Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தத்துப் பிள்ளையாக இருப்பதன் சவால்களை சமாளிப்பது எப்படி?

தத்துப் பிள்ளையாக இருப்பதன் சவால்களை சமாளிப்பது எப்படி?

இளைஞர் கேட்கின்றனர் . . .

தத்துப் பிள்ளையாக இருப்பதன் சவால்களை சமாளிப்பது எப்படி?

“என்னை பெற்றவர்களைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது; அதை நினைத்தாலே துக்கம் தொண்டையை அடைக்குது.” ​⁠பார்பரா, 16 வயது.

“எங்கே பிறந்தேன், என் அம்மா யார், அப்பா யார் என எதுவுமே எனக்கு தெரியாது; சில சமயங்களில் ராத்திரி நேரத்தில் அதைப் பற்றி யோசிப்பேன்.”​⁠மாட், 9 வயது.

“என்னை தத்தெடுத்தவர்களோடு சண்டை போடும்போது, என்னுடைய ‘உண்மையான’ அம்மா அப்பா மட்டும் இருந்தால் என்னை நல்லா புரிந்துகொள்வார்கள் என நினைப்பேன். அப்படி நினைப்பதே ரொம்ப தப்புதான், அதைப் பற்றி அவர்களிடம் சொன்னதே கிடையாது.” ​⁠கீன்டானா, 16 வயது.

தத்துப் பிள்ளையாக வாழ்வது நிச்சயமாகவே சவால் நிறைந்ததாக இருக்கலாம். மேலே விவரிக்கப்பட்டதைப் போன்ற உணர்ச்சிகளோடு அநேக இளைஞர் போராடுகிறார்கள். தங்களை பெற்றெடுத்தவர்கள் யார் என கண்டுபிடிக்க வேண்டுமா அல்லது அவர்களோடு இருந்தால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்குமா என அநேகர் நினைக்கிறார்கள். சமாளிக்க வேண்டிய சவால்கள் இவை மட்டுமே அல்ல.

தத்தெடுக்கப்பட்ட இளைஞரில் சிலர் தங்களைப் பற்றி சில தவறான கருத்துக்களை வளர்த்துக்கொள்வதை இந்தத் தொடரில் முன்னர் வெளிவந்த கட்டுரை கலந்தாலோசித்தது. a தத்துப் பிள்ளையாக வாழ்க்கையில் சந்தோஷத்தைக் காண வேண்டுமெனில், சோர்வளிக்கும் அப்படிப்பட்ட எதிர்மறையான எண்ணங்களை ஒதுக்கித்தள்ளுவது அவசியம். என்றாலும், எழக்கூடிய மற்ற சவால்களில் சில யாவை? அவற்றை சமாளிக்க நடைமுறையில் நீங்கள் என்ன செய்யலாம்?

இவர்கள்தான் ‘உண்மையான’ பெற்றோரா?

பெற்றெடுத்த தாயைப் பற்றி யோசிக்கும் பழக்கம் எப்போதுமே தனக்கிருந்ததாக பதின்மூன்று வயது ஜேக் கூறுகிறான். இதனால் தத்தெடுத்த பெற்றோரோடு சில பிரச்சினைகள் எழுந்தன. “எனக்கு கோபம் வந்தபோதெல்லாம், ‘நீங்க ஒன்னும் என்னை பெத்த அம்மா இல்ல, என்னை இப்படி தண்டிக்க உங்களுக்கு எந்த உரிமையுமில்ல’ என்று சொல்வேன்” என அவன் கூறுகிறான்.

‘என்னுடைய “உண்மையான” தாய் யார்?’ என்ற முக்கியமான கேள்வியை ஜேக் உணர்ந்து அதற்கு ஏற்றவாறு சமாளிக்க வேண்டியிருந்தது. நீங்கள் ஒரு தத்துப் பிள்ளை என்றால் இதே கேள்வி உங்கள் மனதையும் குடையலாம். முக்கியமாக, தத்தெடுத்தவர்களைவிட பெற்றெடுத்தவர்கள் உங்களை நன்கு வளர்ப்பார்களோ என நீங்கள் நினைத்தால் இது உண்மையாக இருக்கலாம். ஆனால், குழந்தையை பெற்றெடுப்பது மட்டுமே ஒருவரை “உண்மையான” பெற்றோராக ஆக்கிவிடுமா?

