Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மறைய மறுக்கும் கட்டுக்கதை

மறைய மறுக்கும் கட்டுக்கதை

மறைய மறுக்கும் கட்டுக்கதை

பிரான்சிலுள்ள விழித்தெழு! எழுத்தாளர்

உலக முழுவதிலும் உள்ள பிள்ளைகள் அவரை மிகவும் நேசிக்கிறார்கள். சமீபத்தில், பிரான்சிலுள்ள தபால் நிலையங்களில் ஒரே வருடத்தில் ஏறக்குறைய 8 லட்சம் தபால்கள் அவருக்கு வந்து குவிந்தன; அவற்றை எழுதியவர்களில் பெரும்பாலானோர் மூன்று முதல் எட்டு வயது குழந்தைகளே. அடர்ந்த வெள்ளை தாடியும், புசுபுசுவென வெள்ளை பார்டர் வைத்த சிகப்பு அங்கியும் உடுத்திய, அன்புமிக்க கிறிஸ்மஸ் தாத்தாவே (சான்டா க்ளாஸ்) கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் முக்கிய நபர்களில் ஒருவராக இருப்பது தெரிகிறது. அப்படியிருக்க, அவருடைய கொடும்பாவி எரிக்கப்படுவதை உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? ஏறக்குறைய 50 வருடங்களுக்கு முன்பு பிரான்சிலுள்ள டீஜானில் அதுதான் நடந்தது. சுமார் 250 பிள்ளைகள் பார்த்துக் கொண்டிருக்க, 1951, டிசம்பர் 23 அன்று கிறிஸ்மஸ் தாத்தா “எரிக்கப்பட்டார்.”

அவர் அப்படி என்ன குற்றம் செய்தார்? இவ்வாறு எரிப்பது, ‘பாதிரிகளின் ஒப்புதலோடுதான் நடந்தேறியது; கிறிஸ்மஸ் தாத்தா, அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் இழுப்பதாகவும், புனிதத் தன்மையை குலைப்பதாகவும், கிறிஸ்மஸை புறமதமாக்குவதாகவும் பாதிரிகள் குற்றஞ்சாட்டினர்’ என பிரான்ஸ்-⁠ஸ்வார் என்ற செய்தித்தாள் அறிவித்தது. இது “அடையாள அர்த்தமுள்ள செயல்” என ஓர் அறிவிப்பு கூறியது. “பொய்யான ஒன்றை காட்டி, பிள்ளைகளில் மத உணர்வை தூண்டிவிட முடியாது, அது பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பதற்கான வழியும் அல்ல” என்றும் அது தொடர்ந்து கூறியது.

கிறிஸ்மஸ் தாத்தா சம்பந்தப்பட்ட பழக்கங்கள், இயேசுவின் பிறப்பின் ‘உண்மையான கிறிஸ்தவ அர்த்தத்திலிருந்து’ மக்களின் மனதை திசை திருப்புவதாக பாதிரிகள் சிலர் உணர்ந்தனர். கிறிஸ்மஸ் தாத்தா மீது வைக்கும் நம்பிக்கை, “இன்றைய மக்கள் மத்தியில் புறமதம் வேரூன்றி பரவ உதவும் மிக சக்தி வாய்ந்த செல்வாக்குகளில் ஒன்று” என லெ டென் மாடர்ன் (நவீன காலங்கள்) பத்திரிகையின் 1952-⁠ம் வருட, மார்ச் மாத இதழில் மனித இன ஆய்வாளரான கிளோட் லேவி-⁠ஸ்டிராவ்ஸ் கூறினார்; இந்த நம்பிக்கையை சர்ச் கண்டனம் செய்வது மிகவும் சரியே என்றும் அவர் கூறினார். சாட்டர்னேலியாவின் ராஜாதான் இன்றைய கிறிஸ்மஸ் தாத்தா என்றும் லேவி-⁠ஸ்டிராவ்ஸ் குறிப்பிட்டார். பூர்வ ரோமில் டிசம்பர் 17 முதல் 24 வரை சாட்டர்னேலியா பண்டிகையை கொண்டாடினர். அந்த வாரத்தில் செடி, கொடிகளால் கட்டடங்களை அலங்கரித்தனர்; ஒருவருக்கொருவர் பரிசளித்துக் கொண்டனர். கிறிஸ்மஸைப் போலவே சாட்டர்னேலியா சமயத்திலும் கூத்தும் கும்மாளமும் சகஜமாயிருந்தன.

கிறிஸ்மஸ் தாத்தாவின் கொடும்பாவியை எரித்து இப்போது 50-⁠க்கும் அதிக வருடங்கள் கழித்து, பிரான்சிலுள்ள கத்தோலிக்கர்கள் கிறிஸ்மஸ் தாத்தாவை எப்படி கருதுகின்றனர்? இயேசு மாட்டுக் கொட்டிலில் இருப்பதாக காட்டுவதை கிறிஸ்மஸிலிருந்து பிரிக்க முடியாததைப் போலவே ரோம சாட்டர்னேலியாவின் உறவினரான கிறிஸ்மஸ் தாத்தாவும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஐக்கியமாகிவிட்டார். கிறிஸ்மஸ் தாத்தா என்பவர் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திலிருந்து கிறிஸ்துவை ஒதுக்கித்தள்ளும் ஒரு வகை வியாபாரமே என எப்போதாவது பாதிரியார் ஒருவர் வெளிப்படையாக கண்டனம் செய்யலாம். என்றாலும், கிறிஸ்மஸ் தாத்தா புறமதத்திலிருந்து தோன்றியவர் என்ற மனதை நெருடும் உணர்ச்சிகள் ஏற்பட்டாலும், அவை பெரும்பாலும் பொது மக்களின் வரவேற்பு என்ற பாறையில் மோதி சிதறிவிட்டன. (g03 5/08)

[பக்கம் 13-ன் படத்திற்கான நன்றி]

DR/© Cliché Bibliothèque nationale de France, Paris