Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சர்க்கரை வியாதியுள்ளவர்களுக்கு பைபிள் தரும் உதவி

சர்க்கரை வியாதியுள்ளவர்களுக்கு பைபிள் தரும் உதவி

சர்க்கரை வியாதியுள்ளவர்களுக்கு பைபிள் தரும் உதவி

சுயகட்டுப்பாடும் நம்பிக்கையான மனநிலையும் சர்க்கரை வியாதியுள்ளவர்களின் ஆரோக்கியத்திற்கும் நலனுக்கும் மிக முக்கியமானவை. ஆனால் அந்தப் பண்புகளை வளர்க்க இடைவிடாத ஆதரவு தேவை. ஆகவே சர்க்கரை வியாதியுள்ளவரின் குடும்பத்தினரும் நண்பர்களும், வேண்டாத உணவைக் காட்டி அவரது ஆசையைக் கிளறக் கூடாது; ‘சும்மா சாப்பிடுங்க, ஒரு தடவை சாப்பிடுவதால் ஒன்றும் ஆகிவிடாது’ என்றெல்லாம் சொல்லக்கூடாது. “என் மனைவி ரொம்ப ஒத்துழைப்பு கொடுப்பாள்” என்கிறார் ஹாரி; இவருக்கு இதய நோயும் வகை-2 சர்க்கரை வியாதியும் இருக்கிறது. “நான் சாப்பிடக் கூடாத ஐட்டங்களை அவள் வீட்டில் வைப்பதே இல்லை. ஆனால் சிலர் நிலைமையை கொஞ்சமும் புரிந்துகொள்வதே இல்லை. சாப்பாட்டை கண்ணில் கண்ட பிறகு சாப்பிடாமல் இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை.”

சர்க்கரை வியாதியுள்ள ஒருவரை நீங்கள் அடிக்கடி பார்க்கும் நிலையில் இருந்தால் பைபிளில் காணப்படும் இந்த இரண்டு அருமையான நியமங்களை மனதில் வையுங்கள்: “ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்”; “அன்பு . . . தன்னலம் நாடாது.”​—1 கொரிந்தியர் 10:24; 13:4, 5, பொது மொழிபெயர்ப்பு.

சர்க்கரை வியாதி இருக்கிறதோ இல்லையோ, ஆரோக்கியமாக இருக்க ஆசைப்படுபவர்கள் உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. இந்த விஷயத்தில் பைபிள் உதவிக்கு வருகிறது; எப்படியெனில், சுயகட்டுப்பாட்டை ஒவ்வொருவரும் வளர்ப்பதன் அவசியத்தை அது சுட்டிக்காட்டுகிறது. உங்கள் வாழ்க்கையில் இந்தப் பண்பை வளர்க்க நீங்கள் தீர்மானமாக இருக்கிறீர்களா? (கலாத்தியர் 5:22, 23) பைபிளிலுள்ள உதாரணங்களும் உதவியாக இருக்கலாம்; கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுலின் உதாரணம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. “அவருக்கு மாம்சத்தில் ஒரு முள் நிரந்தரமாகவே இருந்தது, ஆனால் கடவுளை உண்மையோடு முழுமூச்சுடன் சேவித்தார். அவரால் முடிந்தது என்றால் என்னாலேயும் முடியும்!” என்கிறார் சர்க்கரை வியாதியுள்ள ஒருவர்.

ஆம், தன்னால் சரிசெய்ய முடியாத ஒன்றை சகித்து வாழ பவுல் பழகிக் கொண்டார், மிஷனரியாக வெற்றி மேல் வெற்றி கண்டு சந்தோஷம் அடைந்தார். (2 கொரிந்தியர் 12:7-9) 18 வயது டஸ்டின் பிறவியிலேயே பார்வை இழந்தவன். 12 வயது முதல் சர்க்கரை வியாதியால் கஷ்டப்படும் அவன் இப்படி எழுதுகிறான்: “இந்த உலகத்தில் யாருக்கும் குறைவற்ற வாழ்க்கை அமைவதில்லை என்பது எனக்குத் தெரியும். கடவுளுடைய புதிய உலகில் சர்க்கரை வியாதியில்லாமல் வாழப்போகும் காலத்திற்காக ஆசையோடு காத்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை இந்த வியாதியெல்லாம் கொஞ்ச காலத்திற்குத்தான். இது சளி காய்ச்சலைவிட கூட கொஞ்ச நாள் நம்மை பாடுபடுத்தலாம் என்றாலும், எப்படியும் ஒருநாள் இல்லாமல் போகும்.”

பைபிள் அளிக்கும் நம்பிக்கையை மனதில் வைத்தே டஸ்டின் அப்படிச் சொன்னான்; கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ் பூமி பரதீஸாக மாறும்போது பரிபூரண ஆரோக்கியம் கிடைக்கும் என்பதே அந்த நம்பிக்கை. (வெளிப்படுத்துதல் 21:3, 4) கடவுளுடைய அந்த ஆட்சியில் “வாழ்பவர் எவரும் ‘நான் நோயாளி’ என்று சொல்ல மாட்டார்” என பைபிள் வாக்குறுதி அளிக்கிறது. (ஏசாயா 33:24, பொ.மொ.; மத்தேயு 6:9, 10) பைபிள் தரும் இந்த வாக்குறுதியைப் பற்றி நீங்கள் இன்னுமதிகம் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்கள் ஏரியாவில் வசிக்கும் யெகோவாவின் சாட்சிகளோடு தொடர்புகொள்ளுங்கள், அல்லது 5-⁠ம் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பொருத்தமான விலாசத்தை பயன்படுத்தி இப்பத்திரிகையின் பிரசுரிப்பாளர்களுக்கு எழுதுங்கள். (g03 5/08)

[பக்கம் 12-ன் படம்]

சுயகட்டுப்பாடும் நம்பிக்கையான மனநிலையும் முக்கியம்