எமது வாசகரிடமிருந்து
எமது வாசகரிடமிருந்து
இளைஞர் கேட்கின்றனர் “இளைஞர் கேட்கின்றனர் . . . அ(ம்மா)ப்பாவுக்கு ஏன் என்னைப் பிடிக்கவில்லை?” (அக்டோபர் 8, 2002) என்ற கட்டுரைக்கு நன்றி. இப்போது எனக்கு 16 வயதாகிறது, 4 வயதிலிருந்தே நான் என் அப்பாவை பார்க்கவில்லை. இந்தக் கட்டுரை என்னுடைய உணர்ச்சிகளை அப்படியே படம் பிடித்துக் காட்டியதுபோல இருந்தது. பெற்றெடுத்த தாய் தந்தையே புறக்கணிக்கையில் ஏற்படும் வேதனை வேறெந்த வேதனையையும்விட கொடியது என்று அதில் சொல்லியிருப்பது உண்மைதான். சரியான நேரத்தில் அளித்த இந்த ஆன்மீக உணவிற்கு நன்றி.
ஜே. ஜே., ஐக்கிய மாகாணங்கள் (g03 5/08)
என்னுடைய பெற்றோர் 13 வருடம் பிரிந்திருந்த பிறகு விவாகரத்து செய்ய தீர்மானித்தார்கள். அது எனக்கு ரொம்ப வேதனையாக இருந்தது, என்னைப் பொறுத்த வரை ரொம்ப காலத்திற்கு முன்பே அந்த கஷ்டத்தை சமாளித்துவிட்டதாகவே நினைத்தேன். அப்படி இருக்கையில் இன்னமும் ஏன் கஷ்டப்படுகிறேன் என்று தான் எனக்கு புரியவில்லை. தாங்க முடியாத என்னுடைய வேதனைக்கான காரணத்தை புரிந்துகொண்டது, அதற்காக குறிப்பாய் ஜெபிக்க எனக்கு உதவுகிறது. அதோடு, என்னுடைய இந்த சுமையையும்கூட யெகோவாவின் மீது வைத்துவிட உதவியது.
எம். டி., இத்தாலி (g03 5/08)
எனக்கு ஆறு வயதாக இருந்தபோது என் அப்பா எங்கள் குடும்பத்தை நட்டாற்றில் விட்டுச் சென்றார். அப்போதிலிருந்து அவருக்கும் எனக்கும் அவ்வளவாக தொடர்பில்லை. பல வருடங்கள் குற்ற உணர்ச்சியோடு போராடினேன். அதனால் மற்றவர்களிடம் என்னுடைய உணர்ச்சிகளை விவரிக்க முடியாமல் கஷ்டப்பட்டேன். உங்கள் கட்டுரையில் வந்த அனுபவங்கள் என் இதயத்தை தொட்டன. இப்படி நான் மட்டும் தனியாக கஷ்டப்படவில்லை என்பதை புரிந்துகொள்ளவும் எனக்கு உதவின. இம்மாதிரியான கட்டுரைகள் வாயிலாக, வாசகர்களாகிய நாங்கள் அடையும் பயன்களும், அவற்றிற்கு நாங்கள் காட்டும் போற்றுதலும் கொஞ்சநஞ்சமல்ல!
