புழுக்களின் வியத்தகு உலகம்
புழுக்களின் வியத்தகு உலகம்
ஆஸ்திரேலியாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
அவை புனிதமானவை என எகிப்தின் ராணியான கிளியோபாட்ரா அறிவித்தார். அரிஸ்டாட்டிலோ அவற்றை பூமியின் குடல்கள் என்று அழைத்தார். உலக சரித்திரத்தில் அவை முக்கிய பங்கு வகித்ததாக சார்ல்ஸ் டார்வின் கருதினார். இப்பேர்ப்பட்ட புகழ்பெற்ற மனிதர்கள் எந்த உயிரினத்தை இந்தளவுக்குப் புகழ்ந்தார்கள்? எளிய மண்புழுவையே.
நாம் பார்க்கப் போகிற வண்ணம் புழுக்கள் நம் பாராட்டுக்குத் தகுதியானவையே. அவை பார்ப்பதற்கு குழகுழவென்று இருப்பதும், வளைந்து, நெளிந்து செல்வதும் உண்மையே. ஆனால், அவற்றை இன்னும் கொஞ்சம் நன்றாக அறிந்துகொண்டால் நமக்கு வெறுப்பூட்டுகிற இந்தத் தன்மைகள்கூட நம்மில் வியப்பை ஏற்படுத்தலாம். நீங்கள் குனிந்து கொஞ்சம் மண்ணை தோண்டினால் அல்லது மக்கிய இலைகளை லேசாக கிளறினால் போதும் புழுக்களின் வியத்தகு உலகிற்குள் நுழைந்துவிடலாம்.
எளிய மூளை, அபார திறமைகள்
ஒரு மண்புழுவை கொஞ்சம் உற்றுப் பாருங்கள். பணியாரங்களை நெருக்கமாக அடுக்கி வைத்தாற் போல அதன் உடல் முழுவதும் வளையம் போன்ற பகுதிகள் இருப்பது தெரிகிறதா? ஒவ்வொரு பகுதியும் இரண்டு தசை தொகுதிகளின் உதவியால் இயங்குகின்றன. தோலுக்கு அடியிலிருக்கும் ஒரு தசை தொகுதி புழுவைச் சுற்றி வளையம்போல் அமைந்துள்ளது. அதற்கு அடியில் அமைந்த இரண்டாவது தசை தொகுதி புழுவின் உடல் நெடுக நீண்டிருக்கிறது. எதிரும் புதிருமான இந்தத் தசை தொகுதிகளை நீட்டி சுருக்குவதன் மூலம் புழு நகர்கிறது; ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு பகுதியும் சுருங்கி விரிகையில் ஏற்படும் அசைவால் அதன் உடல் முழுவதும் நகர்கிறது.
ஒரு மண்புழுவை உங்கள் கையில் வைத்தால் அது நிச்சயமாகவே வளைந்து நெளியும். அதற்கு காரணம், அதன் உடல் முழுவதும் புலன் உறுப்புகள் நிறைந்துள்ளன; இவை உடலின் ஒவ்வொரு பகுதியிலும் ஏறக்குறைய 1,900 உள்ளன. தொடுதல், சுவை, ஒளி ஆகியவற்றை உணர இவை புழுவிற்கு உதவுகின்றன.
சீட்டே என அழைக்கப்படும் சிறிய, முடிபோன்ற இழைகளின் உதவியால் இது மண்ணை பிடித்துக்கொள்கிறது. உடலின் ஒவ்வொரு பகுதியிலும் ஏராளமான சீட்டேக்கள் உள்ளன, அவை படகின் துடுப்புகள்போல செயல்படுகின்றன. ஒரு புழு, சீட்டேக்களை மண்ணுக்குள் தள்ளி, தன்னைத்தானே இழுத்து, பிறகு சீட்டேக்களை உள்வாங்கிக் கொள்கிறது. ஒரு சமயத்தில் கொஞ்சம் சீட்டேக்களை உபயோகிப்பதன் மூலம் புழுவால் எந்தப் பக்கமும் செல்ல முடியும். அல்லது பயந்துவிட்டால் உடலின் ஒரு முனையை நங்கூரமிட்டு மற்றொரு முனையை வேகமாக சுருக்கிக்கொள்ள முடியும். சீட்டேக்களின் அசைவை கட்டுப்படுத்துவதில் இது வெளிக்காட்டும் திறமையைக் கண்டு ஒலிம்பிக்கில் போட்டியிடும் படகோட்டும் அணியினர்கூட வெட்கப்பட்டு போவார்கள்.
