கிறிஸ்தவ ஒற்றுமை என்றால் எல்லாரும் ஒரே மாதிரி இருக்க வேண்டுமா?
பைபிளின் கருத்து
கிறிஸ்தவ ஒற்றுமை என்றால் எல்லாரும் ஒரே மாதிரி இருக்க வேண்டுமா?
இன்று மதங்களில் ஒற்றுமையை காண்பது அரிது என்றே தோன்றுகிறது. ஒரே சர்ச்சை சேர்ந்தவர்கள்கூட கோட்பாடு, நடத்தை சம்பந்தப்பட்ட விஷயங்களில் முரண்பட்ட கருத்துக்களை வைத்திருக்கலாம். “ஒரே கடவுளை நம்பும் இருவரை பார்ப்பதுகூட கடினம். இப்போதெல்லாம், ஒவ்வொரு மனிதனும் தனக்கென ஓர் இறையியலை வைத்திருப்பது போல தோன்றுகிறது” என்பது ஓர் எழுத்தாளரின் கருத்து.
இதற்கு நேர்மாறாக, “ஒரே காரியத்தைப் பேசவும், . . . ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று” கொரிந்துவிலிருந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் ஆலோசனை கொடுத்தார். (1 கொரிந்தியர் 1:10) இன்றோ, பவுலின் அறிவுரையை சிலர் குறைகூறுகிறார்கள். ‘ஒவ்வொருவரும் வித்தியாசப்பட்டவர்கள், ஆகவே எல்லா கிறிஸ்தவர்களும் ஒரே மாதிரி சிந்திக்க வேண்டும் அல்லது செயல்பட வேண்டும் என்று வற்புறுத்துவது நியாயமற்றது’ என அவர்கள் வாதாடலாம். ஆனால், எல்லாரும் ரோபாட்டுகளைப் போல கீழ்ப்படிய வேண்டும் என்றா பவுல் கூறினார்? ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சுயாதீனத்தை பைபிள் அனுமதிக்கிறதா?
ஒற்றுமை தேவை, ஒரே மாதிரி இருப்பது அல்ல
கிறிஸ்தவர்கள் ‘பகுத்தறியும் திறமையோடு’ கடவுளை சேவிக்க வேண்டும் என்று பவுல் மற்றொரு கடிதத்தில் எழுதினார். (ரோமர் 12:1, NW) ஆகவே, கொரிந்திய சபையின் அங்கத்தினர்களை சிந்திக்காமல் செயல்படும் மிஷின்களைப் போல மாற்ற அவர் நினைத்திருக்க மாட்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அப்படியென்றால், அவர்கள் “ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்க” வேண்டும் என்று ஏன் கூறினார்? கொரிந்திய சபையில் ஒரு பெரிய பிரச்சினை நிலவியதாலேயே பவுல் இந்த ஆலோசனையை கொடுத்தார். அங்கே பிரிவினைகள் ஏற்பட்டிருந்ததால் சிலர் அப்பொல்லோவை தலைவராக கருதினர்; மற்றவர்களோ பவுலை அல்லது பேதுருவை அல்லது கிறிஸ்துவை மட்டுமே ஏற்றுக்கொண்டிருந்தனர். இப்படிப்பட்ட பிரிவினைகள் சபையின் சமாதானத்தை குலைத்ததால் அவை ஆபத்தானவையாக இருந்தன.
பின்னர் எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு ஆலோசனை கொடுத்தது போலவே கொரிந்தியர்களும் “சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்[ள]” வேண்டும் என்று பவுல் விரும்பினார். எபேசியர் 4:3) ஐக்கியமற்ற தொகுதிகளாக அல்லது மதப்பிரிவுகளாக இல்லாமல் ஒற்றுமையாக இயேசு கிறிஸ்துவை பின்பற்றும்படி அவர் சகோதரர்களை உற்சாகப்படுத்தினார். இவ்வாறு அவர்கள் நோக்கத்தில் ஒன்றுபட்டிருப்பார்கள். (யோவான் 17:22) ஆகவே, பவுல் கொரிந்தியருக்கு கொடுத்த ஆலோசனையானது அவர்கள் சிந்திக்கும் விதத்தை மாற்றியது; ஒரே மாதிரி இருப்பதற்கு அல்ல மாறாக ஒற்றுமையோடு இருப்பதற்கு உதவியது.—2 கொரிந்தியர் 13:9, 11.