இல்லை என்று ஜேக்கை தத்தெடுத்த தாய் நினைக்கிறார். ஜேக் இவ்வாறு கூறுகிறான்: “என் அம்மா என்னிடம், ‘ஆமா, நான்தான் உன்னோட உண்மையான அம்மா. உன்னை பெத்தது வேற அம்மான்னாலும் இப்போ நான்தான் உன்னோட உண்மையான அம்மா’ என்று சொல்வார்.” ஒரு குழந்தையை தங்கள் வீட்டில் வளர்க்க ஒப்புக்கொண்டு, அதற்கு உணவு, இருப்பிடம் போன்ற தேவைகளை அளிக்க முன்வருபவர்களே ‘உண்மையான’ பெற்றோராகிறார்கள். (1 தீமோத்தேயு 5:8) நீங்கள் வசிக்கும் நாட்டிலுள்ள சட்ட அதிகாரிகளும் அவ்வாறே நினைக்கலாம். கடவுள் என்ன நினைக்கிறார்?

இயேசு கிறிஸ்து தத்தெடுக்கப்பட்டதே சரித்திரத்தில் அதிக சிறப்பு வாய்ந்த தத்தெடுப்பாக கருதப்படலாம்; அதைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள். இயேசு, தச்சனாகிய யோசேப்புக்கு பிறந்த மகனல்ல, என்றாலும் அவரை தனது சொந்த மகனாக யோசேப்பு ஏற்றுக்கொண்டார். (மத்தேயு 1:24, 25) இயேசு வளர்ந்து வருகையில் யோசேப்பின் அதிகாரத்தை எதிர்த்தாரா? இல்லை; மாறாக, தத்தெடுத்த தகப்பனுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்பதே கடவுளின் சித்தம் என்பதை இயேசு புரிந்துகொண்டார். இஸ்ரவேலிலிருந்த பிள்ளைகளுக்கு யெகோவா கொடுத்திருந்த சட்டத்தை அவர் நன்கு அறிந்திருந்தார். அந்த சட்டம் என்ன?

உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணு

“உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக” என வேதாகமம் இளைஞரிடம் கூறுகிறது. (உபாகமம் 5:16) “கனம்” என்ற வார்த்தை, மரியாதை, மதிப்பு, மற்றவரின் உணர்ச்சிகளை புரிந்து நடப்பது போன்றவற்றை சுட்டிக்காட்ட பைபிளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. உங்களை தத்தெடுத்தவர்களை நீங்களும் அவ்வாறே கனப்படுத்தலாம்; கனிவாக நடந்துகொள்வது, அவர்களுடைய ஸ்தானத்திற்கு மரியாதை கொடுப்பது, அவர்களுடைய கருத்துக்களை கேட்பது, உங்களிடம் கேட்கப்படும் நியாயமான எந்த காரியத்தையும் செய்ய தயாராய் இருப்பது போன்றவை அவர்களைக் கனப்படுத்த உதவும் சில வழிகளாகும்.

உங்களை தத்தெடுத்தவர்கள் நியாயமற்ற விதமாய் நடந்துகொள்வதாக தோன்றும் சமயங்களில் என்ன செய்யலாம்? அவ்வாறு நடக்க வாய்ப்பிருக்கிறது. பெற்றெடுத்தவர்களாக இருந்தாலும் சரி தத்தெடுத்தவர்களாக இருந்தாலும் சரி பெற்றோர் அனைவரும் அபூரணரே. பெற்றோரின் குறைபாடுகள் காரணமாக அவர்களுக்கு கீழ்ப்படிவது பெரும் சவாலாக இருக்கலாம். அப்படிப்பட்ட சமயங்களில் நீங்கள் தத்துப் பிள்ளை என்பதைப் பற்றியே யோசித்து, அதனால் அவர்களுக்கு கீழ்ப்படியும் அவசியம் குறைந்துவிட்டதாக நினைப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால், கீழ்ப்படியும் அவசியம் உண்மையில் குறைந்துவிடுகிறதா என்ன?

