர், 3,10,000 பேர் யுத்தங்களிலும் சண்டைகளிலும் மரித்தனர். 2000-⁠த்தில் பெரும்பாலான மரணங்கள் “வளரும் நாடுகளில் நிகழ்ந்தன, 10 சதவிகிதத்திற்கும் குறைவானவையே வளர்ந்த நாடுகளில் நிகழ்ந்தன” என்றது அந்த செய்தித்தாள். பெலாரூஸ், எஸ்டோனியா, லிதுவேனியா ஆகிய நாடுகளில் தற்கொலைகளின் எண்ணிக்கை பிரிட்டனைவிட நான்கு மடங்குக்கும் அதிகமாகும். ஆப்பிரிக்கா, வட மற்றும் தென் அமெரிக்காவில் தற்கொலைகளைவிட கொலைகள் இரண்டு மடங்குக்கும் அதிகமாகும். ஆனால் ஆஸ்திரேலியா, ஐரோப்பா, தூர கிழக்கு தேசங்களில் இதற்கு நேர் எதிரானதே உண்மையாகும். (g03 5/22)

போதுமானளவு தூங்காத பிள்ளைகள்

போதுமானளவு தூங்காததால் பிள்ளைகளின் உடல்நலம் பெரிதும் பாதிக்கப்படுவதாக யூ.எஸ்.நியூஸ் அண்டு உவர்ல்ட் ரிப்போர்ட் பத்திரிகை கூறுகிறது. போதுமான தூக்கமில்லாத பிள்ளைகள் படிப்பதில் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள், நண்பர்களை சம்பாதிக்கவும் கஷ்டப்படுகிறார்கள். “தூக்கக் கடன் உள்ள பிள்ளைகள் நீண்ட நேரம் கவனம் செலுத்த முடியாது, எரிச்சலடைவார்கள், கோபத்தில் எரிந்து விழுவார்கள், பொறுமை இழப்பார்கள்” என்று அந்தப் பத்திரிகை அறிக்கை செய்கிறது. இந்தப் பிரச்சினைகளுக்கு பெரும்பாலும் பெற்றோரே காரணமாக இருப்பதால் மருத்துவர்கள் கவலைப்படுகிறார்கள். “குடும்பமாக சேர்ந்து நேரம் செலவழிப்பதற்காக இரவு 11 மணிவரை உங்கள் குழந்தையை விழித்திருக்க வைக்கிறீர்கள் என்றால் உங்கள் வாழ்க்கைமுறையை பரிசீலிக்க வேண்டும்” என்று குழந்தை மனநல மருத்துவரான பார்பரா பிராவுன்-மெக்டானல்ட் கூறுகிறார். கிரமமான தூங்கும் பழக்கங்களை ஏற்படுத்த தினமும் குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்கு செல்வதையும் காலையில் எழுந்திருப்பதையும் பெற்றோர் பழக்கப்படுத்த வேண்டும்; வாரயிறுதி நாட்களிலும் இவ்வாறே செய்ய வேண்டும். குளிப்பது, கொஞ்சுவது, சிறு பிள்ளைகளுக்கு கதை வாசித்து காட்டுவது, தூங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பே டிவி பார்ப்பதை அல்லது கம்ப்யூட்டர் உபயோகிப்பதை நிறுத்திவிடுவது போன்று தூங்குவதற்கு முன்பு தினமும் பின்பற்றுவதற்கு ஒழுங்கான பழக்கங்களை ஏற்படுத்துவதும் சில ஆலோசனைகளாகும். (g03 5/22)

