Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சர்க்கரை வியாதி “மௌனக் கொலையாளி”

சர்க்கரை வியாதி “மௌனக் கொலையாளி”

சர்க்கரை—வியாதி “மௌனக் கொலையாளி”

கென் என்பவருக்கு 21 வயது இருக்கும்போது ரொம்ப தாகம் எடுக்க ஆரம்பித்தது; எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்கவில்லை. அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருந்தது; கிட்டத்தட்ட 20 நிமிடத்திற்கு ஒரு முறை சிறுநீர் கழிக்கும் அளவுக்கு நிலைமை மோசமானது. பிறகு கென்னின் கை கால்கள் கனக்க ஆரம்பித்தன. எப்போது பார்த்தாலும் சோர்வாக இருந்தார், அவரது பார்வையும் மங்க ஆரம்பித்தது.

கென்னிற்கு ஃப்ளூ காய்ச்சல் வந்தபோது ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. காய்ச்சலுக்காக டாக்டரிடம் போனபோது அவருக்கு வகை-1 சர்க்கரை வியாதி இருப்பது தெரிய வந்தது. இந்த உயிர்வேதியியல் கோளாறினால், சில ஊட்டச்சத்துகளை, அதுவும் குறிப்பாக இரத்தத்திலுள்ள சர்க்கரையாகிய க்ளூகோஸை உடல் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போகிறது. கென் ஆஸ்பத்திரியில் ஆறு வாரங்கள் தங்கிய பிறகுதான் அவரது இரத்தத்தின் சர்க்கரை அளவு சகஜ நிலைக்குத் திரும்பியது.

அது நடந்து 50 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது, இப்போதெல்லாம் சிகிச்சை முறைகள் பெருமளவு முன்னேறியிருக்கின்றன. ஆனாலும் சர்க்கரை வியாதி அவரை விட்ட பாடில்லை. இப்படித்தான் இன்னும் ஏராளமானோர் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள். உலகெங்கும் 14 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு சர்க்கரை வியாதி இருப்பதாக கணக்கிடப்படுகிறது; அந்த எண்ணிக்கை 2025-ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாகலாம் என்று உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. ஆகவே சர்க்கரை வியாதியைக் குறித்து நிபுணர்கள் கவலைப்படுவது ஏன் என்று புரிந்துகொள்ள முடிகிறது. “இந்த மாபெரும் எண்ணிக்கை, ஒரு கொள்ளை நோய் பரவ ஆரம்பித்துவிட்டதற்கு அறிகுறியாக இருக்கலாம்” என சொல்கிறார் டாக்டர் ராபன் எஸ். கோலன்ட்; இவர் ஐக்கிய மாகாணங்களிலுள்ள சர்க்கரை வியாதி சிகிச்சை மையம் ஒன்றின் துணை இயக்குநர்.

உலகெங்கிலுமிருந்து வந்திருக்கும் இந்த சுருக்கமான அறிக்கைகளை கவனியுங்கள்.

ஆஸ்திரேலியா: “21-ஆம் நூற்றாண்டின் மிகக் கொடிய உடல்நலப் பிரச்சினை சர்க்கரை வியாதிதான்” என ஆஸ்திரேலியாவின் சர்வதேச நீரிழிவு நோய் நிறுவனம் சொல்கிறது.

இந்தியா: குறைந்தபட்சம் மூன்று கோடி பேருக்கு சர்க்கரை வியாதி உண்டு. “கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு, 40 வயதை எட்டாதவர்களை சர்க்கரை வியாதி தீண்டியதே இல்லை. இன்றைக்கோ 40 வயதை எட்டாத இருவரில் ஒருவருக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது” என்கிறார் ஒரு டாக்டர்.

சிங்கப்பூர்: 30-⁠க்கும் 69-⁠க்கும் இடைப்பட்ட வயதினரில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினருக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது. நிறைய பிள்ளைகளுக்கும், ஏன் 10 வயதுகூட ஆகாத சிறுபிள்ளைகளுக்கும்கூட இந்த வியாதி இருக்கிறது.

ஐக்கிய மாகாணங்கள்: ஏறத்தாழ 1.6 கோடி மக்கள் சர்க்கரை வியாதியால் அவதிப்படுகிறார்கள். ஒவ்வொரு வருடமும் புதிதாக சுமார் 8,00,000 பேர் இந்த வியாதியால் பீடிக்கப்படுவது கண்டறியப்படுகிறது. இன்னும் லட்சக்கணக்கானோர் தங்களுக்கு இந்த வியாதி இருப்பதையே உணராமல் இருக்கிறார்கள்.

ஒருவருக்கு சர்க்கரை வியாதி இருப்பது வெகு காலம் கழித்தே தெரிய வரலாம்; இதனால் சிகிச்சை அளிப்பது இன்னும் கடினமாகிறது. “ஆரம்பத்தில் அறிகுறிகள் லேசாகவே இருக்கும்; எனவே இந்த வியாதி வந்திருப்பதை பெரும்பாலும் கண்டுபிடிக்க முடியாமல் போய்விடுகிறது” என ஏஷியாவீக் பத்திரிகை குறிப்பிடுகிறது. ஆகவேதான் சர்க்கரை வியாதி ஒரு மௌனக் கொலையாளி என அழைக்கப்படுகிறது.

இந்த வியாதி பெருவாரியாகவும் தீவிரமாகவும் தாக்குவதால் அடுத்த கட்டுரைகள் பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கும்:

சர்க்கரை வியாதி வரக் காரணம் என்ன?

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அதை எப்படி சமாளிக்கலாம்? (g03 5/08)

[பக்கம் 4-ன் பெட்டி/படம்]

பெயர் பிறந்த கதை

சர்க்கரை வியாதியின் மருத்துவ பெயர் “டையபெட்டிஸ் மெலட்டஸ்” (diabetes mellitus) ஆகும். இவ்வார்த்தை, “வடிகுழாயில் செலுத்துதல்” என்ற அர்த்தம் தரும் கிரேக்க வார்த்தையிலிருந்தும் “தேன் போன்ற இனிப்பு” என்ற அர்த்தம் தரும் லத்தீன் வார்த்தையிலிருந்தும் பிறந்தது. இவ்வார்த்தைகள் சர்க்கரை வியாதியை அப்படியே விவரிக்கின்றன. ஏனென்றால் அவ்வியாதி உள்ளவரின் உடலில், ஒரு வடிகுழாய் வழியாக நீர் உள்ளே சென்று அதே வேகத்தில் வெளியேறுவதைப் போல் இருக்கிறது; அதாவது வாயிலிருந்து சிறுநீரகத்திற்கு சென்று அங்கிருந்து உடனடியாக உடலிலிருந்து வெளியேறுவதைப் போல் இருக்கிறது. அதோடு சிறுநீரில் சர்க்கரை இருப்பதால் அது இனிக்கிறது. இதனால்தான், நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு முன்னான காலத்தில், சர்க்கரை வியாதி இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள நோயாளியின் சிறுநீரை எறும்புப் புற்றுக்குப் பக்கத்தில் ஊற்றுவது ஒரு சோதனைமுறையாக இருந்தது. எறும்புகள் அதை மொய்க்க ஆரம்பித்தபோது சர்க்கரை வியாதி இருப்பது ஊர்ஜிதமானது.