இயேசுவின் சூழ்நிலையைப் பற்றி சிந்திப்பது உங்களுக்கு உதவலாம். அவர் பரிபூரணர் என்பதை நினைவில் வையுங்கள். (எபிரெயர் 4:15; 1 பேதுரு 2:22) ஆனால், அவரை தத்தெடுத்த தகப்பனோ பெற்றெடுத்த தாயோ பரிபூரணர் அல்ல. ஆகவே, சில சமயங்களில் தம்முடைய பெற்றோர் தவறு செய்ததை இயேசு பார்த்திருக்கலாம். இருந்தாலும், யோசேப்பின் அபூரண தலைமை ஸ்தானத்தையோ தாயாகிய மரியாளின் குறைபாடு நிறைந்த ஆலோசனையையோ அவர் எதிர்த்தாரா? இல்லை. இயேசு வளர்ந்து வருகையில் தம் பெற்றோருக்கு “கீழ்ப்படிந்திருந்தார்” என்று பைபிள் கூறுகிறது.​—லூக்கா 2:51.

உங்களுக்கும் உங்களை தத்தெடுத்த பெற்றோருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தலைதூக்குகையில் தவறு அவர்கள் மேல்தான் என நீங்கள் உறுதியாக நம்பலாம். என்றாலும், நீங்களும் அபூரணர் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். எனவே, தவறு உங்கள்மீது இருக்க எப்போதும் வாய்ப்பு இருக்கிறது. தவறு யாரிடம் இருந்தாலும் சரி, இயேசுவின் முன்மாதிரியை பின்பற்றுவதே மிகச் சிறந்த வழியல்லவா? (1 பேதுரு 2:21) அவ்வாறு செய்வது கீழ்ப்படிய உங்களுக்கு உதவும். ஆனால், உங்கள் பெற்றோருக்கு கீழ்ப்படிய அதைவிட முக்கிய காரணம் ஒன்றுள்ளது.

“பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது” என பைபிள் கூறுகிறது. (கொலோசெயர் 3:20) ஆம், நீங்கள் கீழ்ப்படிந்தால் உங்கள் பரலோக தகப்பன் சந்தோஷப்படுகிறார். (நீதிமொழிகள் 27:11) நீங்களும் சந்தோஷமாயிருக்க வேண்டுமென அவர் ஆசைப்படுவதால் நீங்கள் கீழ்ப்படிதலைக் காட்ட கற்றுக்கொள்ளும்படி அவர் விரும்புகிறார். கீழ்ப்படியும்படி அவருடைய வார்த்தை இளைஞர்களை உற்சாகப்படுத்துகிறது; அதன் விளைவாக, ‘உங்களுக்கு நன்மை உண்டாயிருக்கும், பூமியிலே உங்கள் வாழ்நாள் நீடித்திருக்கும்’ என்றும் கூறுகிறது.​—எபேசியர் 6:2.

தத்துப் பெற்றோரோடுள்ள பந்தத்தைப் பலப்படுத்துங்கள்

தத்துப் பெற்றோரோடு நல்லுறவை வைத்துக்கொள்ள அவர்களை கனம் பண்ணுவதும் அவர்களுக்கு கீழ்ப்படிவதும் மட்டுமே போதாது. கனிவும், அன்பும் நிறைந்த குடும்ப சூழலையே நீங்கள் விரும்புகிறீர்கள் அல்லவா? அப்படிப்பட்ட சூழலை உருவாக்க வேண்டியது உங்களை தத்தெடுத்தவர்களின் பொறுப்பே. ஆனால் நீங்களும் அதற்குப் பங்களிக்கலாம். எப்படி?