சில வகை புழுக்களில், அவற்றின் வால் பகுதியை ஒரு பறவை கொத்தி குதறிவிட்டால்கூட அவை மறுபடியும் வளர்ந்துவிடுகின்றன; ஆனால் எத்தனை பகுதிகள் இழக்கப்பட்டனவோ அத்தனை பகுதிகள் மட்டுமே வளர்கின்றன. ஒவ்வொரு பகுதியும் மிகச் சிறியளவு மின்சாரத்தை உற்பத்தி செய்வதாக தெரிகிறது; முன்னரே நிர்ணயிக்கப்பட்ட உச்சளவு மின்சாரத்தை திரும்ப பெறும் வரைக்கும் இழந்த பகுதிகள் மறுபடியும் வளருகின்றன.
ஆயிரக்கணக்கான புலன் உறுப்புகளும் சிக்கலான தசை அமைப்புகளும் புழுவின் வாய் முனையிலுள்ள மூளை நரம்பு முடிச்சோடு இணைக்கப்பட்டுள்ளன. செயலாற்றும் திறமைகளோடு இப்புழுக்களுக்கு ஓரளவு ஞாபக சக்தி இருப்பதாகவும் ஆபத்தை தவிர்க்க அவை கற்றுக்கொள்வதாகவும்கூட ஆராய்ச்சிகள் காண்பித்துள்ளன.
ஏன் அவ்வளவு குழகுழப்பு?
புழுவின் மேற்பரப்பு குழகுழவென்று இருப்பதே அநேகருக்கு அருவருப்பாக இருக்கிறது; ஆனால், இந்தக் குழகுழப்பே அது சுவாசிக்க உதவுகிறது. புழுவின் தோல் முழுவதும் நுண்துளைகள் உள்ளன; தோலுக்கு அடியிலுள்ள இரத்தக் குழாய்கள் காற்றிலுள்ள அல்லது தண்ணீரில் கரைந்துள்ள ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளிவிடுகின்றன. ஆனால், தோலில் ஈரப்பசை இருந்தால்தான் இந்த வாயு பரிமாற்றம் நிகழ முடியும். புழுவின் தோல் உலர்ந்துபோனால் அது கொஞ்சம் கொஞ்சமாக மூச்சு திணறி செத்துப்போகும்.
மறுபட்சத்தில், அடைமழையின் போது ஒரு புழு தன் வளைக்குள்ளேயே மாட்டிக்கொண்டால் தண்ணீரிலுள்ள ஆக்ஸிஜன் சீக்கிரத்தில் தீர்ந்துவிடும். மழை பெய்த பிறகு புழுக்கள் மேற்பரப்பிற்கு வருவதற்கு இது ஒரு காரணமாகும். அவை வளையைவிட்டு வெளியே வராவிட்டால் செத்துவிடும்.
பலன்தரும் உழவர்கள் ஊரும் உலகம்
இந்தப் பூமியில் 1,800-க்கும் அதிகமான புழு இனங்கள் நிலத்தில் வாழ்கின்றன. இவை, மிக வறண்ட இடங்களையும் மிகவும் குளிரான இடங்களையும் தவிர பூமி முழுவதிலும் காணப்படுகின்றன. தென் ஆப்பிரிக்காவின் சவானாப் புல்வெளிகளுக்கு அடியில் ஒவ்வொரு சதுர மீட்டர் நிலத்திலும் 70 புழுக்கள் மட்டுமே இருக்கலாம்; கனடாவின் காடுகளிலோ ஒரு சதுர மீட்டர் நிலத்தில் 700-க்கும் அதிகமான புழுக்கள் காணப்படலாம்.
