“மிகவும் செங்குத்தான சாலை”?
“மிகவும் செங்குத்தான சாலை”?
◼ நியுஜிலாந்தில் டுனேடினில் அமைந்துள்ள பால்டுவின் என்ற சாலையில் அப்படியென்ன விசேஷம்? இதுவே உலகத்திலேயே மிகவும் செங்குத்தான சாலை என வெகுகாலமாக டுனேடின் உரிமை பாராட்டியிருக்கிறது. இதைப் பற்றி கேள்வி எழும்பியிருந்தாலும், ஒன்று மட்டும் நிச்சயம்: பால்டுவின் சாலை அசாதாரணமான விதத்தில் செங்குத்தானதுதான்.
நன்கு அறியப்பட்ட இந்தச் சாலை, உலகெங்கிலும் உள்ள சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் மிகவும் புகழ்பெற்ற இடமாக அமைந்துள்ளது. இதன் உச்சியில் உங்கள் கால்களைப் பதிக்க நீங்கள் மலையேறுபவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் ‘இரண்டுகால் வண்டியை’ வைத்துதான் இந்த 359 மீட்டர் தூரச் சாலையில் ஏற முடியும்; இதன் உச்சிக்கு மோட்டார் வாகனத்தில் போகலாமென நீங்கள் கனவு கண்டால் அது பலிக்காது.
எங்களோடு சேர்ந்து ஏறுங்கள்
வெயில் பளிச்சென்று பாய்ந்து சிரித்துக்கொண்டிருந்த நேரம், நானும் என் இரு தோழிகளும் எங்களுக்கு முன் மேல்நோக்கி முழு நீளத்துக்கு நீண்டு கிடந்த சாலையை நோட்டமிட்டோம். பயணத்தை ஆரம்பித்து சிறிது நேரத்திலே எங்களுக்கு மூச்சு வாங்கியது; நிலைதடுமாறாமல் இருப்பதற்காக நாங்கள் கொஞ்சம் முன்னால் சாய்ந்து நடக்க வேண்டியிருந்தது. “கான்க்ரீட் சுவரில் ஏறுவது மாதிரி இருக்கு,” என ஒருத்தி மூச்சுத்திணற சொன்னாள். எங்கள் கால்கள் கெஞ்ச ஆரம்பித்தன; நல்ல வேளை அங்கே ஒரு பெஞ்ச் எங்களை வரவேற்றது.
மறுபடியும் ஏறும் பயணத்தை தொடர்ந்தோம். கொஞ்ச நேரத்திலேயே எப்படியோ அதன் உச்சியை எட்டினோம்; ஆசுவாசமாக மூச்செடுத்துக்கொண்டு அதே சமயத்தில், அங்கு கண்ட அழகிய காட்சிகளில் மூழ்க ஆரம்பித்தோம். கீழே வரிசையாக இருந்த வீடுகளும் எழில் கொஞ்சும் தோட்டங்களும் எங்கள் கண்களை கவர்ந்தன. கரும் பச்சை நிறமுடைய அடர்ந்த புதர்கள், சுற்றி வேலி அடைத்ததுபோல பச்சை நிற மேய்ச்சல் நிலங்கள், அதைத் தொட்டுவிடுவதுபோல அதன் பின்னணியில் இளநீல மேகங்களோடு இருந்த தொடுவானம் அனைத்தும் கொள்ளை அழகு.
அந்த அழகிய சாலையின் உச்சியை தொடுவதற்காக நடந்து சென்ற வேகத்தில் எங்களால் எவ்வித சாதனையையும் படைக்க முடியவில்லை. ஆனாலும், “உலகத்திலேயே மிகவும் செங்குத்தான சாலையில்” ஏறி நாங்கள் சாதனை புரிந்தவர்கள் என்றுரைக்கும் சான்றிதழை பெறுவதற்காக செங்குத்தான அந்தச் சாலையில் இறங்கி வெற்றிகரமாக எங்கள் பயணத்தை முடித்து, அந்தப் பகுதிகளை எங்கள் காமராக்களில் ‘க்ளிக்’ செய்தோம்.—அளிக்கப்பட்டது. (g03 5/22)