முதலாவதாக, உங்கள் பெற்றோரோடு அதிக நெருக்கமாகும் வழிகளைக் கண்டுபிடியுங்கள். அவர்களுடைய பின்னணி, வாழ்க்கை, விருப்புவெறுப்புகள் போன்றவற்றைப் பற்றி அவர்களிடம் கேளுங்கள். உங்கள் மனதை நெருடும் பிரச்சினை பற்றி அவர்களிடம் ஆலோசனை கேளுங்கள்; அவர்கள் சாவகாசமாகவும் கேட்கும் மனநிலையிலும் இருக்கும்போது அதைப் பற்றி பேசுங்கள். (நீதிமொழிகள் 20:5) இரண்டாவதாக, வீட்டு காரியங்கள் நன்கு நடக்க உதவும் வழிகளைக் கண்டுபிடியுங்கள். உதாரணத்திற்கு, வீட்டு வேலைகளை செய்ய சொல்லும் வரை காத்திருக்காதீர்கள்.

உங்களை பெற்றவர்களைப் பற்றி என்ன சொல்லலாம்? நீங்கள் அவர்களையோ அவர்கள் உங்களையோ தேடிக் கண்டுபிடிக்க தீர்மானித்தால், தத்துப் பெற்றோரோடு இருக்கும் உங்கள் உறவை அது கட்டாயம் பாதிக்குமா? முன்பெல்லாம், தத்துக் கொடுத்த பிள்ளையை கண்டுபிடிக்க உதவும் தகவலை பெற்றவர்களுக்கோ பெற்றெடுத்தவர்களைக் கண்டுபிடிக்க உதவும் தகவலை பிள்ளைகளுக்கோ தெரிவிக்க தத்துக் கொடுக்கும் நிறுவனங்கள் பெரும்பாலும் மறுத்தன. இன்றோ சில நாடுகளின் சட்டங்கள் ரொம்பவே தளர்த்தப்பட்டிருப்பதால், அநேக தத்துப் பிள்ளைகள் தங்களை பெற்றெடுத்த தாய், தகப்பன்மாரை நேருக்கு நேர் சந்தித்திருக்கின்றனர்; ஆனால் அவர்களைப் பற்றிய ஞாபகமே இருப்பது கிடையாது. என்றாலும், நீங்கள் வசிக்கும் பகுதியில் தத்துக் கொடுப்பது சம்பந்தப்பட்ட சட்டங்கள் வித்தியாசமாக இருக்கலாம்.

எப்படியிருந்தாலும், பெற்றவர்களை தேடுவதா வேண்டாமா என்பது உங்களுடைய சொந்த தீர்மானம்; அது கடினமானதாகவும் இருக்கலாம். தத்துப் பிள்ளைகளான இளைஞர் மனதில் அதைப் பற்றி பல்வேறு வித்தியாசப்பட்ட உணர்ச்சிகள் அலைமோதுகின்றன. தங்களை பெற்றெடுத்தவர்களை கண்டுபிடிக்க சிலர் தவியாய் தவிக்கிறார்கள்; மற்றவர்களோ அவர்களை தேடவே கூடாது என்று உறுதியாய் இருக்கிறார்கள். என்றாலும், அநேக இளைஞர் தங்களை தத்தெடுத்த பெற்றோரோடு உள்ள நல்லுறவுக்கு பங்கம் ஏற்படாமலே தங்களை பெற்றவர்களை சந்தித்திருக்கிறார்கள் என்பதால் நீங்கள் நம்பிக்கையிழக்க வேண்டாம்.