போப் நினைவுச்சின்ன விற்பனையில் வீழ்ச்சி

பல வருடங்களாக, “[போலந்தில்] மதப் பொருட்களை விற்றால் ஒருவருக்கு லாபம் நிச்சயம் என்றிருந்தது” என நியூஸ்வீக்கின் போலிஷ் பதிப்பு கூறுகிறது. சமீப காலங்களிலோ, புனித சிலைகளின் விற்பனையில் “நெருக்கடி” ஏற்பட்டிருப்பது கவனிக்கப்பட்டுள்ளது. 2002-⁠ல் போலந்திற்கு போப் விஜயம் செய்தது பெரும் விளம்பரத்தைப் பெற்றிருந்த போதிலும் பாரம்பரிய மதப் பொருட்களான செயின்களுக்கும் ஓவியங்களுக்கும் எந்த மவுசும் ஏற்படவில்லை. “பாரீஸ் சாந்தாலும் உலோகத்தாலும் செய்யப்பட்ட [போப்பின்] மார்பளவு உருவச்சிலைகள், [போப்பின் உருவப் படம் வரையப்பட்ட] பாய்கள், ஓவியங்கள், சிறு உருவச்சிலைகள் போன்றவை லட்சக்கணக்கில் மார்க்கெட்டில் குவிந்து கிடந்தன, ஆனால் வாடிக்கையாளர்கள் தெரிவு செய்து வாங்க ஆரம்பித்துவிட்டார்கள்” என்று அந்த பத்திரிகை கூறுகிறது. என்றாலும், ஒரு டிசைன் அதிக பிரபலமாகிவிட்டது. அது, ஒரு பக்கம் “புனித உருவங்கள்” மறுபக்கம் “பிளாஸ்டிக்கிற்குள் பதிக்கப்பட்ட தங்க பாசிகள்” கொண்ட பிளாஸ்டிக் கார்ட் ஆகும். இந்த “ஜெபமாலை கார்டுகளே” “லேட்டஸ்டான, மிகவும் பிரபலமான போப்” நினைவுச்சின்னங்களாகும் என்று போலிஷ் வாராந்தர பத்திரிகையான வ்பிராஸ்ட் கூறுகிறது. (g03 5/22)

“கேம்ஸ், நொறுக்குத்தீனி, இரத்தம்”

“இலவச சினிமாக்கள், கம்ப்யூட்டர் கேம்ஸ், நொறுக்குத்தீனி, கால் மசாஜ்கள்கூட நிறைந்த பெரிய, குளுகுளு அறைகள்” நோக்கி ஜப்பானிய இளைஞர்கள் படையெடுக்கிறார்கள் என IHT ஆஸாஹி ஷிம்புன் அறிக்கை செய்கிறது. “இரத்தம் சிந்த வேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடு மட்டுமே உள்ளது”; ஏனெனில் அவை, ஜப்பானிய செஞ்சிலுவை சங்கம் நடத்தும் இரத்த தான மையங்களாகும். “பார்ட்டி போன்ற சூழலில் மக்கள் இரத்த தானம் செய்கிறார்கள்” என்று அந்த செய்தித்தாள் கூறுகிறது. “இரத்த தானம் செய்த பிறகு அநேக இளைஞர்கள் அங்கேயே சுற்றிவந்து இலவச டோனட்டுகள், ஜூஸ், கம்ப்யூட்டர் கேம்ஸ் போன்றவற்றை அனுபவிக்கிறார்கள். வாரத்தில் பல முறை இலவசமாக குறி சொல்லப்படுவதும் அநேகரை கவர்ந்திழுக்கிறது.” மேக்கப் பயிற்சிகள், ஷியாட்சூ (அக்குபங்சர்), இசை நிகழ்ச்சிகள், மசாஜ்கள், பழைய பொருட்களின் விற்பனை போன்றவையும் நடைபெறுகிறது. இரத்த தானம் செய்தல் படுவேகமாக குறைந்துவருவதால் அதை தடுக்க செஞ்சிலுவை சங்கம் நாடு முழுவதிலும் உள்ள தனது மையங்களை இவ்வாறு மாற்றி வருகிறது. முன்பு “கிளர்ச்சியற்றதாகவும், பயம் ஏற்படுத்துவதாகவும்” கருதப்பட்ட மையங்கள் இப்போது “டீனேஜர்கள் மத்தியிலும் 20 வயது நிறைந்தவர்கள் மத்தியிலும் படு பாப்புலர்” ஆகி வருவதாக அந்த செய்தித்தாள் கூறுகிறது. (g03 5/22)