நியுஜிலாந்தில் புழுக்கள் மூன்று முக்கிய வகைகளாக பிரிக்கப்படுகின்றன. பூமியின் மேற்பரப்பிலுள்ள மக்கிவரும் கரிமப்பொருட்களில் காணப்படுகிற, மளமளவென பெருகி, வேகமாக நகரும் புழுக்களே முதல் வகையாகும். மண்ணின் மேற்பரப்புகளில் கிடைமட்டமாக தோண்டிச் செல்லும் புழுக்களே இரண்டாவது வகையாகும்; இவையே மிக அதிகம் காணப்படுகின்றன. மூன்றாவது வகை புழுக்கள் மண்ணில் செங்குத்தாக தோண்டிச் செல்பவை; இவை, ஒரே வளையில் பல வருடங்கள் அதாவது அதன் வாழ்நாள் முழுவதையும் கழிக்கலாம். புழுக்களின் உலகில் இவையே கட்டுமஸ்தான்கள். அவற்றின் தலைகளை சுற்றி சக்திவாய்ந்த தசை வளையங்கள் உள்ளன; மண்ணை தின்றுகொண்டே பூமிக்குள் நுழைய அவை உதவுகின்றன. உலகிலேயே மிகப் பெரிய புழுக்களில் ஒன்று தென் ஆஸ்திரேலியாவில் உள்ளது. இந்த ராட்சத புழு 1.5 மீட்டருக்கும் நீளமாக வளரலாம், எடையும் 500 கிராம் இருக்கலாம்.
புழுக்கள் பூமியின் பரப்பில் ஊர்ந்து செல்கையில் சின்னஞ்சிறிய உழவர்களைப் போல செயல்படுகின்றன. எரு, மண், அழுகும் தாவரங்கள் போன்றவற்றை கபளீகரம் செய்துவிட்டு மண்புழு உரம் என்ற கழிவுப்பொருளை
ஏராளமான அளவுகளில் உண்டாக்குகின்றன. இங்கிலாந்தின் பச்சைப்பசேல் நிலங்களுக்கு அடியில் வேலை செய்யும் புழுக்கள் வருடத்தில், ஒரு ஹெக்டேருக்கு 20 டன் மண்புழு உரத்தை உண்டாக்குவதாக கணக்கிடப்பட்டுள்ளது. என்றாலும், நைல் பள்ளத்தாக்கில் வாழும் புழுக்களே பெரிதும் வியக்கத்தக்கவை. இவை ஒரு ஹெக்டேருக்கு 2,500 டன் மண்புழு உரத்தை உண்டாக்கலாம். புழுக்கள் நிலத்தை உழுகையில் அது அதிக காற்றோட்டம் பெற்று, பெருமளவு தண்ணீரை உறிஞ்சிக்கொண்டு, அதிக வளம் பெறுகிறது.புழுவின் செரிமான மண்டலமானது, ஊட்டச்சத்துக்களை தாவரங்கள் கிரகிக்கும் கூறுகளாய் மாற்றிவிடுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்; ஆகவே, மண்புழு உரத்தில் தாவரங்களுக்கு ஏற்ற உணவு ஏராளம் உள்ளது. அதோடு, புழுவின் வயிற்றுக்குள் செல்கையில் அழுகும் எருவிலும் தாவரங்களிலும் காணப்படும் ஆபத்தான அநேக நுண்ணுயிரிகள் கொல்லப்படுகின்றன. இவ்வாறு புழுக்கள் சாப்பிடுகையில் நிலத்தையும் சுத்தப்படுத்துகின்றன. மிகவும் பொருத்தமான மறுசுழற்சி மிஷின்களாக செயல்படும் புழுக்கள், கழிவுப்பொருட்களில் பலுகிப் பெருகுகையில் சத்துள்ள உணவை உண்டுபண்ணுகின்றன.