(கோட்பாட்டு விஷயங்களிலும்கூட ஒற்றுமை அவசியம். “ஒரே தேவனும் பிதாவும்” இருப்பதைப் போலவே ‘ஒரே விசுவாசம்’ மட்டுமே இருப்பதை கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை பின்பற்றுவோர் உணருகின்றனர். (எபேசியர் 4:1-6) ஆகவே, தம்மையும் தம்முடைய நோக்கங்களையும் பற்றி கடவுள் தம் வார்த்தையில் வெளிப்படுத்தியுள்ள சத்தியத்திற்கு இசைவாக தங்கள் நம்பிக்கை இருக்கிறதா என்று கிறிஸ்தவர்கள் நிச்சயப்படுத்திக் கொள்கிறார்கள். கடவுள் யார், அவர் நம்மிடம் எதை எதிர்பார்க்கிறார் என்பதைப் பற்றிய நம்பிக்கையில் அவர்கள் ஒன்றுபட்டிருக்கிறார்கள். கடவுளுடைய வார்த்தையிலுள்ள தெளிவான ஒழுக்க தராதரங்களுக்கு இசைவாகவும் வாழ்கிறார்கள். (1 கொரிந்தியர் 6:9-11) இவ்வாறு, கோட்பாடுகளிலும் சரி, ஒழுக்க ரீதியிலும் சரி கிறிஸ்தவர்கள் ஒற்றுமையாய் இருக்கிறார்கள்.
கருத்து வேறுபாடுகளை சமாளித்தல்
ஆனால், வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எப்படி சிந்திக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் திட்டவட்டமாக சொல்லப்பட்டிருப்பதை இது அர்த்தப்படுத்துகிறதில்லை. பெரும்பாலான விஷயங்கள் தனிப்பட்ட விருப்புவெறுப்பு சார்ந்தவை. ஓர் உதாரணத்தை கவனியுங்கள். விக்கிரக கோவிலிலிருந்து வந்திருக்கக்கூடிய மாம்சத்தை சாப்பிடுவது பற்றி கொரிந்துவிலிருந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களில் அநேகருக்கு சந்தேகங்கள் இருந்தன. அந்த மாம்சத்தை சாப்பிடுவது பொய் வணக்கத்தில் ஈடுபடுவதற்கு சமம் என்று சிலர் ஆணித்தரமாக நம்பினர்; மற்றவர்களோ அந்த மாம்சம் எங்கிருந்து வந்தது என்பது ஒரு பொருட்டே அல்ல என்று நினைத்தனர். உணர்ச்சிகளை கொதித்தெழ வைக்கும் இந்த விஷயத்தை சமாளிக்கையில், கிறிஸ்தவர்கள் இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற ஒரு சட்டத்தை பவுல் ஏற்படுத்தவில்லை. அதற்கு பதிலாக, இந்த விஷயத்தில் வித்தியாசப்பட்ட முடிவுகளை செய்யலாம் என்பதை அவர் ஒப்புக்கொண்டார். a—1 கொரிந்தியர் 8:4-13.
வேலை, உடல்நலம், பொழுதுபோக்கு அல்லது தனிப்பட்ட விருப்பம் சம்பந்தப்பட்ட மற்ற காரியங்களில் இன்று கிறிஸ்தவர்களும் வித்தியாசப்பட்ட தீர்மானங்களை செய்யலாம். இப்படிப்பட்ட வித்தியாசங்கள் நிலவுவது சிலருக்கு கலக்கத்தை ஏற்படுத்தலாம். இந்த வித்தியாசங்கள் காரணமாக சபையில் சண்டைகள் அல்லது பிரிவினைகள் ஏற்படுமோ என அவர்கள் நினைக்கலாம். என்றாலும், கட்டாயம் அவ்வாறு நிகழும் என்று சொல்ல முடியாது. உதாரணமாக, இசை அமைப்பாளர்கள் தெரிவுசெய்ய குறைந்த எண்ணிக்கையான ஸ்வரங்களே உள்ளன. இருந்தாலும், அவற்றை வைத்து இனிமையான இசையை உண்டாக்கும் சாத்தியங்களுக்கு முடிவே இல்லை. அதைப் போலவே, தெய்வீக நியமங்கள் என்ற எல்லைக்குள் கிறிஸ்தவர்கள் தெரிவுகளை செய்கிறார்கள். என்றாலும், சில தனிப்பட்ட தீர்மானங்களை செய்ய அவர்களுக்கு ஓரளவு சுயாதீனம் இருக்கிறது.