உங்கள் தத்துப் பெற்றோரிடமும் கிறிஸ்தவ சபையிலுள்ள முதிர்ச்சி வாய்ந்த நண்பர்களிடமும் ஆலோசனை கேளுங்கள். (நீதிமொழிகள் 15:22) உங்களுக்கு இருக்கும் வாய்ப்புகளை நன்கு அலசிப் பாருங்கள்; எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்பு ஆழ்ந்து சிந்திக்க நேரமெடுத்துக் கொள்ளுங்கள். நீதிமொழிகள் 14:15 சொல்கிறபடி, “விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.”

உங்களை பெற்றவர்களோடு தொடர்பு வைத்துக்கொள்ள நீங்கள் தீர்மானித்தால், உங்களை தத்தெடுத்தவர்களிடமுள்ள அன்பும் மரியாதையும் கொஞ்சமும் குறையவில்லை என்பதை அவர்களுக்கு உறுதிப்படுத்துங்கள். இவ்வாறு, உங்களை பெற்றெடுத்து பல வருடங்களுக்கு முன்பே தத்துக் கொடுத்தவர்களை கொஞ்சம் கொஞ்சமாக அறிய வருகையில் உங்களை வளர்த்து, ஆளாக்கிய பெற்றோரோடு உள்ள நல்லுறவையும் இழக்காமல் காத்துக்கொள்வீர்கள்.

உங்கள் பரலோக தகப்பனோடுள்ள உறவை பலப்படுத்துங்கள்

புறக்கணிக்கப்படுவோமோ என்ற பயம், தத்துக்கொடுக்கப்பட்ட அநேக இளைஞரை வாட்டி வதைக்கிறது. பிறந்த குடும்பத்தை ஒரு சமயத்தில் இழந்ததைப் போலவே தத்தெடுத்த குடும்பத்தையும் இழந்துவிடுவோமோ என அவர்கள் கவலைப்படுகிறார்கள். அப்படி பயப்படுவது புரிந்துகொள்ளத்தக்கதே. என்றாலும், “அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்” என்ற ஞானமான வார்த்தைகளை நினைவில் வையுங்கள். (1 யோவான் 4:18) அன்பானவர்களை இழந்துவிடுவோமோ என்ற ஆரோக்கியமற்ற பயம் உங்களை கட்டுப்படுத்த அனுமதிக்காதீர்கள். மாறாக, உங்கள் வீட்டிலுள்ள எல்லாரிடமும் மற்றவர்களிடமும் அன்பை வளர்த்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் பரலோக தகப்பனாகிய யெகோவா தேவன் மேலுள்ள அன்பை பலப்படுத்துங்கள். அவர் முற்றிலும் நம்பகமானவர் என்பதால் உண்மையுள்ள தமது பிள்ளைகளை ஒருபோதும் கைவிடமாட்டார். உங்கள் பயங்களை அவரால் நீக்க முடியும்.​—பிலிப்பியர் 4:6, 7.

கடவுளிடம் நெருங்கி வரவும் சந்தோஷமான, பயனுள்ள வாழ்க்கை வாழவும் பைபிளை வாசித்தது தனக்கு பெரிதும் உதவியதாக சிறு வயதிலேயே தத்து கொடுக்கப்பட்ட கட்ரீனா கூறுகிறார். யெகோவாவுடன் நெருக்கமான உறவு “மிகவும் முக்கியம், ஏனெனில் நாம் எப்படி உணருகிறோம் என்பதை நமது பரலோக தகப்பன் நன்கு அறிவார்” என்று கூறுகிறார். கட்ரீனாவுக்கு மிகவும் பிடித்த வசனம் சங்கீதம் 27:10. அது சொல்வதாவது: “என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.” (g03 5/22)

[அடிக்குறிப்பு]

a மே 8, 2003, தேதியிட்ட விழித்தெழு! இதழில், “நான் ஏன் தத்தெடுக்கப்பட்டேன்?” என்ற கட்டுரையைக் காண்க.

[பக்கம் 16-ன் படம்]

உங்கள் தத்துப் பெற்றோரோடு அதிக நெருக்கமாகும் வழிகளை கண்டுபிடியுங்கள்