புழுக்களின் ஆற்றலை உபயோகித்தல்
மறுசுழற்சி செய்ய புழுக்களுக்கு இருக்கும் விசேஷித்த ஆற்றலை கழிவுநீக்க துறை பயன்படுத்திக் கொள்கிறது. ஆஸ்திரேலியாவிலுள்ள ஒரு கம்பெனி, பல்வேறு கழிவு சுத்திகரிப்பு நிலையங்களில் மொத்தமாக 50 கோடி புழுக்களை உபயோகிக்கிறது. விசேஷமாக தயாரிக்கப்பட்ட படுகைகளில் புழுக்கள் வளர்க்கப்படுகின்றன; சிறு துண்டுகளாக்கப்பட்ட பழைய காகிதங்களோடும் மற்ற கரிமப்பொருட்களோடும் பன்றி எரு அல்லது மனித கழிவு சேர்க்கப்பட்ட உணவு அவற்றிற்கு கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும், அவற்றின் உடல் எடையில் 50 முதல் 100 சதவிகிதம் வரை அவை கபளீகரம் செய்து ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தாவர உணவை தயாரிக்கின்றன; இந்தத் தாவர உணவு மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.
புழுக்கள் மற்றொரு விதத்திலும்—உணவாகவும்—பயன்படலாம் என ஆராய்ச்சிகள் காண்பித்துள்ளன. மாட்டிறைச்சியில் உள்ள அதே உபயோகமான அமினோ அமிலங்கள் புழுக்களிலும் உள்ளன. உலர்ந்திருக்கையில் அவற்றில் 60 சதவிகித புரதம், 10 சதவிகித கொழுப்பு, மேலும் கால்ஷியமும் பாஸ்பரஸும் உள்ளன. ஏற்கெனவே சில நாடுகளில் மக்கள் மண்புழு பைகள் (pie) சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். உலகின் மற்ற பகுதிகளிலோ அவற்றை வறுத்து அல்லது அப்படியேகூட சாப்பிடுகிறார்கள்.
புழுக்கள், உலகின் மிகப் பிரபலமான உயிரினங்களாவது சாத்தியமல்ல; என்றாலும், அவை இல்லையென்றால் இந்த உலகம் மிகவும் வித்தியாசமாக இருக்கும். ஆகவே, அடுத்த முறை அமைதியான கிராமப்புற காட்சியை பார்த்து ரசிக்கையில் உங்கள் கால்களுக்கு அடியிலுள்ள ஏராளமான மண்புழுக்களைப் பற்றி சிந்திக்க கொஞ்ச நேரத்தை செலவிடுங்கள். அந்த அழகிய இயற்கை சூழலைப் பாதுகாப்பதற்கு சுறுசுறுப்பாக உழுது, உரமிட்டு, உழைப்பவை அவையே. (g03 5/08)
[பக்கம் 22-ன் படங்கள்]
மண்புழுவின் உடற்கூறியல்
மேல் தோல்
நீண்ட தசை
சீட்டே தசை
சீட்டே
வட்ட வடிவ தசை
சவ்வுப்பை
குடல்
நரம்பு வடம்
[படங்களுக்கான நன்றி]
Lydekker
J. Soucie © BIODIDAC
[பக்கம் 20-ன் படம்]
புழுக்கள் தங்கள் சீட்டேயை பயன்படுத்தி மண்ணுக்குள் செல்கின்றன
[பக்கம் 21-ன் படம்]
புழுக்கள் நிலத்தை உழுது வளம் பெற செய்கின்றன
[பக்கம் 21-ன் படம்]
ஆஸ்திரேலியாவில் மறைந்துவரும் இனமான ராட்சத கிப்ஸ்லாண்ட் புழு 1.5 மீட்டருக்கும் நீளமாக வளரலாம்
[படத்திற்கான நன்றி]
Courtesy Dr A. L. Yen
[பக்கம் 22-ன் படம்]
புழுக்கள், கழிவுப்பொருட்களை ஊட்டச்சத்து நிறைந்த தாவர உணவாக மாற்றுகின்றன