தனிநபர்களின் விருப்பங்களுக்கு மரியாதையையும் காட்டி அதேசமயம் கிறிஸ்தவ ஒற்றுமையையும் எவ்வாறு காத்துக்கொள்ள முடியும்? அதற்கு அன்பே அடிப்படையாகும். கடவுள் மீதுள்ள அன்பு, அவருடைய சட்டங்களுக்கு மனதார கீழ்ப்படிய நம்மை தூண்டுகிறது. (1 யோவான் 5:3) அதோடு, தனிப்பட்ட விவகாரங்களில் மனசாட்சியின் அடிப்படையில் தீர்மானம் செய்ய மற்றவர்களுக்கு இருக்கும் உரிமையை மதிக்க சகமனிதர்கள் மீதுள்ள அன்பு நம்மை தூண்டுகிறது. (ரோமர் 14:3, 4; கலாத்தியர் 5:13) இந்த விஷயத்தில் பவுல் மிகச் சிறந்த முன்மாதிரி வைத்தார்; கோட்பாடு சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தில் முதல் நூற்றாண்டிலிருந்த ஆளும் குழுவின் அதிகாரத்திற்கு அவர் கீழ்ப்படிந்தார். (மத்தேயு 24:45-47; அப்போஸ்தலர் 15:1, 2) அதேசமயம், தனிப்பட்ட தீர்மானத்திற்கு விடப்படும் விஷயங்களைப் பொருத்ததில் உடன் கிறிஸ்தவர்களின் மனசாட்சியை மதிக்கும்படியும் அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.—1 கொரிந்தியர் 10:25-33.
எனவே, பைபிள் நியமங்களுக்கு முரண்படாத, மனசாட்சியின் அடிப்படையில் செய்யப்படுகிற தீர்மானங்களுக்காக ஒருவரையும் குற்றப்படுத்தக்கூடாது என்பது தெளிவாக இருக்கிறது. (யாக்கோபு 4:12) மறுபட்சத்தில், மற்றவர்களின் மனசாட்சி புண்பட்டாலும் பரவாயில்லை சபையின் ஒற்றுமை பாதிக்கப்பட்டாலும் கவலையில்லை என்று சொல்லி உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் தங்கள் உரிமையை வற்புறுத்தமாட்டார்கள். அதேசமயம், கடவுளுடைய வார்த்தை தெளிவாக கண்டிக்கிற ஒன்றை செய்வதற்கு தங்களுக்கு சுதந்திரம் இருப்பதாகவும் அவர்கள் கூறக்கூடாது. (ரோமர் 15:1; 2 பேதுரு 2:1, 19) நம்முடைய மனசாட்சியை கடவுளுடைய எண்ணங்களுக்கு இசைவாக கொண்டுவர கடவுள் மீதுள்ள அன்பே நம்மை தூண்ட வேண்டும். அப்படி செய்தால், உடன் விசுவாசிகளோடு ஒற்றுமையாகவும் இருக்க முடியும்.—எபிரெயர் 5:14. (g03 5/08)
[அடிக்குறிப்பு]
a உதாரணமாக, கிறிஸ்தவர்களாக மாறுவதற்கு முன் விக்கிரகங்களை வணங்கிய சிலர், மாம்சத்தை சாப்பிடுவதற்கும் வணக்க செயலில் ஈடுபடுவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று நினைத்திருக்கலாம். ஆவிக்குரிய விதத்தில் பலவீனமான கிறிஸ்தவர்கள் இதைப் பார்த்து தவறான கருத்தைப் பெற்று, அதன் விளைவாக இடறி விழ வாய்ப்பு இருந்ததும் மற்றொரு முக்கிய காரணமாகும்.