ஏ. ஹெச்., இங்கிலாந்து (g03 5/08)
எனக்கு வயது 16, சமீபத்தில் என் அம்மாவை அப்பா விவாகரத்து செய்துவிட்டார். அதனால், நான், தம்பி, அக்கா அனைவரும் பெரும் துக்கத்தில் அமிழ்த்தப்பட்டோம். என்னால் இந்த கட்டுரையை மறக்கவே முடியாது. இதை நான் வாசிக்க ஆரம்பித்த அந்த நிமிஷமே கண்ணீர் காட்டாறாய் பெருக்கெடுக்க ஆரம்பித்தது. அது என் உள்ளத்தின் ஒவ்வொரு உணர்வுகளையும் அப்படியே வெட்ட வெளிச்சமாக்கியது போல இருந்தது. அதன் ஒவ்வொரு வார்த்தையும் கரிசனையோடும் அன்போடும் எழுதப்பட்டிருந்தது. நான் அந்தக் கட்டுரையை தொடர்ந்து வாசிக்க வாசிக்க அது என் முழு மனதையும் ஆக்கிரமித்தது. என் அப்பாவின் அன்பை பெற்றுக்கொள்ள உண்மையிலே எனக்கு தகுதியிருக்கிறதா என்று பல முறை யோசித்திருக்கிறேன். அதனால்தான் இந்தக் கட்டுரையிலிருந்து என்னால் இந்த அளவிற்கு ஆறுதலை பெற முடிந்தது. என்னுடைய அப்பாவுக்கு என்னிடம் அன்பில்லாவிட்டாலும் யெகோவா எப்போதும் என்னை நேசிப்பார் என்பதை தெரிந்துகொண்டதே மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது. யெகோவா திடீரென்று மனம் மாறி என்னை கைவிட்டுவிடுவாரோ என்று கவலைப்பட அவசியமே இல்லை.
ஏ. எம்., ஐக்கிய மாகாணங்கள் (g03 5/08)
மொடாக் குடியரான அப்பா, அதனால் அதிக கஷ்டங்களை அனுபவித்த அம்மா, இப்படிப்பட்ட சூழலில்தான் கவனிப்பார் யாரும் இல்லாமல் வளர்ந்தோம். இதனால் எதற்கும் லாயக்கற்றவளாக உணர்ந்தேன், சொல்லப்போனால் வாழ்வதைவிட சாவதே மேல் என்றும் நினைத்தேன். உதவிக்காக கடவுளிடம் ஜெபம் செய்தேன். இந்தக் கட்டுரை வந்தபோது எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருப்பவர்களும் பைபிள் நியமங்களைப் பின்பற்றுவதன் மூலம் மகிழ்ச்சியையும் நல்ல பலன்களையும் பெற முடியும் என்று அறிந்து ஆறுதல் அடைந்தேன். சந்தோஷ வானில் என்னாலும் பறக்க முடியும் என்பதை உணர்ந்தேன்!
ஏ. ஐ., ஜப்பான் (g03 5/08)
வனிலா “வனிலா—நீண்ட வரலாறு கண்ட நறுமணப் பொருள்” (அக்டோபர் 8, 2002) என்ற கட்டுரையை படித்து சற்று கலக்கம் அடைந்தேன். பல வருடங்களுக்கு முன்பு, மெக்சிகோவின் நச்சுத்தன்மை வாய்ந்த வனிலாவைப் பற்றி ஒரு கட்டுரையை வாசித்திருந்தேன். அதில் நச்சுத்தன்மை இருப்பது தெரியாமலே அநேகர் அதை வாங்கிவிடுகின்றனர்.
பி. டி., ஐக்கிய மாகாணங்கள் (g03 5/08)
“விழித்தெழு!” பதில்: மெக்ஸிகோவிலும் இன்னும் பிற நாடுகளிலும் தயாரிக்கப்படுகிற சில வகை வனிலாவில் டோங்க்கா பீன்ஸின் சாறு கலந்திருக்கிறது. இந்த பீன்ஸில் கூமரன் என்ற ரசாயனம் மிகுதியாக இருக்கிறது. இது நச்சுத்தன்மை வாய்ந்ததாக இருக்கலாம் என்பதால் ஐ.மா. உணவு மற்றும் மருத்துவ நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. கூமரன் இருப்பதை நாம் வெறுமனே பார்த்தோ முகர்ந்தோ கண்டுபிடிக்க முடியாது. அதனால் பெயர் பெற்ற உற்பத்தியாளர்களிடமிருந்து மட்டுமே வனிலாவை வாங்கும்படி வாடிக்கையாளருக்கு அறிவுரை கூறப்படுகிறது. அதோடு, சுத்தமான வனிலா சாறு தயாரிப்பதற்கும் அதிக செலவு பிடிப்பதால் இது உண்மையில் விலையுயர்ந்தது. ஆகவே “மலிவான விலைக்கு” கிடைப்பவற்றை வாங்கிவிடாமல் உஷாராக இருக்க வேண்டும்.